செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த குரங்கு ஒன்று சிறுமியொருவரை கடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மாத்தளை – யடவத்தை, துத்திரிபிட்டிய, டல்லேவாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட குரங்கு உயிரிழந்தவர்களின் மகள்களை கடித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் குரங்கை வளர்த்து வந்த நபர், சிறுமியின் தந்தையை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை தொடர்பில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் 3 மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனைத் திரவியத்தை முகர்ந்ததால் திடீர் சுகவீனமுற்று இன்று (16) லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நச்சுத்தன்மை வாய்ந்த வாசனைத் திரவியத்தை முகர்ந்ததன் காரணமாக இந்த மாணவர்கள் தலைசுற்றல், தலைவலி, குமட்டல், வாந்திபேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிரதேச பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவாராச்சி தெரிவித்தார்.
அத்தோடு, மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு வாசனைத் திரவியமொன்றைக் கொண்டுசென்றதாகவும் அதனை ஏனைய மாணவர்களுக்கும் பூசியதாலேயே, அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15.07.2025) இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்துள்ளார்.
இதன்போது இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் பெண்னை வழிமறித்து கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கலியை பறித்து கொண்டு தப்பி சென்றிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதனையடுத்து ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் 32, 22 வயதுடைய தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்தவர் சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரியில் ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற பாடசாலை மாணவியை தீவிர முயற்சிகளின் பின்னர் உள்ளூர் மக்கள் காப்பாற்றியுள்ளனர்.
கலவான, வெட்டகல பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்தவர் என தெரியவந்துள்ளது.
பரீட்சையில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம் காரணமாக அவர் இவ்வாறு உயிரை மாயக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இளைஞர்கள் குழு ஒன்று தங்கள் மகளை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்று ஆற்றில் தள்ளிவிட்டதாக பெற்றோரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாதுகாப்பு கமரா காட்சிகளை பயன்படுத்தி பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் உள்ளூர் மக்கள் சிறுமியை மீட்டு கலவான பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையின் போது, பரீட்சையில் தோல்வியடைந்தமையால் இந்த முடிவை எடுத்ததாக சிறுமி குறிப்பிட்டுள்ளார். சிறுமி மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி செல்வி ஜெகதீஸ்வரன் நிரோஜா, பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக 9ஏ சித்திகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாணவியின் வரலாற்றுச் சாதனையை பாராட்டும் முகமாக அவருக்கு நேற்றையதினம் (15) கௌரவிப்பு இடம்பெற்றது.
இதன்போது மாணவி, பாடசாலை அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று (15) மூளாய் சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலிருந்து பான்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு பாடசாலை சிவமலர் மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் கல்வித் திணைக்களத்தின் சங்கீத ஆசிரிய ஆலோசகர், கிராம உத்தியோகத்தர் ந.சிவரூபன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தினர்,
பாடசாலை முன்னாள் அதிபர், பொது அமைப்பின் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர். அதேவேளை பாடசாலைக்கு வரலாற்று பெருமையை தேடிக்கொடுத்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம் ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார்.
குறித்த முகவர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தனது பணத்தினை மீள வழங்குமாறு தொடர்ச்சியாக முகவரிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த பணம் ஒன்லைனில் களவாடப்பட்டதாக முகவர் கூறியுள்ளார்.
இதனால் விரக்தியில் நேற்று முன்தினம் (14.07.2025) அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். வைத்தியசாலையில் அனுமதி பின்னர் காலை வாந்தி எடுத்துள்ளதுடன் மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
பின்னர் அவர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வரலாற்றின் தடம் பதித்து முதல் பெண் தவிசாளராக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக கிருஸ்ணவேணி திருநாவுக்கரசு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அந்த வகையில் தவிசாளர் வடக்கு பிரதேச சபை மக்களுக்கு ஒர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் முகமாக தொலைபேசி இலக்கத்தினை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
074 – 2433682 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி உடனடியாக தமது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.
குறித்த மரணத்திற்கு அந்தபகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம் எனத் தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்நிலையில், மரணித்தவர் மாரடைப்பு காரணமாக மரணித்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்காக இருவரை அழைத்திருந்தனர்.
அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களை கைது செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தினர்.
அவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நபர்களை கைதுசெய்யுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றயதினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் ஒருவர் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு ஊர்திப்பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் -2025 மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18.07.2025) பண்பாட்டுபவனி பிரதேச செயலகம் முன்பாக காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் அரங்க நிகழ்வுகள் பிற்பகல் 3.00 மணிக்கு வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெறும்.
பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் கலைஞர்களுக்கான கலாநேத்ரா விருது வழங்களும் இடம்பெறுகின்றன.
அந்த வகையில் பாஸ்கரன் கதீஷன் (ஊடகத்துறை) , நாகராஜா செந்தூர்ச்செல்வன் (பரதம்), அல்போன்ஸ் மெலிஸ்ரன் (நாடகம்), சந்திரசேகர் அனோஜன் (ஓவியம்), செல்வரத்திணம் சண்முகரத்தினம் (இயல்), சுந்தரம் சிவயோகராஜா (கட்டுரை),
சிவராசா நாகராசா (அறிவிப்பு), வல்லிபுரம் கந்தப்பு (மெல்லிசை), சேனாதிராசா சந்திரகாந்தன் (வாத்திய இசை), மாசிலாமணி தர்மகுலசிங்கம் (வாத்திய இசை) ஆகிய துறைகளை சேர்ந்த கலைஞர்கள் விருதினை பெறுகின்றனர்.
வவுனியாவின் குரல் தெரிவில் தெரிவு செய்யப்பட்ட 18வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான வவுனியாவின் குரல் விருதும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இப் பண்பாட்டு பவனி ஊர்தியானது பிரதேச செயலக வரலாற்றில் முதன் முறையான அனைத்து கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கி அவர்களின் கிராமத்தினை பிரதிபடுத்தும் வகையில் ஊர்தி அலங்கரிப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.
உத்தரப்பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் கலப்பட பால் வியாபாரம் பெருகி வருகிறது. மத்தியப் பிரதேசத்திலிருந்து ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்ட 5,000 லிட்டர் கலப்பட பாலை உணவுத் துறை அதிகாரிகள் சோதனையில் பிடித்தனர்.
UP 80 GT 8088 என்ற பதிவு எண்ணுடன் கொண்டிருந்த அந்த டேங்கர் லாரி, ஆக்ரா-பா சாலையில் உள்ள அர்னாட்டா கிராமம் அருகே வழிமறிக்கப்பட்டது. பாலை பரிசோதனை செய்யும் வசதி இல்லாமல் கொண்டு வரப்பட்டது என்பதையும்,
அதன் தரத்தில் சந்தேகம் இருப்பதையும் உணர்ந்த அதிகாரிகள், அந்த 5,000 லிட்டர் கலப்பட பாலை நேரில் சாலையில் கொட்டினர். பால் மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளன.
ஆக்ரா அருகே உள்ள ககரௌல் பகுதியில் வசிக்கும் பூரா என்ற கால்நடை வியாபாரியின் 11 மாத குழந்தை அவான் மற்றும் 2 வயது மகள் மஹிரா. இருவரும் இரவு பாலை குடித்துவிட்டு தூங்கச் சென்றனர். அதிர்ச்சியாக இருவரும் மறுநாள் காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
அவர்கள் குடித்த பால், ஜாக்னர் பகுதியில் உள்ள பச்சுவின் பால் பண்ணையிலிருந்து கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அந்த பண்ணையிலும் உணவுத் துறை குழுவினர் சோதனை நடத்தி மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
பால் கொண்டு வந்த டேங்கர் ஓட்டுநர் ரவீந்திர ராவத், “நான் மொரேனாவைச் சேர்ந்தவன். இந்த பாலை தியாகி பால் பண்ணையிலிருந்து ஆக்ராவுக்கு விற்பனைக்காக கொண்டு வந்தேன்” என தெரிவித்துள்ளார். அந்த பண்ணையை சுகேந்தர் தியாகி என்பவர் நடத்துகிறார்.
பால் மாதிரிகள் தற்போது ஆய்வகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறிக்கைக்கு பிறகு,
சம்பந்தப்பட்டவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டம், 2006 கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த 6 நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போன பல்கலைக்கழக மாணவி சினேகா தேப்நாத்தைப் பல இடங்களிலும் போலீசார் தேடி வந்த நிலையில், டெல்லி யமுனை ஆற்றில் சினேகா தேப்நாத் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார்.
டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7ம் தேதி மாயமானார். இதையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகாரளிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையின் போது, “சினேகா தேப்நாத் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவுள்ளதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கி விட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். இதையடுத்து யமுனை ஆற்றில் தேடும் பணி நடைபெற்றது.
நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் நேற்று இரவு மீட்டனர். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தலைவர் கமல்ஹாசன் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவ, ராவதவத்தையை சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலும் விசாரித்தபோது, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம்,
சந்தேக நபரின் வீட்டிலிருந்து 25 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள், 8 போலி 1,000 நாணயத்தாள்கள், 1 போலி 100 ரூபாய் நாணயத்தாள் மற்றும் 2 போலி 20 ரூபாய் நாணயத்தாள்களும் மீட்கப்பட்டன.
மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹியங்கனை – பதுளை வீதியின் மாபகடவெவ 17வது மைல்கல் அருகே பயணித்த கார் ஒன்று மகாவலி வியன்ன கால்வாயில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து கால்வாயில் கவிழ்ந்த காரை விரைவாகவும் மிகுந்த முயற்சியுடனும் மீட்டனர்.
எனினும் காருக்குள் இருந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் அம்புலன்ஸ் மூலம் மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் அங்குள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளுக்கான இணைய விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்காக சர்வதேச இடம்பெயர்வு அமைப்புக்கு (IOM) ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20 தூதரகங்கள் மற்றும்அலுவலகங்களை உள்ளடக்கிய பயோமெட்ரிக் பிடிப்பு மையங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதற்கும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையுடன் இணைய இணைப்பை எளிதாக்குவதற்கும்,
ஒருங்கிணைப்புக்கான பொருத்தமான அமைப்புகள்மற்றும் மென்பொருளை உருவாக்குவதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கும் இந்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த திட்டத்துக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கும், அதனை செயல்படுத்த தேவையான நிதியை வழங்கவும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்ட 20 இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் இணையத்தினூடாக கடவுசீட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த வெளியுறவு,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய பருவ காலத்தில் அதிகமாக கிடைக்கும் ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்கள் டெங்கு நோய்க்கான நுளம்புகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
இத்துடன், பலர் இந்த பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வீடுகளின் வெவ்வேறு இடங்களிலும் வீசுவதால், அவை டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.
குறித்த பழங்களின் தோல்களை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு வைத்தியர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய மங்குஸ்தான், ரம்புட்டான் ஆகியவற்றின் பழத்தோல்கள் போன்ற குறைந்த அளவிலான நீர்தேங்கும் இடம் போதுமானது என்பதால், அவை டெங்கு நுளம்புகள் பெருக உகந்த இடமாக அமையும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.