5,000 அடி உயரத்தில் பறந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு!!

போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று கடந்த வாரம் விண்ணில் பறந்தபோது மிக முக்கியமான தொழிநுட்ப கோளாறால் கடுமையான பதட்டத்திற்குள்ளாகியுள்ளது.

யுனைடட் ஏர்லைன்ஸ் இயக்கும் UA108 என்ற விமானம் ஜூலை 25ஆம் திகதி வோஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்திலிருந்து முனிக் நோக்கி புறப்பட்டபோது, இடது எஞ்சின் செயலிழந்துள்ளது.

இதையடுத்து விமானக் குழுவினர் “MAYDAY” என அவசர அழைப்பு விடுத்தனர். விமானம் 5,000 அடி உயரத்துக்குச் சென்றவுடன் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ATC) ஒருங்கிணைந்து பாதுகாப்பான தரையிறக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FlightAware தரவுகளின்படி, இந்த விமானம் 2 மணி 38 நிமிடங்கள் வரை விண்ணில் இருந்தது. வோஷிங்டன் வடமேற்கே ஒரு சுற்றுப் பாதையில் (holding pattern) பறந்தபடியே பாதுகாப்பாக எரிபொருள் வெளியிடப்பட்டது.

இந்தகாலப்பகுதியில், விமானிகள் 6,000 அடி உயரத்தில் எரிபொருள் வெளியிட அனுமதி கோரி ATCயிடம் வேண்டினர். விமானத்தின் எடையை சமநிலைப்படுத்த இதன் மூலம் உதவியது.

மற்ற விமான போக்குவரத்துகளிடமிருந்து பாதுகாப்பாகப் பிரித்து எரிபொருள் வெளியிட கட்டுப்பாட்டு அதிகாரிகள் வழிகாட்டினர். எரிபொருள் வெளியீடு முடிந்தவுடன், விமானிகள் Runway 19 Centre வழியாக Instrument Landing System (ILS) மூலம் தரையிறங்க அனுமதி கோரியுள்ளனர்.

விமானம் தரையிறங்கியதும், இடது எஞ்சின் செயலிழந்ததால் அது சுயமாக நகர முடியாமல் போயுள்ளதால் இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்த விமானம் வோஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்தில் நிலைபெற்று நிற்கின்றது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. எஞ்சின் கோளாறு குறித்து யுனைடட் ஏர்லைன்ஸ் மற்றும் தொடர்புடைய விமானபோக்குவரத்து அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்துகின்றனர்.

உரிய நேரத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 12ம் திகதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை என்ஜின் விமானம் விபத்தில் சிக்கியது.

இதைத்தொடர்ந்து போயிங் விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை தாக்கி வரும் சுனாமி அலைகள் : பல பகுதிகளில் மின்தடை!!

ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் நகரத்தை நான்காவது சுனாமி அலை அடைந்துள்ளது.

இதன்போது, மின் இணைப்பு சேதமடைந்ததை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதற்கு முன்னர் ஏற்பட்ட மூன்றாவது அலை மிகவும் கடுமையானதாக இருந்தது எனவும், இது நிறைய சேதத்தை ஏற்படுத்தியது எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த நான்காவது அலை பலவீனமானது தான் எனவும் அதனால் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாவது அலை, துறைமுக உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதுடன் முழு சிறிய கடற்படையும் கடலுக்குள் இழுக்கப்பட்டது, அது இப்போது ஜலசந்தியில் இருந்த சில கப்பல்கள் கரை ஒதுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்வதாகவும், கம்சட்கா அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, செவெரோ-குரில்ஸ்கில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு, சுனாமி அபாய மண்டலத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ரஷ்யாவின் குறித்த பிரதேசங்களில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் விளைவுகள் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்று கடும் வெப்பமான காலநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் பல பகுதிகளில் இன்று (30.07.2025) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை இன்றைய தினத்திற்கு செல்லுபடியாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரிஅம்பாள் சப்பரத் திருவிழா!( வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வர் ஆலய அம்பாள் மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா 26.07.2025 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாலை ஐந்து  மணிக்கு யாகபூசை கும்பபூசை மூலஸ்தான பூசையை தொடர்ந்து ஆறுமணியளவில்  பாலமுருகன் குழுவினரின் விசேட தவில் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றது  அதனை தொடர்ந்து தொடர்ந்து எட்டு  மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. தொடர்ந்து மாலையில்ஒன்பது மணியளில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் அழகிய முத்து சப்பரத்தில் வீதிஉலா வந்தாள்.

 

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தும் , ஹயஸ் வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது தனியார் பேருந்து வீதியைவிட்டு விலகி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது. விபத்தில் ஹயஸ் வாகனம் கடும் சேதமடைத்துள்ள நிலையில், இரு வாகனங்களின் சாரதிகளும் கடும் காயமடைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை நல்லூர் கந்தன் கொடியேற்ற நாளில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவரும் நிலையில் , இந்த விபத்து சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் வாகனத்தை செலுத்திய சாரதி : நால்வர் காயம்!!

ஹொரணை – இலிம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (28.07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது கெப் வாகனத்தில் பயணித்த யுவதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செத்தியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞன் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சோகம்!!

யாழில் பூப்புனித நீராட்டுவிழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (27.07) இடம்பெற்றுள்ளது.

பண்டத்தரிப்பு – பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய அன்னராசா அலெக்ஸன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மல்லாகம் – பயிரிட்டால் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழா கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வுக்கு சென்று அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்த உயிரிழந்த நபர் ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கும்போது எழுந்து சென்று அந்த பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதன்போது திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டன. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை தெல்லிப்பழை பொலிஸார் நெறிப்படுத்தினர். மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகமே இருளில் மூழ்கப் போகும் நாள் : 21ம் நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம்!!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் திகதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2027ஆம் ஆண்டு நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின்போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வந்து மிகச் சரியாக 6 நிமிடங்கள் 23 வினாடிகளுக்கு மறைத்தபடி நிற்குமாம்.

இதுதான், உலகிலேயே மிக நீண்ட நேர சூரிய கிரகணமாகக் கருதப்படுகிறது. இது வழக்கமான ஒரு சூரிய கிரகணமாக இருக்காது. இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமாக இருக்கும்.

அதாவது, இரு வெவ்வேறு இடங்களில் சுற்றுவட்டப் பாதைகளில் பயணிக்கும் பூமியும், நிலவும், சூரியனின் நேர்க்கோட்டில் வரும். பூமிக்கு இடையே வரும் நிலவு, சூரியனை முழுமையாக மறைக்கிறது.

இது அதிக மக்கள் தொகை நிறைந்த நாடுகளில் தெரியும். இதனை ஏராளமானோர் நேரில் காணப்போகிறார்கள். ஆனால் என்ன? 2025 அல்லது 26ஆம் ஆண்டில் ஆண்டில் நிகழப்போவதில்லை.

சமூக வலைத்தளங்களில் வெளியாவதைப் போல வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி எந்த கிரகணமும் நிகழப்போவதில்லையாம். ஆகஸ்ட் 2ஆம் திகதி உலகமே இருளில் மூழ்கப் போவதாக நாசா அறிவித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் போலியானவை.

அன்றைய நாளில் உலகம் இருளில் எல்லாம் மூழ்காது. அதனை காண 2027 வரை காத்திருக்க வேண்டும். பலரும் அந்தநாளை தங்களது காலாண்டில் குறித்து வைத்துக் கொண்டு, அதனை நேரில் காண உலக நாடுகளுக்குப் பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.

யாழில் டிக்டொக் காதலனுக்காக 48 லட்சம் பெறுமதியான நகைகளை திருடிய யுவதி கைது!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த டிக்டொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை திருடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் டிக்டொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார்.

குறித்த இளைஞனுடன் டிக் டொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி, அவரை காதலித்து வந்துள்ளார்.

அந்நிலையில் தனது காதலனுக்கு, அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும், தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை திருடி, அதனை காதலனிடம் கொடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

யுவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை திருடிய யுவதி, அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை திருடியமைக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் – அவரது மனைவி மற்றும் குழந்தை சடலங்களாக மீட்பு!!

கண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டி இன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய அரசியல்வாதி எனவும் அவரது 44 வயதுடைய மனைவி மற்றும் 17 வயதுடைய மகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். மேலும் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்கள் வீட்டின் அறைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் வாகனங்கள் மீது பவுசர் மோதியமையால் பரபரப்பு : ஒருவர் பலி : ஐவர் படுகாயம்!!

கொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு பவுசர் பல வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பவுசரின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதீத கடன் சுமையால் ஏலத்திற்கு சென்ற வீடு : தம்பதியின் விபரீத முடிவு!!

குருணாகல் பிங்கிரிய – வீரபொகுன பகுதியில் ஒரு தம்பதியினர் கடன் சுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீடு காணிகள் அடமானத்தில் வைத்து கடன் பெற்ற நிலையில் அவை ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

உறவினர்கள், நண்பர்களிடம் பெற்ற கடனையும் அடைக்க முடியாமல் போயுள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பதியினர் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

வீரபொகுன-இஹல கொங்கந்தவைச் சேர்ந்த சுசந்த சிசிர குமார (42) என்ற கணவன் மற்றும் நிர்மலா சாந்திலதா தமயந்தி (40) என்ற மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து விஷமருந்தி உயிரை மாய்த்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் போது, இருவரும் ஏற்கனவே உயிரை மாய்க்க முயன்றதாகவும், அவர்களின் சகோதரி கடனில் ஒரு பகுதியை அடைத்து அவர்களை ஆபத்திலிருந்து விடுவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய பெண் வர்த்தகர் திலினி பிரியமாலி கைது!!

சர்ச்சைக்குரிய பெண் வர்த்தகர் திலினி பிரியமாலியை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். ஹோமாகம நீதிமன்றத்தில் ஒரு உத்தியோகத்தரின் பணிகளைத் தடுப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஹோமாகம நீதவான், பொலிஸாருக்கு முன்னதாகவே உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், திலினி பிரியமாலியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

திலினி பிரியமாலி இன்று காலை ஹோமாகம பொலிஸார் மத்தியில் நேரில் வந்தபோது, அவர்கள் உடனடியாக கைது செய்ததாக பொலிஸார் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி ஏற்கனவே திலினி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பொரளையில் விபத்து – ஒருவர் பலி, ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம்!!

கொழும்பு, பொரளை, கனத்த சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாரம் தூக்கியின் பிரேக்குகள் சரியாக செயல்படாமையினால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பல மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரைணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் : கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்!!

மாத்தளையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பலாபத்வல பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இரு தரப்பினரிடையே நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாத்தளை, பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் வீடொன்றுக்கு சென்ற நிலையில், அந்த வீட்டுக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டில் இருந்த ஒருவர் அருகிலுள்ள கூர்மையான ஆயுதத்தால் ஒருவரின் கழுத்தில் தாக்கியதுடன், மற்றொரு நபரை வெட்டி காயப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பின் சில பகுதிகளில் நடக்கும் அமானுஷ்ய சக்திகள் : அச்சத்தில் வாழும் மக்கள்!!

கொழும்பின் புறநகர் பகுதிகளான கொஸ்கம, அலுபோதல மற்றும் நிசல உயன பகுதிகளில் உள்ள வீடுகள் மீது மர்மமான முறையில் கல் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

சுமார் மூன்று மாதங்களாக இந்த கல் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இரவில் மட்டுமே நடந்த இந்த தாக்குதல்கள், தற்போது பகலிலும் நடப்பதாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பல வீடுகளின் கூரைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் தங்கள் வீடுகளில் வசிக்கக் கூட அச்சமாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கொஸ்கம பொலிஸாருக்கு தகவல் அளித்த பிறகு, அதன் அதிகாரிகள் அவ்வப்போது இங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலை காரணமாக சிலர் அப்பகுதியை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.