வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து!!

பொலன்னறுவை, பக்கமுனா – கிரிதலே வீதியில் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சனிக்கிழமை (31.05) காலை இடம்பெற்றுள்ளது. கார் சாரதியின் தூக்கமின்மையே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழர்களை கேவலப்படுத்தும் தென்னிந்திய தொலைக்காட்சி : கடும் சினத்தில் மக்கள்!!

தென்னிந்திய தொலைக்காட்சிகள் இலங்கை தமிழர்களை தங்கள் டீ ஆர் பி க்காக மிகவும் கேவலப்படுத்தும் விதமாக காட்டுவதாக இலங்கையர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தென்னிந்திய தொலைகாட்சிகளில் இடம்பெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அண்மைய காலங்களில் இலங்கை தமிழர்களை உள்ளீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் மலையகம் நுவரெலியாவில் இருந்து தென்னிந்திய தொலைக்காட்சியில் பாடல் போட்டியில் பங்கேற்ற சிறுமி இலங்கை தொலைகாட்சியில் பாடும் போது மிகவும் நேர்த்தியாக ஸ்டைலாக ஆடை அணிந்து பாடுகின்றார்.

ஆனால் அதே சிறுமி தென்னிந்திய தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மிகவும் ஏழ்மையான கோலத்தில் தோற்றமளிக்கின்றார்.

இந்நிலையில் தங்களது நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களை கவர்ந்திழுப்பதற்காகவும், தங்களுடைய டீ ஆர் பி க்காகவும் இவ்வாறு இலங்கைவாழ் தமிழர்களையும்,

புலம்பெயர் தமிழர்களையும் கேவலப்படுத்துவதை தென்னிந்திய தொலைக்காட்சிகள் நிறுத்த வேண்டும் என இலங்கை மக்கள் கடும் சினம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி : வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்!!

கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகில் வீதியில் பயணித்த கார் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (30.05) மாலை இடம்பெற்றுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததால் காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் மரங்கள் முறிந்து விழுவதால் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மறுஅறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலில் ஈடுபடுபவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை காரணமாக நிலவும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்தான கடல் நிலைமைகள் குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு!!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்று (29) இரவு 8:00 மணி முதல் இன்று (30) இரவு 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 50,000 மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவிக்கையில், பதிவாகிய மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகளில் இதுவரை 14,030 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறினார்.

மீதமுள்ள மின்சார தடைகளை விரைவாக சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் மின்சார தடைகளை சரிசெய்யும் பணிகளை மின்சார சபை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார தடைகள் தொடர்பாக பதிவாகிய முறைப்பாடுகளில் மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டார்.

அதன்படி, மத்திய மாகாணத்தில் பதிவாகிய 15,000 மின்சார தடைகளில் 5,300 முறைப்பாடுகளும், மேல் மாகாணத்தில் பதிவாகிய 10,000 மின்சார தடைகளில் 1,700 முறைப்பாடுகளும் இதுவரை மின்சார சபையால் சரிசெய்யப்பட்டுள்ளன.

தற்போது வரை மின்சார விநியோகம் சீராகாத பகுதிகள் இருந்தால் அல்லது மின்சார கம்பிகள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால், மின்சார சபையின் 1987 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு அளிக்குமாறும்,

அல்லது மின்சார சபையின் CEB Care கைப்பேசி செயலி (mobile app) மூலம் அறிவிக்குமாறும் மின்சார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இளைஞர்களை ஏமாற்றி 1000 கோடி ரூபாய் மோசடி செய்த பெண்!!

கண்டி, பிலிமத்தலாவை பகுதியிலுள்ள புரோகெயார் தனியார் பிரமிட் நிறுவனத்தின் இயக்குநரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து சுமார் 1000 கோடி ரூபாயை இந்த பெண் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இலங்கை மத்திய வங்கி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஓட்டுநர் வேலைகள் முதல் உயர் மட்டத் தொழில்களை வெளிநாடுகளில் பெற்றுத்தருவதாக பெருமளவு இளைஞர், யுவதிகளை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய யுவதியின் நிலை தொடர்பில் வெளியான தகவல்!!

இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருபிரித்தானிய யுவதி, தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் உள்ள நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்

தெற்கு லண்டனைச் சேர்ந்த 21 வயதான சார்லோட் மே லீ, தாய்லாந்திலிருந்து, இந்த மாத ஆரம்பத்தில், வந்தபோது அவரது பயணப்பொதியில் 46 கிலோ குஸ் ரகப்போதைப்பொருள் இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், ஐந்து பெண்களுடன் ஒரு அறையைப் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், கொங்கிரீட் தரையில் ஒரு மெல்லிய மெத்தையில், தனது ஆடைகளையே தலையணையாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

லீ மீது இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை, எனினும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

இதற்கிடையில் அவர் நேற்று இலங்கையின் நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர், தனது நாளின் பெரும்பகுதியை சிறைக்குள்ளேயே செலவிடுவதாகக் கூறியுள்ளார்.

தாம் ஒருபோதும் சிறைக்குச் சென்றதில்லை, அத்துடன் இலங்கைக்கும் வந்ததில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தாண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான அறிவிப்பு!!

இலங்கையில் 2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பான பட்டியலை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 27ஆம் திகதி அரசாங்கம் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் A.H.M.H அபயரத்ன, 1971 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் பிரிவு 04 இன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானி

2438/22 என்ற எண் கொண்ட இந்த வர்த்தமானியில், 2026 ஆம் ஆண்டுக்கான அனைத்து விடுமுறை நாட்களும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

 

எவரெஸ்ட் சிகரத்தில் 5364 மீ உயரம் ஏறி சாதனை படைத்த சிறுமி!!

எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி, துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்.

தமிழக மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு. இவர் தனது தந்தையுடன் இணைந்து மலையேற்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இவர், 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் பல்வேறு உயரமான இடங்களுக்கு ஏறி சென்றுள்ளார். அந்தவகையில் எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாணவி அவரது பெற்றோருடன் தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்தார்.

அப்போது மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கேடயத்தை வழங்கினார். அதோடு தொடர்ந்து சாதனைகள் படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

வவுனியா விபத்தில் இந்திய தூதரக ஊழியர் பலி : இளைஞன்செய்த செயல் : பலரும் பாராட்டு!!

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ம் திகதி இடம்பெற்ற விபத்தில் யாழ் இந்திய துணை தூதரக உத்தியோகஸ்தர் உயிரிழந்ததுடன் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த பேருந்து சாரதி செய்த செயல் தற்போது பலரது பாராட்டை பெற்று வருகின்றது. இந்திய துனைதூதரக உத்தியோகஸ்தர் தனது குடும்பத்தினருடன், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகையில் வவுனியாவில் விபத்தில் ஏற்பட்டது.

அவர்கள் விபத்தில் சிக்கியபோது வீதியால் பயணித்த இளைஞன் ஒருவர் காயப்பட்டவர்களை உடனடியாக வீதியால் சென்ற வாகனம் ஒன்றை நிறுத்தி அதன்மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது காயமடைந்தவர்களின் உடைமையில் இருந்த ஒரு தொகை பணம், மற்றும் பெண்ணின் தாலி உள்ளிட்ட நகைகள், கையடக்க தொலைபேசி என்பனவற்றை இளைஞன் பாதுகாப்பாக பத்திரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அந்த இளைஞன் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் ஒருவரை தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை கூறியிருந்தார்,

இதனையடுத்து வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் , யாழ் இந்திய துணைத் தூதுவரை தொடர்புகொண்டு குறித்த விடயத்தை கூறி அந்த இளைஞரையும் அவருடன் தொடர்புபடுத்தியிருந்திருந்தார்.

இதனையடுத்து நேற்றைய தினமே யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்திற்கு சென்று பணம், மற்றும் நகைகள், கையடக்க தொலைபேசி என்பனவற்றை ஒப்படைத்திருந்தார்.

இந்த மனிதாபிமான செயலை செய்தவர் வவுனியா புளியங்குளத்தை பூர்வீகமாகவும் தற்பொழுது சிதம்பரபுரத்தில் வசித்து வரும் 34 வயதுடைய செல்வராசா நிரோசிகன் என்பவராகும் இவர் ஒரு பேருந்து சாரதி என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் குறித்த இளைஞன் கூறுகையில், அதாவது வீதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக உதவிகளை செய்து குறித்த உயிர்களை காப்பாற்ற முன்வாருங்கள் என்றும் அப்படியான சந்தரப்பங்களில் வேறு எந்த நோக்கமும் இல்லாது பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

வவுனியாவில் வீதிகளில் குப்பைகளை வீசிய 5 பேருக்கு நீதிபதி வழங்கிய தீர்ப்பு!!

வவுனியாவில் பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை வீசிச்செல்வதினால் சுற்றுப்புறச்சூழல்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் அப்பகுதிகளில் தூர்நாற்றமும் வீசுகின்றன.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா சுகாதார துறையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது வீதிகளில் குப்பைகளை வீசிய ஐவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொண்டிருந்தனர்.

வழக்கினை முன்னெடுத்த வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐவருக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுத்தமையுடன் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபா தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.

வவுனியா ஒமந்தையில் குளத்தின் அலைகரையில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு : பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தம்!!

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோழியர்குளம் கிராமத்தில் விவசாயத்திணைக்களத்துக்குரிய குளத்தின் அலைகரையில் கல்குவாரி அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தியிருந்தனர்.

கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரின் அனுமதி பத்திரத்துடன் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட தயாராகிய நிலையில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையுடன் குளத்தின் அலைகரையில் பாரம்பரிய பிள்ளையார் கோவில் இருந்தமையும் குறிப்பிட்டு அன்றைய தினத்தில் பிள்ளையார் சிலைக்கு விசேட பொங்கல் வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

இக் கல்குவாரி அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிரேலா கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா மற்றும் கட்சி உறுப்பினர் கார்த்திபன், தமிழரசு கட்சி உறுப்பினர்களான பாலேந்திரன், சிந்துஜன், சிவபாலன் ஆகியோருடன் அப்பகுதி கிராம மக்களும் இணைந்து இருந்தனர்.

பேரூந்து விபத்தில் மூன்று பேர் காயம்!!

பாதெனிய – அநுராதபுரம் வீதியில் வாரியப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (30.05) காலை இடம்பெற்றுள்ளது.

பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மரமொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவிஸ்லாந்தில் பனிச்சரிவில் புதைந்த கிராமம் : இராட்சத பனிப்பாறை உருகியதால் விபரீதம்!!

சுவிஸ்லாந்து நாட்டின் வாலேஸ் அருகே இராட்சத பனிப்பாறை ஒன்று உருகியதால் மலை அடிவாரத்தில் இருந்த ஆல்பைன் என்ற கிராமம் பனிப்பாறைகள் மற்றும் பனி குவியல்களால் முழுவதுமாக மூடியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அந்த கிராமத்தில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் பனிச்சரிவு காரணமாக அந்த கிராமம் முழுவதும் பனியால் மூடியது. அங்கிருந்த சுமார் 100 வீடுகள் சேதமடைந்தன. மீட்புப்பணியில் ஈடுபட்ட இராணுவ வாகனம் ஒன்று திடீரென மாயமானது.

அதில் இருந்த இராணுவ வீரர்கள் உள்பட சுமார் 5-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகினர். பனிச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

நபரொருவர் முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்துக் கொலை : ரக்வானையில் நடந்த கோர சம்பவம்!!

இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரக்வானை, ஹொரமுல்ல பிரதேசத்தில் நபரொருவர் முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கொலைசெய்யப்பட்டவர் இரத்தினபுரி, ரில்ஹேனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது தீயில் நன்கு கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கெப் வாகனம் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

எல்பிட்டிய – அம்பலாங்கொடை பிரதான வீதியில் கரந்தெனிய தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது.

எல்பிட்டியவிலிருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடை!!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் சீரற்ற வானிலை நீடிப்பதால் மின்சாரத் தடை அதிகரித்துள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

உங்களது பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டால் CEB Care மொபைல் செயலி மூலமாகவோ அல்லது 1987 என்ற அவரச தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களினடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.