ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம் : அச்சத்தில் பயணிகள்!!

இந்தியா கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை இறங்கியது.

இன்று காலை கொச்சியிலிருந்து வந்த ஏர் இந்தியா A320, AI-2744 விமானம், மும்பை விமான நிலையத்தில் கனமழை காரணமாக ஓடுபாதையில் ஒரு பயணத்தை மேற்கொண்டது. விமானம் ஓடுபாதை 27 இல் இருந்து விலகிச் சென்றது,

மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில் , கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார். எனினும் ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, எயார் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது, விமானம் தரையிறங்கும் போது, கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.

அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதேவேளை கடந்த சில தினங்களாக மும்பையில் கனமழை பெய்து வரும் நிலையில், விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால், பயணிகள் அச்சமடைந்ததாகவும் இந்திய ஊட்ச்கங்கள் தெரிவித்துள்ளன.

100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் முழு சூரிய கிரகணம் ; இருளில் மூழ்கவுள்ள நாடுகள்……!!

100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் ஒரு அரிதான முழு சூரிய கிரகணம் 2027ஒகஸ்ட் 2, ஆம் திகதி அன்று, நிகழ உள்ள நிலையில் இந்த சூரிய கிரகணத்தால் ப நாடுகள் 23 நிமிடங்கள் இருளில் மூழ்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

2027 ஆகஸ்ட் 2-ம் தேதி ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கும் முழு சூரிய கிரகணம், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு

தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளை ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் வரை இருளில் மூழ்கடிக்கும்.

100 வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்த கிரகணம், 1991 – 2114 ஆண்டுகளுக்கு இடையில் நிலப்பரப்பில் இருந்து பார்க்கக்கூடிய மிக நீண்ட முழு சூரிய கிரகணமாகும். பொதுவாகவே முழு சூரிய கிரகணங்கள் கண்கவர்ந்தவைதான்.

ஆனால், 2027 ஆகஸ்ட் நிகழ்வு அதன் அசாதாரண நீண்ட நேரம் காரணமாகத் தனித்து நிற்கும். இந்த நீண்ட இருண்ட நேரம், இந்த கிரகணப் பாதையில் இருக்குறவர்களுக்கு, ஒரு அரிய வானியல் அவதானிப்புக்கும், மறக்க முடியாத அனுபவத்திற்கும் வழிவகுக்கும்.

அதேவேளை 2027 ஆகஸ்ட் 2-ம் தேதி, பூமி சூரியனில் இருந்து மிகத் தொலைவில் உள்ள அப்ஹீலியன் (aphelion) நிலையில இருக்கும். இதனால சூரியன் வானத்தில் சிறிதளவு தெரியும்.

அதே சமயம், சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிகீ (perigee) நிலையில இருக்கும். இதனால சந்திரன் பெரியதாக தெரியும். சூரியன் சிறிதாகவும் சந்திரன் பெரியதாகவும் தோன்றுவதால், கிரகணம் நீண்ட நேரம் நீடிக்கிறது.

2027 ஆகஸ்ட் 2 முழு சூரிய கிரகணம் வெறும் ஒரு வானியல் நிகழ்வு மட்டுமல்ல; இது அரிய அனுபவம். அதன் தனித்துவமான கால அளவு மற்றும் அதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகின்றது.

சிறுவனின் கொலையை மூடி மறைக்க உதவினார்களா பொலிஸார்? நீதி கேட்டு கதறி அழும் தாய்!!

கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த என்னுடைய மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும். எனக்கு இந்த இழப்புக்கான பண இழப்பீடுகள் வேண்டாம். சரியான நீதி கிடைக்க வேண்டும்.

பொலிஸார் இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை.இந்த விபத்தை ஏற்படுத்திய நபரும் குறித்த வாகனமும் இன்று வெளியில் இருக்கின்றது.

பொலிஸார் எங்களது வாக்குமூலத்தையும் சரியான முறையில் பதிவு செய்யவில்லை. நீதியான விசாரணை முன்னெடுக்கவில்லை. பக்க சார்பாக செயற்படுகின்றனர்.

விபத்து இடம்பெற்ற சிசிடிவி காணொளிகள் வெளியிடப்பட்டதுடன் பொலிஸார் இந்த சிசிடிவி காணொளிகளை கூட பார்வையிட்டு சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் இதன் போது குற்றம் சுமத்தினார்.

குறித்த விபத்தானது தாயின் கவனக்குறைவினால் இடம்பெற்றதாகவும் தாங்கள் சரியான முறையில் வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் கூறி குறித்த விபத்துக்கு காரணம் உயிரிழந்த சிறுவனின் தாயார் தான் என சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது பிள்ளையின் உயிருக்கு பேருந்து உரிமையாளர் 50 ஆயிரம் ரூபாயும் பேருந்து சாரதி ஒரு லட்சம் ரூபாயும் தங்களுக்கு இழப்பீடாக வழங்கியதாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் தனக்கு சரியான நீதி வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தார்.

தனது மகன் பேருந்தின் பின்பக்கம் அடிபட்டு விபத்துக்குள்ளானதாகவும் ஆனால் விசாரணையின் போது பேருந்து முன் பக்கம் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்ததாகவும்

இறந்த சிறுவனின் உடல் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே சாரதியை பிணையில் விடுவித்ததாகவும் பேருந்தையும் விடுவித்ததாகவும் குறித்த தாயார் கூறியுள்ளார்.

பொலிஸார் உயிரிழந்த சிறுவனின் தாயாரின் வாக்குமூலத்தை கூட சரியான முறையில் பெறவில்லை எனவும் நீதியான விசாரணையை முன்னெடுக்கவில்லை எனவும் சிசிடிவி காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் இதன் போது குற்றச்சாட்டினர்.

உயிரிழந்த சிறுவனுக்கு சிறந்த விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டி தர வேண்டுமென தாயார் இதன் போது கண்ணீர் மல்க ஊடகங்களிடம் வேண்டிக் கொண்டார்.

மேலும், சிறுவனின் கொலையை மூடி மறைக்க பொலிஸார் உதவியதாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

280 பேருடன் நடுக்கடலில் பற்றி எரிந்த பயணிகள் கப்பல்!!

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் உள்ள தாலிஸ் தீவில் மனாடோ துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த சுமார் 280 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மனாடோ நகரின் நீர்நிலைகளுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த கே.எம். பார்சிலோனா 5 என்ற கப்பல், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:00 மணியளவில் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது கப்பலில் 280 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மூவர் உயிரிழந்துள்ளதுடன் 150 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்துக்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை.

பேருந்துகள் நேருக்குநேர் மோதி பாரிய விபத்து : 21 பேர் காயம்!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை – கலிகமுவ பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், வேரகொடவிலிருந்து கேகாலை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்துமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளன.

ஐரோப்பா செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தவருக்கு அதிர்ச்சி!!

போலி பிரித்தானிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற ஈரானிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் நேற்று முன்தினம் இரவு 08.00 மணிக்கு ஜப்பானின் நரிட்டாவுக்குப் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்தார்.

அவரது விமான டிக்கெட்டை பரிசோதனை செய்த போது, அவர் வழங்கிய பிரித்தானிய கடவுச்சீட்டில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது அனைத்து ஆவணங்களுடனும் அவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளில் கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி கடவுச்சீட்டிற்காக அவர் உள்ளூர் தரகரிடம் 15,000 அமெரிக்க டொலர்கள் செலுத்தியிருப்பதும் தெரியவந்தது.

அவரது பண பொதியை பரிசோதனை செய்ததில் அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டு மற்றும் ஜப்பானின் நரிட்டாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு விமான டிக்கெட் இருப்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாணவன் சசிகுமார் டனுசனால் 18 வருட வடமாகாண சாதனை முறியடிப்பு!!

வடமாகாணத்தில் கடந்த 2007ம் ஆண்டு என்.சிவநேசன் என்பவரால் நிலைநாட்டப்பட்ட 1500 மீற்றர் ஒட்டப்போட்டியை 4நிமிடம் 12.07 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 18 வருடங்களின் பின்னர் நேற்று (20.07) இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் ஒட்டப் போட்டியில் 4நிமிடம் 10.09 செக்கன் நேரத்தில் ஓடி முடித்து பழைய சாதனையினை முறியடித்து புதிய சாதனையினை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார்.

மேலும் கடந்த 2024ம் ஆண்டு இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1 நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்து 11வருட சாதனையினை சமன் செய்த அவர் இம்முறை 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1 நிமிடம் 58.07 செக்கன் நேரத்தில் ஓடி முடித்து தன்னால் நிலைநாட்டப்பட்ட சாதனையினை முறியடித்து புதிய சாதனையினை படைத்துள்ளார்.

வடமாகாண மாகாண விளையாட்டு பெருவிழாவானது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் (20.07)இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் போதே பயிற்சிவிப்பாளர் குமார் நவநீதன் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் இச் சாதனைகளை நிலை நாட்டியுள்ளார்.

வவுனியா மாட்டுத்தொழுவத்தில் அனுமதியின்றி அதிகளவில் வெட்டப்படும் மாடுகள்!!

வவுனியா மாட்டுத்தொழுவத்திற்கு மாநகரசபையினர் முன்னெடுத்திருந்த திடீர் விஜயத்தில் போது அனுமதியின்றி மாடுகள் வெட்டப்படுவது அவதானிக்கப்பட்டிருந்தமையுடன் தொடர்ச்சியாக மாட்டுத்தொழுவம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மாடுகள் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்து காணப்படுவதுடன் பால் உற்பத்தியும் அற்று காணப்படுகின்றது. மேலும் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டத்திற்கு மாட்டிறச்சி ஏற்றுமதி செய்யப்படுவதினால் மாவட்டத்தில் மாட்டிறச்சியின் விலையும் அதிகரித்து காணப்படுன்றது.

அத்துடன் சுகாதாரமான முறையில் மாட்டிறச்சிகள் வெட்டப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் முகமாக மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபனால் ஐவர் அடங்கிய சுகாதாரக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

சுகாதாரக் குழு திடீர் விஜயம் ஒன்றினை முன்னெடுத்து மாட்டுத்தொழுவத்திற்கு சென்றிருந்தனர். இதன் போது சுகாதார பரிசோதகரின் அனுமதியினை மீறி அதிகளவில் மாடு வெட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையுடன் சுகாதார சீர்கேட்டுடன் குறித்த பகுதி காணப்பட்டமையும் உறுதிசெய்யப்பட்டது.

குறித்த விஜயம் குறித்த அறிக்கை மாநகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளமையுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மாநகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரக் குழுவில் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்களான நடராஜா தர்மத்திரனம், அப்துல் பாரி, முகமட் லரீப் மற்றும் சுகாதார பரிசோதகர் ஆகியோரே உள்ளடங்குகின்றனர்.

இதற்கு முன்னர் மாநகர துணை முதல்வர் மாட்டுத்தொழுவத்திற்கு சென்றிருந்த சமயத்தில் அங்கு சுகாதார சீர்கேடு நிலவுவதாக மாநகர முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கில் வீதி, பாலம் சீரின்மை : நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி!!

வவுனியா வடக்குப் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமமக்கள், தமது கிராமத்திற்குச்செல்லும் வீதி, பாலம் என்பன சீரின்றிக்காணப்படுவதால் பலத்த இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பபையேற்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பனைநின்றான் கிராமமக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் தொடர்பில் நேரடியாகச்சென்று ஆராய்ந்தார்.

குறிப்பாக ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி பிரதானவீதியிலிருந்து பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் வீதியும், பாலமுமே இவ்வாறு சீரின்றிக்காணப்படுகின்றன.

அவ்வீதியில் மிகமோசமான நிலையில் காணப்படும் மரப்பாலத்தைக் கடந்துசெல்வதில் பனைநின்றான் கிராமமக்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். மழைக்காலங்களில் குறித்த பாலத்தினுடாக முற்றாகப் போக்குவரத்து செய்யமுடியதநிலை காணப்படுவதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்தப்பாலத்தை வவுனிய வடக்கைச் சேர்ந்த பனைநின்றான் கிராமமக்கள் பயன்படுத்தினாலும், அந்தப்பாலம் புதுக்குடியிருப்பு பிரதேசசபைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்றது.

எனவே குறித்த பாலத்தினையும் அதனோடு இணைந்த வீதியையும் சீரமைத்து, தமது போக்குவரத்து இடர்பாட்டைத் தீர்த்துவைக்குமாறு பனைநின்றான் கிராமமக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் பனைநின்றான் கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டைத் தீர்த்துவைப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த களவிஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுடன் வுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சுசீலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.கிரிதரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாநகரசபை அரசியல் பழிவாங்கலில் : தொழில் செய்ய இடையூறு : உறுப்பினர் குற்றச்சாட்டு!!

வவுனியா மாநகரசபை நிர்வாகம் தொடர்ச்சியான பழிவாங்கலை மேற்கொண்டு தொழில்செய்வதற்கு இடையூறை ஏற்ப்படுத்துவதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வவுனியா மாநகரசபை உறுப்பினர் பாருக் பர்ஸ்சான் குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட மாடு அறுக்கும் மடுவம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

கடந்த மூன்று நாட்களாக மடுவத்திற்கான மின்சாரம் வழங்கப்படவில்லை. அரசியல் பழிவாங்கல் அடிப்படையிலேயே இவ்வாறு செய்யப்படுகின்றது. இதனால் எமது தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுகிழமை அதிகமான வியாபாரம் செய்யக்கூடிய ஒரு நாள். ஆனால் இன்று இறைச்சிக்கடைகள் அனைத்தையும் மூடவேண்டிய அவல நிலைக்கு வந்துள்ளோம்.

மாவட்டத்தில் உள்ள உணவகங்களுக்கும் இறைச்சியினை வழங்கமுடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் இப்படியான ஒரு பிரச்சனை வந்ததில்லை. இதனை நம்பி தொழில் செய்யும் பல ஊழியர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு சரியான நீதியான தீர்வு வழங்கப்படவேண்டும்.

கடந்த தேர்தலில் எனது வட்டாரத்தில் எனக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மாநகரசபை உறுப்பினர்களான லறீப், பாரி ஆகிய இருவரும் இணைந்தே எமது தொழிலை இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் பலமுறை மடுவத்திற்குள் வந்து எம்மை தொந்தரவு செய்கின்றனர். எனவே மாநகரசபை சரியான ஒரு முடிவினை எனக்கு தரவேண்டும் என்றார்.

வவுனியா மடுவம் சர்ச்சை : சிலர் மக்களுக்காக அல்ல மாடுகளை வெட்டவே சபைக்கு வந்துள்ளனர்!!

வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் தொடர்பாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அங்கு பல பிரச்சனைகள் உள்ளது. இதனை அரசியல் ஆக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே என்று வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவத்தில் தற்போது ஏற்ப்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக கருத்து கேட்டபோதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

மின்சாரசபையால் இதுவரை அனுப்பப்பட்ட பட்டியலுக்கு அமைய திங்கள்கிழமை நிலுவையிலுள்ள மின்கட்டணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அந்த செயற்பாடுகளை சபையின் நிர்வாக அதிகாரியே செய்கின்றார். இதனை அரசியல் ஆக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே.

தாண்டிக்குளம் மாடு அறுக்கும் மடுவத்தில் அதிகமான மாடுகள் அறுக்கப்படுகின்றது. அவை வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதால் எமது மாவட்டத்தில் மாடுகளின் விலை அதிகரித்துள்ளது.

கால்நடைகளுக்கு தட்டுப்பாடும் நிலவுவதுடன் களவாடப்படுகின்றது. அண்மையில் கூட ஓமந்தையில் ஒருவருக்கு சொந்தமான 20 மாடுகள் களவாடப்பட்டுள்ளது. எனவே இவற்றை தடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

அத்துடன் மடுவத்தில் அறுக்கப்படும் ஒருகிலோ மாட்டு இறைச்சிக்காக சபைக்கு 10 ரூபாவே கட்டணமாக செலுத்தப்படுகின்றது. கடந்த 25 வருடங்களாக இந்த தொகையே அறவிடப்படுகின்றது. ஆனால் தேறிய இலாபமாக குறைந்தது கிலோக்கு 800ரூபாயை அவர்கள் பெறுகின்றனர்.

எனவே இவற்றை திருத்தி சபையின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்தவகையில் பர்ஸ்சானின் நடவடிக்கை தொடர்பாக மாநகரசபையின் அடுத்த அமர்வில் கூடி கலந்துரையாடப்பட்டு ஒழுக்காற்று முடிவுகள் எடுக்கப்படும்.

ஒரு மாநகரசபை உறுப்பினர் சபையின் வியாபாரத்தை தன்னுடையது என்று சொல்லி செய்யமுடியாது. சபை உறுப்பினராக சத்தியபிரமாணம் எடுக்கும் முன்னரே அவர் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுத்திருக்க வேண்டும். எனவே அவர் மக்களுக்காக அல்ல மாடுகளை வெட்டுவதற்காகவே மாநகரசபைக்கு வந்துள்ளாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது என்றார்.

கண்டியில் கோர விபத்து : 3 பேர் பலி : பலர் வைத்தியசாலையில்!!

கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (19.07.2025) இரவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் பிரதேச பண்பாட்டு விழாவும் பண்பாட்டு ஊர்திப் பவணியும் – 2025!!

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு ஊர்திப்பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் -2025 மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை (18.07.2025) பண்பாட்டுபவனி பிரதேச செயலகம் முன்பாக காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியதுடன் அவற்றில் 40க்கு மேற்பட்ட ஊர்திகள் மற்றும் நடனங்களுடன் நகரை வலம் வந்தமையுடன் அரங்க நிகழ்வுகள் பிற்பகல் 1.00 மணிக்கு வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் இந்நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணப்பாளர் அமல்ராஜ், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயம் சார் அமைப்புக்கள், கிராமிய மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் கலைஞர்களுக்கான கலாநேத்ரா விருது வழங்களும் இடம்பெற்றன. அந்த வகையில் பாஸ்கரன் கதீஷன் (ஊடகத்துறை) , நாகராஜா செந்தூர்ச்செல்வன் (பரதம்) , அல்போன்ஸ் மெலிஸ்ரன் (நாடகம்) , சந்திரசேகர் அனோஜன் (ஓவியம்) , செல்வரத்திணம் சண்முகரத்தினம் (இயல்) , சுந்தரம் சிவயோகராஜா (கட்டுரை) , சிவராசா நாகராசா (அறிவிப்பு) , வல்லிபுரம் கந்தப்பு (மெல்லிசை) , சேனாதிராசா சந்திரகாந்தன் (வாத்திய இசை) , மாசிலாமணி தர்மகுலசிங்கம் (வாத்திய இசை) ஆகிய துறைகளை சேர்ந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் வவுனியாவின் குரல் தெரிவில் தெரிவு செய்யப்பட்ட 18வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான வவுனியாவின் குரல் விருதும் வழங்கி வைக்கப்பட்டன.

இப் பண்பாட்டு பவனி ஊர்தியானது பிரதேச செயலக வரலாற்றில் முதன் முறையான அனைத்து கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கி அவர்களின் கிராமத்தினை பிரதிபடுத்தும் வகையில் அலங்கரிப்படுத்தியமை சிறம்பம்சமாகும்.

தாய் வெளிநாட்டில் : காதலனால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி!!

15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்தி அப்புத்தளை பகுதியில் வீடொன்றில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை (17.07.2025) இரவு லிந்துல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட மாணவி தலவாக்கலையில் உள்ள தோட்டமொன்றைச் சேர்ந்த 10 ஆம் தரத்தில் கல்வி கற்பவர் ஆவார்.

இந்த மாணவி பேஸ்புக் மூலம் சந்தேக நபரான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறி நானுஓயாவில் இளைஞனை சந்தித்து அவனுடன் அப்புத்தளைக்கு ரயிலில் சென்றதாக விசாரணையில் மாணவி தெரிவித்துள்ளார்.

மாணவியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், அவர் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மகளை காணவில்லை என தந்தை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை அடுத்து, மாணவியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவி மருத்து பரிசோதனைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் இலங்கையர்கள் பயணித்த பஸ்ஸில் தீ விபத்து : ஒருவர் காயம்!!

இஸ்ரேலில் விவசாய தொழில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பஸ் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ்ஸானது இஸ்ரேலில் உள்ள கிரியேட் மலாக்கி என்ற பகுதியில் வெள்ளிக்கிழமை (18) காலை பயணித்துக்கொண்டிருக்கும் போது பஸ்ஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த பஸ்ஸில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தின் போது பஸ்ஸில் இருந்த இலங்கையர்கள் ஜன்னல்களை உடைத்து பஸ்ஸிலிருந்து வெளியே குதித்து தங்களது உயிரை காப்பாற்றியுள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் இந்த தீ விபத்தின் போது ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என வைத்தியர்கள் கூறியுள்ளதாக இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

பஹ்ரைனில் இருந்து இந்திய திரும்பிய 27 வயது இந்திய இளைஞர், விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கேரளாவை சேர்ந்த 27 வயது இந்திய இளைஞர் பஹ்ரைன்-கோழிக்கோடு விமானத்தில் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.

குறித்த இளைஞர் அப்பா, அம்மா மற்றும் 3 தங்கைகள் அடங்கிய குடும்பத்தை காப்பாற்றும் கனவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஹ்ரைன் சென்றுள்ளார்.

பஹ்ரைன் சென்றது முதல் தொடர்ச்சியாக காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் .

ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக தாயகம் திரும்பய நேரத்தில் விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பெரிய கனவுகளுடன் சென்ற அவர் உயிரற்ற உடலாக வீட்டுக்கு வந்தது குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.