வவுனியாவில் முதிரைக்குற்றிகளுடன் விபத்திற்குள்ளான வாகனம் : சாரதி மாயம்!!

வவுனியா புதுக்குளம் பகுதிக்கு அருகாமையில் முதிரைக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபதிற்குள்ளான நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் இன்று(26.09.2025) காலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

குறித்த வாகனம் இரணை இலுப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த போது அங்கு கடமையில் இருந்த பொலிசாரால் வழிமறிக்கப்பட்டுள்ளது. எனினும் நிறுத்தாமல் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் புதுக்குளத்திற்கு அண்மித்த பகுதியில் விபத்திற்குள்ளான நிலையில் பொலிசாரால் அவ் வாகனம் மீட்கப்பட்டது.
வாகனத்தில் இருந்த 11 முதிரைக்குற்றிகளை பொலிசார் கைப்பற்றியிருந்தனர். வாகனத்தின் சாரதி மாயமாகியுள்ள நிலையில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் இளைஞன் செய்த முகம்சுழிக்கும் செயல் : பரிதாபமாக பிரிந்த உயிர்!!

சக பயணியால் தாக்கப்பட்டு பேருந்திலிருந்து கீழே விழுந்த நபரொருவர் பல மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நாரமல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் களுகமுவ, ரத்மல் பொக்குன பகுதியைச் சேர்ந்த 52 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் 19 வயதுடைய வேலையற்ற இளைஞர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் 12.11.2024 அன்று நடந்ததாகவும், அன்றைய தினம் நாரம்மலவிலிருந்து குருநாகல் செல்லும் தனியார் பேருந்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த சம்பவத்திற்கு வழிவகுத்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்ததாகவும், பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன் போது சந்தேகநபர் குறித்த நபரை உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலில் பேருந்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட அவர், பலத்த காயமடைந்து குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 18.05.2025 அன்று உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், மூளையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் மரணம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 22.09.2025 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபரை நாளை, 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2026 இல் கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு அறிமுகம்!!

2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கி ஜம்ப் ஈர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு கோபுரத்திலிருந்து உலகின் மிக உயரமான பங்கி ஜம்ப் ஆகும். கட்டமைப்பு பொறியியலாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தற்போது திட்டமிடல் மற்றும் பொறியியல் கட்டத்தில் உள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதையும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான தெற்காசியாவின் முதன்மையான இடமாக தாமரை கோபுரத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இந்த திட்டம் விளையாட்டு அமைச்சின் கீழ் அல்ல, வணிக ரீதியானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் இலங்கையின் சாகச சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் மனைவி விஷம் குடித்து தற்கொலை பரிதவிக்கும் பிள்ளைகள்!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பொன்னேரி ஊராட்சி, சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்பாண்டி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் அம்முவை காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள்.

அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய உறவினர் ஒருவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர்.

ஆனாலும் அருள் பாண்டி கள்ளத்தொடர்பை விடவில்லை எனத் தெரிகிறது. அருள்பாண்டி, யாருக்கும் தெரியாமல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன் அருள்பாண்டி தனது அவரை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து, தனது மனைவி அம்முவிடம் `இனிமேல் இவர் என்னுடன் தான் வாழ்வார்’ என கூறினாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில், மனவேதனை அடைந்த அம்மு வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலைக்கு காரணமான கணவன் அருண்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் அமர்ந்தே நேரலையில் யாசகம் பெறும் நபர் : நாளொன்றுக்கு 10000 ரூபாய் வருமானம்!!

பெரும்பாலும், கோவில்கள் அல்லது பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வறுமை காரணமாக சிலர் யாசகம் பெறுவார்கள். மக்களும் தங்களால் இயன்றதை அவர்களுக்கு வழங்குவார்கள்.

பிச்சை எடுக்கும் மக்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில், யாசகம் பெறுவது தடை செய்யப்பட்டு, யாசகம் வழங்கினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இளைஞர் ஒருவர் தனது வீட்டில் அமர்ந்து கொண்டே, யூடியூப் நேரலை மூலம், QR ஸ்கேனர் காட்டி, யாசகம் கேட்கிறார். இந்தியாவின் டிஜிட்டல் பிச்சைக்காரர் என அறியப்படும் கோவிந்த் சூர்யா என்ற நபர், Govind Surya 360 என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

4.8 லட்சம் சந்தாதாரர்களுடன் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் 3,800க்கும் அதிகமான வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணி நேரம் நேரலையில் வரும் அவர், QR ஸ்கேனர் காட்டி தங்களால் முடிந்த பணத்தை அனுப்புமாறு யாசகம் கேட்கிறார். சொந்த வீடு கட்டுவதற்கு பணம் சேகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

நேரலையை பார்க்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்,1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தங்களால் இயன்றதை வழங்குகிறார்கள். நேரலை முடிந்ததும், பணம் அனுப்பியவர்கள் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிடுகிறார்.

நாள் ஒன்றுக்கு, ரூ.10,000 வரை கூட வருமானம் கிடைத்துள்ளதாக கோவிந்த் சூர்யா தெரிவித்துள்ளார். இதன் பின்னணி குறித்து பேசிய அவர், கொரோனா காலத்தில் 3 ஆண்டுகள் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததாகவும், ஆனால் என் வயதான தந்தை மிதிவண்டியில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவார்.

அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சங்கடமாக இருந்ததது. இந்த வயதில் அவர் கடுமையாக உழைப்பது வேதனையாக இருந்தது. அதனால் நானும் யாசகம் பெற முடிவெடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பிச்சைக்காரர் என அவரை விமர்சிக்கும் பலர், உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது அவர் ஏன் வேலை செய்யாமல் யாசகம் பெறுகிறார் என கேள்வி எழுப்புகின்றனர்.

 

காட்டுக்குச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று (24) காணாமல்போன நிலையில், இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த முதியவர் நேற்றைய தினம் தனது வீட்டிற்குத் தேவையான விறகை தேடுவதற்காக அருகில் உள்ள காட்டுக்குச் சென்றுள்ளார். எனினும், அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதியவர் வீட்டுக்கு வராத காரணத்தினால் அவரது உறவினர்கள் அவரைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை அந்த முதியவர் சடலமாக அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் காணாமல்போன முதியவரே என அவரது உறவினர்கள் உறுதிப்படுத்திக்கொண்டதைத் தொடர்ந்து, சடலம் தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சொந்த மகள்களையே சீரழித்த தந்தை : அதிரடி காட்டிய நீதிமன்றம்!!

தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இரு குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தை உள நலம் பாதிக்கப்பட்ட தனது ஒரு மகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக 16 வயதுக்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது 8 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்

செய்த முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது குற்றத்துக்காக 10 ஆயிரம், தண்டப்பணம் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டார்.

அடுத்து பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாவும், நான்காவது குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாக செலுத்துமாறும்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குமாறும் இரு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை சமகாலத்தில் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

வென்னப்புவ பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மோட்டார் சைக்கிளின் கிக் பெடல் சரியாக வேலை செய்யாததால், அவர் வாகனத்தைத் தள்ளி இயக்க முயன்றுள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, அவர் வீதியில் தூக்கி வீசப்பட்ட்டுள்ளார். அப்போது, வீதியில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வென்னப்புவ தும்மலதெனிய பகுதியில் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கை வந்த அவுஸ்திரேலிய பயணிக்கு இன்ப அதிர்ச்சி : 18 இலட்சம் ரூபா பணத்திற்கு நடந்தது என்ன!!

கொழும்பில் இருந்து சீகிரியாவை பார்வையிட சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பொதியை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளையின் பெல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சுற்றுலா பயணி ஒருவர் 18 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்ட தனது பொதியை மறந்துவிட்டு சென்றுள்ளார்.

இதனை அறிந்த கடையின் உரிமையாளர், அதனை உரிய நபரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த டென்னி மார்ட்டின் ஸ்டைம் என்ற சுற்றுலா பயணியே இவ்வாறு பொதியை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் உள்ள ஆரியா ரெஸ்ட் உணவகத்தில் மதிய உணவுக்காக குறித்த வெளிநாட்டவர் சென்றுள்ளார்.

இதன்போது பொதியை மறந்த சுற்றுலா பயணி, சிகிரியா பகுதியில் உள்ள ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளனர்.

தனது அறைக்கு வந்த பின்னரே பொதியை மறந்து விட்டு வந்தமை தெரிய வந்த நிலையில், இது குறித்து தனது சுற்றுலா வழிகாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக குறித்த உணவகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, பயணப் பொதி அங்கு பாதுகாப்பாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உணவகத்திற்கு சென்று அவுஸ்திரேலிய பிரஜையான சுற்றுலா பயணி தனது பயண பொதியை பெற்றுக்கொண்டார். பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் பாதுகாப்பாக அப்படியே இருந்தமை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கான உலகின் சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய சுற்றுலாத்துறை இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை இந்தத் தேர்வில் முக்கிய செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் காணப்படும் அழகான கடற்கரைகள், மலைப் பிரதேசங்களுக்கான பயணங்கள், புராதன மற்றும் தொல்பொருள் இடிபாடுகள், வனவிலங்கு சஃபாரிகள் ஆகியவை இலங்கையை உலகின் முதன்மையான சுற்றுலா தலமாக உயர்த்தியுள்ளன.

ஒக்டோபர் மாதத்தில் அனுபவிக்கக்கூடிய பருவகால வசீகரம், கலாசார நிகழ்வுகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை உருவாக்கப்பட்டதாக ‘டைம் அவுட்’ இதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் துருக்கி இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் பலி!!

குருணாகலில் மெல்சிறிபுர பகுதியில் நேற்றைய தினம்(24) இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு வெளிநாட்டு பிக்குகளும் அடங்குவர். விபத்துக்குள்ளான கேபிள் காரில் அந்த நேரத்தில் 13 பிக்குகள் பயணித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் கோகரெல்லை மாவட்ட வைத்தியசாலையிலும் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பிக்குகளின் உடல்கள் கோகரெல்லையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்களின் உடல்கள் குருநாகலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பலர் கடுமையாக காயமடைந்து தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து : 4 பேர் பலி!!

அனுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் தலாவ-மிரிகம சந்திக்கு அருகில் இன்று அதிகாலை சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற லொறியும், குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வேனும் இன்று அதிகாலை தலாவ-மிரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த வேனின் ஓட்டுநர் மற்றும் லொறியின் ஓட்டுநர் உட்பட 6 பேர் சிகிச்சைக்காக தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேனில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வேனில் பயணித்த ஏனைய மூன்று பேர் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொருவர் உயிரிழந்தார்.

ஏனைய இருவரின் நிலைமை மோசமாக உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். தனியார் ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்த இந்த வேன் ஜாஎலவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் வேன் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் ஓட்டுநர் உறங்கியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாநகரசபையின் முக்கிய தேவைப்பாடுகளை உடன் நிவர்த்தி செய்க – சத்தியலிங்கம் எம்.பி அரசாங்கத்திடம் கோரிக்கை!!

வவுனியா மாநகரசபையின் முக்கிய தேவைப்பாடுகளை உடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கையெடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (24.09.2025) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,

வவுனியா நகரசபையானது மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை
வரவேற்கப்பட வேண்டிய விடயம், ஆனால் வெறும் பெயர்ப்பலகையில் மட்டுமே மாநகரசபையாகவுள்ளது. ஒரு மாநகர சபைக்கான வளங்கள் அங்கு இல்லை. மாநகர சபைக்கான ஆளணிகள் நிரப்பப்படவில்லை, வேலைப்பகுதியில் ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றது. அன்றாட கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு போதுமான வாகன வசதிகள் இல்லை.

வவுனியா நகரம் வளர்ந்துவரும் நகரமாகும். அங்கு தீயணைப்பு பிரிவின் முக்கியத்துவம் தேவைப்படுகின்றது. எனினும் மாநாகரசபையில் தனியான தீயணைப்பு பிரிவு ஸ்தாபிக்கப்படவில்லை. தீயணைப்பு வாகனமொன்றும், அம்புலன்ஸ் வாகனமொன்றும் இருந்தாலும் கூட போதுமான ஆளணி இல்லை.

இதே நிலைமை ஏனைய பிரதேச சபைகளிலும் காணப்படுகின்து. எனவே மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை மேம்படுத்த விசேட திட்டமொன்றினை வகுக்கவேண்டுமென இந்த உயரிய சபையில் கோரிக்கை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்.

கொழும்பு பாடசாலை மாணவனை தாக்கிய மட்டக்களப்பு ஆசிரியைக்கு நேர்ந்த கதி!!

 

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த ஆசிரியை பாடசாலையின் நூலகத்தில் வைத்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனிடம் பாட புத்தகம் தொடர்பில் கேள்வி கேட்டட்போது இந்த மாணவன் ஆசிரியையின் கேள்விக்கு பிழையான பதிலை அளித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆசிரியை மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரான ஆசிரியை கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியையின் தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆசிரியைக்கு பிணை வழக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில்!!

உலகளாவிய பயண சஞ்சிகையான ‘டைம் அவுட்’ இவ்வாண்டு ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாக இருப்பதால், அதன் இதமான வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றை குறிப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடற்கரைகள் மற்றும் மலைநாட்டுப் பயணங்கள் முதல் புராதன இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சவாரிகள் வரை, இலங்கை பார்வையாளர்களுக்கு அனைத்தையும் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இலங்கைக்கு அடுத்தபடியாக, இலையுதிர் கால நிறங்கள் மற்றும் பருவகால திருவிழாக்களுக்காக துருக்கி மற்றும் மெக்சிகோ இடம்பெற்றுள்ளன.

ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயார்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இடம்பெற்றிருந்த மற்ற இடங்களாகும்.

வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்த இடங்கள் அவற்றின் பருவகால கவர்ச்சி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஒக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்கள் ஆகியவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியிலிருந்து கைக்குண்டொன்றும், இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.