அமெரிக்காவில் நடைபெற்ற உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையர் சாதனை!!

அமெரிக்காவில் நடைபெற்ற ( Olympia Amateur Las Vegas – 2025 ) உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய ஜகத் குணசேகர போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர ( Olympia Amateur Las Vegas – 2025 ) போட்டியில் சீனியர் ஓபன் என்ற 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அமைந்துள்ள நெவாடா ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 28 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர குவைத்தில் உள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இந் நிலையில், உடற்கட்டமைப்பு பயிற்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி இந்த போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

டிஜிட்டல் கண் திரிபு அதிகரிப்பு : நிபுணர்கள் வழங்கும் பரிந்துரைகள்!!

20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடையே கணினி பார்வை நோய்க்குறி (CVS) அல்லது டிஜிட்டல் கண் திரிபு அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

COVID-19 தொற்றுநோய் காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்து ஒன்லைனில் படிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் இந்த நிலை கணிசமாக பரவியுள்ளது.

இதற்கு பிரதான காரணம் கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய டிஜிட்டல் சாதனங்களை நீண்டகாலமாக பயன்படுத்துவதே என தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கோயா சத்திரசிகிச்சை நிபுணர் குசும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தேசிய கண் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார். கண் அசௌகரியம், மங்கலான பார்வை, தலைவலி, சோர்வு மற்றும் வறண்ட கண்கள் ஆகியவை அறிகுறிகளாகும்.

மோசமான வெளிச்சம், டிஜிட்டல் திரைகளிலிருந்து வரும் கூச்சம் அல்லது சரிசெய்யப்படாத பார்வை பிரச்சினைகள் ஆகியவற்றாலும் இந்த நிலை மோசமடையக்கூடும்.

பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் பல சிறுவர்கள் டிஜிட்டல் திரைகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று மருத்துவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையைத் தடுக்க வழக்கமான கண் பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கணிணி காட்சி திரையை (monitor) சரியாக வைப்பது, பிரகாசத்தைக் குறைப்பது, திரையின் பிரகாசத்தை சரிசெய்வது மற்றும் திரையை கண்களிலிருந்து கணிசமான தூரத்தில் வைத்திருப்பது ஆகியவற்றை அறிவுறுத்துகிறார்கள்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்ப்பது, அடிக்கடி கண் சிமிட்டுவது, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் சரியான தோரணையைப் பராமரிப்பது ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

கணினிகளுக்கான சிறப்பு கண்ணாடிகளை அணிவது மற்றும் வறட்சியைத் தடுக்க சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதை கண் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

திடீரென கழன்று ஓடிய சொகுசு பேருந்தின் சில்லுகள் : பயணிகள் அதிர்ச்சி!!

சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டியின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த இரு சில்லுகளே அச்சாணியை விட்டு விலகி வெளியே வந்துள்ளது.

அதனை அவதானித்து உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் எவ்விதமான ஆபத்துக்களும் ஏற்படவில்லை.

கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் சில்லுகள் இரண்டும் வெளியே வந்தமை, புசல்லாவை பகுதியில் வைத்து அவதானிக்கப்பட்டு, வண்டி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்ட நிலையில் சம்பவத்தால் பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கார் மீது மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து!!

காலி வீதியில் இரத்மலானை பகுதியில் உள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் மீது மரக்கிளை முறிசந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (08.10.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த கார் மீதே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.

எவ்வாறிருப்பினும் விபத்தின் போது எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கிய 5 வயது சிறுவன் உயிரிழப்பு!!

கொழும்பு நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று (08.10.2025) மாலை இந்த விபத்து நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இந்த சிறுவன் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவுடன் நீச்சல் பயிற்யாளரின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான்.

இதன்போது, சிறுவன் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். மிரிஹான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 பிரதான வீதியின் உளங்குளம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (0810.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ரிவித்தனர். அநுராதபுரம் பகுதியில் இருந்து மரதன்கடவல பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் மரதன்கடவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

24 வயதுடைய மரதன்கடவல பகுதியை வசிப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். இளைஞனின் சடலம் தற்சமயம் மரதன்கடவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா உட்பட 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டில் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது .

இன்று இரவு 11.00 மணி வரை அமுலிலிருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு, வவுனியா, மாத்தளை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென தெரிவித்துள்ளது.

எனவே மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை : வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

சர்வதேச சந்தையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதுடன் , ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரைத் தாண்டி, புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

இந்த அதிரடி உயர்வுக்கு பல உலகளாவிய காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு முடக்கம், டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்டவை தங்க விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.

இதன் விளைவாக, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்க விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உலக சந்தைகளில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

“இந்த அரசியல் பிரச்சினைகள் நீண்ட காலம் நீடிக்காது எனவும், அடுத்த 3 முதல் 4 வாரங்களில் சூழ்நிலை சீராகும் பட்சத்தில், தங்க விலையின் தற்போதைய உயர்வு சரிவைச் சந்திக்கலாம்” என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

அதாவது தற்போது காணப்படும் இந்த உச்ச நிலை நீண்ட காலம் நீடிக்காது எனவும், தங்கம் அடுத்த சில நாட்களில் 2 முதல் 3 சதவீதம் வரை சரியும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் தற்போது வரலாற்று உச்சத்தை அடைந்தாலும், இது நிலையானது அல்ல. வரவிருக்கும் வாரங்களில் சிறிய சரிவு ஏற்படும், அதை பயன்படுத்தி தங்கம் வாங்குவது முதலீட்டாளர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான வாய்ப்பாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய ( 09) தங்க விற்பனை தரவுகளின் படி, 22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் – 313.950 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 39.250 ரூபாவாகவும்

24 கரட் தங்கத்தின் ஒரு பவுன் – 342,500 ஆகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42.810 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 21 கரட் தங்கத்தின் ஒரு பவுன் – 299,700 ஆகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 37,460.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளதால் இலங்கையிலும் தங்க விலை சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தனி நபரிடமிருந்து பிள்ளைகளை காப்பாற்றுமாறு பெற்றோர் கோரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபரொருவர், தமது பிள்ளைகளை அந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தி, பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக பெற்றோர் கவலை வெலியிட்டுள்ளனர்.

அந்த நபரிடமிருந்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, பிரதேச வாழ் மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ். அரசடி பிரதேச மக்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டை இன்று (9) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளித்த அரசடி பிரதேச மக்கள், ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த நபர் நீண்டகாலமாக பல்வேறு சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றுவரும் ஒருவர் ஆவார்.

எமது அரசடி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இவரது பின்னணியில்தான் நடந்து வருகிறது. இவை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நாங்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகிறோம். இந்நிலையில், அண்மையில் அரசடியில் குறித்த சட்டவிரோத நபரால் வெளியூரில் இருந்து சிலர் வரவழைக்கப்பட்டு, வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடத்தப்பட்டது.

இதனால் எமது பிள்ளைகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கையில் இறங்கினர். இதன்போது ஒருவர் காயங்களுக்குள்ளானார். அதைக் காரணமாகக் கொண்டு, எமது ஏழு பிள்ளைகளை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், அந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.

எமது பிள்ளைகள் மீது தேவையற்ற வகையில் சோடிக்கப்பட்ட வழக்குகள் பொலிஸாரால் பதியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியே இன்று மனித உரிமைகள் காரியாலயத்தில் முறைப்பாடு அளித்துள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

புதிய வாகனங்களை வாங்க தயங்கும் இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

புதிய வாகனங்களை வாங்குவதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதால் வாகன இறக்குமதி நிறுவனங்கள் வாங்குபவர்களை ஈர்க்க விளம்பர பிரச்சாரங்களை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பல மாதங்களாக இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தொடர்ந்து, புதிய வாகனங்களின் கொள்முதல் தேவை குறைந்துள்ளமையினால் வாகன இறக்குமதியாளர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும், நாட்டில் தேவையை பூர்த்தி செய்ய போதுமான புதிய வாகனங்கள் உள்ள நிலையில், மக்கள் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மாதங்களில் இறக்குமதி அளவு கணிசமாக உயர்ந்திருந்தாலும், ஆரம்ப தேவை பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து, இலங்கை வாகன இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது.

இலங்கை சுங்கத்துறையின் கூற்றுப்படி, டிசம்பர் 2024 முதல் ஜூன் 2025 வரை கிட்டத்தட்ட 50,000 மோட்டார் வாகனங்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் 14,047 மோட்டார் கார்கள் அடங்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் அந்நிய செலாவணி இருப்புகளைப் பாதுகாக்க 2020 முதல் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை வாகன இறக்குமதிகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு 2025 ஆண்டு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் சடுதியான விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,000 டொலரை தாண்டியது.

உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையே இந்த விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, நாட்டில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது, மேலும் 24 காரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை தற்போது 327,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும், 22 காரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 300,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரத்னராஜா சரவணன் தெரிவித்தார்.

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்!!

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக அதனை திருடியதாக தெரிய வந்துள்ளது திருடப்பட்ட பித்தளை விளக்கின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளில் இருந்து பழைய பொருட்களை சேகரிக்கும் குழுவொன்று லொரியில் வட்டரேகா பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இதன் போது வட்டரெக்க, மாவதகமவில் உள்ள விகாரைக்கு சென்ற மூவரில் ஒருவர் விகாரையின் தேரருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ​​மற்ற இருவரும் பித்தளை விளக்கைத் திருடியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த விளக்கு நாரம்மல பகுதியில் உள்ள ஒரு பழைய உலோகக் கடைக்கு விற்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரின் திருமணத்திற்கு பணம் திரட்டும் நோக்கில் இந்தத் திருட்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம் : இடைநடுவில் பறிபோன உயிர்!!

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால், அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து கொழும்புக்கு அசோகா பயணம் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சைவ பழக்கம் கொண்ட இவர், விமான பயணத்துக்கு முன்பே சைவ உணவை முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால், விமான பணியாளர்கள் சைவ உணவு இல்லை என்று கூறி, இறைச்சியுடன் கூடிய அசைவ உணவை வழங்கியதாகவும், அதில் இறைச்சி அல்லாத பகுதிகளை மட்டும் சாப்பிடுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அந்த உணவை சாப்பிட்டபோது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். விமானம் ஸ்காட்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது மகன் கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடுத்துள்ளார். முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவை வழங்காதது மற்றும் மருத்துவ அவசரத்தில் அலட்சியம் காட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் விமானப் பயணிகளின் உணவுப் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் இலங்கையர் உணவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 குழந்தைகள் மரணத்திற்கு காரணமான இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது!!

இந்தியாவின் பல மாகாணங்களில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கு தொடர்புடைய கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்தை தயாரித்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஸ்ரேசன் பார்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன், நேற்று இரவு சென்னையில் மத்தியப் பிரதேச பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் குறைந்தது 20 குழந்தைகள் மரணமடைந்தது தொடர்பாக மாகாண காவல்துறை அவரைத் தேடி வந்தது. மத்தியப் பிரதேசத்தைத் தவிர, ராஜஸ்தானிலும் இந்த இருமல் மருந்து காரணமாக சில இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

கோல்ட்ரிஃப் மருந்தை உட்கொண்ட பிறகு குழந்தைகளுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரங்கநாதன் மீது கலப்படம், கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இருமல் மருந்து விவகாரத்திற்கு பிறகு ரங்கநாதன் கோவிந்தன் தலைமறைவாக இருந்தார். அவரது கைதுக்கு உதவி செய்வோருக்கு ரூ.20,000 பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச பொலிசாரால் அவர் சென்னையில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, பெரும்பாலான இறப்புகள் நிகழ்ந்த சிந்த்வாராவிற்கு ரங்கநாதனை அழைத்துச் செல்ல, மத்தியப் பிரதேச காவல்துறையினர் தற்போது சென்னை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கோல்ட்ரிஃப் என்பது குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை புண் மற்றும் கண்களில் நீர் வடிதல் உள்ளிட்ட சளி மற்றும் இருமல் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்து.

இந்த மாத தொடக்கத்தில் தமிழக அதிகாரிகளால் இந்த மருந்தின் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவை கலப்படம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

DEG என்பது அச்சிடும் மை மற்றும் பசை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும், இது மனிதர்களுக்கு கடுமையான சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென வகுப்பறையில் சரிந்து விழுந்து 11ம் வகுப்பு மாணவன் மரணம்!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் வெங்கடேசன் (16), குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் பள்ளி விடுமுறை நாட்களில் அதிகளவில் வெங்கடேசன் செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும் பள்ளிக்கு செல்லும் நாளில் தலை வலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து இறந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவர் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலனுடன் சண்டை கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

சென்னை ஆலந்தூரில், முதலாண்டு கல்லூரி படித்து வந்த மாணவி, காதலனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், மன அழுத்தத்தில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர், மடிப்பாக்கம் அருகே உள்ளாகரம் அலெக்ஸ் தெருவை சேர்ந்த வசந்தா (40) மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். இவரது மகள் தமிழ்ச்செல்வி (17) தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.

இந்நிலையில் வேலைக்கு சென்ற வசந்தா மாலை வீட்டிற்கு திரும்பி கதவை தட்டிய போது, தமிழ்ச்செல்வி கதவை திறக்கவில்லை. நீண்ட நேரம் பதிலளிக்காததால்,

அக்கம்பக்கத்தினரைச் சேர்த்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், தமிழ்ச்செல்வி மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.