ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு!!

ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரையுலகின் காதல் ஜோடிகளில் ஒன்றான இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பு அளித்துள்ளது.

வகுப்பு நண்பர்களான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி, காதல் ஜோடியாக தங்களது இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக துவங்கியவர்கள், திடீரென தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் பிரிவதாக கடந்த 2024ம் ஆண்டு அறிவித்தனா்.

அதன் பின்னர் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடா்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கி இருந்தது.

6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இருவரும் இனி தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை என்றும் இருவரும் பிரிந்து வாழவே விரும்புவதாக தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

அப்போது குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டு நேற்று தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமாயணம் தொடரில் குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் மூச்சுத்திணறி பலி : சகோதரரும் உயிரிழப்பு!!

ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மாவும், அவரது சகோதரரும், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 4வது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த வீர் ஷர்மா, குடும்பத்தினருடன் இரவு வீட்டில் அனைவரும்

தூங்கிக் கொண்டிருந்த போது மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் புகைமூட்டம் சூழ்ந்ததால் மூச்சு திணறி உயிரிழந்தார். வீர் ஷர்மாவின் சகோதரர் செளர்யா ஷர்மாவும் இந்த தீ விபத்தில் உயிரிழந்தார்.

தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றின் ஆசிரியரான இவரின் தந்தை இந்த தீ விபத்து சம்பவத்தின் போது பஜனைக்காக கோவிலுக்குச் சென்றிருந்தார். வீர் ஷர்மாவின் தாயார் ரீடா ஷர்மாவும் நடிகை என்பதால், மும்பையில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்துள்ளார்.

வீட்டில் வீர் ஷர்மா தனது சகோதரருடன் தனியாக இருந்த போது நள்ளிரவு 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. ஜன்னல் வழியாகப் புகை வெளியே வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர்,

தீ விபத்து குறித்து சர்மாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு உள்ளே மூச்சுத் திணறலில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்து விட்டனர். மும்பையில் உள்ள அவரின் தாயார் மருத்துவமனைக்கு வந்ததும் அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. குடும்பத்தின் விருப்பப்படி சிறுவர்களின் இருவரின் கண்களும் தானமாக வழங்கப்பட்டன.

சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மா.

இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்தவர். சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறு வயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி நகையை அடகு வைத்து மோசடி : தலைமறைவான இளம்பெண்!!

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்து விட்டு, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பித்து சென்று தலைமறைவான இளம்பெண்ணை மூன்று ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செறுவன்னூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா (32). இவர் கடந்த 2022ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 226 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சம் பணம் பெற்றார்.

பின்னர் நிதி நிறுவன ஊழியர்கள் தணிக்கை செய்த போது, வர்ஷா அடகு வைத்தது போலி நகை என்பதும், ரூ.9 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து நிதி நிறுவனத்தினர் வர்ஷாவிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஸ்கூட்டரில் அற்றப்புழா பாலம் அருகே சென்றார்.

அங்கு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்றார். இது குறித்து நிதி நிறுவன உரிமையாளர்கள் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான வர்ஷாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் வர்ஷா தனது குடும்பத்தினருடன் வாட்ஸ்-அப் செயலி மூலம் பேசி வந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர் திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வர்ஷாவை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பண மோசடி வழக்கில், தலைமறைவான பெண் 3 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தன்னைவிட 45 வயது இளைய பெண்ணை மணந்த நபர் : மறுநாள் காலை கிடைத்த அதிர்ச்சி செய்தி!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன்னைவிட 45 வயது இளைய பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டார் 75 வயது முதியவர் ஒருவர்.

திருமணம் முடிந்த மறுநாள் காலை இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி காத்திருந்தது.

உத்தரப்பிரதேசத்திலுள்ள Jaunpur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sangruram (75). மனைவியை இழந்த அவர், தனது முதல் திருமணம் மூலம் பிள்ளைகளும் இல்லாததால் தனிமையில் வாடிவந்துள்ளார்.

ஆகவே, மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார் Sangruram. ஆனால், இந்த வயதில் இனி ஒரு திருமணம் வேண்டாம் என அவரது உறவினர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால், திங்கட்கிழமை, அதாவது, செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, Manbhavati (35) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் Sangruram. Manbhavatiயின் முதல் திருமணம் மூலம் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். நீ வீட்டைப் பார்த்துக்கொண்டால் போதும்,

நான் விவசாயம் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து உன்னையும் உன் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்கிறேன் என்று Sangruram தனக்கு வாக்களித்ததாகத் தெரிவிக்கிறார் Manbhavati.

ஆனால், திருமணம் முடிந்து மறுநாள் காலை திடீரென Sangruramஇன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

திருமண வீட்டில் அலங்காரங்கள் கூட அகற்றப்படாத நிலையில், அங்கு ஒரு மரணம் ஏற்பட்டுள்ள விடயம், மணப்பெண்ணான Manbhavatiக்கும், இரு குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிப்பு!!

நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

குடியரசுக் கட்சி தற்போதைய நிதி திட்டத்தை ஏழு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சி சில சலுகைகள் வழங்கப்படாமல் இதை ஏற்க மறுக்கிறது.

இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 35 நாட்களுக்கு இவ்வாறு அமெரிக்க அரசாங்க நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முடக்க நிலையானது அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியமான சேவைகளை இந்த முடக்க நிலை நேரடியாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் முரண்பாட்டு நிலைமை காரணமாக நிதி செலவிடுவது குறித்த பிரேரணைகளை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாவிட்டால், அரசு சட்டப்படி நிதி செலவிட முடியாது. அவ்வாறான நிலைமையே முடக்கம் என அழைக்கப்படுகின்றது.

இந்த முடக்க நிலை காரணமாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக தூதரகத்தின் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்ற வகையிலான தகவல் ஒன்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ் கணக்கு அடிக்கடி இற்றைப்படுத்தப்பட மாட்டாது எனவும் அத்தியாவசியமான பாதுகாப்பு விடயங்களுக்கு மட்டுமே இந்த கணக்கு இற்றை படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எனினும் கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (01.10.2025) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

100 மில்லியன் ரூபா மோசடி : பெண்ணிடம் ஏமாந்த 164 தொழிலதிபர்கள்!!

2024 ” உறுமய ” திட்டத்தின் கீழ் உரிமையற்ற நிலங்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) மோசடி செய்த சந்தேக நபரும்,

பெண்ணும் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் பணம் மோசடி செய்யப்பட்ட நபரை சிறிகொத்த தலைமையகத்திற்கும் கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கும் அழைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 43 வயதான சந்தேக நபரான பெண், பக்கமுன பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கிரிபத்கொட பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தற்காலிகமாக வசித்து வருகிறார் என்றும்,

சந்தேக நபர் 55 வயதான மகரகமவைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உறுமய திட்டத்தின் கீழ் உரிமையற்ற நிலங்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்குவதாகக் கூறி கல்முனை பகுதியில் 164 தொழிலதிபர்களை ஏமாற்றி, தன்னை ஒரு வழக்கறிஞராக அறிமுகப்படுத்தி,

தொழிலதிபர்களை ஏமாற்றி, ஒருவரிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில்!!

மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய பெண்ணும் 2 1/2 மாதக் குழந்தையும் நேற்று கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாத்தறை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சமீர மீகந்தவத்த, நீண்ட வாதங்களை முன்வைத்தார். இளம் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அது குழந்தைக்கு அநீதியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிணை வழங்க மறுத்த மாத்தறை தலைமை நீதவான் சதுர திசாநாயக்க மறுத்துள்ளதுடன் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி!!

கனடாவின் ரொண்டோ மாநகராட்சியின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் ஷான் வெற்றியீட்டியுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 37 வாக்குச் சாவடிகளில் 36 வாக்குச் சாவடிகளின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. நீதன் சண்முகராஜா 5174 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்பதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட அனு சிறிஸ்கந்தராஜா 3374 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கனடாவில் நகராட்சியொன்றின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார்.

முன்னாள் உறுப்பினர் ஜெனிபர் மெக்கெல்வி நாடாளுமன்ற உறுப்பினராக (Ajax) பதவி ஏற்றதால் காலியாகியிருந்த அந்த இடத்தை ஷான் வகிக்கவுள்ளார்.

“நன்றி ஸ்கார்பரோ-ரக் பார்க். இது நீண்ட, சோர்வான, ஆனால் புத்துணர்ச்சி ஊட்டும் தேர்தல் பிரசாரம்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் எங்களுடன் உழைத்தனர்” என்று தனது வெற்றியைத் தொடர்ந்து நீதன் ஷான் எனப்படும் நீதன் சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

வாக்குச்சின்னங்கள் அகற்றப்பட்ட போதும், தொண்டர்கள் அதை மீண்டும் நிறுத்தியதைக் குறிப்பிட்ட அவர், “என் அணியின்மீது பெருமை கொள்கிறேன். இது பல தலைமுறைகள் இணைந்து உழைத்த பிரசாரம்” என பாராட்டினார்.

அவருடைய மனைவியும் இரண்டு மகன்களும் மேடையில் அவருடன் இணைந்தனர். “போட்டி என்பது வெற்றிக்காக மட்டும் அல்ல; அது கருத்துகளை பகிர்வதற்கும்” என மற்ற வேட்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“ஸ்கார்பரோ இனி புறக்கணிக்கப்பட முடியாது. எங்கள் குரல் நகரசபையில் கேட்கப்படும். தேவைப்பட்டால் உறுதியாக நிற்பேன். ஸ்கார்பரோவின் ஆறு பகுதிகளின் மக்களின் குரலாக நான் செயல்படுவேன்” என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் அவர் இந்த நகராட்சி மன்ற உறுப்பினர் பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

46 வயதான நீதன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!!

அநுராதபுரத்தில் ஹொரவபொத்தனை – கபுகொல்லேவ வீதியின் கட்டுவரகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கபுகொல்லேவயிலிருந்து ஹொரவபொத்தனை நோக்கி பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹொரவபொத்தனை , கட்டுவரகொல்லேவ மற்றும் நெலுகொல்லேவ பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.

மோட்டார் சைக்கிளின் அதிக வேகமே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒட்டுசுட்டானில் விபத்து!!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பஸ் இன்று புதன்கிழமை (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பத்துடன் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் விபத்தில் காயங்களுக்கும்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்!!

கண்டி, கடுகண்ணாவையில் உள்ள ஊரபொல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை ஏற்றிச் சென்ற லொரி மோதியதில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கடந்த 28 ஆம் திகதி இரவு நடந்ததாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அரநாயக்க பகுதியை சேர்ந்த 24 வயதான திவங்க பியதிஸ்ஸ எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​கொழும்பு நோக்கிச் சென்ற வாகனங்கள் ஏற்றிச் சென்ற லொரியுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக கடுகண்ணாவ பொலிஸார் வாகனங்களை ஏற்றிச் சென்ற லொரியின் 24 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவரின் உடல் பேராதனை போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டையிழந்த கார் மின் கம்பத்துடன் மோதி விபத்து!!

மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடியில் கட்டுப்பாட்டையிழந்த கார் வீதியின் அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடைபெற்ற போது காரில் இருவர் பயணித்துள்ள நிலையில் தெய்வாதீனமாக இருவருக்கும் எவ்வித காயம் ஏற்றபடவில்லை. எனினும் காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

நாட்டில் சில எரிபொருட்களின் விலைகள் இன்று (30.09.2025) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும். அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் நடைபெறவுள்ள Miss Grand International – 2025 அழகிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கைப் பெண்!!

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 12வது Miss Grand International – 2025 அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி திஷானி பெரேரா என்ற பெண் ஒருவர் பங்குபற்றவுள்ளார்.

இந்த அழகிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக திஷானி பெரேரா என்ற பெண் இன்று திங்கட்கிழமை (29.09.2025) அதிகாலை 1:30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கி புறப்பட்டுள்ளார்.

இந்த அழகிப் போட்டியில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த அழகிப் போட்டின் சுற்றுக்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!!

கடுகண்ணாவை – கொழும்பு பிரதான வீதியில் ஊராபொல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய மாணவன் ஆவார்.

இந்த பல்கலைக்கழக மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து 25 வயதுடைய பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.