குருணாகல், தேவலேகம பொலிஸ் பிரிவின் பட்டுவத்த பகுதியில், தனது மனைவி மற்றும் மகனை ஒருவர் கொடூரமாக தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மனைவி கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கொல்லப்பட்ட நபர் பட்டுவத்த ஹலமட பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஆவார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், குடும்ப தகராறு காரணமாக நேற்று இரவு தடியால் தாக்கப்பட்டு இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் மீதான நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது. அத்துடன், தேவலேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வைத்து வைத்தியர் ஒருவரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17ஆம் திகதி(17.09.2025) அன்று இரவு வைத்தியர் ஒருவர் உரும்பிராய் சந்தியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடாத்தினர்.
பின்னர் குறித்த வைத்தியர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மூவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் இரவு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீதியால் வைத்தியர் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றுள்ளனர்.
குறித்த வைத்தியர் தான் செல்வதற்கு வழிவிடுமாறு கூறியவேளை அவர் மீது அங்கிருந்த கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த வைத்தியர் இதுகுறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார், இருவரை கைது செய்த நிலையில் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த வைத்தியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்த இருவரையும் விடுவிக்குமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கூறியமைக்கு அமைவாக பிணை எதுவுமின்றி அவர்கள் இருவரையும் விடுதலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைத்தியர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் விடுவித்தமையானது குறித்த கும்பலுக்கும் பொலிஸாருக்குமிடையே தொடர்பு உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து செய்திகள் வெளிவந்த நிலையிலேயே தாக்குதல் நடாத்திய சந்தேகநபர்கள் இருவரும் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பலரும் விரும்பி சாப்பிடும் சாலையோர உணவுகளில் பானிப்பூரியும் ஒன்றாகும். பாமர மக்கள் முதல் பணக்காரர்களும் விரும்பி சாப்பிடும் உணவாக பாணிப்பூரி உள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வடோதராவில், ஒரு பெண் நடுரோட்டில் அமர்ந்துபல மணி நேரம் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடோதராவின் சுர்சாகர் ஏரி பகுதியில், ஒரு பெண் பானிபூரி கடைக்கு சென்றுள்ளார்.
ரூ.20-க்கு வழக்கமாக ஆறு பூரி வழங்கப்படும் என எதிர்பார்ப்புடன் இருந்த அவருக்கு, கடைக்காரர் நான்கு பூரிகளை மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தனக்கு குறைந்த அளவு பூரி வழங்கப்பட்டதை கண்டித்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கூடுதலாக இரண்டு பூரிகள் கிடைக்கும் வரை அங்கிருந்து நகர மறுத்துவிட்டார்.
இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. தகவலறிந்து போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
அப்போது அந்தப் பெண் போலீஸாரிடம் , “ரூ.20-க்கு ஆறு பூரிதான் சரியான விலை. அதை வாங்கி தாருங்கள்” என்று அழுதுகொண்டே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இறுதியாக, போலீஸார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது. எனினும் அந்த பெண்ணுக்கு கூடுதலாக இரண்டு பூரிகள் கிடைத்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, 15 வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சந்தேக நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அதோடு அதற்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு 2.06 பில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன் யானையைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சபுவித மற்றும் லங்கா ஜயரத்ன ஆகியோர் அடங்கிய மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும் சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யவும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
எல்ல-வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து பதினாறு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
விபத்துக்கு முன்னர் பேருந்து மோதிய ரூ.88 மில்லியன் மதிப்புள்ள சொகுசு ஜீப் ரக வாகனத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவி அமைப்பில் வீடியோ பதிவு வசதி இல்லை என்று குறித்த காரின் உள்ளூர் வர்த்தகர் எல்ல காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் அளித்துள்ளார்.
விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த முக்கிய ஆதாரங்களைக் கண்டறிய, ஜீப் ரக வாகனத்தின் கண்காணிப்பு கருவி காட்சிகளை ஆய்வு செய்ய பொலிஸ் தரப்புகள் நீதிமன்ற உத்தரவை நாடியது.
இருப்பினும், வாகனத்தில் உள்ள நான்கு நேரடி கண்காணிப்பு கருவிகள் ஓட்டுநரின் வசதிக்காக மட்டுமே என்று விற்பனை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வாகனத்தை ஓட்டுவதற்குத் தேவையான நேரடி படங்களை அவை வழங்கினாலும், அவை பதிவுகள் அல்ல என்று தொழில்நுட்ப ரீதியாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த வகை சொகுசு வாகனங்களில் காணொளி பதிவு செய்யும் மென்பொருள், வாகன உரிமையாளரின் சிறப்பு கோரிக்கையின் பேரில் மட்டுமே நிறுவப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஜீப் ரக வாகனத்தின் உரிமையாளர் அத்தகைய கோரிக்கையை வைக்கவில்லை என்றும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த வசதியைக் கோருவதில்லை என்றும் நிறுவனம் பொலிஸாருக்கு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர, விசாரணை முடியும் வரை வாகனத்தை விற்பனை செய்வதையோ, அதன் உரிமையை மாற்றுவதையோ அல்லது அதன் நிறத்தை மாற்றுவதையோ தடைசெய்து, உரிமையாளருக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏர்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 32 வயதான தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது கணவர் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்ததாகவும், 34 வயதான அவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் உயிரிழந்த பெண்னின் 12, 10 மற்றும் 5 வயதான மூன்று பிள்ளைகளும் (ஆண்கள் பிள்ளைகள்) இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பிள்ளைகள் தற்போது உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இறந்த பெண்ணும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் , எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 195,000 ரூபாய் பணத்தை திருடிய 21 வயது யுவதி ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்லனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அதே பிரதேசத்தை சேர்ந்த யுவதி, அயல் வீட்டிற்குச் சென்று, அந்த வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை களவாடியுள்ளார்.
அதோடு 95,000 ரூபாயை ஹட்டன் பகுதியில் உள்ள இலங்கை வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெற்றுக் கொண்டு, பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தேயிலை மலையில் வீசியமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பணத்தின் உரிமையாளருக்கு , யுவதி மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, நேற்று மாலை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த ஹட்டன் பொலிஸார், யுவதியை கைது செய்ததோடு, சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பணத்தையும் மீட்டனர்.
சந்தேக நபரான யுவதி ஹட்டன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட யுவதி இன்று (19) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் நேற்று மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
மீரிகம ரெண்டபொல பகுதியில் வீட்டிற்கு அருகில் 33 வயதான தக்சிலா தில்ருக்ஷி எனப்படும் 2 பிள்ளைகளின் தாயே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மதியம் தனது வீட்டிற்கு அடுத்த வீட்டின் முற்றத்தில் அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்த நிலையில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நாடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, ஹபரணை பகுதியில் மூன்று போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹபரணை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் 02 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணையின் போது, பிஹிம்பியகொல்லேவ பகுதியில் இன்று 138 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு்ள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஒரு மடிக்கணினி, ஒரு ஸ்கேனர் மற்றும் ஒரு அச்சுப்பொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 42 வயதுக்குட்பட்ட ஹபரணை மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,
மேலும் தினசரி பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் செயற்படுவரும் சாரதி பயிற்சிப் பாடசாலைகளின் தகுதி குறித்து பொலிசார் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விபத்துக்களில் அதிகளவில் தமிழ் மக்களே பலியாகி வருவதும் புள்ளி விபரங்களில் அறிய முடிகின்றது. எனவே சாரதிப் பயிற்சி நிலையங்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து கூறிய யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் – யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூடியளவான விபத்துக்கள் இரு சக்கர (மோட்டார் சைக்கிள்) வாகனங்களாலேயே ஏற்படுகின்றன.
குறிப்பாக FZ மோட்டார் சைக்கிள்களின் அதிவேக சாரதித்துவமே விபத்துக்களை அதிகளவு ஏற்படுத்தியதாக தகவல்கள் இருக்கின்றன.
மேலும் பிரதான வீதிகளில் அதி வேகத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் கிளை வீதிகளுக்கு திரும்பும் சந்தர்ப்பங்களிலும் கிளை வீதிகளில் இருந்து பிரதான வீதிகளுக்கு பிரவேசிக்கும் சந்தர்ப்பங்களில் தான் இந்த விபத்துக்களும் மரணங்களும் சம்பவிக்கின்றன.
விபத்துக்களில் அதிகளவில் தமிழ் மக்களே பலியாகி வருவதும் புள்ளி விபரங்களில் அறிய முடிகின்றது. எனவே சாரதிப் பயிற்சி தொடர்பில் அதிக அக்கறை செலுத்தவேண்டியதாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை யாழ் மவட்ட மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி, யாழ்.மாவட்டத்தில் 13 சாரதிப் பயிற்சி நிலையங்கள் பதிவுசெய்யப்பட்டு செயற்பட்டு வருகின்றன.
இவற்றுள் இரு பயிற்சி நிலையங்கள் அனுமதியை மீள் புதிப்பு செய்யாதிருக்கின்றன. அவை குறித்து பொலிசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பயிற்சி நிலையங்கள் முறையாக பயிற்சி வழங்குகின்றனவா அல்லது முறைகேடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து பொலிஸார் உன்னிப்பாக அவதானம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் வாகனங்களின் தரம், பாதுகாப்பு அமைப்புகளின் அவசியம், தூர சேவை வாகனங்களுக்கு 48 மணி நேர செல்லுபடியாகும் சோதனை சான்றிதழ்,
இருக்கை பட்டிகள் உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்தும் சேதனைகள் முன்னெடுக்கப்பட்டு விபத்துக்களை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று(19.09.2025) இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன்நாட்டை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்….
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துகொண்டிருந்த நபருடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகைதந்து கனகராயன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கனகராயன்குளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை நிலையம் நேற்றையதினம் (18.09) தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.
நெதர்லாந்து அரசின் நிதி உதவியோடு இருதய சத்திர சிகிச்சை கூடம் அதற்கான உபகரணங்களோடு அமைக்கப்பட்டபோதிலும் பயன்பாடின்றி காணப்பட்டது.
இந் நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த இரு வருடங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட நிலையிலும் வைத்திய நிபுணர்கள் இன்மையால் குறித்த சத்திர சிகிச்சை கூடம் செயற்படாமல் இருந்தது.
இதன் காரணமாக வவுனியா மற்றும் அதனை அண்டிய பகுதி மக்கள் யாழ் ஆதார வைத்தியசாலை மற்றும் வேறு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் சுகாதார அமைச்சினால் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் தி.வைகுந்தன் நியமிக்கப்பட்டதன் பின்னர் குறித்த சத்திர சிகிச்சை கூடத்தினை ஆரம்பிப்பதற்கான முழுமையான பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன் பிரகாரம் ஆளணி பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் கூட யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட முன்னணி இருதய சத்திர சிகிச்சை நிபுணர் பி.லக்ஸ்மன், வவுனியா இருதய சத்திர சிகிச்சை நிபுணர் எஸ். ஆர்.குமார மற்றும் ஏனைய வைத்தியர்கள், வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் குறித்த இருதய சத்திர சிகிச்சை கூடத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கையில் சுமார் எட்டு வைத்தியசாலைகளிலேயே இருதய சத்திர சிகிச்சை பிரிவுகள் உள்ள நிலையில் வவுனியாவிலும் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி பெற்றோர்கள் நேற்று (18.09.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பற்றாக்குறை தொடர்பாக பலமுறை வலயக்கல்விப் பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும் பெற்றுத்தரவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்குவலயக் கல்விப்பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.
தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் நேற்று(18.09.2025) காலை அனுஸ்டிக்கபட்டது. இதன்போது தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில் அதன் முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், உறுப்பினர் தர்மரத்தினம், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை குறித்த பகுதியில் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 25ஆம் திகதி காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்ப்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.
சரியாக படிக்கவில்லை என்று கூறி மகனை பள்ளியில் இருந்து பாதியில் நிறுத்தியதால். தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என கருதிய தாய், விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் வீட்டிற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் உங்கள் மகன் சரியாக படிக்கவில்லை என்று கூறி, பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என பள்ளி நிர்வாகம் பாதியிலேயே மகனை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என தீபா விரக்தியடைந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார்.
மகனும் வெளியே சென்றிருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த தீபா, ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டினார். பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே வீட்டுக்கு வந்த செல்வம், வீட்டின் அறை பூட்டப்பட்டு இருப்பதை பார்த்தார். கதவை தட்டி பார்த்தார். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து திறந்து பார்த்தார்.
அப்போது தீபா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து,
தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.