யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி நேற்றையதினம் இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதயம் செயலிழந்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இந்த வார இறுதியில் ஈபிள் கோபுரத்தை விடப் பெரிய ஒரு பிரமாண்டமான சிறுகோள் ஒன்று , பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
387746 (2003 MH4) என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள், அதன் மிகப்பெரிய அளவு மற்றும் பூமியை நெருங்கிய பயணப் பாதை காரணமாக “சாத்தியமான அபாயகரமான சிறுகோள்” (PHA) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இது மே 24 அன்று மாலை 4:07 IST (10:37 UTC) மணிக்கு பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய விண்வெளிப் பாறை 1,100 அடி (335 மீட்டர்) அகலம் கொண்டது – கிட்டத்தட்ட 100 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டது.
மேலும் மணிக்கு 30,060 கிமீ/மணி வேகத்தில் விண்வெளியில் பயணிக்கிறது. இது ஒப்பீட்டளவில் பூமியில் இருந்து 6.67 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட சுமார் 17 மடங்கு அதிகம். எனினும், சிறுகோள்கள் வானியலாளர்களுக்கு மிகவும் கவலையளிக்கின்றன, ஏனெனில் அவற்றின் பூமியைக் கடக்கும் சுற்றுப்பாதைகள் சிறிதளவு மாறினாலும் தாக்க அச்சுறுத்தல்களாக மாறுவதற்கான முக்கிய நிலையில் உள்ளன.
அதேவேளை இந்த அளவிலான ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கினால், அதன் விளைவுகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.
வெளியிடப்பட்ட ஆற்றல் ஆயிரக்கணக்கான அணு குண்டுகளுக்குச் சமமாக இருக்கும் என்றும், , நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலமுள்ள சுற்றளவில் உள்ள அனைத்தையும் தரைமட்டமாக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இந்த தாக்கம் மெகா-சுனாமிகள், பூகம்பங்கள், காட்டுத்தீ ஆகியவற்றைத் தூண்டி, சூரிய ஒளியைத் தடுக்க போதுமான தூசியை வளிமண்டலத்தில் வீசக்கூடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இன்று (23.05.2025) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவத்தையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உஹன பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
தேரர் அந்த பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படும் காணொளியொன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை வடமத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மிஸ் வேர்ல்ட் டெலண்ட்(திறமை) போட்டியில் இறுதிப் போட்டியாளராக, இலங்கை அழகி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் அழகு ராணியான அனுதி குணசேகர இந்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட்( உலக அழகு ராணி) போட்டியின் ஒரு பகுதியான, மிஸ் வேர்ல்ட் டெலண்ட்(திறமை) போட்டியிலே அவர் இறுதிப் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய சுமார் 100 போட்டியாளர்களில் அனுதி குணசேகராவும் ஒருவராக போட்டியிட்டார்.
இந்த நிலையில், அனுதி குணசேகர உட்பட 24 சிறந்த இளம் பெண்கள், டேலண்ட் சவால் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயான 38 வயதான சாரங்கா உதேஷிகா பெரேரா என்ற பெண் 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்ய சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.
வீட்டின் நெருக்கடி உட்பட பல கனவுகளுடன் அவர் வெளிநாடு சென்றிருந்தார். கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பி விடுவதாக அவர் தனது கணவரிடம் கூறியிருந்தார்.
எனினும் அதன் பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காதமையினால் அவரது கணவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 2.05 மணிக்கு அவர் இலங்கைக்கு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாரங்காவின் கணவர் பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையிடம் மேற்கொண்ட விசாரணையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் சாரங்கா 2 பொதிகளுடன் வாடகைக்கு எடுக்கப்பட்ட காரில் புறப்பட்டுச் சென்றமை தெரியவந்தது.
இதையடுத்து, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் காரின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்து, ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்தனர்.
விசாரணையின் போது, தம்புள்ளை பகுதியில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு அந்த பெண் சென்றதாக தெரிவித்துள்ளார்.
எனினும் தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வின் போது எந்தப் பெண்களும் இல்லை என்று குடியிருப்பாளர்கள் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவனெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு-கண்டி வீதியில் உள்ள பெலிகம்மன விகாரைக்கு முன்னால், கார் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து இன்று வியாழக்கிழமை (22.05.2025) இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து மாவனெல்ல நகரத்தை நோக்கிச் சென்ற கார், அதே வீதியில் மாவனெல்ல நகரத்தை நோக்கி நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பாதசாரி வீதியின் நடுவில் வீசப்பட்டு, கண்டியிலிருந்து மாவனெல்ல நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூடன் மோதியுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார்.
சடலம் மாவனெல்ல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி மற்றும் பஸ் சாரதி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றையதினம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியும்,
பூநகரி கௌதாரிமுனை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்ததாலும்,
இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும்போது பி.ப 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிரிவி கெமராவில் பதிவாகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்ட நிலையில் உணவகத்தை அகற்றுமாறு பிரதேச மக்களும் நல்லூர் கந்தன் அடியவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதேவேளை நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று (22) மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி பிரித்தானிய இளம் யுவதி ஒருவர் 46 கிலோ குஷ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, குறித்த யுவதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் சிறையிலிருந்து பேசுவது போல ஒரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில், தனது பயணப்பொதியில் போதைப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது எனவும் அதனை விமான நிலைய அதிகாரிகள் வெளியே எடுத்த போது தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவ தினத்திற்கு முந்தைய நாள் இரவு தான் பேங்கொக்கில் இருந்ததாகவும் உடைகள் மற்றும் பொருட்களை ஏற்கனவே பொதி செய்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை யார் செய்திருப்பார் என தனக்கு தெரியும் எனவும் இது ஒரு திட்டமிட்ட சதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் தான் பணி புரிந்துகொண்டிருந்த நிலையில், அவருடைய 30 நாள் விசா முடிவடையவிருந்ததால், தாய் விசா புதுப்பிக்கப்படும் வரை காத்திருக்கும்போது அருகிலுள்ள இலங்கைக்குச் செல்ல முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது, நீர்கொழும்பு சிறையில் பூச்சிகள் நிறைந்த ஒரு கட்டிலில் தூங்க வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு அதிகாரி தன்னை பார்த்துக்கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனக்கு காரம் நிறைந்த உணவை சாப்பிட முடியாது என்பதால் வேறு உணவை தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும், அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் வாடகைக்கு வீடு மற்றும் வாடகைக்கு அறைகள் தேடும் போர்வையில் பாரிய கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வீடு மற்றும் அறைகள் வாடகைக்கு உண்டு என விளம்பரப்படுத்துபவர்களை குறிவைத்து சிலரால் இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அண்மையில் கொழும்பு – கிரான்ட்பாஸில் வாடகைக்கு அறை இருப்பதாக இணையத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்திய பெண் ஒருவர் பாரிய மோசடியில் சிக்கி தனது தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களை இழந்துள்ளார்.
குறித்த விளம்பரத்தை பார்வையிட்ட ஒரு யுவதி, வீட்டு உரிமையாளரான பெண்ணைத் தொடர்பு கொண்டு வாடகைக்கு அறையைப் பெற்றுள்ளதுடன், முற்பணமாக ஒரு சிறிய தொகையையும் செலுத்தியுள்ளார்.
தான் மகரகம பகுதியில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளதுடன், தனது அடையாள அட்டையின் பிரதி ஒன்றையும் வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு, குறித்த யுவதி வழங்கியுள்ளார்.
இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் தங்கியிருந்துள்ளதுடன், இரு நாட்களின் பின்னர் வீட்டு உரிமையாளரான பெண் பணிக்குச் சென்ற பிறகு கொள்ளை நடவடிக்கையில் குறித்த யுவதி ஈடுபட்டுள்ளார்.
அந்த வீட்டின் ஏனைய அறைகளின் கதவுகளை கூரான ஆயுதங்கள் கொண்டு திறந்து அதிலிருந்து இலட்ச ரூபா பெறுமதி மிக்க நகைகள் மற்றும் உடைகள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை களவாடிச் சென்றுள்ளதுடன், சமையல் செய்து உண்டுவிட்டும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலையில் வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளரான பெண் மற்றும் அவரின் தங்கை ஆகியோர் அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சோதனை செய்து பார்த்ததில் வாடகைக்கு அறைக் கேட்டு வந்த பெண் அனைத்துப் பொருட்களையும் திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்ணை தேடும் முயற்சியிலும் வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மோசடி செய்த யுவதியின் அடையாள அட்டை பிரதியை பதிவிட்டு தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது, மோசடி செய்த யுவதியுடன் தொடர்புடைய சிலரால் வீட்டு உரிமையாளருக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் இடம்பெற்று ஒரு சில தினங்களின் பின்னர், கொள்ளையில் ஈடுபட்ட யுவதி, வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு பிரிதொரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து மிரட்டல் விடுக்கும் தொணியில் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தாலும் கூட, தன்னைப் பிடிக்க முடியாதென்றும், பொலிஸார் அல்ல ஜனாதிபதியே வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாதென்றும் யுவதி குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு நேரடி உயிரச்சுறுத்தல் விடுத்ததுடன், தன்னுடைய குழுவினரால் எதையும் செய்ய முடியும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் தேடுதல் நடவடிக்கையை கைவிடாத வீட்டார், குறித்த யுவதியின் அடையாள அட்டை விலாசத்தை வைத்து வீடு வரை தேடிச் சென்ற போது உடைகள் உள்ளிட்டவற்றை மட்டுமே மீட்க முடிந்ததாகவும், நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீட்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொள்ளையில் ஈடுபட்ட யுவதிக்கு 25 வயது என்றும், இரு பிள்ளைகளின் தாயாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதியின் பின்னால் மிகப்பெரிய குற்றக் கும்பல் இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று (22) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (20) மந்திரியாறு நீரோடை பகுதியில் இந்த நபர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட இந்த நபரை கடந்த இரு நாட்களாக உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தேடிவந்த நிலையில், இன்று காலை அவர், இடுப்புக்கு கீழ்ப் பகுதியற்ற நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த இண்டிகோ விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று (21) மாலை கனமழை கொட்டித் தீர்த்தது.
ஹரியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காற்றின் சுழற்சி காரணமாக வானிலை மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பகுதியிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
கடும் மழை மற்றும் புழுதிப்புயலால் டெல்லியில் இருந்து புறப்படும் விமானச் சேவைகளும், தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டு, காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் ஒன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையால் முன்பகுதி சேதமடைந்தது.
இதனால் பயணிகள் அச்சமடைந்த நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் புதிய கோவிட் – 19 திரிபு பரவும் அபாயம் இல்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வாரங்களில், பல ஆசிய நாடுகளில் புதிய கோவிட் – 19 திரிபு பரவி வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இதைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் பொது சுகாதாரத்தைத் தயார்படுத்தவும் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் சாத்தியமான தொற்றுநோய் சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்காக ஆய்வக ஆய்வு முறையும் செயற்பாட்டில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடிக்கடி கை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் உட்பட அடிப்படை சுகாதார நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21.05.2025) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கொழும்பில் இருந்து வருகைதந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27ஆம் திகதிவரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு 27ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
கம்பஹா, பஸ்யால பிரதேசத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண பந்தத்தில் இணைந்திருந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்து ஒரே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பஸ்யால பகுதியைச் சேர்ந்த 58 வயதான நாமல் குமார மற்றும் அவரது மனைவி 60 வயதான துலானி சமரநாயக்க ஆகியோரே இவ்வாறு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதயத்தில் ஓட்டையுடன் பிறந்த துலானி, வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடனேயே வாழ்ந்துள்ளார்.
துலானிக்கு இதய நோய் இருப்பதை அறிந்திருந்தும் அவரைக் காதலித்த நாமல், அவரது வாழ்க்கைப் பயணத்திற்கு மிகவும் பொருத்தமான துணையாக இருந்துள்ளார்.
துலானியும் நாமலும் இரு வீட்டாரினின் விருப்பத்துடன் காதல் திருமணம் செய்தனர். திருமணமானதிலிருந்து, இருவரும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அன்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
நாமல் தனது குடும்பத்தின் செலவுகளை ஈடு செய்வதற்கு பிரம்பு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தார். துலானியிடமிருந்து நிறைய ஆதரவைப் பெற்றார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் துலானி திடீரென நோய்வாய்ப்பட்டு, வரக்காபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துலானியை பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு வாரத்தில் அவர் உயிரிழந்து விடுவார் என அறிவித்துள்ளனர்.
தனது மனைவியின் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதை மருத்துவர்கள் மூலம் அறிந்த நாமல், மிகவும் வேதனையுடன் காணப்பட்டுள்ளார்.
துலானி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது, நாமலுக்கும் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. மருத்துவர்கள் அவருக்குத் தேவையான சிகிச்சையை அளித்த போதிலும், மாரடைப்பால் நாமல் உயிரிழந்துள்ளார்.
மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்த நாமலின் மனைவி, தனது துயரத்தை அடக்கிக்கொண்டு, நாமலின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அனைத்து நண்பர்களையும் கவனித்துள்ளார்.
இதன் போதே, நாமலின் மனைவி மீண்டும் நோய்வாய்ப்பட்டார். அவர் வரகாபொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தம்பதியினரின் உடல்களை ஒரே கட்டிடத்தில் ஒன்றாக வைத்து ஒரே நாளில் அடக்கம் செய்துள்ளனர்.