வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் அனுமதி : இன்றுமுதல் சேவைகள் ஆரம்பம்!!

கொரோனா சிகிச்சை..

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் இன்று (12.05.2021) இரவு 11 மணி தொடக்கம் இயங்குமென வன்னி இராணுவத் தளபதி தெரிவித்தார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தின் இறுதிக்கட்ட வேலைகளை இன்று (12.05) பார்வையிட்ட பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன் 200 கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில் வவுனியா பொருளாதார நிலையம் கொரோனா நோயாளர்களை உள்வாங்குவதற்கு தயாரான நிலையில் தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளதுடன் இன்று (12.05.2021) இரவு 11.00 மணி முதல் நோயாளர்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த நோயாளர் தற்போது இராணுவ பாதுகாப்புடன் பேரூந்து மூலம் வவுனியா நோக்கி வருகை தந்து கொண்டிருப்பதுடன் இரவு 11.00 மணியளவில் வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்தினை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அடையாள அட்டை இறுதி இலக்க அடிப்படையிலையே வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதி!!

நாளை முதல்..

இலங்கையில் நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (13) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணின் அடிப்படையிலேயே வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியும்.

இது தொடர்பான தகவல்களை பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இன்று அறிவித்துள்ளார். அதன்படி, 1, 3, 5, 7, 9 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் ஒற்றை நாட்களிலும் (உதாரணம் 15, 17,19,21… திகதிகளில்),

0, 2, 4, 6, 8 ஆகிய எண்களை அடையாள அட்டையின் இறுதி எண்ணாக கொண்டுள்ளவர்கள் இரட்டை நாட்களிலும் (14, 16, 18, 20,… திகதிகளில்) அத்தியாவசியமல்லாத தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியேற முடியும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கோரானா வைரஸ் பரவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாட்டை முடக்க நிலைக்கு கொண்டு செல்லாது பயண கட்டுப்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள்!!

விழிப்புணர்வு பதாதைகள்..

கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் வவுனியாவில் இன்று மாலை (12.05) நிறுவப்பட்டன.

கொவிட் 19 மூன்றாம் அலையின் தாக்கமானது வவுனியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை சுகாதார திணைக்களத்துடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களும் முன்னெடுத்துள்ளன.

அந்தவகையில், ‘கொரோனா நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்வோம். பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிவோம்’ என பொறிக்கப்பட்ட பதாதைகள் வவுனியா புதிய பேரூந்து நிலையம் மற்றும் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் நிறுவப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், வைத்தியர் லவன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் மூன்று நாட்களுக்கு அமுலாகும் தடைகள் : வர்த்தக நிலையங்களும் பூட்டு!!

மூன்று நாட்களுக்கு..

இலங்கையில் கோவிட் தொற்று பரவலானது தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலுக்கு உட்டுபடுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்டத்தில் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ள தடை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை (14,15,16) ஆகிய மூன்று தினங்கள் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுவதுடன் மருந்தகங்கள் மாத்திரம் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் திறக்க அனுமதிக்கப்படுகின்றது.

மேலும் மக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படுவதுடன் தேவையின்றி வெளியில் நடமாடுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஒருவர் கொரோனாவால் மரணம் : உடல் பூந்தோட்ட மயானத்தில் தகனம்!!

கொரோனா..

கொரோனா தாக்கத்தால் கிளிநொச்சியில் மரணமடைந்த வவுனியா நபரின் சடலம் பூந்தோட்டம் மயானத்தில் இன்று (12.05.2021) தகனம் செய்யப்பட்டது.

வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று (11.05) இரவு மரணமடைந்தார். மரணமடைந்த நபரின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து செல்லப்பட்டு வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

வவுனியாவில் சுகாதார விதிமுறையினை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம் தனிமைப்படுத்தல்!!

சிறுவர் பராமரிப்பு நிலையம்..

வவுனியாவில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் கூடிய கல்வி நிலையத்தினை சுகாதார பிரிவினர் முற்றுகையிட்டனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்தினால் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், மேலதிக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அறிவுறுத்தல்களை மீறி சில இடங்களில் கல்வி நிலையம் இடம்பெறுவதாக சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் கூடிய கல்வி நிலையத்தினை சுகாதார பிரிவினர் முற்றுகையிட்டனர்.

இதன் போது குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதன் பிரகாரம் இன்று 12.05.2021 தொடக்கம் எதிர்வரும் 25.05.2021ம் திகதி வரையிலான 14 நாட்கள் சுகாதாரப் பிரிவினரால் குறித்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நாளை இரவு 11 மணிமுதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பயணத்தடை : மக்கள் நடமாடத்தடை!!

பயணத்தடை..

நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இந்த தடை தாக்கம் செலுத்தாது அவர் கூறியுள்ளார்.

குறித்த நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விமான நிலையம் செல்லவும், நோயாளர்களை இடமாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்தல்!!

தனிமைப்படுத்தல்..

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய சுகாதார வழிகாட்டலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமைபெற்றவர்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகள் என வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாகினும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்படும்.

இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு முதல் நாள் வருகையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் PCR சோதனையிலிருந்து வெளியேறலாம்.

இந்த புதிய அறிவிப்பு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் இலங்கை மற்றும் பிற நாடுகளின் எதிர்கால கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தனிமைப்படுத்தல் காலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் : விபரம் உள்ளே!!

பயணக் கட்டுப்பாடுகள்..

நாடளாவிய ரீதியில், இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரவு வேளையில் பயணத் தடை அமுலுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்றிலிருந்து இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் மோசமடையும் கொரோனா பரவல் : நேற்று 55 பேருக்கு தொற்று உறுதி!!

கொரோனா பரவல்..

வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கோவிட் தொற்று உள்ளமை இன்ற கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் ஆயிரத்து 18 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும், வவுனியா மாவட்டத்தில் 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும் பூவரசம்குளம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 19 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 14 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவரும் என 35 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 7 பேருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேருக்கும் கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை வைத்திசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்.

ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். வேலணை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நில அளவைகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் நெல்லியடி சந்தைத் தொகுதியைச் சேர்ந்தவர். நல்லூர் மற்றும் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை இரு வைத்தியர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (12.05) காலை வெளியாகின.

அதில், வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் கடமையாற்றும் இரு வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வைத்தியசாலையில் பணியாற்றும் மூன்று தாதியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றும் (11.05) வவுனியா வைத்தியசாலையில் இரு தாதியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27 சத்திர சிகிச்சைகள், இரு கைகளில் ஒரு விரல் : உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவி!!

கண்டி..

மனிதர்களாக படைக்கப்பட்ட நாம் உளவியல் குறைபாடு,உடற் குறைபாடு போன்ற பல குறைப்பாடுகளுடன் தனது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றோம்.

இவை ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம்.ஆனால் பலர் இவ்வாறான தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் கண்டியினை சேர்ந்த மாணவியொருவர் 27 சத்திர சிகிச்சைகள், இரு கைகளில் ஒரு விரலுடன் மாத்திரமே தனது வாழ் நாளை கழித்து வந்துள்ளார். குறித்த மாணவி வெளியாகிய உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் A2,B சித்திகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று : நேற்று மட்டும் 6 ஆக உயர்வு!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நேற்று மட்டும் 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவுகள் சில நேற்று இரவு (11.05) வெளியாகின. அதில் வவுனியா கோவில்குளம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும், செட்டிகுளம் பகுதியில் ஒருவருக்கும் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் ஏற்கனவே 3 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட இரவு வெளியாகிய முடிவுகளின் படி நேற்று மட்டும் 6 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு வீரியம் கூடிய கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார பிரிவினர் ஊடாக அறிய வரும் நிலையில்,

இது தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எவருக்கும் கொரோனா தொற்று இல்லை தவறான தகவல் என தெரிவித்து தொலைபேசி அழைப்பை துண்டித்திருந்தார்.

வவுனியாவை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியா – கற்பகபுரம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளார். கற்பகபுரம் பகுதியில் 9 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டது.

சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்காக திருகோணமலையில் இருந்து வவுனியா கற்பகபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகைதந்த நபர் ஒருவருக்கு, திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வருகைதந்த வவுனியா கற்பகபுரம் பகுதியில் உள்ள சிலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அதில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று உதியான நபர்கள் கிளிநொச்சி கோவிட் சிகிச்சை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 49 வயதான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்!!

நெல்லை சிவா..

பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 69.

கொரோனா பெருந்தொற்று காரணமாக சமீப காலங்களில் தமிழ்த்திரையுலகில் பிரபலங்களின் இறப்பு செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் விவேக், பாண்டு, இயக்குநர் கே.வி. ஆனந்த் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் கொரோனா தொற்றாலும், உடல்நலக்குறைவு காரணமாகவும் காலமாகினர்.

இந்த மரணங்கள் தந்த அதிர்ச்சியில் இருந்தே மீள முடியாத நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா நேற்று மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம், பனங்குடி வீட்டில் காலமாகியுள்ளார்.

இயக்குநர் பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ திரைப்படம் மூலமாக நடிகராக திரையுலகில் அறிமுகமான நெல்லை சிவா, தனது தனித்துவமான நெல்லை பாணி பேச்சு வழக்குக்கு திரையுலகில் புகழ் பெற்றவர்.

‘வெற்றிக்கொடிகட்டு’, ‘திருப்பாச்சி’, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த ‘கிணத்த காணோம்’ காமெடி காட்சி மிகவும் புகழ்பெற்றது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் ‘பரமபதம் விளையாட்டு’. சினிமா படங்களில் மட்டுமல்லாது சீரியல்களிலும் கவனம் செலுத்தினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது எதிர்பாராத மரணத்திற்கு திரையுல கலைஞர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு : பரவி வரும் போலிச் செய்தி!!

போலிச் செய்தி..

நாடளாவிய ரீதியில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றது.அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,தேவை ஏற்பட்டால் மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதிக்கும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்,மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அது நிராகரிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.