வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் நேற்றையதினம் நான்கு பேருக்கு கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் எழுமாறான வகையில் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வவுனியாவில் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பலரிடம் பெறப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. அந்தவகையில் அவர்களில் நான்கு பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கெப்பிற்றிக்கொல்லாவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் சில நாட்களிற்கு முன்பாக கெப்பிற்றிக்கொல்லாவை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு விடுமுறையில் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள தீர்வு!!

கோவிட் தொற்று..

கோவிட் நோய்த் தொற்று பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு தடுப்பூசியேயாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட்டை இல்லாதொழிக்கும் இறுதித் தீர்வு மக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் சவாலை வெற்றிகொள்ள வேண்டுமாயின் கோவிட் முதலாம் அலையில் செயற்பட்டது போன்று அனைவரும் சுகாதார விதிகளை முழு அளவில் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நான்கு வகையான கோவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடு ஒன்றில் கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு முடக்க நிலையை அறிமுகம் செய்வது குறுகிய காலத்திற்கு வெற்றியளித்தாலும் நீண்ட காலத்திற்குப் பொருந்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரிய பொருளாதார பின்னடைவைத் தடுக்க வேண்டுமாயின் முடக்க நிலையோ அல்லது ஊரடங்குச் சட்டமோ அமுல்படுத்தகூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு தயாரான இளம் யுவதி பரிதாபமாக பலி : ஆபத்தான நிலையில் காதலன்!!

காதல் ஜோடியின் மீது..

ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே காதலி மரணமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மரணமடைந்த காதலி, தனியார் நிறுவ​னமொன்றில் காசாளராக கடமையாற்றுகின்றார். திருமண வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த போதே, இவ்வாறு விபத்துக்குள் சிக்கியுள்ளனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற ரயில் கடவையில், சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிந்துகொண்டிருந்துள்ளது எனும், அந்த ரயில் கடவைக்கு, பாதுகாப்பான படலை இல்லையென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்!!

பாடசாலைகள் தொடர்பில்..

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இதுவரையில் செயற்பட்ட முறையில் சுகாதார வழிக்காட்டலின் கீழ் நடத்தி செல்லவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் அதிபர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால், பாடசாலைகளை நடத்தி செல்லும் முறை திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மூன்றாவது கோவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் வகையில் சுகாதார வழிக்காட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கமைய, பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் போன்றவற்றை 50 வீத மட்டத்தில் நடத்தி செல்ல வேண்டும். அனைத்து மேலதிக வகுப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது வரையில் அந்த நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் பரீட்சை நடவடிக்கைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட திகதியில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு தீர்மானங்கள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பேருந்துகளில் கடுமையாக அமுலாகும் சட்டம்!!

பேருந்துகளில்..

பேருந்தில் பயணிக்கும் போது சுகாதார ஆலோசனைகளை கடுமையாக பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பின்பற்றாத பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் இது தொடர்பில் தீவிர அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பரவும் கொரோனா தொற்றின் புதிய மரபணு : கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிகுறிகள்!!

கொரோனா..

இலங்கையில் பரவும் கோவிட் வைரஸின் புதிய மரபணு தொற்றியவர்களுக்கு நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னரே நியுமோனியா நிலைக்கு சென்று விடுவதாக சுகாதார விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காற்றின் ஊடாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த புதிய மரபணுவில் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் முகக் கவசம் அணிவசது கட்டாயமாகும். அதற்கயை கோவிட்டின் புதிய மரபணு, முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையுடன் ஒப்பிடும் போது மிக வேகமாக பரவுவதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் கண்டுபிடிப்பட்ட கோவிட் மரபணு போன்று இல்லாமல் புதிய மரபணு காற்றின் ஊடாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் முகக் கவசமின்றி தங்கள் சூழலில் வெளியேற்றும் வைரஸ் ஒன்றரை மணித்தியாலங்கள் அங்கு நீடிக்கும். அந்த காலப்பகுதியில் அந்த இடத்திற்கு முகக் கவசமின்றி வரும் நபருக்கு அந்த காலப்பகுதியில் வைரஸ் தொற்றும் ஆபத்து அதிகமாக உள்ளதென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காற்றில் கோவிட் பரவும் என்பதனை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளமையினால், முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பரவிய கோவிட் ஒருவர் அல்லது இருவருக்கு தொற்றக்கூடும், எனினும் புதிதாக பரவியுள்ள கொரோனா குறைந்த பட்சம் 5 பேருக்காவது தொற்ற கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பரவிய கோவிட் தொற்றியவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் காணப்படும், அதற்கு முன்னர் ஈரல் பாதிக்கப்படும். எனினும் புதிய கோவிட் நியுமோனியா நிலைமைக்கு செல்லும் வரை அடையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடடுள்ளார்.

வடக்கில் புதிய வகை நுளம்பு : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

புதிய வகை நுளம்பு..

நகர்ப்புறங்களில் மலேரியா நோயை பரப்பும் ஒரு புதிய வகை நுளம்பு வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா நோய்யற்ற நாடாக உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த நோய் மீண்டும் நாட்டில் தலையெடுக்கும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவி பேராசிரியர் அனுலா விஜேசுந்தர இந்த நுளம்பு குறித்து பொது மக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கையின் வெப்பநிலை மற்றும் நீர்வளம் இந்த நுளம்பின் இனப்பெருக்கத்தத்திற்கு ஏற்றதாக அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அனோபிலஸ் டிபென்சி Anopheles Defensi mosquito நுளம்பின் புதிய இனங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் விஜேசுந்தர தெரிவித்தார்.

இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வருபவர்கள் , குறிப்பாக கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபடுவோர் மற்றும் யாத்ரீகர்கள், இந்த நோயை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மருத்துவ சங்கத்தின் தலைவி குறிப்பிட்டார்.

இரத்தினக்கல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக மொசாம்பிக் மற்றும் மடகாஸ் தீவுகளுக்கு செல்லும் வணிகர்கள் தங்கள் பயணத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் அனுலா விஜேசுந்தர, கேட்டுக்கொண்டார்

இலங்கையில் பரவும் பிரித்தானிய கோவிட் மாறுபாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கோவிட்..

இலங்கையில் பரவுகின்ற கோவிட் -19 வைரஸின் மாறுபாடு இங்கிலாந்தின் கென்ட் ( Kent) பகுதியில் காணப்படும் கோவிட் வைரஸின் புதிய மாறுபாடுக்கு ஒத்ததாக காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் பரவி வரும் கோவிட் – 19 வைரஸ் தீவிரமானது எனவும், நுரையீரலில் கடுமையான தொற்று ஏற்பட்ட பின்னர் அறிகுறிகள் தென்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த புதிய வைரஸின் பண்புகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

முடிந்தவரை தங்கள் பயணங்களை மட்டுப்படுத்த வேண்டும். பெரிய கூட்டங்களை ஒன்றுகூட அனுமதிக்கக் கூடாது எனவும், அடுத்த சில நாட்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுவதனூடாக வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார்.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் விழா தொடர்பில் வைத்தியர் அதிகாரி விடுத்துள்ள செய்தி!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பு மற்றும் ஒருமைப்பாடு மிக அவசியம் என மாவட்ட தொற்று நோயியில் வைத்திய அதிகாரி வைத்தியர் வி.விஜிதரன் தெரிவித்துள்ளார்.

ஆலய பொங்கல் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆலய பொங்கல் விழாவின் போது முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், தொற்று நீக்கம் செய்தல் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுதல் ஆகியன அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆலய உள் மற்றும் வெளி வீதிகளின் அளவினைக் கொண்டு அவை குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். ஆலயத்தினுள் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் அவர்களுடைய பெயர், தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியன பதிவு செய்யப்பட வேண்டும்.

குடும்பமாக வரும் அடியவர்கள் வீட்டிலிருந்த படி இவற்றை தாளில் கொண்டு வருதல் பதிவு செய்பவர்களுடைய கடமையை இலகுபடுத்துவதுடன் அவ்விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பிற்பாடு உள் அனுமதிக்கப்படுவார்கள். ஆலயத்திற்கு உள்வரும் பாதை மற்றும் வெளியேறும் பாதை தனித்தனியாக அமைக்கப்பட வேண்டும்.

இது கடுமையாக கண்காணிக்கப்படும். காவடி எடுத்தல் முதலான நேர்த்திக் கடன்கள் தற்போதைய நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. அடியவர்கள் ஆலய வழிபாட்டிற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

கடைகளில் மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்களிருப்பதனால் கடைகள் பிரதான வீதிவரை தற்போதைய நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியமானதெனின் மூன்று தினங்களிற்றுள் பி.சி.ஆர் செய்து கொண்டவர்கள் மட்டும் அனுதிக்கப்படுவார்கள்.

அன்னதானங்கள் முதலியன சுகாதார முறைப்படி பொதி செய்யப்பட்டு மக்கள் ஒன்றுகூடாத வகையில் வழங்கப்பட வேண்டும். ஆலய சூழலில் கடைமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சுகாதார துறையினருடன் தொடர்புகளை பேணுதல் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளல் முக்கியமானதென தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இளம் வயதினருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா தொற்று : 18 வயதான யுவதி பலி!!

கொரோனா தொற்று..

இலங்கையில் அண்மையில் அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் தொற்றாளர்களில் இளைஞர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பதிவான கோவிட் தொடர்பான நான்கு இறப்புகளில் வத்தளை பகுதியை சேர்ந்த 18 வயதான இளம் யுவதி ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 18 வயதான குறித்த யுவதி வத்தளையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய உயிரிழந்த மூவரும் பாதிக்கப்பட்ட நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 35 வயதுடையவரும், பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், மஹரகமவை சோர்ந்து 71 பெண் ஒருவம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 638 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் தற்போது கோவிட் வைரஸ் தொற்றினால் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.

கோவிட் வைரஸின் புதிய மாறுபாடு மூத்தவர்களை மட்டுமல்ல , இளைஞர்களையும் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இளைஞர்களிடையே வைரஸ் பரவுவதால், இளைஞர்களுக்கு ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பு தெரிவிக்கின்றது.

சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இளைஞர்களுக்கு ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசி பயன்படுத்தப்படலாம், ஃபைசர் தடுப்பூசியும் இளைஞர்களுக்கும் பயன்படுத்தப்படலாம். இந்நிலையில், ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசி மற்றும் ஃபைசர் தடுப்பூசி வாங்க இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதேவேளை, இந்த கோவிட் வைரஸின் புதிய மாறுபாடு அதிக வேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலாவிஜ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் முந்தைய மாறுபாட்டிற்கு மாறாக 5-6 பேர் வரை அதைப் பரப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய மாறுபாட்டிலிருந்து வரும் நீர்த்துளிகள் ஒரு மணி நேரம் காற்றில் பறக்கின்றன, எனவே அந்த இடத்தை கடக்கும் நபர்களுக்கு தொற்று ஏற்படக்கூடும், ஆகையினால் முகமூடி அணிவது மிகவும் அவசியமான ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலைக்கு 261 மில்லியன் ரூபா ஒதுக்கீடு : திலீபன் எம்.பி!!

வவுனியா பொது வைத்தியசாலைக்கு..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் மாடி கட்டிட நடவடிக்கைகாக 261 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட கட்டிடம் பூர்த்தியாகாமல் பாரிய பிரச்சினையை வைத்தியசாலையில் எதிர்நோக்கினர்.

சுகாதார திணைக்களத்தினால் குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து என்னூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்றிருந்தேன்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உடனடியாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி அவர்களிடம் இப்பிரச்சினையை எடுத்துக்கூறியதற்கு அமைவாக 261 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் முதல் கட்டமாக இவ்வருடம் 100 மில்லியன் ரூபாய்கான வேலைத் திட்டத்தையும், அடுத்த வருடம் 161 மில்லியன் ரூபாய்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தமைக்காக வவுனியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை தலைமை மருத்துவர் ஆகியோரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சந்தையை இராணுவத்தினர் மூலம் நடாத்த வேண்டி வரும் : அரச அதிபர் எச்சரிக்கை!!

அரச அதிபர் எச்சரிக்கை..

சரியான சுகாதார நடைமுறைகள் பேணப்படாவிடின் சந்தை செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்த வேண்டிவரும் என்று மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்.

கோவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (24.04.2021) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர், சந்தை வியாபாரிகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்தும் இங்கு வியாபாரிகள் வருகின்றனர்.

எனவே அந்த இடத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் தினச்சந்தை செயற்பாடுகளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மாற்ற வேண்டி ஏற்படும்.

அங்கும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாதவிடத்து கமநல திணைக்களங்களூடாக இராணுவத்தின் உதவியை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.

எனவே உங்களது ஏனைய உறுப்பினர்களிற்கு கோவிட் தொடர்பான உண்மை நிலையினை எடுத்துச்சொல்லி உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட இடர்பாடுகளிற்கு இடமளிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஒரு மணிநேரமாக மூடப்பட்ட புகையிரத கடவை : போக்குவரத்து பாதிப்பு!!

புகையிரத கடவை..

வவுனியாவில் புகையிரத பாதை மீள்புனரமைப்பு காரணமாக நகரசபை பூங்கா வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பாதிப்படைந்திருந்துடன் மக்கள் மாற்று பாதையூடாக பயணித்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட புகையிரத பாதைகளை மீள்புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த புனரமைப்பு பணி பொருட்களை ஏற்றிச் செல்லும் புகையிரதத்தின் உதவியுடன் இடம்பெற்று வருவதினால் நகரசபை பூங்கா வீதியூடான புகையிரத கடவை மூடப்பட்டது.

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி ஒரு மணிநேரமாக புகையிரத கடவை மூடப்பட்டமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்ததுடன் மாற்று வீதியூடாக பயணித்திருந்தனர்.

வவுனியாவில் திறக்கப்பட்ட தனியார் கல்லூரிகள் : மாணவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!!

தனியார் கல்லூரிகள்…

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் நேற்றையதினம் (24.04.2021) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மறு அறிவித்தல் வரை தனியார் கல்லூரி வகுப்புக்கள் , பிரத்தியோக வகுப்புக்கள் என்பனவற்றிக்கு தடை உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டதுடன் இதனை மீறி செயற்படுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வவுனியா நகரின் சில தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் கல்வி நடவடிக்கை வழமை போல இடம்பெறும் என மாணவர் சமூகமளிக்குமாறு தெரிவித்துள்ளனர். பின்னர் இன்றையதினம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்த மாணவர்களை திருப்பியனுப்பிருந்தனர்.

அரசாங்க அதிபரின் உத்தரவினையடுத்து பெரும்பான்மையான தனியார் கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான சில கல்லூரி நிர்வாகத்தினரின் செயற்பாடுகள் கண்டனத்துக்குறியது என பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுமி பலி : இருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் இன்று (25.04.2021) காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஈரட்டைபெரியகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வவுனியா நகரிலிருந்து ஈரட்டைபெரியகுளம் ஊடாக பயணித்த முச்சக்கரவண்டியும் ஈரட்டைபெரியகுளம் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்,

இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 10 வயதுடைய சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளமையுடன் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றார்கள் : வெளியான புதிய நடைமுறைகள்!!

புதிய நடைமுறைகள்..

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (24.04.2021) காலை இடம்பெற்றது.

நகரசபை அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட செயலக உயர் குழுவினர், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரின் பங்கு பற்றுதலுடன்,இக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததுடன்,

இதன் போது பல்வேறு வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பல்வேறு நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கை உட்பட பிரத்தியோக வகுப்புக்களுக்கு தடை , கழியாட்ட நிகழ்வுகளுக்கு தடை , மங்களகரமான மற்றும் துக்ககரமான நிகழ்வுகளுக்கு 150 நபர்கள் மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன் இவைகள் அவ்விடத்தில் 50வீதமாக இருத்தல் வேண்டும் (மண்டபங்களின் இருக்கை எண்ணிக்கையில் 50வீதம்),

உணவகங்களின் இருக்கைகள் 50வீதமாக மாற்றப்படுதல் , நீச்சல் தாடாகம் பூட்டு , சிறுவர் பூங்கா பூட்டு போன்ற பல்வேறு திர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,

வர்த்தக நிலையங்களில் ஊழியர்கள் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் வாடிக்கையாளர்கள் கை சுத்தம் செய்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்தி வழங்கப்படுதல் கட்டாயமாகும்.

மேலும் பொதுமக்களும் சீரான முறையில் முகக்கவசம் அணிவது அவசியமாகும் இவ்விடயங்களை மீறி செயற்படுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அத்துடன் வவுனியா மாவடத்தில் தங்கியிருந்து பணியாற்றும் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் செல்ல முடியுமெனவும்,

இந்த நடைமுறைகள் மறுஅறிவித்தல் வரை நடைமுறையில் இருக்குமெனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.