செம்மணி விவகாரத்தில் திருப்புமுனை : சோமரத்னவின் பகிரங்க சாட்சியம் – ஜனாதிபதிக்கு முக்கிய வேண்டுகோள்!!

செம்மணி பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாக தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள், சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதியும் சர்வதேச சமூகமும் முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ் செம்மணி மனிதப்புதைகுழு விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை

வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன்,

‘செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். மரணதண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறார்.

இருப்பினும் இந்த நாட்டுக்குள் உண்மைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதுவதனாலேயே அவர் சர்வதேச விசாரணையைக் கோருகிறார். இந்த சர்வதேச விசாரணையையே நாம் 2010 ஆம் ஆண்டிலிருந்து கோரிவருகிறோம்.

அவ்வாறிருக்கையில் தற்போது சிங்களத்தரப்பிலிருந்து, அதுவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவரிடமிருந்து அந்தக் கோரிக்கை வந்திருப்பதை நாம் எமக்கான ஒரு விடையாகவே பார்க்கிறோம்.

அதேபோன்று தனக்கு ஆணையிட்ட உயரதிகாரிகள், படுகொலைக் குற்றங்களைப் புரிந்தவர்கள் உள்ளிட்ட சகலரது விபரங்களையும் வெளிப்படுத்துவதற்குத் தயார் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

எனவே நீதிக்கான பயணத்தில் சர்வதேசத்தின் தலையீடு அல்லது பங்களிப்பு இல்லாவிடின், அது உண்மையான நீதியாக இருக்காது என சிங்களவர்களே கூறுமளவுக்கு இன்று நிலைமை மாறியிருக்கிறது.

எனவே இலங்கை அரசாங்கம் முதலில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுமாத்திரமன்றி மீண்டும் மீண்டும் உள்ளகப்பொறிமுறை எனக்கூறி சகல தரப்பினரையும் ஏமாற்றுவதை விடுத்து, நீதியானதொரு சர்வதேசப்பொறிமுறையை நோக்கி நகரவேண்டும்” என கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா நகரில் விரைவில் வீதி சமிக்ஞை விளக்குகள் : சத்தியலிங்கம் எம்.பி!!

வவுனியா நகரத்தில் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22.07.2025 அன்று பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா நகரில் பொதுமக்களிற்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன் பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்தும் முகமாக வீதிச் சமிக்ஞை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,

இது தொடர்பில் கடந்த 07.03.2025 அன்று பாராளுமன்ற அமர்வில் கோரிக்கை விடுத்திருந்ததுடன், தொடர்ச்சியாக அதுதொடர்பிலான முன்மொழிவு தன்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த செயற்பாட்டினை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்ற உறுப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியா நகரத்தை ஊடறுத்துச்செல்லும் கண்டி – யாழ் பிரதான வீதியில் காணப்படுகின்ற மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம், வைத்தியசாலை சுற்றுவட்டம், பண்டாரவன்னியன் சுற்றுவட்டம், A29 பிரதான வீதியில் பள்ளிவாசல் சந்தி மற்றும் A30 பிரதான வீதியில் குருமண்காடு சந்தி ஆகிய இடங்களில் வீதி சமிச்சை விளக்குகளை பொருத்துவதற்கான முன்மொழிவினையும்,

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக சுயமாக இயக்ககூடிய பாதசாரிகள் கடவைக்கான சமிக்ஞை விளக்கு (Self Operated Pedestrian Crossing Signal Light) பொருத்துவதற்கான முன்மொழிவினையும் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக டிஜிட்டல் தேசிய பிறப்பு சான்றிதழ்கள்!!

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக டிஜிட்டல் தேசிய பிறப்பு சான்றிதழ்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .

இந்த திட்டத்தின் கீழ், 2021 இற்கு பின்னர் இலங்கையில் பிறந்த குழந்தைகள் புதிய தேசிய பிறப்பு சான்றிதழ்களினை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த தேசிய பிறப்பு சான்றிதழ்கள் சிங்களம்-அல்லது தமிழ் மொழிகளிற்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் அச்சிடப்படுவது சிறப்பம்சமாகும்.
எனவே, தேவைக்கேற்ப அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை.

இதன் ஆரம்ப நிகழ்வில் 30 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர, துணைப் பதிவாளர் நாயகம் ஆனந்தி ஜெயரட்ணம் மற்றும் பி.பிரபாகர், வவுனியா காணிப் பதிவாளர் கிருஷ்ணராஜ் லிசாந்தனி, வவுனியா பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் சசிகலா யோஜீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

வவுனியா சின்னப்புதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்தின் நூலகம் அங்குரார்ப்பணம்!!

வவுனியா சின்னப்புதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையத்தின் நூலகம் அங்குரார்ப்பண நிகழ்வு சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இதன் போது சனசமூக நிலைய நூலகத்திற்கு வவுனியா பொது நூலகம் சார்பில் ஒரு தொகுதி நூல்களும், உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் சார்பில் ஒரு தொகுதி நூல்களும், ஓய்வு நிலை அதிபர் த.பூலோகசிங்கம் அவர்கள் ஒரு தொகுதி நூல்களையும் அன்பளிப்பாக வழங்கி வைத்திருந்தனர்.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் சி.அருணன், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பு.ஐங்கரன், வவுனியா பொது நூலகத்தின் நூலகர் சார்பில் உதவி நூலகர் சுதர்சன், இறம்பைக்குளம் கிராம சேவகர் பவித்திரா, அபிவிருத்தி உத்தியோகத்தர் தர்ஷிகா,

வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய அதிபர் பா.நேசராஜா மற்றும் பாடசாலை மாணவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், வாசகர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

வவுனியா பட்டாணிச்சூரில் இஸ்ஸாமிய கலாச்சார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு!!

வவுனியா மன்னார் வீதி பட்டானிச்சூர்புளியங்குளத்தில் இஸ்ஸாமிய கலாச்சார மண்டபத்திற்கான அடிக்கல் நேற்று (03.08) காலை 9.30 மணியளவில் நாட்டி வைக்கப்பட்டது.

முஹதைீன் ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், முத்து முகமது, அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்,

மற்றும் மாநகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரீ, ஏ.ஆர்.எம் லறீப், பாறூாக் பர்ஷான் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீ்ன் வெளிநாட்டு பயணம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.

முஸ்ஸிம் கலாச்சார மண்டபத்திற்கான முதலாவது அடிக்கலினை பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் இணைந்து வைத்தமையுடன்,

இரண்டாவதாக மாநகரசபை உறுப்பினர்களும் மூன்றாவதாக பள்ளிவாசல் சார்ந்தோர் என பலரும் தொடர்ச்சியாக அடிக்கலை பலரும் நாட்டி வைத்திருந்தனர்.

இக் கலாச்சார மண்டபம் அமையும் இடமானது பல வருடங்கள் பல்வேறு சர்சைகளுக்கு மத்தியில் தற்போது உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதிகளுடன் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலைகழகத்தில் நூலகத்தை திறந்துவைத்த பிரதமர் ஹரிணி!!

வவுனியா பல்கலைகழகத்தில் புதிய நூலகம் ஒன்றை பிரதமர் ஹரிணிஅமரசூரிய நேற்று (02.08.2025) திறந்துவைத்தார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதுடன் நேற்று காலை வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தில் புதிய நூலக கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரிகள்,மற்றும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடவோ, அல்லது அரசியலில் ஈடுபடுவதற்கோ எந்தத தடையும் இல்லை. இருப்பினும், வன்முறை அல்லது நாசவேலைகளை மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாது.

அத்துடன் பல்கலைக்கழகங்களை வெறும் பட்டம் வழங்கும் அமைப்புகளாக அல்லாமல், ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்திருந்தார்.

குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் துணைவேந்தர் அ.அற்புதராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் சபை அமர்வுக்கு வந்த உறுப்பினர்!!

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது.

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த 11 ஆம் திகதி வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக ஒருவர் மரணமடைந்ததுடன், 5 பொலிஸார் காயமடைந்தனர். பொலிஸாரின் இரு உந்துருளிகள், கப் ரக வாகனம் ஒன்றும் சேதமானது.

இச்சம்பவம் தொடர்பில 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது அப்பகுதியில் மக்களுடன் நின்ற தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் பெறுவற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில் அவர் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் சபை அமர்வுக்காக நீதிமன்ற அனுமதி பெற்று பொலிஸார் மற்றும் சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் அமர்வுக்காக அழைத்து வரப்பட்டு அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். அமர்வு முடிந்ததும் மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துச் சென்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 

வவுனியாவில் டிப்பர் வாகனம் ஏறியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

வவுனியா நெடுங்கேணி துவரங்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் ஏறியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம் இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நேற்றயதினம் இரவு உயிரிழந்த குடும்பஸ்தர் தனது வீட்டின் முன்பாக உள்ள வீதியில் உறங்கிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அந்தபகுதியால் சென்ற டிப்பர் வாகனம் தவறுதலாக அவர்மீது ஏறியுள்ளது. இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாவடைந்துள்ளார். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த திலீபன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக சாவடைந்துள்ளார்.

டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி அவரது உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அழகு முதல் ஆரோக்கியம் வரை தினமும் ஒரு கப் ABC யூஸ்!!

ஆப்பிள் (A), பீட்ரூட் (B), கேரட் (C) ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும் ABC ஜூஸ், ஆரோக்கியம் நிறைந்த ஒரு பானமாகும். இதனை தினமும் ஒரு கப் ABC யூஸ் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்,

வைட்டமின் C நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.

உடல் நச்சு நீக்கம்:

இதில் உள்ள பீட்டாலைன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

எடை குறைப்பு:

குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக, வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

செரிமான ஆரோக்கியம்:

நார்ச்சத்து மற்றும் பெக்டின் போன்ற சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பிரச்சினைகளைக் குறைக்கும். சருமப் பொலிவு: வைட்டமின் A மற்றும் C போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் இருப்பதால், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும்.

வட் வரி – பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

வட்வரி மற்றும் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “IMFன் கொள்கைகளுக்கு இணங்கி கொண்டுள்ளதால், அதை மீறி செய்ய முடியாது. IMF அவ்வாறு குறைப்பதற்கு அனுமதி அளிக்காது.

நாங்கள் அரசாங்கத்தை எடுப்பதற்கு முன்னர் சர்வதேசத்தில் இலங்கையை வங்குரோத்தான நாடாகவே கருதினர். இலங்கையர்கள் என்றால் ஏலனமாகவே பார்த்தனர்.

அவ்வாறு இருந்த நாட்டை நாம் செலிப்பானதாக மாற்றினோம். அண்மையில் சுற்றுலா செல்வதற்கு உலகில் அழகான தீவாக இலங்கையை அறிவித்துள்ளனர்.

எமது நாட்டின் திரைசேறியை செலிப்பாக்கி 2028ஆம் ஆண்டு IMFஇல் இருந்து நாம் வெளியேறும் காலமாகும். ஆனால் 2027ஆம் ஆண்டு வெளியேறத் திட்டம் தீட்டியுள்ளோம்.

அப்போது வட்வரி மற்றும் பொருட்களின் விலையை குறைப்போம். நாம் படிப்படியாக அரசின் அநாவசிய செலவுகளை குறைத்து வருக்றோம். அதன் மூலம் மக்களுக்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

நடுவானில் பயணிகள் விமானத்திற்குள் பதற்றம்!!

மும்பையிலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர், மற்றொரு பயணியை தாக்கியுள்ள நிலையில் பயணத்தின் போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட குறித்த நபர், விமான பயணத்தின் பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஹுசைன் அகமது மஜும்தார் என்ற பயணி, ஜூலை 31ஆம் திகதி மும்பையிலிருந்து கொல்கத்தா வழியாக சில்ச்சாருக்குப் பயணம் செய்துள்ளார்.

அவர் சில்ச்சாரை அடைய வேண்டியிருந்ததாகவும், ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்றும், அதன் பிறகு அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமானத்தில் ஹுசைன் அகமது மஜும்தார் என்ற பயணியை ஒரு நபர் திடீரென அறைந்து தாக்கியுள்ளார்.

இதன்போது தாக்கப்பட்ட பயணி பீதியில் இருந்ததாகவும் தாக்குதலுக்கு பின்னர் அவருக்கு மூச்சு பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது விமான பணிப்பெண்கள் குறுக்கிட்டு தகராறை தடுத்துள்ளனர். இச்சம்பவம் பதிவான காணொளியும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அதேவேளை, சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்ட நபர் காணாமல் போயுள்ளதாகவும் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் தேக்கங்காட்டுப் பகுதியில் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வருகை தந்த பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது .

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதுண்ட விபத்தில் ஒருவர் காயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இளைஞனின் மர்ம மரணத்தால் பரபரப்பு : தீவிரமாகும் விசாரணை!!

ஒஹிய – உடவேரியவத்தை பகுதியில் நபர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச கிராம உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உடவேரியவத்தையில் உள்ள ஒஹிய விகாரைக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞர் ஆவார்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் ஹல்துமுல்ல மற்றும் பண்டாரவளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருளில் மூழ்கும் உலகம் : அரிய கிரகணம் பற்றி உண்மையை விளக்கிய நாசா!!

சமூக வலைதளங்களில், இன்று (02.08.2025) உலகம் 6 நிமிடங்கள் முழுமையான இருளில் மூழ்கும் என பரவும் தகவல் குறித்து நாசா மறுப்பு வெளியிட்டுள்ளது.

இது 100 ஆண்டுகளில் ஒருமுறை ஏற்படும் அரிய நிகழ்வாக சித்தரிக்கப்பட்டாலும், உண்மையில் இது தவறான தகவலாகும் எனவும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பின்னணி சூரிய கிரகணமாகும். ஆனால், அடுத்த சூரிய கிரகணம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி நிகழ இருக்கிறது – இது மிகச் சிறிய கிரகணமாகும்.

இதேவேளை, கடந்த 1991-ம் ஆண்டு பிறகு நிகழவுள்ள மிக நீண்ட சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடிகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது பூமி முழுவதும் இருளில் மூழ்கும் நிகழ்வாக மாறாது.

முக்கியமாக ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளில் மட்டுமே அதனை காண முடியும்.

இந்த கிரகணத்தின் போது முழு இருள் ஏற்படாமல், மாலை நேரத்துக்குச் சமமான மங்கலான வெளிச்சம் தான் இருக்கும் என்றும், இது பாதுகாப்பானதென்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதனால் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் அம்பாள் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪ அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎   ஒன்பதாம்   நாளான (27.07.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை  அபிசேகங்கள்‪ மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை,கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை எட்டுமுப்பது மணியளவில்   வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.

தொடர்ந்து  அம்பாள் உள்வீதி வலம்வந்து ஒன்பது மணியளவில் தேரில் ஆரோகணித்து ஒன்பதரை மணியளவில்  ஒருபுறம் ஆண்பக்த அடியார்களும்  மறுபுறம்  பெண் பக்த அடியார்களும்   வடம் பிடிக்க  திருவீதியுலா வந்தாள்.

சரியாக காலை பதினோரு மணியளவில் தேர் இருப்பிடத்தை அடைய அதன் பின் அர்ச்சனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து மதியம் ஒருமணியளவில் பச்சை சாத்தல் உற்சவமும் இடம்பெற்றது .

 

வடக்கு உட்பட பல மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் இரவு 11.00 மணி வரை அமுலில் உள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, மேற்படி மாகாணங்களிலும் மாவட்டத்திலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்குகின்றது.

திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளவும். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.

இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.

இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

துவிச்சக்கர வண்டிகள், உழவியந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.