வவுனியாவில் கடும் காற்றினால் மரம் முறிந்து வீட்டின் கதவு வேலிகள் தேசம் : போக்குவரத்தும் ஸ்தம்பிதம்!!

இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் வவுனியாவில் வீட்டின் கதவு வேலிகள் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் நேற்று மதியம் வீதியோரமாக நின்ற மரம் முறிந்து வீழ்ந்ததில் வீட்டின் வேலியின் தகரங்கள் சேதமடைந்துள்ளது.

அதோடு மற்றைய வீடு ஒன்றின் பிரதான வாயில் கதவும் சேதமடைந்துள்ளதுடன் மினசாரமும் தடைப்பட்டது.

அது தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் மின்சார சபைக்கு வழங்கிய தகவலையடுத்து மின்சார சபையினர் மின்சார தடையினை நிவர்த்தி செய்தமையுடன் பிரதேச சபையினர் மரத்தினை அகற்றி போக்குவரத்தினையும் சீரமைத்தனர்.

 

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!!

மொனராகலை – கதிர்காமம் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று (30.05.2025) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனதெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பலத்த மழை மற்றும் காற்று : மக்களே அவதானம் : செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு!!

நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (29) மாலை முதல் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றன.

இந்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

நேற்று (29.05) மாலை முதல் மழை மற்றும் காற்று நிலைமைகளால் 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுடன் 3 வீடுகள் முழுமையாகவும், 365 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களில் வசிப்பவர்கள் மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.

பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

மேலும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன்!!

சுவிஸ்லாந்தில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அஸ்வின் பாலரூபன் என்ற இளைஞர் இவ்வாறு கால்பந்தாட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் செலென்ஜ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கழகத்தின் சார்பில் அஸ்வின் விளையாடி வருகின்றார்.

ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கால்பந்தாட்டக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அணியின் வெற்றிக்காக அஸ்வின் வழங்கிய பங்களிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வரும் அஸ்வினுக்கு சமூக ஊடகங்களில் பெருமளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் சுவிஸ்லாந்தில் இடம்பெற்று வரும் பல்வேறு கழக மட்டப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

உலக அழகிப் போட்டி : முக்கிய பிரிவில் இலங்கை அழகிக்கு இரண்டாம் இடம்!!

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் உலக அழகி போட்டியின்போது, மிஸ் வேர்ல்ட் மல்டிமீடியா என்ற சவாலில், ஆசியாவிலிருந்து இரண்டாவது வெற்றியாளராக, இலங்கை அழகி அனுதி குணசேகர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, குறித்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கையர் இவராகும் என்று, அவரது ஊடகக் குழு தெரிவித்துள்ளது.

இந்த சாதனையின் மூலம், 108 பங்கேற்பாளர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டிமீடியா சவாலின் முதல் 8 உலகளாவிய வெற்றியாளர்களில், மதிப்புமிக்க இடத்தையும் அனுதி குணசேகர பெற்றுள்ளார்.

இதேவேளை இறுதிப்போட்டி நாளை நடைபெறும் போது புதிய உலக அழகி முடிசூட்டப்படவுள்ளார்.

மீண்டும் கோவிட் 19 : அதிர்ச்சி கொடுக்கும் பாபா வங்காவின் கணிப்பு!!

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், ‘ஜப்பானின் பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் ஒரு பழைய தீர்க்கதரிசனம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

1999ஆம் ஆண்டு எழுதிய “The Future As I See It” என்ற புத்தகத்தில், 2020ல் மர்ம வைரஸ் உருவாகி, மறைந்து 2030ல் மீண்டும் மோசமாக தாக்கும் என அவர் எழுதியியுள்ளார்.

தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் 19 மீண்டும் பரவலாக இருப்பது, அவரது கணிப்பை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாவது, மீண்டும் மருத்துவ உலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ராஜீவ் பெல், தற்போதைய வைரஸ் Omicron வகையைச் சேர்ந்தது என்றும்,

தற்போது பரவும் வகைகள் – LF.7, XFG, JN.1, NB.1.8.1 என பல மாற்று வடிவங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

அவர் இதற்கு முன் கோவிட் 19, இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், பாடகர் ஃபிரெடி மெர்குரியின் மரணம் போன்றவற்றையும் கணித்ததாக கூறப்படுகிறது.

மேலும், 2025 ஜூலை மாதம் ஜப்பான்–பிலிப்பைன்ஸ் இடையே கடலில் பெரும் பிளவு ஏற்பட்டு, 2011 சுனாமியை விட மூன்று மடங்கு பெரிய சுனாமி ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது ஜப்பான் தெற்கு பகுதியில் கடலுக்கு கீழ் நிலநடுக்கத்தால் ஏற்படும் என கூறப்படுகிறது. 2020ல் கோவிட் 19 வந்தது உண்மை. 2030ல் அது திரும்பும் வாய்ப்பு உள்ளதா என்ற அச்சம் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.

சீரற்ற காலநிலை : நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான சூழலில் நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் மின் தடை பற்றிய முறைப்பாடுகளை 1987 என்ற அவசர இலக்கத்தின் மூலமாகவோ அல்லது மின்சார சபையின் தொலைபேசி செயலி ஊடாகவோ அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொம்மைகளுடன் சிக்கிய வெளிநாட்டவர்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொம்மைகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் 10 கிலோ 323 கிராம் கோக்கெயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர் மூன்று டெடி பியர் பொம்மைகளுக்குள் மறைத்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் இன்று காலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய கூட்டுச் சோதனையில் குறித்த போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானம் மூலம் நாட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய இத்தாலிய நாட்டவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 75 வயது முதியவர் புலனாய்வு பிரிவினரால் கைது!!

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான முதியவர் ஒருவர் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் நேற்று (29) கைது செய்யப்பட்டு இன்று (30.05.2025) குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச சட்டப்படி அவர் ஒரு அகதி என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யுத்த காலத்தில் உயிரைக்காத்து கொள்வதற்காக குறித்த முதியவர் தமிழகத்திற்குத் தப்பிச் சென்ற நிலையில் சுமார் 37 ஆண்டுகள் கடந்து நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் கீழ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னையா சிறிலோகநாதன் என்னும் ஏழாலையைச் சேர்ந்த அந்த 75 வயது முதியவர், யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக நேற்றைய தினம் நாடு திரும்பியபோதே விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற இலட்சக்கணக்கானோர் மத்தியில் இந்த முதியவரும் படகு மூலம் தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்றவர் தமிழகத்தின் திருவண்ணாமலைப் பகுதியில் உள்ள முகாமில் தங்கி வாழ்ந்து தற்போது ஏழாலையில் வசிக்கும் தனது மகனுடன் முதுமைக் காலத்தில் வாழ்வதற்காக தீர்மானித்துள்ளார்.

இதற்கமைய, ஐக்கிய நாடுகளின் அகதிகளிற்கான அமைப்பில் (யு.என்.எச்.சி.ஆர்) பதிவு செய்து தாயகம் திரும்பிய போதே நேற்றையதினம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் இனிவரும் காலத்தில் தாயகம் திரும்பும் அகதிகள் கைது செய்யப்படுவார்களா என்ற அச்சம் பலர் மத்தியில் எழுப்பப்படுகின்றது.

விமானத்தில் பணிப்பெண்ணிடம் சேட்டைவிட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கைது!!

இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் மோசமாக செயற்பட்ட 49 வயதான இலங்கை பயணியே கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயது தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை தகாத ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கப்பலில் கேப்டனாக பணி புரியும் இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று காலை 09.00 மணிக்கு எமிரேட்ஸ் விமானமான EK-650 இல் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

விமானத்தில் வந்தபோது, ​​அவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாகவும், விமானத்தில் பணி புரிந்த தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை தகாத ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச சமையல் போட்டியில் சாதனை படைத்த இலங்கைப் பெண்கள் : யாழ் பெண்ணுக்கு தங்கப் பதக்கம்!!

Expo Culinaire சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், இன்று நாட்டை வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில், மே 21 முதல் 23 ஆம் திகதி வரை இந்தப் போட்டி நடைபெற்றது. உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில், பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

அதோடு , நீர்கொழும்பில் வசிக்கும் எஃப். நிலுஃபா, இந்தப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கொழும்பில் வசிக்கும் எம்.ஆர்.எஃப். ஃபஸ்லியா 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். முதல் முறையாக அவர்கள் மூவரும் ஒரு சர்வதேச போட்டியில் பங்கேற்று இத்தகைய வெற்றிகளைப் பெறுற்றுள்ளனர்.

மூவரும் ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் G9-587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அதிகாலை 04.30 மணிக்கு வந்தடைந்தனர்,

யாழில் பேருந்து மிதிபலகையில் பயணித்த இளைஞன் உயிரிழப்பு!!

பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (28) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) எனும் இளைஞனே உயிழந்துள்ளார். கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்துள்ளார்.

இதன் போது, கரந்தாய் பகுதியில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீதியில் சடலமாக கிடந்த உணவக உரிமையாளர் : தமிழர் பகுதியில் சோக சம்பவம்!!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) மீட்டதுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த நிலையில் சம்பவதினமான இன்று காலை திக்கோடை சந்திக்கு அருகாமையிலுள்ள வீதியிலுள்ள மதகு ஒன்றிற்கு அருகில்,

மோட்டார் சைக்கிளுடன் கீழ் வீழ்ந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு வீதியால் பிரயாணித்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதனை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரண விவகாரத்தில் புதிய திருப்பம்!!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் 2 ஆம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷானின் சம்பவம், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும்,

விரிவான விசாரணை நடத்தப்பட்டு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரி, இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் பகிடிவதையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு திட்டத்தை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகம், அதன் துணைவேந்தர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், உயர் அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 69 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான விசாக்களை பெறுவதில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க ஒரு புதிய பொறிமுறையை நிறுவ ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கான விசாக்களை பெறுவதில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாட்டில் ஒரு புதிய அலுவலகத்தை நிறுவ யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

விசாக்களை பெறுவதில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதன் போது தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் தனது உடன்பாட்டைத் தெரிவித்தார்.

போலந்து வெளியுறவு அமைச்சரும் ஐரோப்பிய ஒன்றிய தலைவருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரித்தானியா பெண்ணால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் : இந்திய ஊடகம் அதிர்ச்சித் தகவல்!!

கடந்த 12ஆம் திகதி பிரித்தானிய பெண் ஒருவரினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

சந்தேக நபரான பெண்ணால் கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருள் மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பரவி வரும் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேங்கொக்கில் இருந்து இலங்கை வந்த பிரித்தானிய பெண்ணின் பைகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதை பொருள் தொடர்பில் இந்திய ஊடகமான NDTV தகவல் வெளியிட்டுள்ளது.

460 மில்லியன் ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள 46 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் 21 வயது சார்லோட் மே லீ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவலுக்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான குஷ் போதைப்பொருள் இதுவாகும்.

பெண்ணிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மனித எலும்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது எனவும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாகக் காணப்படும் மிகவும் அடிமையாக்கும் போதைப்பொருள் எனவும் NDTV வெளிப்படுத்தியுள்ளது.

இந்த போதைப்பொருள் பயன்பாடு காரணமாக சியரா லியோன் அரசாங்கம் கடந்த ஆண்டு அவசரகால நிலையை அறிவிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் இந்த போதை பொருள் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக NDTV மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த இளம் பெண், மிகவும் மோசமான வசதிகளுடன் இருப்பதாக டெய்லி மெயில் வலைத்தளம் வெளியிட்ட செய்தியின் காரணமாக சமீபத்தில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.