யாழ் மாநகரசபைக்கான முதல் பெண் பிரதிநிதியாக சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார் .
நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற சகோதரி பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக மாவட்டம் விருதுநகரில் சிறுவனை பெரியப்பா கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (54). இவரது வீட்டின் அருகே தம்பியின் குடும்பம் வசித்து வருகிறது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த தம்பி லட்சுமணின் 13 வயது மகன் கார்த்திக், கழுத்தில் சேலை சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
வீடு திரும்பிய லட்சுமணனும், அவரது மனைவியும் மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது சிறுவன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. பின்னர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுவன் கார்த்திக்கின் பெரியப்பாவான ராமர்தான் கொலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தனது காதலியை வீட்டிற்கு அழைக்க ராமர் சிறுவனிடம் செல்போன் கேட்டுள்ளார். ஆனால் சிறுவன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமர், அவனை அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார்.
இதில் சிறுவன் உயிரிழக்க, சேலையை சுற்றி விளையாடியபோது கழுத்து இறுக்கப்பட்டு சிறுவன் கார்த்திக் இறந்துவிட்டதாக அனைவரிடமும் ராமர் கூறியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை திங்கட்கிழமை (02.06.2025) மேற்கொண்டுள்ளது.
குறித்த விமானமானது இன்று பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த விமானசேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணம் தொடங்கியுள்ளது.
தாய்லாந்தில் இலங்கை சுற்றுலாப் பயணியான 54 வயதான சோமபால மீது திருநங்கை (பெண்) ஒருவர் செருப்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாய்லாந்தின் பட்டாயா கடற்கரை வீதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், திருநங்கையில் தாக்குதலில் இலங்கையர் காமயடைந்த நிலையில் பொலிஸார் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார்.
54 வயதான இலங்கைருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இரு தரப்பினரும் மேலதிக விசாரணைக்காக முவாங் பட்டாயா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட 29 வயது திருநங்கை பெண் மைந்த்ரான் புரான் என்பவர் கூறுகையில், தனது ஹை ஹீல்ட் செருப்பால் இலங்கையரை தலையில் பலமுறை அடித்ததாக ஒப்புக் கொண்டார்.
அவரது வாக்குமூலத்தின்படி, இலங்கை சுற்றுலாப் பயணி சோமபால திருநங்கையை அணுகியுள்ளார். இதன்போது தனது சேவைக் கட்டணத்தை திருநங்கை கூறி தொட அனுமதித்துள்ளார்.
ஒரு முறை நான் அவரைத் தொட அனுமதித்தேன். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் மீண்டும் என்னைத் தொட்டபோது, எனக்கு கோபம் வந்ததால் இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியதாக திருநங்கை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி சாரதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட இளம்பெண், அவரை செருப்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் பெண்னும் கணவரும் முச்சக்கரவண்டி சாரதியின் கால்களை பிடித்த் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இந்தியாவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவின் பெங்களூரு பெல்லந்தூரில் தனது ஸ்கூட்டர் மீது முச்சக்கரவண்டி உரசியதால் இளம்பெண் ஆத்திரமடைந்தார்.
இந்தி மொழியில் முச்சக்கரவண்டி சாரதியை இளம்பெண் திட்டியதுடன் தனது செருப்பால் சாரதியை தாக்கியுள்ளார். இதை முச்சக்கரவண்டி சாரதி தனது கையடக்க தொலைபேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அதோடு முச்சக்கரவண்டி சாரதி கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைவாக வடமாநில பெண் மீது தான் தவறு உள்ளது என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்த பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து வடமாநில பெண்ணும் அவரது கணவரும் ஆட்டோ டிரைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏ 9 வீதியில் அநுராதபுரம் , மடாட்டுகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.06) இரவு இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது வேனில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு – காலி பிரதான வீதியில் எலகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவன் படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.06) காலை இடம்பெற்றுள்ளது.
பேருவளையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் செலுத்துனரான கணவன் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மஹவில, ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஆவார். இதனையடுத்து பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிந்திய ஊடகமொன்றில் நடாத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ள மலையகத்தை சேர்ந்த இளம்யுவதி சினேகா பற்றிய செய்திகளும் காணொளிகளும் தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
மலையகம் டயகம அக்கரப்பத்தனை சேர்ந்த இளம்யுவதியான சினேகா தென்னிந்திய ஊடகமொன்றில் நடாத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுள்ளார்.
இவரின் முதல் தெரிவுசுற்று பாடல் தொலைக்காட்சியில் வெளியானதிலிருந்தே இலங்கையிலிருந்து பலர் சார்பாக குறித்த யுவதியின் உடைகள் மற்றும் அவர் கூறிய கதைகள் என்பவற்றை விமர்சனத்திற்குட்படுத்தி வருகின்றன.
இதற்கு முன்னரும் இலங்கையை சேர்ந்த இருவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்த நிலையிலும், அவர்கள் ஈழத்தை சார்ந்தவர்கள் என்ற போர்வையில் அனுதாபம் தேடும் ஒரு நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி மாறியிருந்தது.
இந்த விடயமும் பேசப்பட்டிருந்தாலும், மலையக இளம்யுவதி சினேகாவின் விவகாரமே பூதாகரமாக வெடித்துள்ளது.
அதற்கு காரணம் குறித்த இளம்யுவதி அணிந்திருந்த உடையும், அவர் நிகழ்ச்சியில் கூறிய காரணமுமாகும். ஏனெனில் கடந்த வருடம் இடம்பெற்ற சீசனிலும் மலையகத்தை சேர்ந்த இளம்யுவதியொருவர் கலந்துக்கொண்டார்.
அவரின் திறமைகள் பேசப்படாமல், நிகழ்ச்சியின் TRP காக அனுதாபம் தேடும்படலாமாகவே அதுவும் மாறி முடிந்திருந்தது. தற்போது இந்த வருடம் மீண்டும் அதேபோல TRPக்காக மலையகத்தின் வறுமையையும், ஈழத்தின் வலியையும் விற்பதை போலுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குறித்த யுவதியின் தந்தை மற்றும தாயார் காணொளியொன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளாவது, எனது மகள் கூறிய அனைத்தும் உண்மையே, நான் பாத்திரங்கள் கழுவி சம்பாதித்தே உழைத்து வருகின்றேன். நாங்கள் இன்றும் தீப்பிடித்து கருகிய வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றோம்.
இலங்கை நிகழச்சியில் எனது மகளுக்கு உடைகள் கொடுக்கப்பட்டன. ஒப்பனைகள் எல்லாவற்றிற்கும் அவர்களே பொறுப்பெடுத்தார்கள். உணவுமே கொடுத்தார்கள். ஏன் பேருந்திற்கு கூட அவர்கள் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் என்று கண்ணீருடன் அவர் கூறியுள்ளார்.
யுவதியின் தாயார் கூறுகையில், தனது மகள் அவளின் நண்பர்களிடம் உடையையே வாங்கி அணிந்து சென்றுள்ளார்.
தற்போதும் எங்கள் பிள்ளைகளிடம் நல்ல உடைகள் இல்லை. தயவுசெய்து எனது மகளை தவறாக சித்தரிக்க வேண்டாம். இதுதான் எங்கள் நிலை, நாங்கள் பொய் கூறவில்லை. தவறாக கூற வேண்டாம் , மனவேதனையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தாகவும், இதனால் அவரது கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளைசம்பவத்தில் உயிரிழந்த பெண் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம் (02.06) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 992,706 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 35,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 280,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 32,110.ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 256,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 30,650 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 245,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 266,000 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 246,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – குமிழமுனை பகுதியில் ஆலயமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து பாடசாலை மாணவிகள் இருவர் உயிரிழந்தனர்.
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் பாடசாலை மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30.05.2025) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டு அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும், சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலையில் ஈடுபட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மேற்பார்வை செய்தார்.
அம்பாறை தடயவியல் பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் மற்றும் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டார்.
இந்தக் கொலை சம்பவத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்தத் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்திலும், மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,
அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்தத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாணந்துறையில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சிறுவன் அதிலிருந்து தூக்கி எறியப்பட்டு பேருந்தின் கீழ் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பாணந்துறை, அருக்கொட, பொன்சேகா மாவத்தையை சேர்ந்த 3 வயதான நெதுசா தட்சர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுவன் நேற்று மதியம் மாலமுல்ல பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெற்ற குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
இதன்போது சிறுவனுடன் மேலும் சிறுமியும் மற்றொரு 10 வயது சிறுவனும் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக கூறப்படுகிறது.
பாணந்துறை ருக்காஹ பகுதியில் பயணிகளை இறக்கிவிடுவதற்காக ஒரு பேருந்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த நேரத்தில் பேருந்தின் பின்னால் வந்த ஒரு லொறி பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
சிறுவன் பலி
அப்போது, பேருந்திற்கு எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் பிரேக் போட்டதால், முச்சக்கர வண்டியில் இருந்த சிறுவன் அதிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் எதிரே வந்த பேருந்தில் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை – நாச்சிக்குடா பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட, முகம்மது சப்ராஸ் என்ற இளம் குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை(29) டுபாய் நாட்டில் காலமாகியுள்ளார்.
கடந்த சில தினங்களாக திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக டுபாயில் ஏடிசிபி (ADCB) என்ற பிரபல்யமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக, அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 32 வயதான இளம் குடும்பஸ்தரான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் கடந்த இரண்டரை வருடங்களாக டுபாய் நாட்டில் தொழில் புரிந்து வந்ததாகவும், அவரது மனைவியும் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அன்னாரின் ஜனாஸாவை அந்த நாட்டிலே அடக்கம் செய்வதற்கு, தேவையான அலுவலகப் படிவங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக,
அனுப்பி வைப்பதற்கு சகல முன்னெடுப்புகளும் இன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், நாளைய தினம் ( சனிக்கிழமை) பெரும்பாலும் அடக்கம் செய்யப்படலாம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.