இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாட்டில் 5 பேரில் 2 பேருக்கு மட்டுமே கணினி அறிவு உள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கணினி அறிவு விகிதம் இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2024 ஆண்டில் மக்கள் மத்தியில் கணனி அறிவு 3.1 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
குடிசன மதிப்பீட்டு, புள்ளி விபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த மாதம் 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்காக 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 2025.09.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 150 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கான காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விகளை கேட்பது பொறுத்தமானதாக அமையும் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலத்த காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அங்கொட பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அயல் வீட்டு நபர் எனவும் உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து சந்தேக நபர் ஆயுதத்தால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடல் முல்லேரியா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின்1,616,500 ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளது.
இந்தியப் பெண் தனது கணவருடன் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து உப்புவெளியிலுள்ள சுற்றுலா விடுதியில் 24 ஆம் திகதி தங்கியிருந்தார். மறுநாள், கடற்கரைக்கு சென்று சில மணி நேரம் கழித்து தனது அறைக்குத் திரும்பினார்.
அறையில் வைத்திருந்த கைப்பையில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கைப்பையில் இருந்து இரண்டு மோதிரங்கள், பென்டனுடன் கூடிய இரண்டு சங்கிலிகள் மற்றும் இரண்டு வெள்ளி மோதிரங்கள், 180 அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உப்புவேலி பொலிஸார் மற்றும் நிலாவேலி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (25.09.2025) இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தமானது ஜே/211 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூருவில் நடுரோட்டில் மகள் கண் எதிரிலேயே மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்தவர் லோஹித்சவா.
இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், ரேகா கால் சென்ட்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ரேகாவின் சிபாரிசின் பேரில் அதே அலுவலகத்தில் லோஹித்சவாவிற்கு கார் டிரைவர் வேலை கிடைத்தது.
ஒரே அலுவலகத்தில் இருவரும் வேலை செய்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ரேகா தனது மூத்த மகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,
அங்கு சென்ற லோஹித்சவா, ரேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாகுவாதம் முற்றியதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேகா மீது சரமாரியாக மகள் கண் எதிரிலேயே 11 முறை ஆவேசமாக குத்தியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடினார்.
ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்து விழுந்த ரேகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ரேகா உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான லோஹித்சவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ரேகாவின் மகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெருங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் கான்பூரில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறியுள்ளார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு வீட்டில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில், மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித் சோன்கர் தனது மனைவி சாரிகாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது வலது காதை கடித்து குதறியதால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
“அவள் என் காதை தன் பற்களால் கடித்து துண்டித்தாள். அவள் என்னுடன் வாழ விரும்பவில்லை. அவள் பணம் மற்றும் வீடு கிடைத்தவுடன் என்னைப் பிரிந்து செல்லும்படி வற்புறுத்துகிறாள்.
ஆனால் நாங்கள் காய்கறி வியாபாரம் செய்து வாழும் ஏழைகள். அவ்வளவு பணம் எங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்?” என்று அமித் சோன்கர் வருத்தத்துடன் கூறினார்.
அவர் சோபாவில் படுத்திருந்தபோது, மனைவி சண்டையிட்டு தன்னைத் தாக்கியதாக சோன்கர் தெரிவித்தார். “திங்கள்கிழமை, வீட்டில் சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.
அவள் ஆத்திரமடைந்து, நான் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்தபோது சண்டையிட ஆரம்பித்தாள். என்னைப் பாதுகாக்க நான் அவளைத் தள்ளினேன், அதன் பிறகு அவள் என்னை அடித்தாள்.
பின்னர் அவள் கட்டிலில் நின்று கொண்டிருந்தபோது, நான் கீழே நின்றேன், அப்போது என் காதை அவள் கடித்து விட்டாள்,” என்று அவர் கூறினார். மேலும், மனைவி தன்னை ஒரு கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த தம்பதியினர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்து, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
காதில் கட்டுடன் இருந்த கணவர், தனது மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதேபோல, மனைவி சாரிகாவும், கணவர் மீது வன்முறை புகார் அளித்துள்ளார்.
“கணவன்-மனைவிக்கு இடையே விவாகரத்து வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த மோதல் ஒரு சண்டையாக மாறியது.
சாரிகாவின் புகாரின் பேரில், அமித் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரு வழக்குகளும் விசாரணையில் உள்ளன,” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அனுராதபுரம், மொரகொட பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான வானின் சாரதி தவறான திசையில் வேகமாக வாகனத்தை செலுத்தி வந்தமையே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நால்வரும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மோகன் தேனுஜன், பால கிருஷ்ணன் நிஷாந்தன், பரமேஸ்வரம் சசிகுமார் மற்றும் விமலஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் வானின் சாரதியும் அடங்குவார். உயிரிழந்த மற்ற மூவரும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.
வானில் பயணித்த முல்லைத்தீவு மற்றும் அனுராதபுரம், கலத்தேவ பிரதேசங்களை சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த லொறி சாரதி ஆகியோர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா-எலவிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வானும், அனுராதபுரத்திலிருந்து குளியாப்பிட்டி நோக்கிச் சென்ற கொள்கலன் லொறியும் நேற்று அதிகாலை 4.40 மணியளவில் தலாவ பொலிஸ் பிரிவு பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
விபத்து நடந்த நேரத்தில், வானில் சிக்கிய காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வர, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உட்பட, வீதியில் பயணித்தவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் வானில் ஆறு பேர் பயணம் செய்ததாகவும், ஓட்டுநரை தவிர மற்ற அனைவரும் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வான் தெற்கு நோக்கிச் சென்று எதிர் திசையில் இருந்து வந்த கொள்கலன் லொறியுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
வானின் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததாகவும், வான் தவறான திசையில் அதிக வேகத்தால் வந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் வானின் ஓட்டுநர் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வானில் பயணித்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விபத்துடன் லொறி ஓட்டுநர், கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கைது செய்யப்படவுள்ளார்.
விபத்தில் உயிர் பிழைத்த இருவரில் ஒருவர், அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்து, அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், அதே நேரத்தில் அனுராதபுரம் கலத்தேவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
யாழ்ப்பாணம்-சாவகச்சேரி, நுணாவில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று(25.09.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனத்தை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதனால் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மீசாலை வடக்கு, புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த தி.யதுஸ் (வயது 20) என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்தார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என அருச்சுனா எம்பிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நோஸ் கட் செய்த சம்பவம் இன்று நாடாளும்ன்றில் இடம்பெற்றுள்ளது.
எனக்கு பதிலளிக்க நேரத்தை தரவும் இல்லைஎன்றால், குழப்பம் விளைவிக்கும் நபர்களை சபையில் இருந்து வெளியேற்றவும் என்றும் பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26.09.2025) முன்னதாக கேள்வியெழுப்பிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, யாழ். மாவட்டத்தில் செய்த அபிவிருத்தி திட்டங்களின் ஒன்றை கூறுமாறு கேட்டார்.
இதனிடையே அமைச்சின் அறிக்கையை வாசிப்பதற்காக, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை, சபாநாயகர் அழைத்தார். அப்போது எதிரணியில் இருந்த சுஜீவ, கேள்விக்கு பதில் இல்லையா? எனக் கேட்டார். எனினும், சுஜீவ உங்களையும் அந்த வாட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும் என அமைச்சர் பிமல் கூறினார்.
மறுபுறத்தில் இருந்த சுஜீவ, எந்த வாட்டுக்கு என்று கேட்க, பின்னர் கூறுகிறேன் என்றார் பிமல், இதனிடையே எழுந்த அர்ச்சுனா, கேள்விக்கு பதில் இல்லையா? எனக்கேட்டார்.
அதற்கு பதொஇலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பைத்தியங்களின் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்றும், சபையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை உடனடியாக வெளியேற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவ வெற்றிலை பெட்டி அல்ல, என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்றைய அமர்வின் போது தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் செய்த ஒரு அபிவிருத்தி திட்டத்தை கூறுமாறு கேட்ட அவர் யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல என்றும் அர்ச்சுனா எம்பி ஆவேசமாக கூறினார்.
யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல, வரநேரமும் போரநேரமும் சாப்பிடுறதுக்கு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு வேலையை சொல்லுங்கள்,
மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றது என்று ஒரு வேலையை கூறுங்கள் என்றும் , அருச்சுனா எம்பி சபையில் கேள்வி எழுப்பினார்.
கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றையதினம் (26.09.2025) காலை இடம்பெற்றுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த மரம் முறிந்து வீழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி – வக்வெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பிலான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த விபத்தானது சாரதியின் கவனயீனத்தால் இடம்பெற்றிருந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் நூலிழையில் உயிர் தப்பிய நிலையையும் காணொளியில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் தற்போது சாரதிகளுக்கான போக்குவரத்து நடைமுறைகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்களின் பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வீதி விதி ஒருங்குமுறைகள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இதில் குறிப்பாக பேருந்து சாரதிகளின் நடைமுறைகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்துக்களுக்கு சாரதிகளின் கவனயீனமும் காரணமாகியிருந்தன.
இவ்வாறான கவனயீனத்துடன் செயற்படும் பேருந்து சாரதிகள் தொடர்பில் சில முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு, போக்குவரத்து பொலிஸாரால் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறன பின்னணியில் நேற்று காலி – வக்வெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த தனியார் பேருந்தானது ஒரு பெண் இறங்குவதற்கு முன்னர் புறப்பட ஆரம்பித்த நிலையில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழும் காட்சி காணொளியில்பதிவாகியுள்ளது.
மேலும் மழை காரணமாக வீதியில் நீர் தேங்கி வெள்ள நிலை உருவாகிய நிலையிலேயே குறித்த பெண் நிலைத்தடுமாறி அதில் விழுந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் விமர்சனத்துக்குளாளகியுள்ளதுடன் சாரதி தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என சமூக ஆர்வளர்களால் கோரப்பட்டு வருகின்றன.
இலங்கையின் சில இடங்களில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவினை நேற்று, (25.09.2025) கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே பிறப்பித்துள்ளார்.
கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.
இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
அச்சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைகளில் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறி, பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டை பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக செயற்பட்டுள்ளமை மற்றும் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியமை போன்றவற்றை சுட்டிக்காட்டி கோட்டை பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு ‘B’ அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
சம்பவத்தின் திருத்தப்படாத காணொளி காட்சிகளைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அனுமதி வழங்கியுள்ளார்.
வடக்குமாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தகசந்தை வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று(26.09.2025) இடம்பெற்றது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.ஏ,சரத்சந்திர நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இச்சந்தையில் உள்ளூர் உற்பத்திகள் உட்பட 50ற்கும் மேற்ப்பட்ட விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக நாளையதினமும் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தொழிற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், வவுனியா மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட, பலர் கலந்துகொண்டனர்.