கோர விபத்தில் பலியான இளம் தம்பதியினர் : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

ஹொரண – மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளம் தம்பதியினரின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

ஹொரண – மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் கடந்த (04) திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இந்த விபத்தில் மொரகஹேன, பெரெகெட்டியவைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ணா மனுஷ்கா மற்றும் சதுரிகா அப்சரா ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வெளியான காரணம்

இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி வேக கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் பயணித்த லொறியுடன் மோதியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்ற நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த பூர்ணா தினுஷ்க விதுமலின் மரணம் குறித்து ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி என்.எல். கே. லக்ஷனினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல், உயிரிழந்த எரங்கி சதுரிகா பெரேராவின் மரணம் குறித்து ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கே.ஆர்.எச். லியனகே அவர்களால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இதற்கமைய, வழங்கப்பட்ட சான்றுகள் மற்றும் வைத்திய அறிக்கைகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதியதில் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் ஏற்பட்ட காயங்களால்

ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியே இருவரின் மரணத்திற்கும் காரணம் என்று ஹொரண மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன முடிவு செய்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இரு குடும்பங்களின் உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், நான்கு மாதங்களாக கஹதுடுவா பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளனர்.

மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக நண்பரிடம் சைக்கிள் வாங்கி சுற்றுலா சென்ற போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் : நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!!

இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்து குலுங்கும் நிலையில் சுற்றுலாவாசிகள் மலர்களை காண குவிந்துள்ளனர்.

2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் தேசிய பூங்காவின் ஹோட்டன் சமவெளியில் அதிகமான இடங்களில் பூக்கத் துவங்கியுள்ளன. இந்தப் பூக்களைக் காண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர்.

அதேவேளை ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இதில் பூக்கும் மலர்களே, இதன் தனித்துவமாகக் கருதப்படுகிறது.

இந்த மலர்களிடம் வசீகரிக்கும் வாசம் இல்லாவிடினும் ஒரு மென்மையான வாசம் இருப்பதாகவும் , பூக்கும் காலங்களில் இவற்றை 10-க்கும் மேற்பட்ட தேனீ இனங்கள் தேடி வருவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புல்வெளிகள் நிறைந்த ஹோட்டன் சமவெளி மலைப்பகுதியில் வளரும் இந்த செடிகளில் வெள்ளை ,நீலம் , ஊதா மற்றும் இளஞ்சிவப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில்

பூத்து உள்ளதாகவும் அவைகள் குறைந்தபட்சம் அரை மீட்டரிலிருந்து ஒரு மீட்டர் வரை உயரம் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டன் சமவெளி உலகத்தில் மிக அரிய உயிரியல் சூழல்களுக்குள் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பூத்ததாகவும் அதன் பின்னர் இவ்வருடம் (2025) பூத்து உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை நீலக்குறிஞ்சி மலர்கள் மீண்டும் 2037 ஆண்டு பூக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் மேலும் தெரிவிக்கின்றனர்.

மகனுக்கு விவாகரத்து : பாலாபிஷேகம் செய்து கேக் வெட்டி கொண்டாடிய தாய்!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மனைவியை விவாகரத்து செய்ததோடு, மனைவி கொண்டு வந்த 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மகனுக்கு புதிய வாழ்க்கையை தொடங்கும் விதமாக அவரின் தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

விவாகரத்துக்குப்பின் தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் இந்த இளைஞர் பதிவிட்டுள்ளார். இணையவாசிகளை இளைஞனின் செயல் திகைக்க வைத்துள்ளது.

 

1500 கிலோ வாகனத்தை காதில் கட்டி இழுத்த யாழ் நபர்!!

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வத்தால் யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் சாகச நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

முதியோர் இல்ல வளாகத்தில் 1500 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50 மீற்றர் தூரம் தனது காதில் கட்டி இழுத்து முதியோர் இல்ல முதியவர்களை இன்று (06) காலை மகிழ்வித்திருந்தார்.

62வயதான மட்டுவிலைச் சேர்ந்த செ.திருச்செல்வம் 5 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் தனது தாடி,தலை முடி,காது,உடல் ஆகியவற்றில் கனரக வாகனங்களைக் கட்டி இழுத்து சோழன் மற்றும் கலாம் உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து!!

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

விபத்தில் கார், முச்சக்கரவண்டி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கயமடைந்த சாரதிகள் பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டார் விமானத்தில் பறிபோன இலங்கை வைத்தியரின் உயிர்!!

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கட்டார் ஏர்வேஸில் பயணித்த தெற்கு கலிபோர்னியாவில் இருதயநோய் நிபுணராக இருந்த ஒருவர் பயணத்தின் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியர், பயணத்தின் போது விமானத்தில் சைவ உணவு கோரியுள்ள நிலையில் அது மறுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவருக்கு இறைச்சியுடன் வழங்கப்பட்ட உணவை அவர் உண்ண முற்பட்ட போது உணவு சிக்கி மூச்சுத் திணறி இறந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

85 வயதான அசோகா ஜெயவீர என்ற மருத்துவரே அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கட்டார் ஏர்வேஸில் பயணித்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், விமானம், ஆர்க்டிக் பெருங்கடலிற்கு மேலே பயணித்ததால் அந்த நேரத்தில் அவசர சிகிச்சைக்காக விமானத்தை தரையிறக்க முடியவில்லை என அதன் விமானி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சம்பவம் நடந்த நேரத்தில் விமானம் உண்மையில் மத்திய மேற்குப் பகுதிக்கு மேல் இருந்ததாகவும், எளிதில் திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்றும் உயிரிழந்த வைத்தியரின் மகன் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை தொடர்ந்து, விமானம் இறுதியில் ஸ்கொட்லாந்தின் எடின்பர்க்கில் தரையிறங்கியபோது, ​​சைவ உணவு மாத்திரமே உண்பவரான ஜெயவீர, சுமார் மூன்றரை மணி நேரம் மயக்கமடைந்திருந்தார் என்று முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னரே அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் ஏற்கனவே அது தாமதமாகியிருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே நாளில் 8000 ரூபாய் அதிகரிப்பு : உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ.8,000 அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று (07.10.2025) காலை கொழும்பு செட்டியார் வீதியில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.290,500 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, ரூ.283,000 ஆக காட்டப்பட்ட நிலையில் இவ்வாறு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், சனிக்கிழமை ரூ.306,000 ஆக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்று ரூ.314,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதி!!

ஹம்பாந்தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹுங்கம, ரன்ன, வாடிகல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த 28 வயதுடைய ஒருவரும் அவரது இரகசிய மனைவியும் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார். அந்த தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கொலையை யார் செய்தார்கள், எதற்காக இந்த கொலையை செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் இன்று உடல்களின் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

 

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற கணவன், தனது நான்கு வயது குழந்தையை கூரையின் மேல் வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வெல்லம்பிட்டி லிசன்பொல பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்டடவர் 29 வயதுடைய துஷாரி என்ற பெண் ஆவார்.

பெண்ணின் கணவர் வீட்டின் கூரையில் ஏறி, கூரையின் தகரத்தை அகற்றி, வீட்டிற்குள் நுழைந்து, அவரது தலையில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தை தீயில் பாதிக்கப்படும் என நினைத்து, சந்தேக நபர் குழந்தையை கூரையின் மேல் வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். கணவன்,மனைவிக்கிடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர் பலமுறை பெண்ணைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சந்தேக நபருக்கு எதிராக பெண் பொலிஸில் பல முறைப்பாடுகளையும் செய்துள்ளார். சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என்பதால் விவாகரத்து வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்திற்கு முன்னர் சந்தேக நபர் வீட்டின் நீர் விநியோகத்தை துண்டித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள ஆபத்து!!

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறிப்பாக மேற்கு மாகாணமும் தென் மாகாணமும் இந்த நோய்கள் பரவுவதற்கான அதிக அபாயப்பகுதிகளாக காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்துள்ளார்.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நுளம்பு வழி நோய்களின் பரவலைத் தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நுளம்பு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானம் : பயணிகளுடன் மீண்டும் இயக்கியதால் பரபரப்பு!!

இலங்கையில் பறவை மோதி சேதமடைந்த விமானத்தை பயணிகளுடன் விமானி மீண்டும் சென்னை வரை இயக்கியதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கொழும்புக்கு 158 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI 287பறவை மோதி தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

இதனையடுத்து விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு பொறியாளர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், விமானத்தின் இயந்திரங்களில் பறவையின் சடலமொன்று சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதே விமானம் அதிகாலை 3:20 மணிக்கு கொழும்பிலிருந்து 147 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பி பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

இருப்பினும், ஏர் இந்தியா மற்றும் சென்னை விமான நிலைய பொறியாளர்கள் குழு விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தபோது விமானத்தின் நிலைமை மோசமடைந்துள்ளதினை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்கு பதிலளிக்கும் விதமாக, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

தாய் வெளிநாட்டில் : தந்தையால் மகளுக்கு நேர்ந்த கதி!!

மொனராகலையில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக தந்தையின் அச்சுறுத்தலுக்கு மகள் உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், தந்தையின் மோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள 38 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் தந்தை மற்றும் சகோதரனுடன் குறித்த சிறுமி வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தையின் கொடூரமான செயற்பாடு காரணமாக சிறுமியின் உடல் உறுப்புக்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடா செல்ல ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!!

கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி, இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இடைத்தரகரான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பியகம பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களிடமிருந்து 5.5 மில்லியன் ரூபாயைப் பெற்று வைத்திருந்ததாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர் பியகம பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபர் பியகம பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இடைத்தரகராக செயற்பட்டு பண மோசடி செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலதிபர் கைது

சந்தேக நபர் பெப்ரவரி மாதம் மாவனெல்ல பகுதியில் நபரிடம் 300000 ரூபாயையும், மற்றொரு நபரிடம் 250,000 ரூபாயையும் மோசடி செய்துள்ளார்.

சந்தேக நபர் அரநாயக்க பகுதியில் சிறிது காலம் வசித்து வந்தபோது அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, பின்னர் திஸ்ஸமஹாராம பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு முறைப்பாடுகள்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 65 வயதுடையவர் எனவும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் அஜித் விஜேசிங்கேவின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

15 மனைவிகள், 100 வேலையாட்கள் – விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த ஆபிரிக்க மன்னர்!!

15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் ஆப்பிரிக்க மன்னர் வந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான எஸ்வாட்டினி(Eswatini) என்ற நாட்டின் மன்னராக இருப்பவர் மூன்றாம் மெஸ்​வாட்​டி(Mswati).

1986 ஆம் ஆண்டு முதல் இவர் அந்த நாட்டின் மன்னராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டொலர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்கள் படைசூழ தனி விமானத்தில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அபுதாபி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். இவரின் வருகை காரணமாக அங்கிருந்த 3 முனையங்கள் மூடப்பட்டுள்ளன.

இவருக்கு மொத்தம் 30 மனைவிகள் எனவும், இதில் 15 பேர் மட்டுமே இந்த பயணத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும், பாரம்பரிய ‘ரீட் டான்ஸ் விழாவின் போது அவர் ஒரு புதிய மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், முன்னாள் மன்னரான இவரின் தந்தைக்கு 125 மனைவிகள், 210 குழந்தைகள், சுமார் 1000 பேரக்குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

எஸ்வாட்டினியின் மக்கள் 60% பேர் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையில், அந்த மன்னர் தனி விமானத்தில் பயணம் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது விமர்சனத்தை பெற்றுள்ளது. இவர் மில்லியன் டொலர்கள் மதிப்பிலான வாட்ச்களையே அணிவார்.

இளம்பெண் மரணத்தில் மர்மம் : காவல் நிலையத்தில் கணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!!

இளம்பெண் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் கோபால்(29). இவர் மீது திருவொற்றியூர்,

சாத்தாங்காடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவருக்கு திருமணமாகி ஜோதிகா(23) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு பதற்றத்துடன் வந்த கோபால், தனது மனைவி வீட்டில் மயக்கத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

உடனடியாக அங்கிருந்த போலீசார், கோபால் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதால் அவரது நடத்தையில் சந்தேகமடைந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கோபாலின் மனைவி ஜோதிகா, வீட்டில் பிணமாக கிடந்தார்.

உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபால் மற்றும் ஜோதிகா இருவரும் திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் அவர்கள் மேட்டு தெரு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கோபால், போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் இளம்பெண் தொண்டையினுள் ஏற்பட்ட பாதிப்பால் இறந்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் அவரது உடலில் காயம் எதுவும் இல்லாததால் இளம்பெண்ணை,

அவரது கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்தாரா? அல்லது இளம்பெண்ணே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் கோபாலை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அலட்சியம் : முல்லைத்தீவில் தாயை இழந்த இரண்டு மாத குழந்தை!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் அவர் தெரிவிக்கையில்.,

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் எனது மருமகள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்திருந்தார். அதன் பின்னர் ஆரோக்கியமாக இருந்தார். ஆனால் கடந்த 26ம் திகதி நாரி உழைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு சென்றோம்.

பரிசோதனையில் கிட்னியிலும் இரத்தத்திலும் கிருமி தாக்கம் இருப்பதாக வைத்தியர் குறிப்பிட்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு 28ம் திகதி எழுதி தந்திருந்தார்.

அதன்படி 28ம் திகதி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்தோம். தனியார் வைத்தியர் வழங்கிய அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும், மாஞ்சோலை வைத்தியசாலையில் சாதாரண நோயாளர் வாட்டில் வைத்திருந்தார்கள்.

29ம் திகதி பிற்பகல் வரை சேலன் மட்டுமே ஏற்றியிருந்தார்கள். வேறு எந்தவித சிகிச்சையும் வழங்கப்படவில்லை. பின்னர் மாலை யாழ்ப்பாணம் மாற்றியிருந்தார்கள்.

அங்குள்ள வைத்தியர்கள் தாமதமாக வந்ததனால் பாதுகாக்க முடியாது என்று தெரிவித்தனர். எனது குடும்பத்தில் இருந்து மருமகளை இழந்திருக்கின்றேன்.

இதில் எந்தவொரு மருத்துவரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறினால் தகுதியானவர்கள் என்னை மன்னிக்கவும், தகுதியற்றவர்கள் என்மீது கோபப்படலாம் எனத் தெரிவித்தார்.

எமது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் போதுமான துறைசார் வைத்தியர்கள் இல்லை. அரச மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை. 25 வைத்தியர்கள் நியமிக்கப்படுகிறார்கள், ஆனால் மொழி தெரியாமல் சேவை செய்வதற்காகவே காலம் கடக்கிறது.

அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் மிகக் குறைவு. மக்களுக்கான மருத்துவ விடுதிகளை விட காரியாலய கட்டிடங்களே அதிகம்.” முல்லைத்தீவில் 80 வீதம் வேற்று மொழி பேசுவோரும், 20 வீதம் தமிழர்களும் நிர்வாகிகளாக உள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியாகப் புரியப்படவில்லை. ஒரு பெண் சில மணி நேரங்களில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதுவே மருத்துவ அமைப்பின் தோல்வியே.

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு செல்லும் மக்களே, உங்கள் பிள்ளைகளின் நிலையை ஒருநாள் நினைத்துப் பாருங்கள். எனது மருமகளின் மரணத்திற்கு நான் நியாயம் கேட்கவில்லை.

ஆனால் இனி இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். யாரும் இதனை கேட்கவில்லை என்றாலும், இது திட்டமிட்ட தவறாகவே தோன்றுகிறது.

அதோடு ஊடகங்கள் அரசியல்வாதிகளின் பக்கம் திருப்பும் கமராவை, மக்களின் மருத்துவ துயரங்களை நோக்கி ஒருதரம் கமராவை திருப்புங்கள். நூற்றில் தொண்ணூறு வீதமானோர் அழுகுரலாகவே வாழ்கின்றனர்.

33 வயதில் இரண்டு மாத குழந்தையை தாயின்றி விட்டுச் சென்றது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது என மேலும் தெரிவித்தார்.