இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் : 7ஆவது நபர் மரணம்!!

7ஆவது நபர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு நோய் தொற்று வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த நபர் சற்று முன்னர் 48 வயதான நபர் உயிரிழந்துள்ளாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிகை ஏழாக அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா மாவட்ட வர்த்தர்கள், பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் அவசர அறிவித்தல்!!

அறிவித்தல்..

வவுனியா ஊரடங்கு சட்ட தளர்வு நேரத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாளை (09.04) காலை 6.00 மணிக்கு வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்போது வ்ங்கிகள், விவசாயம் சம்பந்தமான திணைக்களங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், மருந்தகம், எரிபொருள் நிரப்பு நிலையம் என்பன மாத்திரமே திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வருவதால் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் முகமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மரக்கறி வியாபார விற்பனை நிலையங்கள் அனைத்தும் வவுனியா காமினி மகா வித்தியாலய மைதானத்திற்குள் மாற்றப்பட்டு மன்னார் வீதியூடான போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அத்தியாவசிப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக கூடுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார் என தெரிவித்தார்.

வரலாற்றில் முதன்முறையாக 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்!!

200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.4 ரூபாவாக பதிவாகியுள்ளார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை ரூபாவின் பெறுமதி 9.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கான எதிரான கேள்வியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்தது.

இலங்கையை பொறுத்த வரை டொலருக்கு எதிரான ரூபா 200 ரூபாவுக்கு அதிகமான தொகைக்கு வீழ்ச்சியடைந்தது இதுவே முதல் தடவையாகும்.

ஏற்கனவே டொலருக்கான கேள்வி அதிகரித்து செல்வதை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்கு எடுத்து வருவதற்கு இருந்த தடையை நீக்கியது.

இதனையடுத்து இலங்கையில் இருந்து வெளிநாட்டுகளில் முதலீடுகள் செய்யப்படுவதையும் இறக்குதிகளையும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்றும் டொலருக்கான கேள்வி அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்ந்தும் நீடிக்க நடவடிக்கை?

பாடசாலைகளுக்கான விடுமுறை

பல்கலைக்கழக அனுமதிகளுக்கான திகதியை நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி கொரோன வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெற்றோர் தமது விண்ணங்களை அனுப்பி வைக்க முடியும்.

ஏற்கனவே அறிவிக்கப்படி அரச பாடசாலைகள் ஏப்ரல் 20ஆம் திகதி திறக்கப்பட வேண்டும். எனினும் நடப்பு நிலவரங்களின்படி ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

இதனையடுத்தே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பாடசாலைகள் திறக்கும் தினத்தில் இருந்து இரண்டு கிழமைகளை அவகாசமாக அறிவித்துள்ளது.

-தமிழ்வின்-

கொரோனா வைரஸ் தொற்று : மன்னார் – தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கம்!!

மன்னார் – தாராபுரம்..

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த மாதம் 18ஆம் திகதி மன்னார், தாரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு புத்தளத்திற்கு சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. அவர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். அதற்கு பின் 18ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வராங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்கு சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி மன்னாரிற்கு வருகை தந்திருந்தார். அவர் மன்னாரிற்கு வந்து மூன்று வாரங்களில் கழிந்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தாராபுரம் கிராம மக்களை முடக்கி வைத்துள்ளோம்.

அவர்களுக்கு எதுவும் நோய் அறிகுறிகள் தென்படுகின்றதா? என்பதனை அவதானிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த நபர் இங்கு வந்து நின்ற இரண்டு நாள் காலப்பகுதிக்குள் அவருடன் நெருங்கி பழகிய இரண்டு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சமூக நோய் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களுடைய நடவடிக்கைகளுக்கு தாராபுரம் கிராம மக்களும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர்.

முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சமடைய தேவையில்லை.

நோய் தொற்றிற்கு அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த 18ஆம் திகதி இங்கு வந்துள்ளார். 19ஆம் திகதி மீண்டும் புத்தளத்திற்கு சென்றுள்ளார். அவர் தாராபுரம் பகுதியை விட்டு எங்கும் செல்லவில்லை. மரணச்சடங்கில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த அதிகளவானவர்ககள் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணத்தினால் குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு நோயாளியும் கொரோனா வைரஸிற்கு உள்ளாகவில்லை.

இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் முடக்கியுள்ளோம். குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் ஏனைய பகுதி மக்களின் இயல்பு நிலையை தொடர்ந்தும் சிறந்த முறையில் பேணுவதற்காக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் பயப்படவோ அல்லது பதற்றப்படவோ தேவை இல்லை. இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தைச் சுற்றி இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் இருந்து வெளியே செல்லவும், உள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்கள் வரை இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் மரத்தில் கீழ் இருந்தவர் மரணம்!!

வவுனியாவில்..

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (08.04.2020) மாலை 5 மணியளவில் மின்னல் தாக்கம் காரணமாக ஒரு பிள்ளையின் தந்தையான 25வயதுடைய இளைஞனொருவர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளார்.

வவுனியாவில் மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வீதியில் ஓரத்தில் நின்ற தென்னை மரத்தில் குறித்த இளைஞன் நின்றுள்ளார். இதன் போது மரத்தின் மீது வீழ்ந்த மின்னல் காரணமாக இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் அன்புலன்ஸ் சேவை மூலம் இளைஞனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இச் சம்பவத்தில் இராசேந்திரகுளம் பகுதியினை சேர்ந்த ஒர் பிள்ளையின் தந்தையான 25 வயதுடைய பெரியசாமி மங்களேஸ்வரன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட தகவல்!!

ஊரடங்கு சட்டம்..

இலங்கையில் அபாய வலயங்களை தவிர்த்து அமுல்படுத்தப்பட்டுள்ள 19 மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

10 மணி நேரம் தளர்வுக்கு பின்னர் நாளை மாலை 4 மணி முதல் 14 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏப்ரல் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச்சட்டம் அன்று மாலை 4 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அமுலில் இருக்கும்.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களைத் தவிர ஏனைய பகுதிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஊரடங்கு தற்காலிகமாக நீக்கப்படும் போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் தரப்புக்கு அனுமதி வழங்கப்படும்.

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள நடைமுறையை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியூடான போக்குவரத்து தடை : அதிரடியாக செயற்பட்ட குழுவினர்!!

போக்குவரத்து தடை..

வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் காணப்பட்ட பழமை வாய்ந்த மரமொன்று இன்று (08.04.2020) மாலை 4 மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட பழமை வாய்ந்த மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்ததுடன் மின்சாரம் மற்றும் இலங்கை தொலைத் தொடர்பு தொலைபேசி இணைப்பு வயர்களும் அறுந்தன.

அயலவர்கள் உடனடியாக வவுனியா நகரசபை, மின்சார சபை, இலங்கை தொலைத் தொடர்பு நிலையத்தினர் போன்றவர்களுக்கு தெரியப்படுத்தியமையினையடுத்து உடனடியாக குறித்த இடத்திற்கு வருகை தந்து மின்சாரசபையினர் உடனடியாக மின்சாரத்தினை சீர் செய்ததுடன் இலங்கை தொலைத் தொடர்பு நிலையத்தினர் தொலைபேசி இணைப்பிணையும் சீர் செய்தனர்.

அதன் பின்னர் வவுனியா நகரசபையினர் உடனடியாக மரத்தினை அகற்றி வீதியூடான போக்குவரத்தினை சீர் செய்தனர்.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!!

காதர் மஸ்தான்..

முன்னாள் பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் வவுனியாவில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை சுகாதார பரிசோதகர்களால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார், தாராபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஓருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து மன்னார், தாராபுரம் கிராமம் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மரணச் சடங்கில் கலந்து கொண்ட முன்னாள் பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், அவரது சகோதரர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்காரணமாகவே, முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், அவரது சகோதரர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஆகியோரை முன்னாள் பிரதி அமைச்சர் மஸ்தான் அவர்களின் வவுனியா வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார்கள்.

வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு அவசர அறிவித்தல்!!

அவசர அறிவித்தல்..

வவுனியா மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு செல்ல முடியாது நெருக்கடியில் உள்ளார்கள்.

அவர்களை சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களின் சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதற்குறிய பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழில் நிமித்தமும், கற்றல், கற்பித்தல், மருத்துவ சிகிச்சைகள், வணிகம் உள்ளிட்ட இதர பல காரணங்களுக்காக வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குறிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

எனவே வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக வவுனியா பிரதேச செயலகம் அல்லது , கிராம சேவையாளர் ஊடாக உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளவும்,

மேலும் வவுனியாவில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பெருமளவானவர்கள் குடும்பத் தலைவர்களாக இருப்பதால் அவர்களின் குடும்பங்கள் அன்றாடப் பொருட்களை பெறுவதிலிருந்து பல விடயங்களில் இன்னல்களுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளனர்.

அவர்களின் நலனை கருத்தில் கொண்டே இச் செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இரண்டாம் கட்டத்தில் விரிவடையும் கொரோனா : இரண்டு வாரங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா ரைவஸின் பரவல் அடுத்த கட்டத்திற்கு விரிவடையும் காலப்பகுதி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக முன்னரை விடவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கை சிறப்பு மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்களினால் சுகாதார அமைச்சிடம் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டாம்கட்ட விரிவாக்க காலப்பகுதியில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஏப்ரல் மாதம் இறுதி வரை சிக்கலுக்குரிய நிலைமை ஏற்பட கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் நவின் டி சில்வா இதனை தெரிவித்திருந்தார்.

எனினும் முழுமையான முடக்கம் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அனைவரும் சுகாதார அதிகாரிகள் ஆலோசனைகளை பின்பற்றி வீடுகளில் இருந்தால் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் 15 மில்லியன் கோழி முட்டைகள்!!

கோழி முட்டைகள்..

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் கோழி முட்டை விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சுமார் 15 மில்லியன் முட்டைகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளவிய ரீதியில் தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாளாந்தம் உற்பத்தியாகும் முட்டைகளில் நூற்றுக்கு 10 வீதம் மாத்திரமே விற்பனையாகுவதாக திணைக்கள இயக்குனர் சுனில் சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சேமிக்கப்பட்ட முட்டைகளில் 11 மில்லியன் கோழி முட்டைகள் வட மேல் மாகாண உற்பத்தியாளர்களுக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் ஒரே நாளில் 1417 பேர் உயிரிழப்பு : சோகத்தில் மூழ்கிப்போன பிரான்ஸ்!!

ஒரே நாளில் 1417 பேர் உயிரிழப்பு..

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 417 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்ஸில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகளவிலான உயிரிழப்புக்களை கொண்டிருந்த இத்தாலியில் அண்மை நாட்களாக உயிரிழப்புக்கள் குறைந்துவரும் நிலையில் சில நாட்களாக பிரான்ஸில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 2 -ம் திகதி ஒரேநாளில் 1,355 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அதற்கு அடுத்த இரு நாள்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000 -க்கு மேல் இருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இந்த எண்ணிக்கை முறையே 518 மற்றும் 833 ஆக உள்ளது. இது அதிகம் என்றாலும் அதற்கு முந்தைய நாள்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான்.

இனி வரும் நாள்களிலும் இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது என நினைத்திருக்கையில் இன்று 7ம் திகதி 1417 உயிரிழப்புக்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

அனைத்தையும் முடக்கிய போதிலும் பிரான்ஸில் இவ்வாறு உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றமை அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளன. இதுவரையில் உலகளவில் கொரோனா தாக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81900 என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இருந்து வீடு திரும்பிய இளைஞன் திடீரென உயிரிழப்பு!!

வீடு திரும்பிய இளைஞன்..

கொழும்பில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி வீட்டுக்கு சென்ற 30 வயதான இளைஞர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார்.

எம்லிப்பிட்டிய மித்தெனிய காரியமடித்த, தலாவ வைத்தியசாலையில் இந்த நபர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

காரியமடித்த குடாகொட, உடகஹாவத்தை பிரதேசத்தை சேர்ந்த விக்ரமராச்சி கங்கானம்கே வஜிர பிரசங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞன் கொழும்பில் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணாக கடந்த 20 ஆம் திகதி கொழும்பில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், இளைஞனுக்கு நேற்றிரவு 10 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளது. இறந்த இளைஞன் கொழும்பில் இருந்து வந்துள்ளதால், அது குறித்து கூடிய கவனத்தை செலுத்தியுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் 43 பிரிவினருக்கு வெளியில் செல்ல பொலிஸார் அனுமதி!!

ஊரடங்குச் சட்டம்..

நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையிலும் ஏனைய மாவட்டங்களில் பகுதியளவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 43 பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி 43 பிரிவினர் வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், அனைத்து வெளிவிவகார அலுவலகங்கள், வெளிவிவகார அமைச்சு, நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, விவசாயதுறை அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார திணைக்களம்,

சுகாதார சேவை திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், விவசாய திணைக்களம், ரயில்வே திணைக்களம், சிறைச்சாலை திணைக்களம், தபால் திணைக்களம், விவசாய சேவைகள் திணைக்களம், தீயணைப்பு திணைக்களம், மாவட்ட செயலக அலுவலகம், பிரதேச செயலக அலுவலகம், இலங்கை சுங்க பிரிவு,

இலங்கை விமான சேவை, விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம், இலங்கை டெலிகொம் நிறுவனம், அரச அச்சிடல் திணைக்களம், பெற்ரோலிய கூட்டுத்தாபனம், கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம், பெற்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சிய பிரிவு, இலங்கை போக்குவரத்து சபை,

இலங்கை முதலீட்டு சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மின்சார தனியார் நிறுவனம், நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, இலங்கை துறைமுக அதிகாரசபை, அனைத்து தனியார் மற்றும் அரச வங்கி, இலங்கை கப்பல் நிறுவனம்,

நுகர்வோர் சேவை அதிகாரசபை, அனைத்து தனியார் வைத்தியசாலைகள், அனைத்து காப்புறுதி நிறுவனங்கள், அனைத்து ஊடக நிறுவனங்கள், அனைத்து மாகாண சபை நிறுவனங்கள் என்பனவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் வழங்கப்படும் அடையாள அட்டைகளை பயன்படுத்தி வெளியில் செல்ல முடியும்.

கொரோனாவால் நிலைகுலைந்துள்ள அமெரிக்கா : ஒரே நாளில் இரண்டாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்!!

அமெரிக்காவில்..

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 2015 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,846 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த சீனாவின் வுஹான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாள் தோறும் அதிகளவானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதன்படி, அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் 395,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 12,784 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் அங்கு கொரோனா தொற்று காரணமாக 2015 பேர் உயிரிழந்துள்ளனர். 21 ஆயிரம் பேர் வரையில் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் நியூயோர்க் நகரம் கொரோனா வைரஸ் தொற்றால் நிலைகுலைந்து போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூயோர்க் நகரில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.