கொரோனா தொற்று : யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளைக்கு 40 மாதிரி சோதனை!!

மாதிரி சோதனை..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு நாளைக்கு 40 மாதிரிகளே பரிசோதனை செய்யக் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஈ.தேவநேசன் இந்தத் தகவலை தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 73 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏழு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 2500 கொரோனா நோயாளிகளை தாண்டினால் பெரும் ஆபத்து : வைத்தியர்கள் எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 2500 வரை அதிகரித்தால் சுகாதார கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சிடையும் ஆபத்துக்கள் உள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்தேக இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் ஜுன் மாதம் வரை நீடிக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வீடுகளுக்கு அருகில் சிறிய கொத்துகளாக நோயாளிகள் கிடைக்கும் நிலையானது அடுத்த மட்டத்தில் கிராமங்களுக்கு நோயாளிகள் கொத்துக்களாக கிடைக்கும் வரையான நிலை நெருங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

வைரஸ், கிராமம் வரை பரவுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக நூற்றுக்கு 80 வீதத்தை விடவும் சமூக இடைவெளியே உறுதி செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 178 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 38 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா வைரஸினால் ஆறாவது நபர் மரணம்!!

கொரோனா வைரஸினால்..

இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது. இதனை இலங்கை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் உறுதி செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார துறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 178 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று சந்தேகத்தால் பாகுபாடு காட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட நபர் : உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!!

ஒதுக்கப்பட்ட நபர்..

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று சந்தேகத்தால் ஊர் மக்களால் ஒதுக்கப்பட்டவர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில அரசு அதிகாரி கூறியதாவது, ஹிமாசலப் பிரதேச மாநிலம் உனாவில் உள்ள பங்கா் கிராமத்தில் வசித்த முகமது தில்ஷாத் (37) என்பவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகித்து தனிமைப்படுத்தும் முகாமுக்கு சமீபத்தில் அழைத்துச் செல்லப்பட்டாா்.

அவருக்கு நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின், அவரை சுகாதார அதிகாரிகள் அவரது கிராமத்தில் சனிக்கிழமை விட்டுச் சென்றனா். மறுநாள் தனது வீட்டில் அவா் த ற்கொ லை செய்துகொண்டாா் என்றாா்.

இதுதொடா்பாக டிஜிபி சீதா ராம் மாா்டி கூறுகையில், முகாமில் இருந்து திரும்பிய பின் முகமது தில்ஷாத்திடம் கிராம மக்கள் பாகுபாடு காட்டி, அனைவரும் அவரை ஒதுக்கிவைத்துள்ளனா்.
இதனால் அவா் த ற்கொ லை செய்துகொண்டாா் என கூறியுள்ளார்.

இதனிடையே தில்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய நபருடன் முகமது தில்ஷாத் தொடா்பில் இருந்ததாகவும், அவரது த ற்கொ லை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

571 பேரில் 415பேருக்கு அறிகுறியே இல்லாமல் இருந்த கொரோனா தொற்று : குழப்பத்தில் மருத்துவர்கள்!!

கொரோனா தொற்று..

தமிழகத்தில் 571பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 415பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலகம் முழுவதும், பரவி வருகிறது. இதன் அறிகுறிகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. பொதுவாக இந்த வைரஸ் தாக்கியிருந்தால், மூன்று வித்தில் கண்டறிய முடியும். அதாவது, முதல் அறிகுறி இருமல், வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல் போன்றவையாகும்.

ஆனால், தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பரவி வருகிறது. அதாவது ஏ என்ற நபருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று இருந்தால் அவர் பல இடங்களுக்கு பயணிப்பார். இவ்வாறு அவரிடம் இருந்து பலருக்கு எளிதில் பரவிவிடும்.

தமிழகத்திலும் கூட இப்படி நடக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் சில நோயாளிக்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையிலும் எதிர்மறை முடிவுகளே வந்தது. ஆனால் 21 நாட்கள் கழித்து திடீர் என்று அறிகுறி ஏற்படுகிறது. பின் சோதனை செய்தால் பாசிட்டிவ் என்று வருகிறது.

அதேபோல் சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கி உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா ஏற்படும் நபர்களில் பலருக்கு அறிகுறியே இல்லை.

அதேபோல் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கொரோனா அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா ஏற்படுகிறது. அமெரிக்காவில் 30% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஐஸ்லாந்தில் 50% பேர் கொரோனா அறிகுறியே இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா உள்ளது. இதில் 415 பேருக்கு கொரோனா அறிகுறியே தென்படவில்லை. இவர்கள் எல்லோரும் டெல்லி மாநாடு சென்றவர்கள். இவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு அறிகுறி ஏற்படும் முன்பே சோதனை செய்து அவர்களுக்கு முடிவுகளை அறிவித்து இருக்கிறார்கள். இவ்வாறு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வீட்டுத்தோட்ட அபிவிருத்தி திட்டத்திற்காக விதைகள் நாற்றுகள் விநியோகம்!

தற்போது வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகள் மற்றும் மரக்கறி நாற்றுக்கள் விநியோகம் சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியா மாவட்டத்தின் எப் பிரதேசத்தினை சேர்ந்தவராயினும் வவுனியா நகருக்கு வரும்போது கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் (இலுப்பையடி) ரூபா 20 இனை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
வவுனியா மாவட்டத்தின் வீடுகளுக்கு நேரடியாக வருகை தந்து இன்று (06.04.2020) பரீட்சார்த்தமாக திருநாவற்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட விநியோகம் வெயில் காரணமாக வெற்றியளிக்கவில்லை.


எனவே தங்கள் கிராமங்களுக்கு கீழ் குறிப்பிடப்பட்டவாறு வருகை தந்து கிராம சேவகர் காரியாலயங்களில் இருந்து விநியோகிக்கப்படும். ஒலி பெருக்கி மூலம் கிராமங்களின் ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு அறியத்தரப்படும்.


ஏனைய கிராமங்களில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறியத்தந்தமை போன்று உரிய கமநல சேவை நிலையங்களின் பின்வரும் இலக்கங்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
திகதிகளில் மாற்றங்கள் இருப்பின் ஒலிபெருக்கி மூலம் கிராமங்களுக்கு அறியத்தரப்படும்.

07.04.2020- பட்டாணிச்சூர், வேப்பம்குளம்

08.04.2020- வைரவபுளியங்குளம், குருமன்காடு

09.04.2020- தோணிக்கல்

10.04.2020- கோவில்குளம், றம்பைக்குளம்

11.04.2020- பண்டாரிக்குளம், உக்குளாங்குளம்

12.04.2020- சமனங்குளம், தெற்கிலுப்பைக்குளம்

13.04.2020- வவுனியா நகரம், வெளிக்குளம்

14.04.2020- வவுனியா நகரம், வெளிக்குளம்

15.04.2020 – பூந்தோட்டம்

16.04.2020- புதுக்குளம், மூன்றுமுறிப்பு

17.04.2020- எல்லப்பர்மருதன்குளம், முருகனூர்

18.04.2020- கல்நாட்டினகுளம்

20.04.2020- ஆசிகுளம், பெரியகோமரசன்குளம்

21.04.2020- காத்தார்சின்னகுளம், மகாறம்பைக்குளம்

22.04.2020- நொச்சிமோட்டை, பறன்நட்டகல்

23.04.2020- கள்ளிகுளம்.

 

தொடர்பு இலக்கங்கள்
கோவில்குளம்- 0242221053
செட்டிக்குளம்- 0772608277
உளுக்குளம்- 0716386555
பம்பைமடு- 0779362215
ஓமந்தை- 0774215305
கனகராயன்குளம்- 0778068339
நெடுங்கேணி- 0779885667
மடுக்கந்தை- 0702612923

மாவட்ட உதவி ஆணையாளர்,
கமநல அபிவிருத்தி திணைக்களம்,
வவுனியா.

வரலாற்றில் முதல் முறையாக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபாய்!!

இலங்கை ரூபாய்..

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கயை இந்த விடயம் தெரியவந்துள்ளளது.

அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 199.40 ரூபாவாகவும் கொள்வனவு விலை 193.35 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரம் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதியும் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

வானில் தோன்றவுள்ள இளஞ்சிவப்பு நிலா : இதுவே 2020 இல் மிகப்பெரிய பிரகாசமான நிலா!!

இளஞ்சிவப்பு நிலா..

இந்த மாதத்தில் வானத்தில் ஒரு மாய ஜாலம் நிகழும் அதாவது பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 7ம் திகதி அதிகாலையில் இந்த பிங்க் சுப்பர் நிலா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசந்தகாலத்தின் முதல் பௌர்ணமியாக இந்த சூப்பர் பிங்க் நிலா இரவு வானத்தில் ஒளிரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலவை “இளஞ்சிவப்பு” நிலா என்று அழைத்தாலும், அதன் நிறம் இயல்பை விட வித்தியாசமாக இருக்காது. இது வானத்தில் கீழ் பகுதியில் இருக்கும் போது தங்க ஆரஞ்சு நிறமாகவும், உயரும்போது வெள்ளை நிறமாகவும் இருக்கும் எனகூறப்படுகின்றது.

ஏப்ரல் 7ஆம் திகதியன்று, நிலா 30,000 கிலோ மீற்றர் தூரத்தில் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரி தூரம் 221,772 கிலோ மீற்றராக காணப்படும்.

நிலாவின் அளவில் பாரிய அதிகரிப்பு ஏற்படுவதனை அன்றைய தினம் காண முடியும், இது சராசரி நாளை விட 15 வீதம் பெரியதாக தோன்றும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலாவே இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகப் பிரகாசமான சூப்பர் நிலாவாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந் நிலா பிரித்தானிய நேரம் அதிகாலை 3:55 மணியளவில் காணப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

தொழில் இழந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரணம்!!

தொழில் இழந்தவர்களுக்கு..

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளமையினால் தொழில் இழந்த அனைவருக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த தகவலை அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் தொழில் இழந்தவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நியமிக்கப்படுகின்ற குழு ஊடாக இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று : இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பலி!!

இலங்கையர்..

இலங்கையை பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

52 வயதான சுமித் பிரேமச்சந்திர என்பவரே இன்று காலை மெல்போர்னில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவர் எனவும் கூறப்படுகின்றது. இவர் அங்கு சமையல்காரராக பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 67 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 175 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றாளிகளுடன் தொடர்பிலிருந்த 40 ஆயிரம் பேர் இருக்கின்றனர் : வெளியாகியுள்ள தகவல்!!

கொரோனா..

கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்புடைய 40,000க்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்புடைய 42,000 பேரை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் ஒரு நாளைக்கு சுமார் 300 பேரை மட்டுமே சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்கின்றனர். இது போதுமானதாக இல்லை.

இவ்வாறு சென்றால் சோதனைகளை எப்போது முடிப்பது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஆகையினால் விரைவான சோதனை கருவிகளைப் பயன்படுத்துவதற்கு மாற வேண்டும்.

எவ்வாறாயினும், தனிமைப்படுத்தும் செயல்முறை மட்டும் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உதவாது அவர் மேலும் கூறியுள்ளார்.

அரசாங்கம் என்னை பொறுப்பேற்க வேண்டும் : சொகுசுக் கப்பலில் பணியாற்றும் இலங்கையர் கோரிக்கை!!

கப்பலில் பணிபுரியும் இளைஞர்..

சுற்றுலாக் கப்பலில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் தன்னை பொறுப்பேற்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அனுர பண்டார என்ற இளைஞரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

MSC Magnifica என்ற குறித்த கப்பல் நாளை இலங்கை நோக்கி வரவுள்ளதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்த கப்பலில் 2300 பயணிகள் இருந்தனர். கடந்த ஜனவரி 5ம் திகதி கப்பல் தனது பயணத்தினை ஆரம்பித்தது. எனினும், கொரோனா அச்சம் காரணமாக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தை நிறுத்த வேண்டியிருந்தது.

இந்நிலையில், குறித்த கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. இதன்போது, தன்னை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

அவ்வாறு மீட்காவிட்டால் மீண்டும் ஐரோப்பாவிற்கு செல்ல நேரிடும். தான் இலங்கைக்கு வர விரும்புவதாகவும், இரண்டு மாதங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்!!

ஊரடங்குச் சட்டம்..

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் இன்று பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 09 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மாலை 04 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவை தவிர்ந்த வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைமுறைகளை தவறாக கையாள்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், விவசாய நடவடிக்கையிலும் சிறு தேயிலைத் தோட்டம் மற்றும் ஏற்றுமதிப் பயிர் துறையிலும் ஈடுபடுவதற்கான அனுமதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் தந்தையால் 3 பிள்ளைகளுக்கு பரவிய கொரோனா!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய தந்தையினால் அவரது மூன்று பிள்ளைகளுக்கு பரவியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியா மற்றும் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பிய தந்தைக்கே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அவருக்கு 11, 9 மற்றும் 5 வயதுடைய 3 பிள்ளைகள் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்தே இந்த பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டு்ளனர். 84 பேர் உள்ள அந்த முகாமில் 35 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

-தமிழ்வின்-

சுவிசில் கொரோனோ தொற்றால் உயிரிழந்த தமிழர் : தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

லோகநாதன் சதாசிவம்..

சுவிஸில் வாழ்ந்த இலங்கைத்தமிழரான லோகநாதன் சதாசிவம் (வயது 59) , கொரோனோ தொற்றால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெலிசூரி (TELE ZURI) என்ற தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சதாசிவம் ஒரு நீரிழிவு நோயாளியாவார் . சுவிஸ் சுகாதாரதுறையால் ஏற்கனவே நீரிழிவு , இருதயநோய்கள் உள்ளோர் கொரோனோ தொற்றின் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான சுற்றுநிருபங்கள் வைத்தியசாலைகள் , குடும்பவைத்தியர் போன்றோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது . அத்தோடு மாகாணரீதியாக குடும்பவைத்தியர்களுக்கான கூட்டத்திலும் , மாகாண வைத்திய துறையால் வலியுறுத்தப்பட்டிருந்தது .

தீவிர கவனமும் கரிசனையையும் கொள்ளுமாறு வைத்தியப்பிரிவு மட்டுமல்ல , தொழில்வழங்குநரும் அக்கறைகொள்ளுமாறு , சுவிஸ் மத்திய அரசு ஏலவே கோரியிருந்தது .

ஆனால் லோகநாதன் சதாசிவம் அவர்கள் , நீரிழிவு நோயாளியாக இருந்தபோதும் , அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்ட போதும் , அது தொடர்பாக குடும்ப வைத்தியர் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என வைத்தியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

லோகநாதன் தரப்பு குடும்ப வைத்தியரோடு தொடர்பு கொண்ட போது போது , குடும்ப வைத்தியரால் “ இருமலுக்கான சாதாரண இருமல் மருந்தே , தருவேன் “. என குடும்ப வைத்தியர் குறிப்பிட்டது , அவருடைய கடமையீனத்தையும் , பொறுப்பற்ற செயலையும் காட்டியுள்ளது.

வைத்தியருக்கு எதிரான சட்டநடவடிக்கையை நிச்சயமாக மாகண சுகாதாரதுறை எடுக்கும் . சில சந்தர்பங்களில் குடும்ப வைத்தியருக்கான அனுமதி கூட நீக்கப்படலாம் . கொரோனோ தொற்றால் , முற்றுமுழுதாக ஙரையீரல் செயலிழந்து சதாசிவம் லோகநாதன் உயிரிழந்திருக்கலாம்.

குடும்ப வைத்தியரோ , அல்லது உறவினரோ சற்று புத்திசாலித்தனமாக செயற்பட்டு , அவருக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்ட போதாவது 144 இலக்கத்தை அழுத்தி , அம்புலன்ஸ் சேவையை நாடியிருக்கலாம் .

இதன் மூலம் பொருத்தமான சிகிச்சையும் , அவசரசிகிச்சைக்கு உட்படுத்துவதன் மூலமும் , அவருடைய உடல் இயக்கத்திற்கு துணை ஏற்படுத்தியிருக்கும் . இதன் மூலம் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் . குடும்ப வைத்தியரின் அனுமதி இல்லாமலும் , நோயாளியின் உடல் நிலை மோசமடைகின்றது என கருதினால் , நீங்கள் 144 என்னும் அம்புலன் சேவையை அழைக்கலாம்.

அழைக்கும் போது , அழைப்பவரின் பெயர் , சம்பவ இடம். (முகவரி- தாபாலக இலக்கம் , வீதி , வீட்டுஇலக்கம் , எத்தனையாவது மாடி) என்பனவற்றை தெளிவாக குறிப்பிடவேண்டும் . நோயாளியின் உடல் நிலைமை பற்றி சுருக்கமாக முடிந்தளவுக்கு விளங்க கூடியளவுக்கு குறிப்பிடுங்கள்.

தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்ப அம்புலன்ஸ் சேவையானது , அம்புலன்ஸ் மூலமாகவோ , ஹெலிஹொப்டர் மூலமாகவோ தங்களை , முதலுதவி அளித்து வைத்திய சாலைக்கு கொண்டு வருவார்கள்.

இதன் மூலம் நோயாளிக்கான பரிசோதனை , சிகிச்சைக்கான காலதாமங்கள் தவிர்க்கப்பட்டு , சிகிச்சை வெற்றிகண்டு , நோயாளியைக் காப்பாற்றக்கூடியதாக இருக்கும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

இவ்வாறான மருத்துவத்துறை சார்ந்தோரின் நடவடிக்கையால் பாதிப்புற்ற நோயாளிகள் , உறவினரகள் சுவிஸ் நோயாளர் பாதுகாப்பு அமையத்திற்கு முறையீடு செய்யலாம்.

அந்த அமையம் இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். பாதிக்கப்பட்டவருக்கு நஸ்ட ஈடும் , பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு தண்டனையையும் பெற்றுக் கொடுக்கும் என்பதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.

-தமிழ்வின்-

வவுனியாவை வந்தடைந்த அத்தியாவசியப் பொருட்கள்!!

அத்தியாவசியப் பொருட்கள்

தென்பகுதியில் இருந்து வவுனியா உள்ளிட்ட வடபகுதிக்கான அத்தியாவசியப் பொருட்களின் ஒரு தொகுதி இன்று வந்தடைந்தன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தாக்கம் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவியிருந்தது.

இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட வடபகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் பாரவூர்திகள் வவுனியாவை வந்தடைந்தன.

கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த பாரவூர்திகளை ஈரப்பெரியகுளம் இராணுவ சோதனை சாவடியில் பரிசோதித்து பதிவு செய்த பின்னர் வவுனியாவிற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் குறித்த பாரவூர்திகளில் கொண்டு வரப்பட்ட அரிசி, மா, சீனி, பருப்பு, சோயா, கிழங்கு, பூடு, வெங்காயம், செத்தல் மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், சதொச விற்பனை நிலையங்கள், மொத்த விற்பனை நிலையங்கள் என்பவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகியவற்றுக்கான பொருட்கள் அடங்கிய பாரவூர்திகள் வவுனியாவைக் கடந்து வடக்கு நோக்கி சென்றிருந்தன.