வவுனியா ஓமந்தையில் கோர விபத்து – யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் கணவர் உயிரிழப்பு!!

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் லொரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஓமந்தைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காரை ஓட்டிச் சென்றவர் உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர், மேலும் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் உட்பட இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பிலிருந்து காலி சென்ற பஸ் விபத்து : ஒருவர் பலி, 12 பேர் காயம்!!

கொழும்பு – வெல்லவாய வீதியில் சனிக்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணித்த சாரதி உட்பட 13 பேர் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லையென்பதுடன் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார்.

இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் மூலமே இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் முதல் முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு கண்டுபிடிப்பு!!

இலங்கையில் முதன்முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழுவை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.

இந்த நாடாப்புழு 70 சென்றி மீற்றர் நீளத்தை விடவும் அதிகமாகும். இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சுரங்க தொலமுல்லா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை நிபுணர் ரோஹித முத்துகல ஆகியோரின் மேற்பார்வையின் கீழ்,

ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை மருத்துவ ஆய்வக விஞ்ஞானி துஷார தந்திரிகே மேற்கொண்டார்.

இது நாடாப்புழு குரங்கினத்தை சேர்ந்தது என்றாலும், எதிர்காலத்தில் மூலக்கூறு உயிரியலைப் பயன்படுத்தி இனத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை நாடாப்புழு குரங்குகளால் பரவுகிறது. நாடாப்புழு முட்டைகள் குரங்கின் மலத்துடன் கலந்து மண்ணில் உள்ள ஒரு சிலந்திப் பூச்சியால் உட்கொள்ளப்படுகின்றன. பின்னர் நாடாப்புழு இனப்பெருக்கத்தினை செய்கின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற கழுவப்படாத உணவுகளை சாப்பிட்ட பின்னர் அல்லது நகங்கள் வழியாக மண் உடலுக்குள் சென்று நாடாப்புழுக்கள் உருவாகின்றன.

வயது வந்த நாடாப்புழுக்கள் மனித சிறுகுடலில் சுமார் இரண்டு ஆண்டுகள் வாழலாம். குரங்கு நாடாப்புழு இருந்தால், அதன் அறிகுறிகளில் இடைவிடாத வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, அடிவயிற்றின் கீழ் அரிப்பு, பதட்டம் மற்றும் எடை இழப்பு ஆகியவை ஏற்படும்.

பெரும்பாலான மக்களுக்கு பொதுவாக அறிகுறிகளைக் காட்டுவதில்லை. சதுர, செவ்வக, நீளமான வெள்ளைப் புழுப் பகுதிகள் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வெளிப்படுவதை காணலாம்.

குரங்குகள் வாழும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் குரங்கு நாடாப்புழுக்களின் பாதிப்பினை தடுக்க முடியும் என நிபுணர் துஷாரா தந்திரிகே தெரிவித்துள்ளார்.

யாழில் நகையை தொலைத்தவரை தேடி நகையை கையளித்த நகைக்கடை உரிமையாளர்!!

யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கையளித்துள்ளார்.

பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், கடந்த 09.04.2025 அன்று தனது நகையை தவறவிட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் அந்த பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த நகையை கண்டெடுத்தவர் அதனை நகை கடையில் கொடுத்து, நடந்த சம்பவத்தையும் நகைக்கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

இதன்போது நகைக்கடை உரிமையாளர், நகை காணாமல் போனதாக ஏதாவது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதா என்பது தொடர்பில் தேடுதலில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கமைய, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தெரியவந்தது.

இந்நிலையில் நகையை தொலைத்த பெண்ணை அழைத்த நகைக்கடை உரிமையாளர், மதகுரு ஒருவருக்கு முன்னால் வைத்து அந்த நகையை கையளித்துள்ளார்.

நகையை தொலைத்த பெண்ணிடமே மீண்டும் நகையை வழங்கிய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குறித்த நகைக்கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாட்டில் இன்று சில மாகாணங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!!

காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (24) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கிடையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கட்டாரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்!!

கட்டாரில் தொழில் புரிந்துவந்த திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தந்தை ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். திருகோணமலை – கிண்ணியா, ரஹ்மானியா பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நூர்தீன் நௌபீக் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர், நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமானதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த ஐந்து வருடங்களாக கட்டாரில் தொழில் புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது ஜனாஸா இன்று இலங்கை நேரப்படி இரவு 7.45 மணிக்கு கட்டார் அபு ஹமூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பாதசாரி பலி : விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோட்டம்!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (23.05) இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் – புன்னக்குடா வீதியின் 2 ஆவது கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் வாகனம் ஒன்று, பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்கு காரணமான வாகனம் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா மாநகர சபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்!!

வவுனியா மாநகர சபையினால் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் காணப்பட்ட அங்காடி வியாபார கொட்டகை நேற்றையதினம் அகற்றப்பட்டுள்ளது.

அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் முறைப்பாடுகளிற்கு அமைவாகவே குறித்த கொட்டகை அகற்றப்பட்டுள்ளது.

முறைப்பாடு

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே செருப்பு தைக்கும் அங்காடி வியாபார கொட்டகையில்,

இரவு வேளைகளில் தவறான நடவடிக்கை இடம் பெறுவதாகவும், அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதார சீர்கேட்டிற்குட்படுவதாகவும் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த வியாபார கொட்டகை அகற்றப்பட்டு, பிறிதொரு இடம் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தொழிலில் ஈடுபட்ட விசேட தேவைக்குட்பட்ட பெண்ணிற்கு, விசேட தேவைக்குட்பட்டவர்களை பராமரிக்கும் காப்பகத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மாநகரசபை வருமான பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

நுவரெலியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 21 பேர் படுகாயம்!!

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு (11:15 ) மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 21 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 18 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இலங்கைத் துறைமுக நகருக்குப் போட்டியாக மாலைதீவிலும் துறைமுக நகரம்!!

இலங்கைத்(Sri Lanka) துறைமுக நகருக்குப் போட்டியாக மாலைதீவிலும் துறைமுக நகரம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள துறைமுக நகரம் தென்னாசியாவின் மிகச்சிறந்த முதலீட்டு வலயமாக உருவெடுக்கும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் அதில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் துறைமுக நகரையொத்த முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மாலைதீவு மேற்கொண்டுள்ளது.

அதற்காக கட்டார் அரசாங்கம் 800கோடி அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. குறித்த முதலீட்டு வலய முதலீட்டாளர்களுக்கு முழுமையான வரி விலக்க அளிப்பதற்கு மாலைதீவு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக லொட்டரியில் மிகப்பெரிய பரிசுத்தொகையை வென்ற தமிழர்!!

இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்ற “எமிரேட்ஸ் டிரோ” சீட்டிழுப்பில் வரலாற்றில் மிகப்பெறிய தனிநபர் வெற்றி பரிசை தனதாக்கியுள்ளார்.

சென்னையில் வசிக்கும் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவரே, கடந்த மார்ச் 16 அன்று நடந்த இந்த போட்டியில் ஏழு எண்களையும் பொருத்தி 100 மில்லியன் திர்ஹம்ஸ் (27 மில்லியன் டொலர் ) பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

இந்த பரிசுத்தொகையானது இலங்கை மதிப்பில், எட்டு பில்லியனுக்கும் அதிக தொகை என கூறப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண குடும்பப் பின்னணியைச் சேர்ந்த ஸ்ரீராம் முதலில் 1998 இல் சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், அங்கு அவர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வேலை செய்து மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், வெற்றி பெற்ற தருணத்தை விவரித்த அவர், இந்த வெற்றியால் கிடைத்த வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய தொகை 70% மகிழ்ச்சியையும் 30% பயத்தையும் கொண்டு வந்தது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஸ்ரீராம், “இது எனது வெற்றி மட்டுமல்ல. இது எனது குடும்பம், எனது குழந்தைகள் மற்றும் பிறருக்கு நம்பிக்கை.

ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புகிறார், இப்போது என்னால் முடியும்” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பரிசுத் தொகையை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்ற எதிர்காலத் திட்டங்களை அவர் விவரிக்கவில்லை என்றாலும், வெற்றிகளின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குவதாகவும், புதிதாகக் கிடைத்த செல்வம் இருந்தபோதிலும் நிலையாக இருக்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி விபரீத முடிவு : நடந்தது என்ன?

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை – வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது கல்லூரி விடுதியில் வைத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன் மீண்டுமொரு பேருந்து விபத்து : 7 பேர் படுகாயம்!!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இன்று (24) மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்து தனமல்வில பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பாக டிப்பர் லாரியின் சாரதி தனமல்வில தலைமையக காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவான இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர!!

72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த 24 பேரில், உலக அழகி போட்டியின் “ HEAD TO HEAD presentation ” பிரிவில் ஆசியாவின் முதல் 5 அழகிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அனுதி குணசேகர என்பவர் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அனுதி குணசேகர இலங்கையின் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பட்டதாரி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞனுக்கு எமனான பேருந்து : தீவிரமாகும் பொலிஸ் விசாரணை!!

கம்பஹா மாவட்டம் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யக்கல – கிரிந்திவெல வீதியில் வாரபலான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

கிரிந்திவெலவிலிருந்து யக்கல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பூகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆவார்.

இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.