வெளிநாடொன்றில் கை-கால்கள்-குடல்கள் அழுகிய நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்கள்!!

மடகஸ்கார் சிறையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் 8 பேர் உணவு -நீர் வழங்கப்படாமல் நோய்க்குள்ளாகி மிக மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவும் ஏனையவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் சிலரின் கை-கால்கள் மட்டுமல்ல, குடல்களும் அழுகிவருவதாக தெரியவந்துள்ளது.

வென்னப்புவவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் குழு ஒன்று, சர்வதேச கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு 50 நாட்களாக உணவு அல்லது மருத்துவ சிகிச்சை இல்லாமல் அவதிப்படுவதாக இலங்கை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வென்னப்புவ துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 5, 2025 CHW 899 என்ற W.P. குமார என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்ட ‘ருத் பாபா VI’ படகில் புறப்பட்ட தங்கள் குழு, ஜூன் 2 மடகஸ்கார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எட்டு பேர் கொண்ட தங்கள் மீன்பிடிக் குழுவை மடகஸ்கார் அரசு தடுத்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலான ரூத் பாபா VI ஐ மடகஸ்கார் கடற்கரையிலிருந்து “பெசலம்பி” பகுதியில் உள்ள செயிண்ட்-ஆண்ட்ரேவின் வடக்கே உள்ள கடல் பகுதியில் 16 டன்களுக்கும் அதிகமான சுறாக்களை சட்டவிரோதமாகப் பிடித்தபோது கைது செய்ததாக மடகஸ்கார் அரச அதிகாரிகள் குறித்த பத்திரிகை வினவிய போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

80 வயது மூதாட்டியின் மரண தண்டனை : பல ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு!!

அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18.07.2025) இரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

1993ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மோதரப்பிலுவாவில் ஒருவரைக் கொலை செய்ததாக, மேலும் இருவருடன் இணைந்து, சிறிமா எடிரிசூரியா குற்றவாளியாக 1999ஆம் ஆண்டு வழக்கில் குறிப்பிடப்பட்டார்.

இந்த வழக்கு பல ஆண்டுகள் தாமதிக்கப்பட்ட நிலையில் மறுசெய்துவிசாரணைகள் நடைபெற்றன. மேலும் மற்ற சந்தேகநபர்கள் இருவரும் வழக்கின் போது உயிரிழந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 2023ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மூதாட்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும், அவை தெளிவற்றவையாகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, மரண தண்டனையை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாததால், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

விபசாரத்துக்கு மறுத்த காதலியை கொடூரமாக குத்திக் கொன்ற காதலன்!!

நாடு முழுவதும் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தனது கணவரை பிரிந்து காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் விபசாரத்திற்கு மறுத்ததால், காதலியைக் கத்தியால் குத்தி கொடூரமாக கொலைச் செய்த காதலனைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கோணசீமா மாவட்டம் மெரகபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா (22). இவருக்கும், நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் நிச்சயித்து திருமணமானது.

திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் புஷ்பா, விஜயவாடாவிற்கு சென்று விட்டார்.

விஜயவாடாவில் தங்கியிருந்த போது, அதே பகுதியில் கார் ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் ஷேக் ஷாம்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சித்தார்த்த நகரில் உள்ள பி.சவரம் கிராமத்தில் தனியாக வாடகைக்கு ஒரு வீடு எடுத்து, இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் மதுபோதைக்கு ஷாம் அடிமையானதால், பணத்தேவை அதிகரித்ததில், பணம் கேட்டு புஷ்பாவை அடிக்கடி துன்புறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற ஷாம், அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், புஷ்பாவை விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பா மறுத்துள்ளார். இதனால் ஷாம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், புஷ்பாவை சரமாரியாக குத்தினார்.

இதில் புஷ்பா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் ஷாம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஷேக் ஷாமை தேடி வருகின்றனர்.

“இருக்கவே பிடிக்கவில்லை” சகோதரிக்கு தகவல் அனுப்பிவிட்டு 17 வயது மாணவி விபரீத முடிவு!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவரது தந்தை உயிரிழந்த நிலையில் மாணவி தனது தாய் மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து எதிர்ப்புகள் எழுந்ததால் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக இருவருமே பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் மன விரக்தியில் இருந்த மாணவி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்கா செல்போனை எடுத்து காதலனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் காதலன் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் இருந்து “அம்மாவை நல்லா பாத்துக்கோ, எனக்கு இருக்கவே பிடிக்கல, செத்துவிடலாம் என்று தோணுது, பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க” என அக்காவிற்கு அனுப்பி விட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கழுத்தளவு தண்ணீரில் மைக் பிடித்து நேரலை செய்த பத்திரிக்கையாளர் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அதிர்ச்சி!!

பாகிஸ்தானில் கழுத்தளவு தண்ணீரில் மைக் பிடித்து நேரலை செய்த பத்திரிக்கையாளர் வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தில் நேரலை செய்த பத்திரிக்கையாளர்

பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26-ம் திகதி முதல் கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்த வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதோடு, வெள்ளம் சூழ்ந்த இடங்களில் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில், வெள்ளம் காரணமாக ராவல்பிண்டியில் உள்ள சாஹான் அணை உடைந்திருப்பதால் அங்குள்ள பகுதிகள் மூழ்கின.

இந்நிலையில், ராவல்பிண்டியில் பத்திரிகையாளர் ஒருவர் கழுத்தளவு வெள்ளத்தில் இறங்கி மைக்குடன் நேரலை செய்து கொண்டிருந்தார். அவர் வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளார்.

தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை செல்லும் சிறுமிகளிடையே கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு!!

பாடசாலை செல்லும் சிறுமிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவது குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கவலை தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று (18.07.2025) உரையாற்றிய அவர், 18 வயதுக்குட்பட்ட இளம் பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பமாவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் இந்த இளம் பெண்கள் மிகப்பெரிய உடல் மற்றும் உளவியல் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும், அவர்களில் பலர் இளம் வயது கர்ப்பம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.

மாணவர்களுக்கு முடிவுகளை எடுக்கத் தேவையான அறிவு மற்றும் புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, பாடசாலைகளில் விரிவான பாலியல் கல்வியை வழங்குவது குறித்து கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிறக்கும் குழந்தைகளை கைவிடுவதற்கு அல்லது அநாதரவானவர்களாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளைத் தடுப்பது அவசியமாகும்.

இல்லையெனில் அவர்கள் பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் வளர்ந்து பல்வேறு சமூக குறைபாடுகளை எதிர்கொள்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

திட்டமிடப்படாத கர்ப்பத்தின் சுமையும் அதன் விளைவாக ஏற்படும் சமூக களங்கமும் பெரும்பாலும் இளம் பெண்கள் மீது மட்டுமே விழுகின்றன. இதனை நாம் உடைக்க வேண்டும்.

ஒரு குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க ஒருவர் தயாராக இல்லை என்றால், பாதுகாப்பற்ற முறைகளை நாடுவது அல்லது பிறந்த பிறகு குழந்தையை கைவிடுவது குற்றமாகும்.

எதிர்பாராத கர்ப்பங்களைத் தவிர்க்க, அறிவியல் கருத்தடை முறைகளைப் பின்பற்றவும், பொறுப்பான தேர்வுகளை எடுக்கவும் இளைஞர்கள் முன்வரவேண்டும் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய புலம்பெயர்தல் விதிகளில் மாற்றம் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!!

எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் பிரித்தானியா செல்பவர்களுக்கான (skilled workers) குறைந்தபட்ச வருமான வரம்பு, 38,700 பவுண்டுகளில் இருந்து 41,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.

மேலும், பிரித்தானியாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வருமான வரம்பு உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து, புதிய விதிகளுக்கு அமைய, 111 வகையான தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களுக்கு இல்லாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இனி பிரித்தானியாவில் வெளிநாட்டவர்கள், பராமரிப்பு பணியாளர் (care worker) தொழிலுக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த விதிகள் அனைத்தும் இம்மாதம் 22ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளன என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், 2026ஆம் ஆண்டின் இறுதியில், பட்டப்படிப்பு படிக்காதவர்களுக்கான வேலைகள் செய்பவர்கள் முதல் சில பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர முடியாது எனவும் விதிகள் கூறுகின்றன.

மேலும், ஆண்டு இறுதியில் மொழித்தகுதி, ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்கள் (CoS), மற்றும் குடும்ப விசா தொடர்பிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த திடீர் முடிவால் பல நாடுகளில் உள்ள பல்வேறுபட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லாது போகும் அபாயம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் மூவர் அதிரடியாக கைது : காரணம் இதுதான்!!

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (18.07.2025) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸார் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 3 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ்போதைப் பொருளும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 266 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும்,

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 230 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்க்கப்பட்டன.

இதனையடுத்து, குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியா கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் : மேலும் 5 பேர் கைது!!

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் நேற்றையதினம் (18.07.2025) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

இதன்போது அப் பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீது அந்த பகுதியில் குழுமி இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 5 பொலிஸார் காயமடைந்ததுடன், பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்று கூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியமை, இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து மேலும் 5 பேர் நேற்று (18) கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்தவருக்கு நேர்ந்த கதி!!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்த ஒருவரைப் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார்.

தீபக் மஹாவர் என்ற 42 வயதுடைய பொதுமகன் ஒருவர் பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவமுள்ளவராவார்.

பர்பத்புரா கிராமத்தில், ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதைப் பிடிக்குமாறும் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து அங்குச் சென்ற அவர், அந்த விஷப்பாம்பை பிடித்துள்ளார். பின்னர் குறித்த விஷப் பாம்பை அவர் கழுத்தில் போட்டு உந்துருளியில் செல்லும் போது காணொளி எடுத்துள்ளார்.

இந்த நிலையில் விஷப்பாம்பு தீபக் மஹாவரை தீண்டியுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வீதியால் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : கதறும் உறவுகள்!!

உறவினரின் வீட்டுக்கு வீதியால் நடந்து சென்ற சிறுவனைப் பின்னால் வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நெற் ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷனுக்கு ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது!!

நேற்று (18.07.2025) இடம்பெற்ற வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் வவுனியா நெற் இணையத்தின் இளம் ஊடகவியலாளரான பாஸ்கரன் கதீஷன் ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு தனது 17 வயதில் வவுனியா நெற் இணையத்தின் ஊடகவியலாளராக இணைந்துகொண்ட பாஸ்கரன் கதீசன் வவுனியா மாவட்டத்தின் துணிச்சல்மிக்க இளம் ஊடகவியலாளராகவும் செய்திகளை நேர்மையாகவும் நடுநிலையாகவும் வெளிகொண்டுவருபவராகவும் தன்னுடைய பணியை திறம்பட செய்துவந்தார்.

இவரது துணிச்சல், நேர்மை, விடாமுயற்சி என்பவற்றின் பலனாக ஓர் சில வருடங்களிலேயே சர்வதேச ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், தேசிய தொலைக்காட்சிகள், வானொலிகள், தேசிய பத்திரிகைகள் என்பவற்றில் ஊடகவியலாளராக பணியாற்றும் சந்தர்ப்பங்களை பெற்றுக்கொண்டு திறமையாகவும் நடுநிலைமையாகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவருடைய இந்த 13 வருட ஊடகப் பயணத்தில் பல்வேறு சவால்கள், அச்சுறுத்தல்கள், வழக்குகள் காணப்பட்டபோதும் அவை அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு மாவட்டத்தின் மக்கள் பிரச்சனைகளையும், பிரதேச நிகழ்வுகளையும், இலைமறை காய்களாக இருக்கும் கலைஞர்களின் திறமைகளையும் வெளிக்கொண்டுவரும் துணிச்சல்மிக்க இளம் ஊடகவியலாளராக வலம்வருகின்றார்.

இவரது 13 வருட சேவையை பாராட்டி கெளரவிக்கும் முகமாக வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார விழாவில் ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவருக்கு வவுனியா மாவட்டத்தின் பல்வேறு துறைசார்ந்தோர் உட்பட வவுனியா மக்கள் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

வவுனியா நெற் இணையத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய பாஸ்கரன் கதீசனை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக பாராட்டி வாழ்த்துவதில் நாமும் பெருமைகொள்கின்றோம்.

இன்று இடம்பெற்ற கோரவிபத்து : 10 பேர் காயம்!!

அநுராதபரம் -திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (19.07.2025) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேனொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் திறப்பனை போக்குவரத்து பொலிஸ் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

கொழும்பில் 21 இந்திய பிரஜைகள் அதிரடியாக கைது!!

கொழும்பு புறநகர் கிருலப்பனை பகுதியில் சட்டவிரோதமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்தியப் பிரஜைகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யபட்டுள்ளனர்.

இந்திய பிரஜைகள் சுற்றுலா விசாவில் இலங்கை வந்ததும், அவர்களது விசா காலம் முடிவடைந்த பின்னரும் கிருலப்பனையில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் இடர் மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள், தரவு பகுப்பாய்வு மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதான இந்தியய பிரஜைகள் வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இலங்கையை உலுக்கிய சம்பவம் : கணவனைக் கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த மனைவி!!

அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலம் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று (17) மீட்கப்பட்ட நிலையில் அதுதொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸாருக்கு கடந்த 08 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

பின்னர், காணாமல்போன நபரின் வீட்டின் பின்புறத்தில் கடந்த புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போனவர் தினமும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

மனைவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் , கடந்த மே மாதம் 11 ஆம் திகதி தனக்கும் தனது கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் தகராறின் போது தனது கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்தாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து வீட்டின் பின்புறத்தில் நேற்று (17.07) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த கணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரொருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வயலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை : தாயைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணை!!

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் நேற்று (17) பிற்பகல் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் உள்ள மரத்திற்கு அடியில் குழந்தை ஒன்று இருப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

இந்த குழந்தையின் தாய் குழந்தையை வயலில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், குழந்தையின் தாயை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிரிவி கமராக்களையும் சோதனை செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.