ஹோட்டலில் பிரைட் ரைஸ் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அனுராதபுரத்தில் மனித பாவனைக்கு எதிரான முறையில் செயற்பட்ட ஹோட்டல் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பகுதியிலுள்ள பிரபலமான உணவகத்தில் இருந்து கொள்வனவு செய்த பிரைட் ரைஸில் இரண்டு அடி நீள நூல் இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர் செய்ய முறைப்பாடுக்கு அமைய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொது சுகாதார ஆய்வாளர்கள் உணவை ஆய்வு செய்து, கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஹோட்டலுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

கெக்கிராவ மருத்துவமனைக்கு எதிராக அமைந்துள்ள உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு, கலேவெல பகுதியில் வசிக்கும் சுகாதார சேவை அதிகாரி ஒருவர், தனது மகளுடன் உணவகத்தில் பிரைட் ரைஸ் கொள்வனவு செய்துள்ளனர்.

அதனுள் நூல் ஒன்றினை கவனித்த அதிகாரி அது தொடர்பில் உணவக ஊழியர்களிடம் தெரிவித்தார். எனினும் ஊழியர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கெக்கிராவ தலைமை பொது சுகாதார ஆய்வாளர் அருணா ரணசிங்கவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஹோட்டலில் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த உணவில் சுமார் இரண்டு அடி நீளமுள்ள ஒரு நூலை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த ஹோட்டலுக்கு எட்டாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உணவைப் பெற்ற சுகாதாரப் பணியாளர், நூலை அதனுடன் சேர்த்து சாப்பிட்டிருந்தால், அது வயிறு வழியாகவும் குடலிலும் சென்றிருக்கும் என்றும், அறுவை சிகிச்சை கூட தேவைப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

வவுனியாவில் 558.5 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல் : மூவர் மீது விசாரணை!!

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 558.5கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் நேற்றையதினம் (04.08.2025) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த இறைச்சினை ஏற்றிச்செல்ல முற்பட்ட இரு முச்சக்கரவண்டியும் மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இதனுடன் தொடர்புபட்ட மூவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் இருந்து நேற்று மாலை வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பெருந்தொகை மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அவை வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்செல்லப்படவிருந்தது.

சம்பவம் தொடர்பாக வவுனியா மாநகரசபை முதல்வருக்கு பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் உத்தரவிக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற மாநகரசபையின் துணை முதல்வர் ப.கார்த்தீபன் மற்றும் சபை உறுப்பினர் அருணன், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன் குறித்த இறைச்சியினை கைப்பற்றினர்.

மீட்கப்பட்ட இறைச்சியின் நிறை சுமார்558.5 கிலோ என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இறைச்சி சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் எடைபார்க்கப்பட்டு மாநகரசபையினரினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன் இறைச்சினை ஏற்ற பயன்படுத்தப்பட்ட இரு முச்சக்கரவண்டிகளும் மாநகரசபையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் இதனுடன் தொடர்புடைய மூவர் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மாநகரசபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலி ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் பலியானார்.

உயிரிழந்தவர் பாடசாலையில் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 6.00 மணியளவில் சிறுமி தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாடசாலை விடுமுறை என்பதால், சிறுமி தனது தந்தைக்கு விவசாய நடவடிக்கைகளில் உதவி செய்து கொண்டிருந்தபோது, காட்டு யானை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

முல்லைத்தீவில் துயரத்தை ஏற்படுத்திய மரணம் : நடந்தது என்ன?

முல்லைத்தீவு – புலிமச்சிநாதிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிமச்சநாதிகுளம் பகுதியில் நேற்று சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்ற 43 வயதான குடும்பஸ்தர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல்போன குடும்பஸ்தருடைய மேற்சட்டையும், கைத்தொலைபேசியும் புலிமச்சிநாதிகுளக் கட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன், காணாமல்போன குடும்பஸ்தர் தொடர்பில் பல சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் குடும்பத்திஅனரிடம் நேரடியாக சென்று கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தார்.

காணாமல்போனவரை பொலிசார் தேட தயாரான நிலையில் , குறித்த நபர் சடலமாக புலிமச்சினாதி குளத்தில் இனங்காணப்பட்டதாக ஊர்மக்களால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்ஒண்டுள்ளனர்.

மற்றுமொரு பாரிய விமான விபத்தில் இருந்து தப்பிய ஏர் இந்தியா விமானம்!!

இந்தியாவின் பெங்களூருவிலிருந்து கொல்கத்தா சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட தனால், மற்றுமோர் பாரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.

நேற்று (03.08.2025) இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 2718 விமானம், பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KIA) நேற்று இரவு 7.16 மணிக்கு புறப்பட்டது.

எனினும், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

விமானத்தின் நடுவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்த தகவலுக்குப் பிறகு, தரையிறங்கும்போது ஏற்படும் எந்தவொரு பாதிப்பிற்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு 8.21 மணிக்கு முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் இரவு 9.19 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர்.

விமானம் அவசரமாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டாலும், இந்தச் சம்பவம் விமானத்துறையில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இந்நிலையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முகத்தில் ஸ்ப்ரே அடித்து தங்க நகையை திருட முயற்சித்த பெண்!!

ஹட்டனில் ஒரு பக்கத் தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூ.275,000 மதிப்புள்ள தங்க மாலையை திருட முயன்ற, பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த பெண், ஹட்டன் பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் கடந்த 01ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை ரூ.500,000 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், நாளையதினம்(05) வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், ஒரு குழந்தையின் தாய் ஆவார்.

குறித்த பெண், மஸ்கெலியா உப்காட் பகுதியில் சிறிது காலம் வசித்து வந்ததாகவும் தற்போது கொழும்பில் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ஆம் திகதி ஹட்டன் வந்த அவர், நகைக்கடை ஒன்றுக்கு நகை வாங்குவதற்காக சென்றுள்ளார்.

பற்றுசீட்டுக்கள்

இதன்போது, பெண்ணின் இடது கை அவரது கைப்பைக்குள் இருப்பதைக் கண்டு உரிமையாளர் சந்தேகமடைந்துள்ளார். அந்தப் பெண் தனது கைப்பையில் இருந்து திரவ போத்தலொன்றை எடுத்து கடை உரிமையாளரின் மீது தெளித்துள்ளார்.

எனினும், கடை உரிமையாளர், குறித்த பெண்ணை கட்டுப்படுத்தி, அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தனது தந்தையின் சிகிச்சை செலவுக்காகவே இவ்வாறு செய்ததாக பொலிஸாரிடம் நகையை திருடிய பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து தங்க நகைகளை அடகு வைத்ததற்கான பல பற்றுசீட்டுக்கள் அவரது பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிஐடியில் முன்னிலையானார் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அர்ச்சுனா நேற்றையதினம் வெளியிட்ட காணொளியொன்றில் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், குறித்த கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்திலிருந்து அர்ச்சுனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கையில் அமர்ந்த அர்ச்சுனா, தான் வெளியிட்ட நேரலையில் ‘தமிழீழ மக்களுக்கு வணக்கம்’ என்று விழித்திருந்தார்.

அவர் தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் படுகாயம்!!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் ஏ 35 பிரதான வீதியின் ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த உந்துருளியும் அதே திசையில் இருந்து பயணித்த மற்றுமொரு பெண் செலுத்திய உந்துருளியும் மோதி விபத்துக்குள்ளானது.

வீதியை குறுக்கெடுத்து செல்ல முற்பட்ட வேலை ஏற்பட்ட வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

காயமடைந்த பெண் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உந்துருளியில் பயணித்த ஆண் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் விபத்து சம்பவம் தொடர்பாக தர்மபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயை கொடூரமாக கொலை செய்த மகள் : பொலிஸார் அதிர்ச்சி!!

குருணாகலில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரந்தெனிய பகுதியில் தனது தாயை , மகள் கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த வாரியபொல பொலிஸார் மகளை கைது செய்துள்ளனர். ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் தொடர்பில் தாயின் 32 வயதுடைய மகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான மகள் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகளே தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரணத்திற்கு பிறகும் உயிர் பெறும் சந்தர்ப்பம் : இதோ புதிய கண்டுபிடிப்பு!!

சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். உயிரிழந்த பின்பும் மீண்டும் உயிர் பெறும் ஆசை மனிதகுலத்தில் நீண்ட காலமாகவே காணப்படுகிறது. அந்தக் கனவை நிஜமாக்க அறிவியல் உலகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த ‘Tomorrow Bio’ எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம், உயிரிழந்தவர்களின் உடலை உறையவைத்து பாதுகாக்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையின் நோக்கம், எதிர்காலத்தில் மருத்துவ அறிவியல் பெரிதும் முன்னேறும்போது, உயிரிழந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டுவரும் சாத்தியம் இருந்தால், அவர்களது உடலை மீட்டெடுக்க பயன்படுவதாகும்.

இதற்காக, முழு உடல் கிரையோபிரசர்வேஷன் (Whole-body Cryopreservation) எனப்படும் முறையில், உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறைய வைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

மரணம் உறுதி செய்யப்பட்ட உடலை உடனடியாக மிகவும் குறைந்த வெப்பநிலைக்கு கொண்டு செல்லும் செய்முறை.

இதனால், உயிரணுக்கள் மற்றும் திசுக்களில் ஏற்படக்கூடிய சேதத்தைத் தடுப்பது நோக்கமாகும். இந்த entire செயல்முறை $200,000 வரையிலான கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. உடனடிப் பாதுகாப்பு வழங்கும் 24×7 அவசரக் குழுவும் நிறுவனம் வைத்துள்ளது.

இது வரை, 650க்கும் மேற்பட்டோர் இந்த சேவைக்கு முன்பதிவு செய்துள்ளனர். மேலும் 700க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டு, உடலை உறையவைத்து பாதுகாக்க ஒப்பந்தத்தில் இணைந்துள்ளனர்.

அதே நேரத்தில், சிலர் இது குறித்து விமர்சனமும் வெளியிட்டுள்ளனர். “அதிக நம்பிக்கையோடு செய்யப்படும் ஒரு அபத்தமான முயற்சி” எனவும், மனித மூளை மீட்பு குறித்து எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை எனவும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோய்ன் தெரிவித்துள்ளார்.

“Tomorrow Bio” ஐரோப்பாவில் இந்தவகை சேவையை வழங்கும் முதல் நிறுவனம் என்பதுடன், தற்போது 3–4 மனித உடல்களையும், 5 செல்லப்பிராணி உடல்களையும் பாதுகாத்து வருகிறது.

எதிர்காலத்தில் அமெரிக்காவிலும் இந்த சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திடீரென்று நடுவானில் மாயமான விமானம்!!

பாஸ் ஜலசந்தி அருகே நடுவானில் விமானம் ஒன்று திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் விமானி மற்றும் அவரது நண்பரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த விமானமானது சனிக்கிழமை(2) மதியம் 12.45 மணிக்கு ஜோர்ஜ் டவுன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, விக்டோரியாவிற்கும் பின்னர் மத்திய NSWக்கும் புறப்பட்டது.

விமானத்தில் இருந்த விமானி 70 வயது முதியவர் என்றும், அவரது பயணி 60 வயதுடைய ஒரு பெண் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த தம்பதியினர், நியூ சவுத் வேல்ஸில் உள்ள குடும்பத்தைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தபோது, பாஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது அவர்களின் விமானம் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தம்பதியினர் சேருமிடத்தை அடையாததால் குடும்ப உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் தொடங்கப்பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பு எந்த வானொலி தொடர்பும் அல்லது மேடே அழைப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

அந்த விமானி “மிகவும் அனுபவம் வாய்ந்தவர்” என்றும் தெரியவந்துள்ளது. ஆனால், அவர் பயணித்த அந்த விமானமானது அவருக்கு ஒப்பீட்டளவில் புதியது என்று தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் தற்போதைய உரிமையாளரும் விமானியும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்புதான் அந்த விமானத்தை வாங்கியுள்ளனர். விக்டோரியா மற்றும் டாஸ்மேனிய காவல்துறையினர் பாஸ் நீரிணை மற்றும் தெற்கு விக்டோரியாவில் தங்கள் தேடலை மையப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, காணாமல் போன விமானத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து தேடுதலுக்கு உதவுமாறு பொலிஸ்துறை ஆய்வாளர் கிளார்க் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் உலக சாதனைக்காக தயாராகி வரும் கொழும்பு துறைமுக நகரம்!!

உலகின் மிகப்பெரிய கலைக்கூடம் மற்றும் பிக் பென் போன்ற கடிகாரத்தை அமைக்கவுள்ளதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைக்க கொழும்பு துறைமுக நகரம் தயாராகி வருகிறது.

இது தொடர்பாக அரசாங்கம் ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டு, 25 ஆண்டுகளுக்கு முதலீட்டிற்கான வரி சலுகையை வழங்கியுள்ளது.

இந்த கட்டுமானத் திட்டத்திற்கமைய, முதலில் 2 பெரிய கோபுரங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதில் ஒரு கோபுரத்தில் உலகின் மிகப்பெரிய செங்குத்து கலைக்கூடம் அமைக்கப்படவுள்ளது.

மற்றொரு கோபுரம் 7 நட்சத்திர ஹோட்டல் மற்றும் பல நிறுவனங்களை கொண்டிருக்கும். இதன் நிர்மாணப்பணிகளுக்காக 540 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்படவுள்ளது.

இந்த வளாகத்தில் அமைக்கப்படவுள்ள கலைக்கூடம் உலகிலேயே முதன்முதன் முறை எனவும், அது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்படும் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த 11 வயது பாடசாலை மாணவி!!

அனுராதபுரம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்த பின்னர் சிறுமி பாடசாலை பேருந்தில் ஏறி முயன்றபோது இந்த சம்பவம் நேர்ந்தது. சம்பவத்திற்குப் பிறகு அவர் உடனடியாக கெக்கிராவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரேத பரிசோதனை செய்த போதிலும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இதன் விளைவாக, உடல் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்விற்காக மருத்துவ பரிசோதகருக்கு அனுப்பப்பட்டு, திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர், சிறுமியின் உடல் அவரது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (04.08.2025) கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மின்னல் ஆபத்துகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழர் பகுதியில் பொதுமகனின் காதை வெட்டிய ஆளும் தரப்பு உறுப்பினர்!!

திருகோணமலை மாநகர சபையை சேர்ந்த ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் அப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் காதை கத்தியால் வெட்டிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாநகர சபை உறுப்பினருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்தே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் உப்புவேலி வடிகால் அமைப்பு அடைக்கப்பட்டு மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.

இதனையடுத்து, சில ஊழியர்களுடன் சேர்ந்து வடிகாலை சுத்தம் செய்யும் பணியை செய்வதற்காக மாநகர சபையை சேர்ந்த ஆளும் தரப்பு உறுப்பினர் சென்றிருந்தார்.

இதன்போது, அங்கு வந்த பிரதேசவாசி ஒருவர் குழப்பம் விளைவித்ததோடு உறுப்பினரை தடி ஒன்றால் தாக்க முயன்றுள்ளார். இந்நிலையில், தனது சொந்த பாதுகாப்பிற்காக பிரதேசவாசியை புதர்களை வெட்ட கொண்டு வந்த கத்தியை பயன்படுத்தி உறுப்பினர் தாக்கியுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்கனவே இருந்த முன்பகை காரணமாக இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்கள் : மகள் மற்றும் மருமகனின் வெறித்தனம்!!

இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் டிப்போ சந்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

அதற்கமைய, உயிரிழந்தவர் 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளனர். பெண்ணின் மருமகன் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றம் தொடர்பாக 29 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, வாரியபொல பொலிஸ் பிரிவின் ரன்தெனிய பகுதியில் இருந்து நேற்று ஒரு மகள் தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொலையில் உயிரிழந்தவர் ரன்தெனிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தக் கொலையில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.