முதன்முறையாக கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான விலங்கினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க நியூயோர்க்கில் அமைந்துள்ள புரோன்ஸ் விலங்கியல்சாலையில் உள்ள மலாயன் இன பெண் புலி ஒன்றுக்கே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடியா என்ற இந்த நான்கு வயது புலி அதன் சகோதரி மற்றும் சிங்கங்களுக்கு சில குணங்குறிகள் தென்படவே அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போதே நடியா என்ற புலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குறித்த புலியின் காப்பாளரிடம்இருந்து இந்த தொற்று பரவியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
எனினும் விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராயப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த புலி தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சக்கட்டத்துக்குச் சென்றுள்ளது. எனினும், இதிலிருந்து நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. இந்தநிலையில், இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த மாதம் ஆரம்பத்திலிருந்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களே இலங்கைக்குக் கொரோனா வைரஸ் தொற்று நோயையும் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
ஏற்கனவே இரண்டு வார தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அவ்வாறு சென்றவர்களில் ஒருவருக்குத் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது எமக்குப் பயப்பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களை நாள்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்ட 40 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே, நோய் குணமடைந்து வீடு திரும்பியவர்களும் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர்களும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து கொரோனாவை இல்லாதொழிக்க அரசு அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு நாட்டு மக்கள் மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இடர் வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இம்மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவது இப்போதைக்குச் சாத்தியமில்லை” – என்றார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்தாலும் கூட அடுத்துவரும் நாட்கள் மோசமாக இருக்கும்.
புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையைச் சரியாக அறிவிக்க முடியாது. எனவே, மக்கள் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவர்கள் வீடுகளுக்குள் இருப்பதே சிறந்த வழி என இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இப்போது வரையிலும் இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைகளை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது. ஆனால், நாளாந்தம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலைமையில் அடுத்த ஒருவார காலம் மிகவும் கடினமான – மோசமான வாரமாக அமையும். நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் எதிர்வரும் புத்தாண்டு வரையில் மிகக் கடினமான சுகாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.
இறுக்கமான சட்ட திட்டங்களைப் பிறப்பித்து மக்களைக் கட்டுப்படுத்தி தொற்று நீக்கல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இலங்கையின் நிலைமை என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும்.
எவ்வாறு இருப்பினும் புத்தாண்டுகாலம் வரையில் சரியான எதிர்வுகூறல் ஒன்றை முன்வைப்பது கடினமானது. ஆகவே, இப்போது நாட்டில் எவ்வாறான சட்ட திட்டங்களைப் பிறப்பித்து கட்டுப்பாடுகளை விதித்து நிலைமைகளைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் சுகாதாரத்துறை செயற்படுகின்றதோ அதே நடைமுறைகளை தமிழ் – சிங்களப் புத்தாண்டு வரையில் அல்லது அதற்குப் பின்னரும் சில நாட்களுக்குக் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்துடன் இப்போது வரையில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் எக்காரணம் கொண்டும் நடமாட வேண்டாம். அத்துடன் இந்தப் பகுதிகளில் தொற்று நோயாளர் இனங்காணப்படும் பட்சத்தில் உடனடியாக அவர்களை முகாம்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வீடுகளில் இருக்கும் நபர்களுக்கு இந்த நோய் அடையாளம் இருப்பின் 1390 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும். மூன்று மொழிகளிலும் வைத்தியர்கள் தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். வைத்தியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் தெரிவித்து தமது பாதுகாப்பை மக்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், கொழும்பு மாவட்டத்தில் சிக்கியுள்ள மலையக இளைஞர்கள் பலர் வீடு திரும்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 40 மலையக இளைஞர்கள் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ளனர்.
அவர்களுக்கு தங்குமிடம், உணவு உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமையினால் தெருவோரங்களில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த இளைஞர்களுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். பொது மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரை இருந்தால் மட்டுமே பெறுப்பேற்க முடியும் என இராணுவத்தினரும் தெரிவித்துள்ளனர்.
எந்தவித தரப்பினரும் தமக்கு உதவி செய்யாத நிலையில் கொழும்பிலுள்ள மத ஸ்தலங்கள் தங்க தமக்கு அனுமதி கிடைக்குமா என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு இல்லாவிட்டால் தம்மை சொந்த ஊரிலாவது சுயதனிமைக்கு உட்படுத்தி விடுவிக்குமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக இலங்கை மாணவி ஒருவர் மெத்தை ஒன்றை தயாரித்துள்ளார்.
களுத்துறை – நாகொட தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தில் முதலாம் ஆண்டு தாதி மாணவியே இந்த அபூர்வ மெத்தையை தயாரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் போது ஒரே நாளில் பல நோயாளியை அடுத்த பக்கம் திருப்ப வேண்டும். எனினும் அது ஆபத்தான நடவடிக்கை என்பதனால் தூரத்தில் இருந்து ரிமோட் ஊடாக நோயாளிகளை கையாளும் மெத்தை ஒன்றை குறித்த மாணவி தயாரித்துள்ளார்.
அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ந்து கை கழுவுவதற்காக ரிமோட் ஊடாக பாதுகாப்பாக நீர் வழங்கும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்த செயல்முறையை உருவாக்கிய மத்துகம கீதா நந்த உதயசிறியின் மகளான சந்தலி நிப்மா என்ற மாணவி, தனது தந்தை மற்றும் சித்தப்பாவின் உதவியுடன் இந்த மெத்தையை தயாரித்துள்ளார்.
தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் ரிமோட் ஊடாக நோயாளியை பக்கம் திருப்புல், நேராக நிமிர்த்துதல் உட்பட பல செயல்முறைகளை இந்த மெத்தையின் மூலம் மேற்கொள்ள முடியும்.
தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் ரிமோட் ஊடாக இயக்கும் மெத்தை ஒன்று இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. இந்த தயாரிப்பிற்கு தேவையான உதவிகளை வழங்கினால் சர்வதேச மட்டத்தில் இதனை தயாரிக்க முடியும் என குறித்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் கடந்த நாட்களை விட அதிகரித்து காணப்படுகின்றது.
நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (06.04.2020) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.
இதனையடுத்து அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள், வர்த்த நிலையங்களின் முன்னால் வரிசையில் காணப்படுகின்றனர்.
வவுனியா பொலிஸார், போக்குவரத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் நிலமைகளை கட்டுப்படுத்துவதுடன் வவுனியா பொலிஸாரினால் விழிப்புணர்வு அறிவித்தலும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலத்தியாலயம், வவுனியா கண்டி வீதி தமிழ் மத்திய மகா வித்தியலாயத்திற்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் நகரில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது.
கதிர்காமத்தில் வீடு ஒன்றில் சட்டவிரோத ம துபான விற்பனையை தடுக்க சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரியினால் பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பிற்கு சென்ற இடத்தில் பாம்பு தீண்டிய நிலையில் உயிருக்கு போராடிய பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க குறித்த பொலிஸ் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த வீட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய சோதனையிட பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது சிறியளவிலான மதுபான போத்தல்களே கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் பெரிய மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. எனினும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணின் சத்தம் கேட்டு வைத்தியசாலையில் அனுதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊரடங்கு சட்டத்தினால் நாளை (திங்கட்கிழமை) குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டதாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த பெண்ணை தீண்டியது நாக பாம்பு என தெரிய வந்தமையினால் கடமையை ஒதுக்கி வைத்த பொலிஸ் அதிகாரி அந்த பெண்ணை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியில் கொரோனா நோயாளி ஒருவருடன் நெருக்கமான செயற்பட்ட 45 பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 பேர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய குறித்த 45 பேரையும் புணானி தனிமைப்படுத்தல் முகாமிற்கு 14 நாட்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த மேலும் சிலர் இன்றைய தினம் தங்கள் வீடு நோக்கி செல்லவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் இருந்து பூமிக்கு விழுந்த விண்கல் ஒன்றின் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெக்கிங்கம் விண்வெளி ஆய்வு மையத்தின் பேராசிரியரான இலங்கையை சேர்ந்த சந்திர விக்ரமசிங்கவை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒப்டோபர் மாதம் 11ம் திகதி இரவு 12.16 மணியளவில் வடகிழக்கு சீனாவில் இந்த விண்கல் சிதறி வீழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விண்கல் விழுந்த காட்சி சீனாவின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமராக்களில் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
விண்கல் வெடித்தபோது சிதறிய மெல்லிய கார்பன் தூசியுடன் நூற்றுக்கணக்கான, வைரஸ் துகள்கள் பூமியில் விழுந்திருக்கலாம் என்று பேராசிரியர் விக்ரமசிங்க கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 64 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையிலும், 166 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் மக்களுக்கு அத்தியவசிய பொருட்களை எடுத்துச் செல்ல வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை காரில் ஒட்டிக்கொண்டு தனது சகோதரியின் திருமண அழைப்பிதழ்களை விநியோகித்து வந்த நபரை தாம் இன்று கைது செய்ததாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை ஏற்றிச் செல்ல இந்த நபர் கார் ஒன்றை வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்தியவசிய சேவை என்ற அறிவிப்பை காட்சிப்படுத்தியவாறு சென்ற இந்த வாகனத்தை அலவத்துகொட பூஜாப்பிட்டிய வீதியில் மறித்து பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
அந்த வாகனத்தில் அத்தியவசிய பொருட்களோ, அவற்றை எடுத்துச் சென்றமைக்கான அடையாளங்களோ இல்லாத காரணத்தினால், பொலிஸார் வாகனத்தை சோதனையிட்ட போது, வாகனத்தை ஓட்டி வந்த நபர் தனது சகோதரியின் திருமண அழைப்பிதழ்களை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொடிய வைரஸான கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் வேகமாக தொற்றிக்கொண்டிருக்கும் நிலையில் அது எவ்வாறு பரவுகின்றது, யாரால் பரவுகின்றது, எங்கு பரவுகின்றது, தொற்றினால் எவ்வாறு இருக்கும்,
அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்ற கேள்விகள் பதில்கள் ஒருபுறமிருக்க அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் என தனியாகவோ இல்லை ஒரு அமைப்பாகவோ அக்கறை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கடல் அட்டையின் இரத்தத்தின் மூலம் குணப்படுத்தலாம் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடலட்டையின் இரத்தம் கொரோனா நோளிகளிற்கான புதிய மருந்தாகப் பாவிக்கப்பட உள்ளது.
கொரோனா நோயின் தீவிரத்தால், சுவாசச் சிக்கல் ஏற்பட்டு, ஒக்சிஜனின் அளவு பெருமளவு குறைவதால் சாவு ஏற்படுகின்றது. இதற்கு ஏற்ற புதிய மருந்தாகவே கடலட்டையின் இரத்தம் உபயோகப்படுத்தப்பட உள்ளது.
மனிதனின் இரத்தத்தில் உள்ள ஹோமோகுளோபின் உருவாக்கும் ஒக்சிஜனின் அளவை விட நாற்பது மடங்கு ஒக்சிஜனை கடலட்டையின் இரத்தத்தில் உள்ள ஹோமோகுளோபின் உருவாக்குவதாக அறியப்பட்டுள்ளது.
மனித உடலில் இந்த இரத்தம் ஏற்றப்பட்டுத் துல்லியமான பெறுபேறுகளும், சுவாசம் சீரானமையும் உறுதிப்படுத்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சை முறையை, பிரான்சின் தேசிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான நிறுவனமான ANSM, மற்றும் தனிமனிதப் பாதுகாப்பிற்கான ஆணையமான CPP ஆகியவை அங்கீகரித்துள்ளன.
கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்களில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.
முதலில் ஒரு நோயாளியும் பின்னர் தலா மூன்று நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 16 பேரின் இரத்த மாதிரிகள் சோதனையிட்ட போது எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றுமொரு தொகுதியினரின் மருத்துவ அறிக்கைகள் இன்று வெளியாகும் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,480 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸின் வீரியம் கூடியுள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் 1480 பேர் அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நேற்று ஒரே நாளில் மாத்திரம் அமெரிக்காவில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8200 பேர் வரையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணமே கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்கில் மாத்திரம் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கில் நேற்று ஒரே நாளில் 630 பேர் கொரோனாவிற்கு பலி : அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்றைய ஒருநாளில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 630 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த நகரத்தில் மாத்திரம் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3665ஆக உயர்ந்துள்ளது. முழு அமரிக்காவிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8000ஆக அதிகரித்துள்ளது. மூன்று லட்சம் பேர் வரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகளாவிய ரீரியல் 64 ஆயிரம் பேர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள். 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜோன் ஹொப்ஹின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் நேற்று ஒருநாளில் மாத்திரம் 708 பேர் மரணமாகினர். ஸ்பெயினில் நேற்று மாத்திரம் 809 பேர் மரணமாகினர். எனினும் அது இந்த வாரத்தின் குறைந்த ஒருநாள் எண்ணிகையாக கருதப்படுகிறது.
இத்தாலியில் நேற்று 68 1பேர் மரணமாகினர். இதனையடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. குவைத்தில் நேற்று முதலாவது கொரானா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.
79 வயதான பெண் இந்த தொற்றுக்கு காவுகொள்ளப்பட்டுள்ளார். இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 75 பேர் மரணமாகியுள்ளனர். அங்கு 3072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய் வேகமாக பரவி வருவதை அடுத்து அதை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டா, லூயிஸ் பாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.
இதே குழுவினர் 2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோய்க்கும், 2014 ஆம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும் மருந்து கண்டுபிடித்தனர். இந்த தடுப்பு மருந்தை எலிக்கு செலுத்தி பரிசோதித்த நிலையில் அது வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மேலும் சில பரிசோதனைகள் நடத்த வேண்டியுள்ளதுடன் இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, புதிய மருந்து ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் அனைத்து பணிகளும் முடிந்து குறித்த மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் வரை ஆகலாம் என்றும் நிபுணர் குழுவினர் கூறியுள்ளனர்.
அதேவேளை அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரொனாவினால் சர்வதேச ரீதியில் 11 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அடுத்த படியாக ஸ்பெயினில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதுடன் 11 ஆயிரத்து 700 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்புக்களில் அதிகபடியாக இத்தாலியில் 14 ஆயிரத்து 681 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த ஐந்தாவது இலங்கையர் தொடர்பில் அவரது நண்பர்கள் சோகமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
44 வயதான குறித்த நபர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து கொரோனா தொற்றியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிசசை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது நண்பர்கள், உயிரிழந்தவருக்கு அனுதாபம் தெரிவித்து பேஸ்புக்கில் பல பதிவுகளை பதிவிட்டிருந்தனர்.
அந்த பதிவுகளுக்கயை, 4 வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற குறித்த நபர் அண்மையில் நாடு திரும்பியுள்ளார். 4 வருடங்களின் பின்னர் நாடு திரும்பியும் அவரால் தனது மனைவி மற்றும் மகளை பார்க்க முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் தனது குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்ட ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழப்பதற்கு முன்னர் ஒரு முறையேனும் அவரால் தனது மனைவி, மகள் மற்றும் தாயை பார்க்க முடியாமல் போனமை குறித்து அவரது நண்பர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் (COVID-19) அச்சுறுத்தல் நீங்கிய பின்னரே ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கியலேயே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடுத்த வாரம் முழுமையாக முடக்குவது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
இவ்வாறான வதந்திகள் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்ச மனநிலையை உருவாக்கும் நோக்கில் பரப்பப்பட்டதாகவும், எனினும், இதுபோன்ற எந்த முடிவும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆதரவுடன் சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினர் கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்க முடிந்தவுடன், ஊரடங்கு உத்தரவை படிப்படியாக அகற்ற முடியும், என அவர் மேலும் கூறியுள்ளார்.