யாழில் முகமூடி அணிந்த குழு அட்டகாசம் : வாகனங்களுக்கு தீவைப்பு!!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் இன்று (13) அதிகாலை முகமூடி அணிந்த நான்கு பேர் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

உந்துருளியில் வந்த குழு, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி அதற்கு தீ வைத்தனர்.

அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளியையும் எடுத்து வீட்டிலிருந்து எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதி, மாசியப்பிட்டி சந்தியில் வீதியின் நடுவில் தீ வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாகத் தடை!!

நாட்டில் அஎதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படுமென்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாதெனவும் இலவசமாக வழங்கப்படாத பொலித்தீன் கொள்கலன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும்

தொகையைப் பற்றுச்சீட்டில் குறிப்பிட வேண்டுமெனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

அதேவேளை வட மாகாணத்தில் லஞ்ச் சீட் பதிலாக வாழை இலைகளைப் பயன்படுத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை நேரம் நீடிப்பு : கல்வி நேர இழப்பை ஈடுசெய்ய நோக்கம்!!

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து,

நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முதற்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும்,

எதிர்காலத்தில் மற்றொரு சுற்று கலந்துரையாடல் நடைபெறும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலகா கலுவேவா குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் “இது குறித்த தேவையான தகவல்களை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு தற்போது நிலைமையை மீளாய்வு செய்து வருகின்றது.

புதிய பாடசாலை அட்டவணை அமுலுக்கு வந்தவுடன் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பான தேவைகளை நாங்கள் தெரிவிப்போம்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி அதற்கேற்ப பதிலளிக்கும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளது.

திருத்தப்பட்ட அட்டவணையானது நீண்ட 50 நிமிட பாடவேளைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், கொவிட்-19 தொற்றுநோய் போன்ற முந்தைய தடங்கல்களால் இழந்த கல்வி நேரத்தை ஈடுசெய்வதன் மூலமும் கற்றல் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்!!

வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையின் நோக்கம் சாதாரண மக்களுக்கு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும் என்று கூறுகின்றனர்.

ஜனவரி 28 ஆம் திகதி அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியதிலிருந்து ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 918 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகின்றது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் 249 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் தற்போது வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டின் இறுதியில் நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து இலங்கையர்கள் பெற்ற கடன்களில் 82.6 சதவீதம் வாகனம் மற்றும் தங்கக் கடன்கள் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாகன இறக்குமதி முழுமையாக மீண்டும் தொடங்கிய ஜனவரி 28, 2025 முதல் செப்டம்பர் வரை 220,538 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

வேலை தருவதாக ஹோட்டலில் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் கைது!!

குவைத்தில் வேலை தருவதாக கூறி நேர்காணல் நடத்திக் கொண்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் நகரில் உள்ள ஹோட்டலில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரிடம் 03 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வேலை விண்ணப்ப படிவங்கள் மற்றும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் வெளிநாட்டு வேலைகளை வழங்க பதிவு செய்யப்பட்ட உரிமம் இல்லை என சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, டுபாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை தருவதாக வாக்குறுதி அளித்து 8 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவரையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மஹார நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இணைய மோசடி சம்பவங்கள் குறித்து வெளியான எச்சரிக்கை!!

இணைய மோசடி தொடர்பாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வெளிநாடுகளில் பங்குகளில் முதலீடு செய்வதற்காகப் பெரிய தொகைகளை வழங்குவதாக வாக்குறுதி வழங்கிய இணைய மோசடி தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் பதிவாகியுள்ளன.

இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையத்தின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த இணைய மோசடிகளின் ஊடக 10 இலட்சம் முதல் 3 கோடி வரையிலான பணம் இழக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிக அவதானம் செலுத்துவதுடன், ஏதேனும் வகையில் முதலீடுகள் குறித்த தகவல்கள் கிடைத்தால் அதன் உண்மைத் தன்மைகளை ஆராயுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பங்குகளில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

இதனைத் தாண்டி வெளிநாடுகளில் முதலீடுகள் செய்வதாகக் கூறி ஏதேனும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்தால் அதனை ஆராயுமாறும் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், எந்தக் காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்கள், வங்கித் தகவல்கள் உள்ளிட்ட எதனையும் யாருக்கும் வழங்க வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மையத்தின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

மருமகனை திட்டமிட்டு கொலை செய்த மாமனார்!!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய ராமச்சந்திரன். இவர் பால் கரவை தொழில் செய்து வருகிறார்.

வழக்கம் போல கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதலை ஆர்த்தி வீட்டில் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ராமச்சந்திரன் மீது சந்திரன் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். திருமணமாகி ஐந்து மாதங்கள் கடந்ததால் பிரச்சனை இன்றி காதல் தம்பதிகள் சந்தோஷமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில் வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தபோது சந்திரன் அவரை வழிமறித்தார்.

மேலும் சந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கை துண்டான நிலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பாலத்திலேயே சரிந்த சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

ராமச்சந்திரனின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார்,

இன்ஸ்பெக்டர் சந்திரபிரபா ஆகியோர் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மருமகனை படுகொலை செய்த மாமனார் சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காதல் திருமண தகராறில் ஐந்து மாதங்கள் காத்திருந்து நடத்தப்பட்ட படுகொலை தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு உள்ளதா? என தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண்ணை கொடூரமாக அடித்தே கொன்ற கணவன்!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்த வைஷ்ணவி (26). கணவர் தீக் ஷித் (26) கொடூரமாக தாக்கியதில் வைஷ்ணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக் ஷித்துடன் வைஷ்ணவிக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சம்பவத்தன்று இரவு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி வைஷ்ணவியை மாங்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீக் ஷித் அழைத்து சென்றார்.

அங்கு மருத்துவர்கள் வைஷ்ணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், வைஷ்ணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

வைஷ்ணவியின் உடலில் காயங்களும் இருந்ததாக மருத்துவக் கண்ணோட்டத்தில் தெரிந்துள்ளது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீசார் தீக் ஷித்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் குடும்ப தகராறின் போது அவர் வைஷ்ணவியை அடித்து கொன்றது தெரிய வந்தது. இது அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சொல்லிக் கொடுப்பது எதுவுமே புரியவில்லை : கல்லூரி மாணவி விபரீத முடிவு!!

தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த கிருபாகர் என்பவரின் மகள் கீர்த்தனா (19), ஐதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி வந்த அவர், கற்பிக்கும் பாடங்கள் புரியவில்லை என அடிக்கடி பெற்றோரிடம் வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனஅழுத்தத்துடன் இருந்து வந்த கீர்த்தனாவை பெற்றோர், கல்லூரி விடுமுறையில் வீட்டிற்கு வரவழைத்து, வேறு கல்லூரியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தனா, நேற்று திடீரென தன் அறைக்குள் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் கதவை உடைத்து பார்த்த போது, அவர் தூக்கிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தகவலளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் வயதில் கல்வி அழுத்தத்தால் உயிரிழந்த கீர்த்தனாவின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு காணாத உச்சம் : இலங்கையில் தங்க விற்பனை 60% சரிவு!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சந்தையிலும் தங்கம் அதி உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 15,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வால், தங்க விற்பனை சுமார் 60% குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு வாரத்திற்கு முன்பு 24 காரட் தங்கத்தின் விலை 303,000 ரூபாயாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

நேற்று (09) காலை 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் தங்கத்தின் விலை 328,000 ரூபாயாக இருந்தது என்றும், ஆனால் நேற்று (09) பிற்பகல் 330,000 ரூபாயாக
அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தங்க பிஸ்கட்களை இறக்குமதி செய்யும்போது 28% வரி செலுத்த வேண்டும் என்றும், மற்ற வரிகளுடன் சேர்த்து 50% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக நகை விற்பனையில் ஈடுபடும் யாரும் தங்க பிஸ்கட்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 5,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (11) காலை கொழும்பு ஹெட்டியார் தெரு தங்க சந்தையில்,

ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை நேற்று (10) ரூ. 305,300 என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 310,000 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நேற்று (10) ரூ. 330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ. 335,000 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்ததற்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையே காரணம் என்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளார்.

லண்டனுக்கு புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம் மூச்சுத் திணறலில் அவதியுற்ற பயணிகள்!!

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

142 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் A320 என்ற குறித்த விமானம் நடுவானில் சென்றபோது விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணித்த 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

யாழில் சோகம் : வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று(10.10.2025) உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சை விலை!!

இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 – 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ எலுமிச்சை விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் எலுமிச்சைப்பழத்தின் சில்லறை விலை இந்த அளவுக்கு உயர்ந்ததில்லை என்றும், இந்த விலை உயர்வு தங்களை ஆச்சரியப்படுத்துவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு எலுமிச்சை பழத்தினை வாங்க நுகர்வோர் ரூ.50-60 செலவிட வேண்டியுள்ளது என்றும், விலை உயர்வு காரணமாக சிலர் இதனை உட்கொள்வதினை தவிர்ப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்போது தேவையான அளவில் விளைச்சல் இன்மையே இந்த விலை உயர்விற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

யாழில் தவறான முடிவெடுத்து உயரிழந்த குடும்பஸ்தர்!!

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் இளம் தம்பதியரும் இளம் பெண்ணும் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(10.10.2025) இடம்பெற்ற நிலையில், 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனையின் போது மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.