யாழில் கைதான 26 வயதுடைய பெண்ணுக்கு புனர்வாழ்வு!!

யாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் நேற்றையதினம் 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார் அதன்படி அவரை 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் புதிய வகை கொரோனாவுக்கு முதல் பலி!!

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸின் பரவல் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இந்தியாவிலும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் இதன் பாதிப்பு மிக குறைவாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மறைமலைநகரை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதிய கொரோனா பாதிப்பு மூலம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் கிரிக்கெட் வீரர் செஹான் மதுசங்கவுக்கு விளக்கமறியல்!!

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில்

வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ரன்திக்க லக்மால் ஜயலத் திங்கட்கிழமை (26.05) உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவின் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக பன்னல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் செஹான் மதுசங்கவின் வீட்டில் இருந்து 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது,

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட செஹான் மதுசங்க குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், செஹான் மதுசங்க மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை……!!

தனது மகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கதறி கதறி அழும் தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தந்தை-மகள் உறவு என்பது எப்போதும் மிகவும் ஆழமாக இருக்கும். ஆண் பிள்ளைகளை விடவும், பெண் பிள்ளைகளிடம் தந்தைக்கு அதிக பிணைப்பு இருக்கும். தந்தைகளின் இளவரசிகளாக மகள்கள் இருப்பார்கள் என்றால் அது மிகை ஆகாது.

இந்நிலையில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

அப்போது மருத்துவர் ஊசியை குழந்தையில் அருகில் கொண்டுவரும் போதே அந்த தந்தை அழ தொடங்கிவிடுகிறார்.

பிறகு குழந்தையின் கையில் ஊசி போடப்பட்ட நிலையில், குழந்தை துடித்து அழுவதைக் கண்டு அவர் கதறி கதறி அழுகிறார். குழந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாதவர்போல அவர் குழந்தையை அணைத்துக்கொண்டு அழுகிறார்.

இந்த நிலையில் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

13 வயதுடைய பாடசாலை மாணவன் விபரீத முடிவு : பெற்றோர் கூறிய அதிர்ச்சித் தகவல்!!

அம்பலாங்கொட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

7 ஆம் தரத்தில் கல்விபயிலும் குறித்த மாணவன் அவரது வீட்டில் இவ்வாறு இன்று (27) காலை உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மாணவனின் மரணத்திற்கு மன உளைச்சல் காரணமாக இருக்கலாமென பெற்றோர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கடந்த சில வாரங்களில் நாட்டில் இவ்வாறு பல மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், 13 வயதுடை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

அண்மையில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற 2 ஆம் ஆண்டு மாணவன் ஒருவர் தனது வீட்டில் உயிரை மாய்த்திருந்தார். இதற்கு காரணம் பகிடிவதையால் ஏற்பட்ட மன உளைச்சல் என்று கூறப்படுகிறது.

மேலும் வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரி கல்வி கற்கும் 2 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்!!

சைப்ரஸில் சம்பவித்த கோர விபத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை நிக்கோசியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான வசந்தா வஜிரானி என்ற இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் வாகனம் எதிரே வந்த லொறியில் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பெண்ணை உடனடியாக மீட்டு நிக்கோசியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

27 வயதான லொறியின் ஓட்டுநர் நீதிமன்ற உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் நிக்கோசியா போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தென்னிலங்கையை உலுக்கிய மரணம் : வைத்தியசாலைக்குள் நடந்த மோசமான சம்பவம்!!

காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை வழங்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான அறிக்கையை, காலி மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொக்குகே நேற்று நீதவானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.

உயிரிழந்தவர் காலி, ஜின்தொட்ட பகுதியை சேர்ந்த 31 வயதான சதுரங்க சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜின்தொட்ட பகுதியில் சுற்றுலா விடுதி நடத்தி வந்த குறித்த இளைஞன், நேற்று முன்தினம் மதியம் மாத்தறையில் இருந்து காலி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஹபராதுவ பகுதியில் விபத்துக்குள்ளானார்.

காயமடைந்த நபர் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவின் 58வது அறையில் அனுமதிக்கப்பட்டார்.

தனது சகோதரர் விபத்தில் சிக்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் தனது தாயாருடன் மருத்துவமனைக்கு வந்தபோது, ​​தனது சகோதரர் ஒரு டிராலியில் கிடப்பதைக் கண்டதாக உயிரிழந்த இளைஞனின் சகோதரி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் வந்த போது, ​​என் சகோதரனுக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் தெரியவில்லை. அவர் நன்றாக இருந்தார்.

ஆனால் அவரது அடிவயிற்றின் கீழ் பகுதி மிகவும் வலிப்பதாக அவர் கூறினார். நாங்கள் இது குறித்து வைத்தியர் மற்றும் தாதிகளிடம் கூறினோம். ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

என் சகோதரனுக்கு எந்த வலியும் இல்லை என்று அவர்கள் கூறினர். அவர்கள் எக்ஸ்ரே எடுப்பதாக கூறினார்கள். ஆனால் எடுக்கவில்லை.

என் சகோதரனால் வலியைத் தாங்க முடியவில்லை, பல சந்தர்ப்பங்களில் அவருக்கு வலி இருப்பதாக மருத்துவமனை ஊழியர்களிடம் கூறினார். ஆனால் யாரும் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை.

என் சகோதரர் நேற்று காலை வரை டிராலியில் இருந்தார். அவர் வலியைத் தாங்க முடியாமல் டிராலியில் இருந்து இறங்கி மருத்துவமனைக்கு வந்த அம்புலன்ஸில் சென்று,

எனக்கு எந்த மருந்தும் கொடுக்க மாட்டார்கள் எனவும் என்னை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அந்த நேரத்தில், மருத்துவமனை ஊழியர்கள் அவரை அம்புலன்ஸில் இருந்து திரும்ப அழைத்துச் சென்று ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, என் சகோதரர் இரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு சரியான சிகிச்சை கிடைக்காததால் இந்த மரணம் நிகழ்ந்தது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 இலட்சம் ரூபாவாக உயர்வடையும் தங்கத்தின் விலை : இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கை தங்க விலை நிலவரங்களின் படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடும் பொழுது இன்றையதினம் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனினும், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 1,002,963 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 283,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது 3 இலட்சம் ரூபாவை அண்மிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 259,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 247,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலையானது சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய கடுமையாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக போட்டிகளில் இடம்பிடித்த ஈழப்பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

விளையாட்டையே தங்களது வாழ்வாக கொண்ட மனிதர்கள் எப்பொழுதும் கவனிக்கத்தக்கவர்கள்.

அதிலும் பெண்கள் விளையாடடுத்துறையை தெரிவு செய்து பங்குப்பற்றும் போது அதன் பார்வை வேறுப்படுகின்றது.

இவ்வாறான ஒருவர்தான் மன்னாரின் அடையாளமாக தலைநிமிர்ந்து நிற்கும் திவ்யா.

அதிகளவான பரிச்சயமில்லாத ரோல் பந்து விளையாட்டில் சர்வதேச மைதானங்களை எட்டிப்பிடிக்கும் வீரப்பெண்ணை அடையாளப்படுத்துவதில் மகிழ்கின்றது தாய்நிலம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு!!

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாளர் குடும்பத்துடன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இயங்கி வரும் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ண குமார். 45 வயதாகும் கிருஷ்ண குமாருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ண குமார், தனது மனைவி டோலி தேவி மற்றும் 2 மகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருமே திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வீட்டுக்கு சென்ற போலீசார் வீட்டு கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது கிருஷ்ணகுமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கிமோதெரபி மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் கிருஷ்ணகுமார் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து கிருஷ்ணகுமார் தனது மனைவியும் மற்றும் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் வீதி விபத்துக்களால் நால்வர் பலி!!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, மட்டக்களப்பு, மாத்தளை, அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலேயே இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, கேகாலை – பெரகலை வீதியில் மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 53 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 85 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளையில் வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 60 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் கெக்கிராவை பகுதியில் கண்டியிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 49 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இந்திய ரூபாவின் பயன்பாடு : இந்திய மத்திய வங்கியின் நடவடிக்கை!!

இந்திய ரூபாயை சர்வதேச மயமாக்க, இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, இலங்கை மற்றும் பிற நாடுகளில் கடன் கோருவோருக்கு, குறித்த நாடுகளின் உள்ளூர் வங்கிகள் மற்றும் இந்திய வங்கிகளின் கிளைகளின் ஊடாக இந்திய நாணயத்தில் கடன் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த வங்கி மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இதன் காரணமாக, இந்திய ரூபாயின் பயன்பாடு மற்றும் ஏற்றுக்கொள்ளலை, சர்வதேச வர்த்தகத்தில் மேம்படுத்த முடியும் என்று, ரிசர்வ் வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் இந்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், அண்டை நாடுகளான பங்களாதேஸ், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில்,வெளிநாட்டினருக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம் என்று இந்திய மத்திய வங்கி யோசனை தெரிவித்துள்ளது.

எனினும் இந்திய நிதியமைச்சு இன்னும் இதற்கான ஒப்புதலை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய வர்த்தக அமைச்சக தரவுகளின்படி, தெற்காசியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 90 வீதமானவை, 2024-25 ஆம் ஆண்டில் இந்த நான்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி கிட்டத்தட்ட 25 பில்லியன் டொலர்களாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்திய வங்கிகளின் வெளிநாட்டு கிளைகள், வெளிநாட்டு நாணயங்களில் கடன்களை வழங்குவதற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல் : 15073 ஆட்சேர்ப்புக்கு அனுமதி!!

இலங்கை அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (2) அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள்,

04 மாகாண சபைகள் மற்றும் 02 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகள் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த துயரம் : நடுவீதியில் நேர்ந்த விபரீதம்!!

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில், பூம் ட்ரக் ஒன்று கேகாலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் சாரதி வாகனத்திலிருந்து இறங்கி, நெம்புகோல் அமைப்பின் உதவியுடன் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.

இதன்போது, அந்த வாகனத்தின் ஆதரவு அமைப்பு தளர்ந்து, வாகனம் வீதியின் கீழ்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன்போது, பூம் ட்ரக் வாகனத்திற்கு முன்னால், கேகாலை நோக்கி செல்ல தயாராக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் அவரது மகள் காயமடைந்து, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

முடி மாற்று அறுவை சிகிச்சையால் இருவர் உயிரிழப்பு : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பல் வைத்தியர் அனுஷ்கா முடி மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளார். இந்த சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூபா 40,000 முதல் ரூபா 1 லட்சம் வரை பெற்றுள்ளார்.

அதேவேளை அவரிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் அனுஷ்கா தலைமறைவானார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் அனுஷ்காவை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தநிலையில், தலைமறைவாக இருந்த பல் வைத்தியர் அனுஷ்கா திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

காதலனுடன் ஓடிய மகள் : உருக்கமாக கடிதம் எழுதி வைத்து தாய், தந்தை, தங்கை எடுத்த விபரீத முடிவு!!

காதலனுடன் மகள் ஓடிச் சென்ற நிலையில், தாய், தந்தை மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து, தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தில் எச்.டி. கோட் தாலுகா, புதனூர் கிராமத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்று விட்டதாக தெரிகிறது.

இதனால் கிராமத்தில் ஏற்பட்ட அவமானம் காரணமாக ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவதூறு ஏற்படும் என்ற பயத்தில் பெற்றோர் மற்றும் தங்கை ஆகிய மூவர் ஏரியில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி உயிரிழந்ததவர்கள் 55 வயது மகாதேவ் சுவாமி , 45 வயதில் அவரது மனைவி மஞ்சுளா, 20 வயதில் அவர்களின் இளைய மகள் ஹர்ஷிதா மூவரும் பைக்கில் சென்று புதனூர் ஏரிக்கு சென்றுள்ளனர்.

அங்கு பைக்கை நிறுத்தி, செருப்புகளை அதே இடத்தில் விட்டுவிட்டு, தற்கொலைக்கான கடிதம் எழுதி வைத்துள்ளனர். பின்னர், ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த காட்சியைப் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்புப் படையினரும் மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கான தற்கொலைக்குறிப்பில், “எங்கள் மரணத்திற்கு எங்களைத் தவிர வேறு யாரும் காரணமில்லை. எங்கள் சொத்துகள் எதுவும் எங்கள் மூத்த மகளுக்குக் கொடுக்கவேண்டாம்.

அவள் எங்களை ஏமாற்றிவிட்டாள். எங்களை போல யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது. அவதூறு காரணமாகவே இந்த முடிவை எடுத்தோம்” என எழுதியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், வீட்டை விட்டு ஓடிய மூத்த மகள், தனது பெற்றோர் மற்றும் தங்கையின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.