யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதி விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதியின் மதவாச்சி வெலிஓயா சந்திக்கு அருகில் இடம்பறெ்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மதவாச்சி பகுதியை வசிப்பிடமாக கொண்ட 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நகர சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி – விசாரணையில் அதிர்ச்சித் தகவல்……!!

கண்டி, யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும் மகளையும் அதிகாலையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் சமையலறைக்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதியில் உள்ள ஒரு மரத்தடியின் அருகில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரை மாய்த்துக் கொண்ட நிலந்த தனது 13 வயது மகளையும் கொல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பின்னணி

தில்ருக்ஷி ஜெயலத் குமாரகே என்ற 45 வயதுடைய மனைவிக்கும் 17 வயதுடைய ஷிஹாரா அஷின்சானி ஹபுகோடா என்ற மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, அவர்கள் உறங்கிய பின்னர் கொலை செய்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்திற்கு முந்தைய நாள் குடும்பத்தின் இளைய மகள் பாடசாலை சுற்றுலா சென்றிருந்தார். அவர் இரவில் வந்திருந்தார். சம்பிக்க நிலந்த பாடசாலையில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

எனினும் அதற்குள், அவர் ஏற்கனவே தனது மனைவியையும் மற்ற மகளையும் கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தனது இளைய மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர், அவரை கொல்லும் நோக்கத்துடன் மாடிக்குச் சென்றிருந்தார், ஆனால் மகள் அந்த நேரத்தில் உறங்காததால் முடிவை கைவிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கண்டி தொழிலதிபர் ஒருவரிடமிருந்து வாங்கிய 5 மில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனதாலும், தொழிலதிபர் தொடர்ந்து அவரை மிரட்டியதாலும் கொலை மற்றும் உயிர்மாய்ப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசியலில் நுழைந்து சிறிது காலம் யட்டினுவர பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய சம்பிக்க நிலந்த, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

வட்டிக்கு பணம்

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்று யட்டினுவர பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவரானார்.

மார்ச் மாதம் தனது காரை விற்று, தான் வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலதிபருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து அவர் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தி வருவதாகவும், தொழிலதிபருக்கு ஒரு மூத்த பொலிஸ் அதிகாரியின் ஆதரவும் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதாக கண்டியிலுள்ள உயர் பொலிஸ் அதிகாரிக்கு வழங்க 5 லட்சம் ரூபாய் வழங்குமாறு சட்டத்தரணி கேட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் கடைசி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட 17 வயது மகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல எதிர்க்கட்சித் தலைவர் முயற்சித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் நெருங்கிய உறவினரான மினெல் ஹப்புகொட என்ற பெண் தகவல் வழங்கியுள்ளார். “உயிரிழந்தவர்கள் எனது சித்தியும் சித்தப்பாவும் அவரது மகளுமாகும்.

மிகவும் அன்பாக வாழ்ந்தனர். அவர்களுக்குள் எந்த விரிசலும் இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக, சித்தப்பா ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்.

அவர் ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பதை என் தந்தையும் அறிவார். ஆனால் இப்படி ஏதாவது நடக்கும் என்று நாங்கள் யாரும் நினைத்ததில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு, உடல் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிர் பிழைத்த 13 வயது மகள் தற்போது பேராதனை போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு ஆண் நண்பருடன் சென்ற தாய்!!

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் நண்பருடன் தாய் சென்ற சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது.

அதாவது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பருடன் பைக்கில் செல்வதற்காக குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

பின்னர், குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் அப்பெண்ணையும், ஆண் நண்பரையும் சில மணி நேரங்களில் கண்டுபிடித்தனர்.

பின்னர், பெண்ணின் கணவரை தொடர்பு கொண்ட பொலிஸார் குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தை உலுக்கிய இளைஞனின் ஆணவப் படுகொலை!!

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.டி ஊழியர் கவின்குமாரின் படுகொலைக்கு நடிகர்,எம்.பி கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த கவின்குமார் என்ற ஐ.டி ஊழியர், காதல் விவகாரத்தில் பாளையங்கோட்டையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, சுர்ஜித் என்ற இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும், கவின்குமாரின் உறவினர்கள் சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இச்சம்பவம் தொடர்பில் தனது கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர், “பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐ.டி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

வயலில் கிடைத்த வைரக்கல்லால் ஒரே நாளில் வாழ்க்கை மாற்றம் : பெண் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

வயலில் கிடைத்த வைரக்கல்லால் பெண் விவசாயி ஒருவர் ஒரே நாளில் அதிர்ஷ்டசாலியாக மாறியுள்ளார். இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், கர்நூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகவா சிந்தில் கொண்டா பகுதியில் சில தினங்களாகவே மழை பெய்தது.

இந்நிலையில். அப்பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு மின்னுகின்ற வகையில் ஒரு பொருள் கிடைத்தது.

அதனை கையில் எடுத்து பார்த்த போது வைரம் என தெரிய வந்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பலரும் அதனை வாங்குவதற்கு முன்வந்தனர்.

அப்போது அந்த பெண் விவசாயி வைரத்திற்கு ரூ.18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார். ஆனால், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ. 8 லட்சத்துக்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினர்.

இந்நிலையில், சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ. 13.50 லட்சத்திற்கு வைரக்கல்லை வாங்கி சென்றார். அங்கு சுற்றியுள்ள பகுதியில் வைரம் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இலங்கையில் சாரதிகளுக்கு கடுமையாக்கப்படும் சட்டம்!!

ஆசன பட்டி சட்டத்தை எதிர்காலத்தில் கடுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், சட்டத்தை பின்பற்றாத பஸ்களின் உரிமங்களை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆண்டுதோறும் 2,350 பேர் விபத்துகளில் உயிரிழப்பதாகவும், 6,000 பேர் படுகாயமடைவதாகவும் தெரிவித்த அமைச்சர், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான வீதி பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

2011 முதல் அமுலில் உள்ள ஆசன பட்டி சட்டம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாகவும், பஸ்களில் ஆசன பட்டி இருந்தும் பயணிகள் அதனை பயன்படுத்துவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தை மதிக்காத பஸ்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக இலங்கையின் மூத்த வழக்கறிஞர் திலங்கா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புள்ளியியல் பணியகத்தின் தகவலுக்கமைய, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சமூகத்தின் விவாகரத்து விகிதம் சுமார் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு வீட்டு வன்முறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்திலிருந்து எழும் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால், அவுஸ்திரேலிய சட்டத்தின்படி, அதிக தேவை உள்ள நபருக்கு அதிக பங்களிப்பு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Dependent விசாவில் வரும் மாணவர்களின் விவாகரத்தில் எழும் விசா பிரச்சினைகள் ஏற்பட்டால், பெரும்பாலும் Dependent நீக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் வாழ எந்த தகுதியும் இல்லாத ஒரு Dependent விசா பெறுவது மிகவும் கடினம் என வழக்கறிஞர் திலங்கா பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தொழில்முறை தகுதிகள் இருந்தால், விசா கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார்.

விவாகரத்து மகிழ்ச்சியை தரும் முடிவு அல்ல என்பதால், தீர்வு இல்லையென்றால் மட்டுமே விவாகரத்தை நாட வேண்டும் என வழக்கறிஞர் கூறியுள்ளார்.

நுவரெலியாவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!!

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து, நேற்றையதினம்(29.07.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஊவாக்கலையிலிருந்து மெரயா பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் இந்தச் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குழந்தைகள் மீது துஷ்பிரயோகம் : இந்திய வம்சாவளி துணை விமானி கைது!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ருஸ்டம் பகவாகர் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பகவாகர், மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவிற்கு வந்த டெல்டா போயிங் விமானத்தின் விமானி அறையில் இருந்து, விமானம் தரையிறங்கிய பின்னர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க பொலிஸார் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றச்சாட்டு தொடர்பான தடையுத்தரமான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுவதன் அடிப்படையில், அதிகாரிகள் நேரடியாக விமானத்துக்குள் சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விசாரணை மற்றும் கைது சம்பவம் குறித்து, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பகவாகர் மீது தொடரும் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலையளிக்கக்கூடியவை. அவர் தற்போது பணியில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் விமானியர்கள், விமானப்பயணிகள் மற்றும் விமானப் பாதுகாப்பு தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தவறான முடிவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உயிரை மாய்த்துக்கொள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

வாழ்க்கையில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு உயிரை மாய்த்துக்கொள்வது அல்ல. எனவே, உயிரை மாய்த்துக்கொள்ள நினைப்பவர்கள் உடனடியாக மனநல வைத்தியர்களை நாடுவது அவசியமாகும்.

மன ரீதியாக பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயலும் நபர்கள் தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

வட்ஸ்அப் தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

வாட்ஸ்அப் மென்பொருள் மூலம் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி, பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது தொடர்பான மோசடி பரிவர்த்தனைகள் குறித்து அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாகி வருவதாக குற்றப் புலனாய்வுத் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், இந்த மோசடி செய்பவர்கள் பயனரை ஏமாற்றி அவர்களின் வாட்ஸ்அப் OTP எண்ணைப் பெறுகிறார்கள்.

பின்னர் மோசடி செய்பவர்கள் அந்தக் கணக்கைக் கைப்பற்றி, பயனரின் கணக்கில் உள்ளவர்களுக்கு போலி செய்திகளை அனுப்பி பணத்தை மோசடி செய்கின்றமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கள் ஆன்லைன் கணக்குகளின் OTP எண்களை வேறு யாருக்கும் வழங்க வேண்டாம் என்று பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

ஜப்பானை தாக்கிய சுனாமி : பலித்தது பாபா வாங்காவின் கணிப்பு!!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய மங்காவில் செய்யப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கணிப்பு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜப்பானின் சில பகுதிகளை அடைந்த சுனாமி அலைகளைத் தூண்டியது, புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படும் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி ஜூலை 2025 இல் ஒரு பேரழிவு

குறித்து எச்சரித்ததாக மக்கள் சுட்டிக்காட்டிய சில வாரங்களுக்குப் பிறகு இன்று ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளமை அவரது கணிப்பை உண்மையாக்கியுள்ளது.

பூகம்பம் பற்றிய செய்தி பரவியதும், 1999 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட தட்சுகியின் மங்கா வதாஷி கா மிதா மிராய் (நான் பார்த்த எதிர்காலம்) மீது கவனம் திரும்பியது.

இது கடந்த கால பேரழிவுகளை துல்லியமாக கணித்துள்ளதாக நம்புகிறார்கள். இளவரசி டயானா மற்றும் ஃப்ரெடி மெர்குரியின் இறப்புகள்,

கோவிட்-19 வெடிப்பு மற்றும் மிகவும் பிரபலமாக, மார்ச் 2011 நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற நிஜ வாழ்க்கை நிகழ்வுகளைக் குறிப்பிடுவதற்காக இந்த மங்கா அறியப்படுகிறது.

இந்த ஆண்டு, தட்சுகியின் மங்காவின் பல ரசிகர்கள் ஜூலை 2025 இல் குறிப்பிடப்பட்ட ஒரு எச்சரிக்கையை அறிவித்திருந்தனர், ஜூலை 5 அன்று பெரிய அளவில் ஏதாவது நடக்கக்கூடும் என்று பலர் ஊகித்தனர்.

எனினும் எந்த சம்பவமும் இல்லாமல் தேதி வந்து போனதால், பெரும்பாலான மக்கள் அந்த வதந்தியை நிராகரித்துவிட்டு நகர்ந்தனர்.

ஆனால் இப்போது, புதன்கிழமை ஏற்பட்ட வலுவான பூகம்பம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமி எச்சரிக்கைகளுக்குப் பிறகு, மங்காவைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

து தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்லரும் பதிவிட்டு வரும் நிலையில் ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில்,

“ரஷ்யாவின் கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பான் கடற்கரை முழுவதும் 3 அடி சுனாமி எச்சரிக்கை,

2011 நிலநடுக்கத்தை முன்னறிவித்த ஜப்பானிய மங்கா முன்னறிவிப்பாளர் ரியோ தட்சுகியின் எதிர்காலம் நான் பார்த்தது, அவர் அதை மீண்டும் செய்தார் பாதுகாப்பாக இருங்கள், என பதிவிட்டுள்ளார்.

நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி : நால்வர் படுகாயம்!!

ரம்புக்கன – ஹதரலியத்த வீதியின் லினியா ஹெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக பாரத்தை ஏற்றிச் சென்ற லொறி, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5,000 அடி உயரத்தில் பறந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு!!

போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று கடந்த வாரம் விண்ணில் பறந்தபோது மிக முக்கியமான தொழிநுட்ப கோளாறால் கடுமையான பதட்டத்திற்குள்ளாகியுள்ளது.

யுனைடட் ஏர்லைன்ஸ் இயக்கும் UA108 என்ற விமானம் ஜூலை 25ஆம் திகதி வோஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்திலிருந்து முனிக் நோக்கி புறப்பட்டபோது, இடது எஞ்சின் செயலிழந்துள்ளது.

இதையடுத்து விமானக் குழுவினர் “MAYDAY” என அவசர அழைப்பு விடுத்தனர். விமானம் 5,000 அடி உயரத்துக்குச் சென்றவுடன் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ATC) ஒருங்கிணைந்து பாதுகாப்பான தரையிறக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FlightAware தரவுகளின்படி, இந்த விமானம் 2 மணி 38 நிமிடங்கள் வரை விண்ணில் இருந்தது. வோஷிங்டன் வடமேற்கே ஒரு சுற்றுப் பாதையில் (holding pattern) பறந்தபடியே பாதுகாப்பாக எரிபொருள் வெளியிடப்பட்டது.

இந்தகாலப்பகுதியில், விமானிகள் 6,000 அடி உயரத்தில் எரிபொருள் வெளியிட அனுமதி கோரி ATCயிடம் வேண்டினர். விமானத்தின் எடையை சமநிலைப்படுத்த இதன் மூலம் உதவியது.

மற்ற விமான போக்குவரத்துகளிடமிருந்து பாதுகாப்பாகப் பிரித்து எரிபொருள் வெளியிட கட்டுப்பாட்டு அதிகாரிகள் வழிகாட்டினர். எரிபொருள் வெளியீடு முடிந்தவுடன், விமானிகள் Runway 19 Centre வழியாக Instrument Landing System (ILS) மூலம் தரையிறங்க அனுமதி கோரியுள்ளனர்.

விமானம் தரையிறங்கியதும், இடது எஞ்சின் செயலிழந்ததால் அது சுயமாக நகர முடியாமல் போயுள்ளதால் இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்த விமானம் வோஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்தில் நிலைபெற்று நிற்கின்றது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. எஞ்சின் கோளாறு குறித்து யுனைடட் ஏர்லைன்ஸ் மற்றும் தொடர்புடைய விமானபோக்குவரத்து அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்துகின்றனர்.

உரிய நேரத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 12ம் திகதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை என்ஜின் விமானம் விபத்தில் சிக்கியது.

இதைத்தொடர்ந்து போயிங் விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை தாக்கி வரும் சுனாமி அலைகள் : பல பகுதிகளில் மின்தடை!!

ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் நகரத்தை நான்காவது சுனாமி அலை அடைந்துள்ளது.

இதன்போது, மின் இணைப்பு சேதமடைந்ததை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதற்கு முன்னர் ஏற்பட்ட மூன்றாவது அலை மிகவும் கடுமையானதாக இருந்தது எனவும், இது நிறைய சேதத்தை ஏற்படுத்தியது எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த நான்காவது அலை பலவீனமானது தான் எனவும் அதனால் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாவது அலை, துறைமுக உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதுடன் முழு சிறிய கடற்படையும் கடலுக்குள் இழுக்கப்பட்டது, அது இப்போது ஜலசந்தியில் இருந்த சில கப்பல்கள் கரை ஒதுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்வதாகவும், கம்சட்கா அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, செவெரோ-குரில்ஸ்கில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு, சுனாமி அபாய மண்டலத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ரஷ்யாவின் குறித்த பிரதேசங்களில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் விளைவுகள் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்று கடும் வெப்பமான காலநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் பல பகுதிகளில் இன்று (30.07.2025) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை இன்றைய தினத்திற்கு செல்லுபடியாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.