தாழ்வாகப் பறந்து இலங்கையில் தரையிறங்கவுள்ள புதிய விமானம் : மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு!!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும்.

பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும்.

இலங்கையை உலகத்துடன் இணைக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர விமானக் குழுவில் சேரும் இந்த விமானத்தின் முதல் வருகையை விமான ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் காண இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கோவிட் உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் குறித்து சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!!

கோவிட் தொற்று அபாயத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், டெங்கு, சிக்கன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கோவிட் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருகிறது.

அத்துடன், தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவித்துள்ளார்.

எனினும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் கூறுகையில், கோவிட் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான முறையானதொரு திட்டம் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தியாவில் தற்போது கோவிட் வைரஸ் தொற்று பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி முடிவு!!

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாக தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட திருத்தம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையை எடுப்பதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

யுத்தகாலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர்.

அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.

அமைச்சரவை பத்திரம்

அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து அனுமதி பெறப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மாணவி ஒருவருக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள தடை!!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உரையாற்றிய இந்திய வம்சாவளி மாணவிகபட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அமெரிக்காவில் உள்ள MIT என்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (MIT) பயிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மேகா வெமுரி என்ற மாணவி, காசா போரைக் கண்டித்தும் இஸ்ரேலை விமர்சித்தும் உரையாற்றியிருந்தார்.

இதன் காரணமாக, அவரது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

MITயின் 2025ஆம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி, கடந்த வியாழக்கிழமை (மே 29) நடைபெற்ற ஒன்எம்ஐடி – OneMIT தொடக்க விழாவில் உரையாற்றினார்.

அதன்போது, அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலைக் கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடிய தனது சக மாணவர்களைப் பாராட்டியதுடன், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளையும் விமர்சித்தார்.

அவரது உரைக்குப் பிறகு, மேகா வெமுரி மீது MIT ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையவும் அவருக்கு தடை விதித்து MIT பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், “எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது.

ஏனெனில், அந்த நபர் வேண்டுமென்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து போராட்டத்தை வழிநடத்தி இருக்கிறார்” என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாலர் பாடசாலை மாணவர்கள் மீது பாய்ந்த கார் : ஆறு பேர் படுகாயம்!!

தெஹியத்தகண்டிய – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று (03) காலை பயணித்த கார் ஒன்று, ஹோபரியாவ ஸ்ரீ குணரதனாராமய விகாரைக்கு முன்பாக உள்ள நடைபாதை மீது பாய்ந்ததில், நடைபாதையில் பயணித்துக்கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

மஹியங்கனையில் இருந்து தெஹியத்தகண்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

பாலர் பாடசாலை சென்று கொண்டிருந்த நான்கு சிறுவர்கள், ஒரு மாற்றுத்திறனாளியொருவர் மற்றும் பெண் ஒருவர் விபத்தில் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கிராந்துரு கோட்டே பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம், விபத்துக்கான காரண​ம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் கடலுக்குள் பாய்ந்த வேன் : அதிகாலையில் நேர்ந்த விபரீதம்!!

பொன்னாலை பாலத்தடியில் இன்று (03.06.2025) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வேன் ஒன்று சேதமடைந்துள்ளது.

காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது.

இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது. வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு : கடலென குவிந்த பக்தர்கள்!!

உப்பு நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த பொங்கல் உட்சவத்திற்கு முன்னர் முதல் திங்கள் பாக்குத் தெண்டல் இரண்டாவது திங்கள் உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயமான நிகழ்வுக்காக அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் இறுதி மூன்றாவது திங்கள் வைகாசிப் பொங்கல் விழாவும் இடம்பெறும்.

இந்த சடங்கு முறையில் இரண்டாவது திங்கள் கிழமையான இன்றைய நாளில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது உப்பு நீரில் விளக்கெரியும் எம்பிராடியின் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் பக்தர்கள் கடலென குவிந்துள்ளனர்.

காட்டு விநாயகர் ஆலயத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய வழிகள் ஊடாக முல்லைத்தீவு தீர்த்தக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்படும்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் பாரம்பரிய வழிகள் ஊடாக காட்டுவிநாயகர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு உப்புநீரில் விளக்கெரியும் அற்புதம் இடம்பெறும்.

தொடர்ந்து எதிர்வரும் 08 ஆம் திகதி அன்று காட்டுவிநாயகர் ஆலய பொங்கல் இடம்பெற்று 09 ஆம் திகதி திங்கள் வைகாசி பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற மறுநாளே பலியான பிரதேச சபை உறுப்பினர்!!

கலவான பிரதேச சபை உறுப்பினர் சுஜீவ புஷ்பகுமார நேற்று (02.06) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். புதிதாகக் கூட்டப்பட்ட உள்ளாட்சி மன்றத்தின் முதல் நாளன்று, பதவியேற்ற மறுநாளே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டெல்கொட காலனி பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பிக்கு அருகில் இருந்த மரக்கிளையை புஷ்பகுமார அகற்ற முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குப் பிறகு அவர் கலாவன ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த நேரத்தில் கவுன்சிலர் ஒப்பந்த அடிப்படையிலான மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புத்தேகமவில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு!!

அநுராதபுரத்தில் தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெஹிஎல்லேவ வீதிக்கு அருகில் உள்ள வயலில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அநுராதபுரம், தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

இவர் 15 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை விட்டு பிரிந்து கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள தனது சகோதரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் இவர் மீண்டும் கொழும்பு பிரதேசத்திற்கு செல்வதற்காக கடந்த மே மாதம் 31 ஆம் திகதி தனது சகோதரனின் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது கொலையா என்பது தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான பேரூந்து!!

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (03.06) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்குளி பகுதியில் அளுத்மாவத்தை வீதியும் புளூமென்டால் வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டிடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்திற்கு பஸ் வண்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணமென கூறப்படுகின்றது. விபத்து ஏற்பட்ட போது சாரதியும் நடத்துனருமே காணப்பட்டுள்ள நிலையில், குறித்த பஸ் வண்டி கண்டி – கொழும்பு வழித்தடத்தில் சேவையிலீடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக மக்கள் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளே விபத்துக்குள்ளாவதுடன் பெருமளவான உயிர்களும் காவுகொள்ளப்படுகின்றன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் உரிய பராமரிப்பின்றி சேவையிலீடுபடுத்தப்படுவதால் அண்மைக்காலமாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமென தெரிவிக்கும் மக்கள் பொதுப்போக்குவரத்தை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இவற்றை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்வதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவி எடுத்த விபரீத முடிவால் பரபரப்பு : பகிடிவதையால் வந்த வினை!!

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று (02) மதியம் குறித்த மாணவி குதித்ததாகவும், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் நடத்திய விசாரணையில், பகிடிவதை கொடுக்கப்பட்ட சம்பவத்தால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

அவர் தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குளியாப்பிட்டி பொலிஸார் , சம்பவம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரியின் நான்கு மாணவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிசில் சரணடைந்த கணவன் : நடந்தது என்ன?

தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று (03.06.2025) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலை செய்து காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் குறித்த நபரை உடனடியாக கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த ஆசிரியையான சுகிர்தரன் சுவர்ணலதா (வயது 32) என்ற பெண்ணே சாவடைந்துள்ளார். அவர் கர்பிணிப் பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் வவுனியா வடக்கு பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் ஆரம்பபிரிவிற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து கணவனும், மனைவியும் ஒரு மோட்டார் சைக்களில் புளியங்குளம் நோக்கி சென்றுள்ளனர்.

இதன்போதே சின்னப்பூவரசங்குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் கர்ப்பிணி மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்!!

வவுனியாவில் கணவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.

இன்று (03.06.2025) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிளுக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் பயங்கரம் : வீதியில் பயணித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பிராய் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன், ஸ்தலத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில், 28 வயதான கந்தசாமி பிரணவன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

தம்பிராய் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞன் மீது, இனந்தெரியாத நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

முல்லைத்தீவில் ஆலயத்திற்கு தாமரை இலை பறிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளவில் பகுதியில் ஆலயத்திற்காக தாமரை இலை பறிக்க தாமரை குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (01.06.2025) மதியம் 11.30 மணியளவில் குளத்தில் இறங்கி இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் கிராம மக்களின் முயற்சியின் பயனாக இருவரும் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளனர்.

அளம்பில் தாமரை குளத்தில் தாமரை இலை பறிக்க சென்ற அளம்பில் வடக்கை சேர்ந்த 25 வயதுடைய இராஜசேகர் நிசாந்தன் மற்றும் பத்து வயதுடைய சிவநேசன் பிரணவன் ஆகிய இருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் உடலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 மாத கர்ப்பிணித் தாயின் வயிற்றில் விழுந்த பலாப்பழம் : சிசுவுக்கு நேர்ந்த சோகம்!!

கேகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் கருவிலுள்ள சிசு உயிரிழந்துள்ளது. கடந்த 29ஆம் திகதி இரவு தெரணியகல, லிஹினியகல பகுதியில் வீட்டில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.

இரவு 11.00 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 33 வயதுடைய 5 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரே இந்த துயர சம்பவத்திற்கு முகம்கொடுத்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டுக்கு அருகிலிருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று வீட்டின் கூரையை உடைத்து தாயின் வயிற்றில் விழுந்துள்ளது.

வேதனை மிகுதியால் துடித்த தாயார் உடனடியாக தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வயிற்றில் இருந்த சிசுவின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தாய் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.