வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்துக் கண்காணிக்க வேண்டியுள்ளது.
நாட்டில் எங்காவது ஓரிடத்தில் கொரோனா நோயாளி அடையாளப்படுத்தப்பட்டால் அந்தப் பகுதியிலுள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” – என்றார்.
உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் 11 வயதுடைய அன்புமாரன் கோகுல் என்ற சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்லடி மாரியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் வயிற்றோட்டம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த குடும்பத்தின் 11 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த சனிக்கிழமை கல்லடி பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் கணவாய் வாங்கியதாகவும்,
பின் அதனை சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்ட பின் தமக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், இதனையடுத்து குடும்பத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழந்த சிறுவனின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் உள்ளடங்கலாக சுமார் ஆயிரத்து 100 பேர் வடக்கிலுள்ள 6 தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பலாலி, கொடிகாமம், கிளிநொச்சியில் இரணைமடு, இயக்கச்சி, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களை இவர்கள் வந்தடைந்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரம்பலாக அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கை மாணவர்கள் நேற்றுமுன்தினம் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
வடக்கில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் பலாலியில் உள்ள விமானப் படையினரின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 99 பேரும், கொடிகாமத்தில் 350 பேரும், கேப்பாப்பிலவில் 120 பேரும், இரணைமடுவில் 200 பேரும், இயக்கச்சியில் 170 பேரும், பம்பைமடுவில் 100 பேருமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி முதல் முறையாக நேற்று மனிதர்களில் பரீட்சிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் ஆய்வின் ஒரு கட்டமாகவே இந்த தடுப்பூசி பரீட்சிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு நேற்று இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இதில் ஒருவார் மருத்தவ விஞ்ஞானியாவார். இந்த இவருவரும் தாமே முன்வந்து இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசி 80 வீதமான பயனைத்தரும் என்று ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், தடுப்பூசி தயாரிப்புக்கு தலைமை தாங்கிய சாரா கில்பர்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது மனித குரங்குகளின் பலவீனமான குளிர் வைரஸ் அல்லது அடினோவைரஸ் பதிப்பில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே மனிதர்களில் இது வளர்ச்சி பெறமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசி எதிர்வரும் காலத்தில் சுமார் 5000 பேருக்கு பரீட்சிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கென்யாவில் கொரோனா வைரஸின் பரவல் குறைந்த விகிதத்தில் உள்ளமையால் அங்கு இதனை பரீட்சித்துப்பார்க்க யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தடுப்பூசி திட்டத்துக்காக 40 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஆய்வில் அமெரிக்கா இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெலிசர கடற்படை முகாமில் உள்ள 30 இலங்கை கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது. ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை தொடர்ந்து 29 சிப்பாய்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சிப்பாய்களுக்கு கொரோனா தொற்றியமைக்கான காரணத்தை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில் போ தைப்பொ ருளுக்கு அடிமையான கொரோனா நோயாளிகள் சிலர் அடையாளம் காணப்பட்டனர்.
கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த பகுதியில் உள்ள மக்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் குறித்த சிப்பாய்கள் ஈடுபட்டிருதனர். இதன் போதே அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளதென இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு உடலில் அதிகமான வெப்பநிலை அதிகமாக இருந்தால் அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் சுகாதார ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
“ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது முக்கியமாகும். போக்குவரத்து சேவை வழங்குனர்கள் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்களுக்கமைய செயற்படுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயணிகளை ஏற்ற வேண்டாம். பயணிகள் பேருந்தில் ஏறிய பின்னர் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை என்றால் அடுத்த பேருந்திற்கு காத்திருங்கள்.
அலுவலகங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். உடலில் உஷ்ணம் அளவிடும் இயந்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். உடலில் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் பொலிஸாரிடம் அல்லது சுகாதார அதிகாரிகள் அறிவிக்கவும்.
சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் கைது செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 368 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் 38 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் இரண்டு கிழமைகளுக்கு வவுனியா மாவட்டத்தின் அரிசி கிடைப்பனவை உறுதிப்படுத்துவதற்காக வவுனியா மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரிசியினை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அந்த அரிசி கொண்டு செல்ல தடை செய்யுமாறு அரசாங்க அதிபரினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. தினேஷ்குமார் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்ற நிலைமைகளை ஆராய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (23.04.2020) காலை 10.00 மணிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது
இக் கூட்டத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்ற நிலைமைகள் சம்பந்தமான விடயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இதில் சுகாதாரத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வவுனியா மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகன சாரதிகள் மற்றும் உதவியாளர்களின் இரத்த மாதிரிகளை பெற்று அதனை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட காலப்பகுதியில் அரசாங்கத்தினால் ஆபத்து பிரதேசங்களாக குறிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து எமது மாவட்டத்திற்கு எந்த விதமான சுகாதார அனுமதிகளும் இல்லாமல் சில நபர்கள் வருவதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஆகவே மாவட்டத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்து சம்பந்தமாக சிந்தித்து நாங்கள் வவுனியா மாவட்டத்திற்கு உள்நுளைகின்ற நுழைவாயில் இப்படியான வருகை தருபவர்களின் பரிசோதிப்பதற்கு உரிய நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் பொலிஸ் துறையினருக்கும் இராணுவ தரப்பினருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அண்மைக்காலமாக வவுனியா மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையில் அரிசி பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்குவதாக வவுனியா வர்த்தகர் சங்கம் அரசாங்கத்துக்கு முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையாகக் கொண்டு நேற்றைய தினம் அரசாங்க அதிபரினால் வவுனியா மாவட்ட தனியார் அரிசி ஆலைகள் சங்கத்தோடு ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர்கள் அரசினுடைய கட்டுப்பாட்டு விலைக்கு வர்த்தக சங்கத்தினருக்கு அரிசியினை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளார்கள். அது தொடர்பில் அந்த அரிசி கிடைப்பனவுகள் பற்றாக்குறையாக இருக்குமாக இருந்தால் வெளி மாவட்டங்களிலிருந்து அரிசியினை வவுனியா மாவட்டத்திற்கு கொண்டுவர அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்க அதிபரினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
அதற்கு மேலதிகமாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு வவுனியா மாவட்டத்தின் அரிசி கிடைப்பனவை உறுதிப் படுத்துவதற்காக வவுனியா மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரிசியினை கொண்டு செல்ல வேண்டாம் எனவும், அரிசியை கொண்டு செல்ல தடை செய்யுமாறு அரசாங்க அதிபரினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுகாதாரத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக மறு அறிவித்தல் வரை வவுனியா மாவட்டத்தில் உள்ள அழகு நிலையங்களை திறக்காமல் இருப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.
வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் திடீரென மயங்கி விழுந்தவருக்கு நெஞ்சு வலியே காரணம் என வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் நேற்று மதியம் வீதியால் சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இது தொடர்பில் அப்பகுதியினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த சுகாதார பரிசோதகர்களும், பொலிஸாரும் அந்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இருந்த போதும், குறித்த நபர் நெஞ்சுவலி காரணமாகவே மயங்கி விழுந்துள்ளதாகவும், அவரின் உடல் நிலை தேறி வருவதாகவும் வைத்தியசாலை தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
வெலிசரை கடற்படை முகாமைச் சேர்ந்த 30 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெலிசரை கடற்படை முகாம் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கடற்படை வீரர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனை அறிக்கைகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஒரே நாளில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
வவுனியாவில் கடும் காற்றுடன் திடீரென பெய்த மழை காரணமாக வீடுகள் சில சேதமடைந்துள்ளதுடன், பயன்தரு மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வவுனியாவில் திடீரென கடும் காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் குறித்த மழையானது நீடித்தது.
இதன்போது வீசிய கடும் காற்றினால் வைரவபுளியங்குளம் பகுதியில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு வர்த்தக நிலையம் என்பவற்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மழை நீரும் உட்புகுந்துள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்கா ரெலிகொமிற்கு சொந்தமான உத்தியோகத்தர் விடுதி ஒன்றின் கூரை முற்றாக தூக்கி வீசப்பட்டு மழை நீரில் உட்புகுந்தமையால் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது. வீட்டு வளவில் இருந்த வாழை முதலிய பயன்தரு மரங்களும் முறிந்து வீழ்ந்துள்னளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் உடலில் 4 வகையான வைரஸ் தொற்றியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆய்வு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸின் முழுமையான மரபணு வரிசைப்படுத்தலின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் பெற்றுக் கொளள்ப்பட்ட இரத்த மாதிரியில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வைரஸ்களின் முழு மரபணு வரிசைமுறை இலங்கையில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கொரோனா வைரஸின் பல வகைகள் உலகம் முழுவதும் பரவி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், அவற்றில் சில மற்றவைகளை விட அதிக வைரஸ்களை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா அ ச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் டாம் வீதியில் தங்கியிருந்தவர் உட்பட இன்னும் சிலர் லொறி ஒன்றில் ஏறி யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். இதையறிந்த வலி. மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், இவ்வாறு அங்கிருந்து வந்தவர்களை உடனடியாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்தவரோடு இன்னும் சிலர் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு காய்ந்த மிளகாய் ஏற்றிச் சென்ற லொறியிலேயே இவர்கள் பயணித்துள்ளனர். லொறிச் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் யாழ் மாவட்டச் செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி) தெரிவிக்கையில், இவ்வாறு வேறு மாவட்டத்தில் இருந்தோ இல்லை வேறு மாகாணங்களில் இருந்தோ இன்னொரு மாவட்டத்திற்கோ இல்லை மாகாணத்திற்கோ செல்வதாயின் அரசு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைக் கடைப்பிடித்தல் அவசியம்.
அதாவது என்ன காரணத்திற்காக பயணிக்கின்றீர்கள் என்ற தகுந்த பதில் இருத்தல் அவசியம். அத்தோடு அவ்வாறு பயணித்து உங்கள் இருப்பிடம் சென்றடைந்தவுடன் சுகாதார பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
எனவே இக் கொரோனா சூழ்நிலையால் இவ்வாறு வேறு இடத்தில் இருந்து வேரொறு இடத்துக்கு செல்லும் உங்களின் பரிசோதனை என்பது மிகமிக கட்டாயமான விடயம். கொரோனா வைரஸ் என்பது மனித கண்ணுக்கு புலப்படாத ஒரு நுண்ணியல். எனவே தயவுசெய்து இன்னொரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும்போது நீங்களும் அவ் வைரஸ் காவி ஆக இருக்கலாம்.
எனவே தயவுசெய்து இவ்வாறு வருபவர்கள், இல்லை ஏற்கனவே வந்தவர்கள் பரிசோதனையை மேர்கொள்ளாது இருப்பின் உடனே வைத்தியசாலைக்கு சென்று சோதனையை மேற்கொள்ளல் வேண்டும். இவ்வாறு பரிசோதனையை மேற்கொள்ளாது இருப்பின் அவர்களைக் கண்டறியும்போது அவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அவ்வவ்போது அடையாளம் காணப்படுவதால் அவ்வப்போது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தற்போது பொலன்னறுவையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து பொலன்னறுவை லங்காபுர பகுதியிலுள்ள 12 கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியேறவோ, இப்பகுதிக்குள் யாரும் உட்புகவோ முடியாமல் பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பொலனறுவை பகுதியில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர் வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய சிப்பாய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெலிசர கடற்படை முகாமில் மின்சார தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றும் 32 வயதான சிப்பாய் ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டனன் கமான்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.
குறித்த சிப்பாய் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி தான் கடமையாற்றிய முகாமிலிருந்து விடுமுறைக்காக பொலன்னறுவை – புலஸ்திகம பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அவருக்கு சுனயீனம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஏப்ரல் 20ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.
குறித்த சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்றைய தினம் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், குறித்த சிப்பாய் கடமையாற்றிய வெலிசர முகாமிற்குள் தற்போது விசேட சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
குறித்த சிப்பாய் நெருங்கி பழகியவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும், அதற்கு சுகாதார பிரிவினர் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த சிப்பாய்க்கு எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பிலும் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்ரினன்ட் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.
இதுவரையில் இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 323 எனவும் உயிரிழப்புக்கள் 7 என்பதோடு குணமடைந்தவர்கள் 105 என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் வறுமையானது 43.9 வீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 3 வீதமாக குறைவடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த நிலைமை காரணமாக இலங்கையின் சிறிய மற்றும் மத்திய தர தொழிற்துறையினர் கடும் போராட்டத்தை எதிர்நோக்க நேரிடும்.
அத்துடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியை முன்னெடுத்துச் செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் சுற்றுலாப் பயணங்களுக்கான வரையறை நீடிக்கப்பட்டுள்ளதால், இலங்கையின் சுற்றுலாத்துறை முற்றாக வீழ்ச்சியடையும் எனவும் உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.
கொழும்பு-12, கெசல்வத்தை – பண்டாரநாயக்க மாவத்தையில் சிகை அலங்காரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் 25 பேருக்கு சிகை அலங்காரம் செய்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த 25 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என மேலும் சந்தேகம் வெளியிப்பட்டுள்ளது.
எனவே அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியான 310 பேர் இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 104 பேர் இதுவரை குணமடைந்து வெளியேறியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானவர்களில் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டில் பல பகுதிகளில் சலூன்களை உடனடியாக மூடுமாறு சுகாதாரதுறை அதிகாரிகள் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் நோய் பரவி வரும் சூழ்நிலையில், டெங்கு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மே மாதம் இறுதியில் இருந்து அடுத்த மூன்று மாத காலத்திற்குள் டெங்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாக டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் மாத்திரம் 200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்தும் அதேவேளையில் டெங்கு நோய் பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
வைரஸ் நோய்களுக்கு போன்று டெங்கு நோயை முற்றாக குணப்படுத்துவதற்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் நோய் அறிகுறிகள் ஏற்பட்ட பின்னர், அதனை கட்டுப்படுத்தி குணப்படுத்தும் சிகிச்சைகளையே மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெங்கு நோய் நுளம்புகளால் பரவுகிறது.