பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!!

2024/2025 கல்வியாண்டிற்கான தேசிய பல்கலைக்கழகங்களுக்கு 2024 க.பொ.த உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பம் கோரல் 2025 மே 30ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், சாத்தியமான அனைத்து மாணவர்களும் தங்கள் விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

அதற்கமைய, www.ugc.ac.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு ; கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிவப்பு எச்சரிக்கை இன்று (27) பிற்பகல் 12:30 மணிமுதல் புதன்கிழமை (28) பிற்பகல் 12:30 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும்,

காலி முதல் அ ம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், சில நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரையோரக் கடல் பகுதிகளிலும் அலைகளின் உயரம் (சுமார் 2.5 மீ – 3.0 மீ) அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளை கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா கனகராயன்குளத்தில் மூழ்கி இளைஞர் மரணம்!!

வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்று (26.05.2025) சாவடைந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று மாலை கனகராயன்குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது குளத்தில் மூழ்கி சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம.ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

அரச நியமனம் கோரி மாம்பழ வியாபாரி போராட்டம்!!

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் இன்று (26.05.2025) தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .

மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனிநபர் போராட்டத்தில் தனது பட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தில் குதித்தார். கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி தெரிவிக்கையில்,

அரச துறையில் தனக்கு நியமனத்தை வழங்குமாறும், கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்தார்.

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் தொற்று!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது கோவிட் – 19 நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது.

மும்ப்ராவைச் சேர்ந்த அவர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஆம் 22 திகதி தானேயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே பெங்களூருவில் கடந்த 24 ஆம் திகதியும் ஒருவர் கொரோனா வைரஸால் உயிர்ழந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த வார இறுதியில் சுகாதார அமைச்சகம் கொரோனா பாதிப்புகளை மதிப்பாய்வு செய்து, முக்கியமாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளதாகக் கூறியது.

தற்போது இந்தியா முழுவதும் 1,009 பேர்கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 430 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் மே 19 முதல் 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் தற்போது 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 153 பேர் கடந்த வாரம் முதல் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த வாரத்தில் நான்கு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். டெல்லியில் தற்போது பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது.

யாழில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை (24.05.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, குழந்தைகள் தற்போது விசேட பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண் குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில், தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இறந்த தாயின் ஆசையை நிறைவேற்ற வெளிநாடு சென்ற இளைஞன் : கிடைத்த அதிர்ச்சித் தகவல்!!

மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் கடந்த 2025.01.07 ஆம் திகதி பெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சட்டரீதியாக சென்ற நிலையில் இரு மாதங்களின் பின்னர் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியே குடும்பத்தாருக்கு கிடைத்துள்ளது.

மரணமடைந்துள்ளதாக தெரிவித்தும், அவர் தொடர்பில் இதுவரையில் எதுவித தொடர்பும் அற்றுப்போயுள்ள நிலையில அவரின் குடும்பத்தார் நேற்று (25.05) ஊடகசந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது, எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்தின் மத்தியிலே தான் எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார் என உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “அவர் வெளிநாடு செல்லவேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிவர்த்தி செய்து அம்மாவின் ஆத்மா ஈடேறவேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் அவர் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார்.

அவர் அங்கு சென்று மூன்று மாதமான நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல் ஒன்று அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது.

அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்து தாமாகவே உயிரிழந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது” என குறிப்பிட்டுள்ளார். முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க…

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : பலர் காயம்!!

களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.05) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பெருந்தொகை பணத்துடன் வீதியில் கிடந்த பை : பாடசாலை மாணவியின் நெகிழ்ச்சியான செயற்பாடு!!

வீதியில் விழுந்து கிடந்த 17,000 ரூபாய் பணத்துடன் இருந்த பையை பாடசாலை மாணவியொருவர் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொலன்னறுவை- கிரிதலேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொலன்நறுவை கிரிதலேகம மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று முடித்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற பொழுது வீதியில் ஒரு பணப்பையை கண்டெடுத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த மாணவி பணப்பையை பாடசாலை அதிபரிடம் கொடுத்து உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். இந்தநிலையில், அதிபர் குறித்த தகவலை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, தகவலறிந்த 75 வயதுடைய முதியவர் அதிபரிடம் தனது பணப்பையை பெற்றுக்கொண்டுள்ளார். அத்தோடு, தனது பணப்பையை பெற்றுக்கொடுத்த பாடசாலை சமூகத்தினருக்கும், மாணவிக்கும் அவரது பெற்றோருக்கும் முதியவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கர்ப்பம் கலைந்ததால் திட்டிய கணவர் : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணொருவர், கணவர் திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அம்ரீன் ஜஹான் (23). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அம்ரீனின் கணவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அம்ரீனுக்கு எதிர்பாராத விதமாக கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அம்ரீன் ஜஹான் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் இறப்பதற்கு முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் தவறான உணவு பழக்கவழக்கங்கள்தான் என கணவரின் சகோதரி, மாமனார் என்னை குற்றம்சாட்டினர். மேலும், அவர்களுடன் சேர்ந்து என் கணவரும் ‘நீ ஏன் சாகக்கூடாது?’ என்று கேட்டார்.

என் மரணத்திற்கு காரணம் கணவரின் தந்தை மற்றும் சகோதரித்தான். என் கணவருக்கும் இதில் பாதி பங்கு உள்ளது என கூறியுள்ளார்.

அத்துடன் தனது தந்தையிடம் பேசிவிட்டு அம்ரீன் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனையடுத்து அம்ரீனின் தந்தை பொலிஸில் புகார் அளிக்க, கணவர் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொழும்பில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : தாயும் மகனும் காயம்!!

கொழும்பு – நாவல பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து திங்கட்கிழமை (26.05) காலை இடம்பெற்றுள்ளது. காரின் சாரதி பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மகன் பாடசாலை மாணவன் ஒருவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி உட்பட பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஒரே இரவில் 37000 பேரின் குடியுரிமையை ரத்து செய்த நாடு : அதிர்ச்சியில் குடியேறிகள்!!

குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர். குவைத் புதிய ஆட்சி தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

குவைத தலைவர் , 2023 டிசம்பரில் அதிகாரத்திற்குவந்தஐந்து மாதங்களுக்குப் பிறகு, சட்டமன்றத்தை கலைத்ததோடு, சில அரசியலமைப்புச் சட்டங்களையும் நிறுத்திவைத்தார்.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக, “உண்மையான குவைத் மக்களுக்கே நாடு சொந்தம்” என அறிவித்து, இந்த குடியுரிமை ரத்து நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.

1987 முதல் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலியான ஆவணங்களின் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இந்நடவடிக்கையில் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இந்த நடவடிக்கை மூலம் தனிப்பட்ட சாதனைகளுக்காகக் குடியுரிமை பெற்ற பிரபலங்களான பாடகி நவால் மற்றும் நடிகர் தாவூத் ஹுசைன் ஆகியோரும் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர்.

தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி : சக மாணவர்களால் சிக்கிய கல்லூரி ஆசிரியர்கள்!!

வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தார். கண்டி தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த சஞ்சீவனி குமாரி என்ற மாணவியே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தார்.

தற்போது அவர் உயிரிழந்தமைக்கான காரணத்தை அவருடைய நண்பர்கள் கூறியுள்ளனர். கல்லூரி ஆசிரியர்களால் குறித்த மாணவி அனுபவித்த துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்க முடியாமல் இவ்வாறு அவர் தவறான முடிவெடுத்ததாக அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது போன்ற மரணங்கள் இனியும் இடம்பெறுவதை தடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி வயம்ப தேசிய கல்விக் கல்லூரி மாணவர்கள் நேற்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பீடத்தின், பீடாதிபதி வர வேண்டும் என்று கோரி, இரவு வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சஞ்சீவனி இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டியின் தெல்தெனிய பகுதியிலிருந்து வயம்ப தேசிய கல்விக் கல்லூரிக்கு வந்துள்ளார். ஆனால் தனது கல்வி காலத்தை நிறைவு செய்வதற்குள், அவர் இவ்வாறு தவறான முடிவை நோக்கிச் சென்றுள்ளார்.

இதேவேளை, அவர் யாருக்கும் தெரியாத வகையில் விடுதி அறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனைவியை பயன்படுத்தி கணவன் செய்த மோசமான செயல் : வீதிகளில் சிக்கிய பலர்!!

தனது மனைவியை தகாத முறையில் பயன்படுத்தி, பலரை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான கணவனை, மேல் மாகாண குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 30 வயதான சந்தேக நபர் கோட்டேகொட பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கடந்த 23 ஆம் திகதி பேலியகொட சந்தியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது அவரிடம் 10 கிராம் 400 மில்லிகிராம் ஹெராயின் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது மனைவியை வீதிகளில் தகாத நடவடிக்கைக்கு உட்படுத்தி பலரை தன்வசப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் கனடா அனுப்புவதாக கூறி பணமோசடி : நள்ளிரவில் கைதான குடும்பப்பெண்!!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார்.

அதன் பின்பு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில்

முறைப்பாடளித்ததன் பிரகாரம் 2024ம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை விதித்து பிடியாணை பிறப்பித்திருந்தது.

குறித்த பெண் சந்தேக நபர் மருதங்கேணி பொலிஸாரின் உதவியுடன் செம்பியன்பற்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் குறித்த நபர் அதே பகுதியில் பலரிடம் மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை நாளை(26)கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வரும் அதேவேளை தன்னுடைய பெருந்தொகையான பணத்தை மோசடி

செய்த குறித்த பெண்ணிடம் இருந்து தனக்குரிய பணத்தை மீள பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட குடும்ப பெண் பொலிஸாரை கேட்டுக் கொண்டுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் பலி, மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்!!

யாழ் – கண்டி பிரதான வீதியில் வவுனியாவின் ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். காரில் காயமடைந்த மூன்று பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரை ஓட்டிச் சென்றவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர். தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சஜ்யிதானந்த பிரபாகர குருக்கள் வயது 52 என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மனைவி பி.சீத்தாலட்சுமி (வயது – 50), மகன் பி.அக்ஸய் (வயது 27), மாமனார் சுவாமிநாதன் ஐயர் (வயது – 70) படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.