உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

க.பொ.த உயர் தர பரீட்சை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி மற்றும் அந்த பரீட்சைகள் தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் தடைசெய்யப்படவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதற்கான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 4ம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை உயர் தர பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இம்முறை உயர் தர பரீட்சைக்கு 337,704 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், இதற்கான 2678 பரீட்சை நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 339,369 மாணவர்கள் தோற்றவுள்ளனர். 255,529 சிங்கள மொழி மாணவர்களும், 83,840 தமிழ் மொழி மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதற்காக 2995 பரீட்சை மத்திய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் நடத்துவதை எதிர்வரு் 30 திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கும் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூர் U19 போட்டியில் 150 ஓட்டங்கள் விளாசிய இலங்கை வீரர்!!

இலங்கை வீரர்

இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுகுட்பட்டோருக்கான உள்ளூர் ஒருநாள் போட்டியில், இளம் வீரர் கமில் மிஷார 152 ஓட்டங்கள் விளாசினார். U19 Super Provincial ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. உள்ளூர் தொடரான இதில் கொழும்பு மற்றும் கண்டி அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

முதலில் துடுப்பாட்டம் செய்த கொழும்பு அணியில் தொடக்க வீரரும், கேப்டனுமான கமில் மிஷார அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். ஆனால், அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்கும் வகையில் எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை. விக்ரமசிங்கே 30 ஓட்டங்களும், விஜிசிங்கே 29 ஓட்டங்கள் எடுத்தனர். எனினும், தனியாளாய் நங்கூரம் போல் நின்று விளையாடிய கமில் மிஷார சதம் விளாசினார்.

சதத்திற்கு பின்னரும் அதிரடி காட்டிய அவர், 161 பந்துகளில் 152 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் கொழும்பு அணி 269 ஓட்டங்கள் எடுத்தது. கண்டி அணி தரப்பில் சஞ்சயா 4 விக்கெட்டுகளும், நதீஷன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து கண்டி அணி களமிறங்கியது.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் சென்னையில் : எப்படி வந்தார் என நினைவில்லையாம்!!

இலங்கைத் தமிழர்

சென்னையில் சுற்றித்திரிந்த ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒரு கனேடிய குடிமகன் என தெரியவந்துள்ள நிலையில், தான் எப்படி சென்னைக்கு வந்தேன் என்பது தனக்கு நினைவில்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.

உள்நாட்டுப்போரின்போது இலங்கையிலிருந்து தனது சகோதரருடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த கிருஷ்ணப்பிள்ளைக்கு (45) தான் எப்படி சென்னை வந்தேன் என்றோ,ஹோட்டல் ஒன்றில் தங்கினேன் என்பதோ சுத்தமாக நினைவில்லை.

அவர் ஒரு மாதம் அரசு மறுவாழ்வு மையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த மறுவாழ்வு மைய ஊழியர்கள் கிருஷ்ணப்பிள்ளையின் உடைமைகளை சோதனையிட்டுள்ளார்கள். அப்போதுதான் அவர் ஒரு கனேடிய குடிமகன் என்பதும் தலைசுற்றல், வாந்தி மற்றும் நெஞ்சு வலிக்காக ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மறுவாழ்வு மைய ஊழியர்கள் கனேடிய தூதரகத்தை தொடர்பு கொள்ள, அவர்கள் கிருஷ்ணபிள்ளையில் சகோதரருக்கு தகவலளித்துள்ளார்கள்.

ஒரு மாத சிகிச்சைக்குப்பின், தற்போது மறுவாழ்வு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கிருஷ்ணப்பிள்ளை, தனது சகோதரருடன் இணைந்து கொள்வதற்காக கனடாவுக்கு விமானம் ஏறிவிட்டார். இன்று நள்ளிரவு அளவில் அவர் டொராண்டோ சென்றடைவார் என்று மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு நகரங்களுக்கு நேரடி விமான சேவை!!

நேரடி விமான சேவை

யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா 300 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது. எதிர்வரும், ஒக்டோபர் மாதம் முதல் பலாலி விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் பயணித்து கொழும்பு வழியாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியுள்ளது. இந்நிலையிலேயே, யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கும் இலங்கையின் பல பகுதிகள் : அவசரமாக விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!!

அபாய எச்சரிக்கை

நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாக பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், வீதிகளில் நீர் பாய்ந்து வருவதால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மற்றும் பலங்கொடை ஆசிய பிரதேச செயலகத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. பல பகுதிகளில் நிலவிரிசல், நிலம் தாழிறங்கல், மின்சார தூண்கள் சரிந்து வீழ்தல், மரங்கள் முறிதல் போன்ற ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன், கொட்டகலை பிரதேசத்தி பிரதேசத்தின் கீழ் மட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நுவரெலியாவின் பிரதான வீதியின் பல இடங்கள் தாழிறங்கியுள்ளமையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் ஹட்டன், ஹட்டன் நீர்தேக்கம் ஒன்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டமையினால் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை களு மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதன் இரண்டு பக்கம் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமை அறிவித்துள்ளது.

மோசமான காலநிலை காரணமாக தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு கடல்களில் உள்ள மீனவர்கள் அருகிலுள்ள துறைமுகத்திற்கு திரும்பவும், கடலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் கடற்படை விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை , காலி பகுதிகளில் மின்சார விநியோகம் முற்றாக செயலிழந்துள்ளது. இதனை சரி செய்யும் நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு உட்பட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் வேளையில் இருந்து பலத்த காற்றுடன் அடைமழை பெய்து வருவதால் காலி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருளில் மூழ்கிய ஐந்து மாவட்டங்கள் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

பொது மக்களுக்கு எச்சரிக்கை

நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக கொழும்பு உட்பட ஐந்து மாவட்டங்களின் பல பிரதேசங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடும் மழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் மின் தூண்கள் மீது முறிந்து வீழ்ந்துள்ளதால் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாத்தறை, காலி, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சேதமடைந்த மின் இணைப்புகளை மீட்டெடுக்க மின்சாரசபை நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், சீரற்ற வானிலை காரணமாக பழுதுபார்க்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்சன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுவதும் பலத்த காற்றுடன் அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாக பொது மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், வீதிகளில் நீர் பாய்ந்து வருவதால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் தற்போதைய நிலை : அவசரமாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொழும்பின் தற்போதைய நிலை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்று காலை முதல் மிகவும் பலத்த காற்று வீசி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இதனால் வீதியோரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் உடைந்து வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றது. இந்நிலையில், சாரிதிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்றும் இல்லாதவாறு நேற்று காலை முதல் கொழும்பில் பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. குறிப்பாக அதிகரித்த காற்றின் வேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் வீதிகளில் தடுமாறுவதை காணமுடிகின்றது.

மரக்கிளைகள் மற்றும் விளம்பர பதாதைகள் பலத்த காற்றின் காரணமாக வீதிகளில் வீழ்ந்து கிடக்கின்றது. மேலும், காற்றின் காரணமாக மோட்டார் சைக்கிளை செலுத்த முடியாமல் தள்ளிக்கொண்டு செல்வதனையும் காணமுடிந்தது.

இந்நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீதிகளில் பயணம் செய்யும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் ப லி : மற்றொருவரை தேடும் பணியில் இராணுவத்தினர்!!

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள்

அக்கரபத்தனை பிரதேசத்தில் இன்று பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயி ரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் காணாமல் போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டொரிங்டன் தோட்டத்திலிருந்து கொத்மலை ஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றுக்கு அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது, மாணவிகள் இருவர் கா ணாமல் போயிருந்தனர். இந்த நிலையில் அதில் ஒரு மாணவி சட லமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதியழகன் லக்ஷமி வயது 12 எனும் மாணவி உயி ரிழந்துள்ளதோடு, மதியழகன் சங்கிதா வயது 12 எனும் மாணவியை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர்.

உயி ரிழந்த மாணவியின் சட லம் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!!

வவுனியாவில் கோதுமை மா விலையை பழைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த மொத்த வியாபாரிகள், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மாவினை ப்ரீமா நிறுவனம் விலை அதிகரிப்புச் செயதுள்ளது. இதையடுத்து வவுனியாலுள்ள கோதுமை மா மொத்த விற்பனை வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் சிலவற்றில் நேற்றும் இன்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிகரித்த விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க வர்த்தக மானியில் புதிய விலை வெளிவரும் வரையிலும் பழைய விலைக்கு விற்பனை செய்யுமாறு வவுனியா வர்த்தகர் சங்கத்தினூடாக வியாபார நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமது நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறவுள்ளதுடன்

புதிய விலை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தும் வரையிலும் பழைய விலையில் கோதுமை மாவினை விற்பனை செய்யுமாறும் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மா மீது விதிக்கப்படும் வரிக்கமைய ஒரு கிலோ மாவின் விலை 8ரூபா ஐம்பது சதத்தினால் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுவதாக ப்ரீமா நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா திருநாவற்குளத்தில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்!!

கோர விபத்து

வவுனியா தாண்டிக்குளம் கோவில் வீதியில் இன்று (18.07.2019) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தாண்டிகுளத்திலிருந்து கோவில் வீதியூடாக குருமன்காடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் அதே பாதையில் எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த நல்லலிங்கம் உசாந்தன் (வயது- 23) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதியினை கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கம் திறந்து வைப்பு!!

உள்ளக விளையாட்டு அரங்கம்

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று(18.07) காலை வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேயகுணவர்தனவினால் அனுர அபேயவிக்கிரம உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் உன்னத திட்டத்தின் கீழ் முன்னாள் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாணந்துவின் வழிகாட்டலின் கீழ் வவுனியா பிராந்திய வேலைப்பகுதி உத்தியோகத்தர்களின் உழைப்பு மூலம் வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மானிக்கப்பட்ட அனுர அபேவிக்கிரம உள்ளக விளையாட்டு அரங்கம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாமடுவ தேசிய பாடசாலை மாணவர்களின் நடனத்துடன் வரவேற்பளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்ட அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாமடுவ விகாராதிபதி, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவிஜேகுனவர்தன, வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரம, மடுக்கந்த விஷேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள், வவுனியா பிரதேச செயலாளர், கா.உதயராஜா, செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன்,

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ். எம். தென்னக்கோன், மன்னார், செட்டிகுளம், ஓமந்தை, புளியங்குளம், கனகராயன்குளம், நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிசார், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் இறுதியில் வளாகத்தில் மரக்கன்றுகளும் அதிதிகளினால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் தாயை தேடி அலையும் 10 வயது சிறுவன்!!

தாயை தேடி அலையும் சிறுவன்

மாத்தளை – தம்புள்ளையை சேர்ந்த 10 வயதான சிறுவன், பாடசாலை செல்வதை நிறுத்திவிட்டு இரண்டு மாதங்களாக தனது தாயை தேடி நாடு முழுவதும் சுற்றித்திரிந்து வருகிறார். தனது தாயை தேடி வரும் சிறுவன், தனது பாட்டியுடன் ஊடகவியலாளர்களின் உதவியை நாடி நேற்று தம்புள்ளை பிரதேசத்திற்கு வந்திருந்தார். தனது தாயை கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை எனவும் அவரை தேடித் தருமாறும் சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்புள்ளை லெனதொர சேருகஸ்யாய பிரதேசத்தை சேர்ந்த 10 வயதான சுபுன் லக்ஷான் என்ற சிறுவனே இவ்வாறு தனது தாயை தேடி வருகிறார். தனது தாயின் புகைப்படம் ஒன்றை காட்டிய சிறுவன், தனது தாய், பொலன்னறுவை பிரதேசத்தில் வீடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில், அவர் பற்றிய எந்த தகவல்களும் இல்லை எனக் கூறியுள்ளார்.

37 வயதான எம்.எம்.கமலா ரஞ்சனி என்ற தனது தாயை தேடித்தருமாறு நாவுல, மெதிரிகிரிய மற்றும் தியசேன்புர பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார். இந்த சிறுவன் சிறு வயதில் தந்தையை இழந்துள்ளதுடன் பாட்டியுடன் வசித்து வருகின்றார். தனது மகள் எப்போதும் அவரது மகனுக்கோ, தனக்கோ உணவுக்காக பணத்தை கொடுக்காமல் இருந்ததில்லை என சிறுவனின் பாட்டி ரன்மெனிக்கே தெரிவித்துள்ளார்.

தனது மகளுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என ரன்மெனிக்கே அழுது புலம்பியவாறு ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார். கூலித் தொழில் செய்யும் தனக்கு, மகளை தேடி அலைய பணம் இல்லை என்பதால், ஊடகவியலாளர்களின் உதவியை நாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையை திடீர் முற்றுகையிட்ட அங்காடி வியாபாரிகள் !!

அங்காடி வியாபாரிகள்

வவுனியாவில் வியாபாரம் செய்யும் அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு நிரந்தரமான இடம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (18.07) வவுனியா நகரசபையை முற்றுகையிட்டனர்.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக வீதிகளில் வியாபாரம் மேற்கொள்வது வவுனியா நகரசபையினரால் தடைசெய்யப்ட்டுள்ளமையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே குறித்த முற்றுகை நடைபெற்றிருந்தது.

வவுனியா நகரசபை உறுப்பினர்களையும் முற்றுகையிட்ட அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு ஓர் தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன் காலையிலிருந்து நகரசபை தலைவர் தங்களை சந்திக்க மறுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அங்காடி வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகரசபை தலைவர் இ.கௌதமன், தற்போது அங்காடி வியாபாரிகளுக்கு தற்காலிகமாக இடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிரந்தரத்தீர்வு வெகு விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

நகரசபை தலைவருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த சிறு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யூ.அயூப்கான், கடந்த 20 வருடங்களாக சிறு வியாபாரிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்டாமல் இருக்கிறது. எமக்கு ஒரு நிரந்தரமான இடம் பெற்றுத்தருவதாக நகரசபை தலைவர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

ஒரு கப் தேனீரின் விலை 200 டொலர் : இலங்கை தேயிலைக்கு பிரித்தானியாவில் ஏற்பட்ட மவுசு!!

தேனீரின் விலை 200 டொலர்

பிரித்தானியாவில் ஒரு கப் தேனீர் 200 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே அமைந்துள்ள The Rubens என்ற ஹோட்டலில் ஒரு கப் தேனீர் 200 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Golden Tips என்ற நிறுவனம் இலங்கையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளை பெறுகிறது. இந்த தேயிலைகள் velvet துணியில் உலர்த்தப்படுகின்றன. இந்த ஹோட்டலுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இந்த தேயிலைகள் அனுப்பப்படுவதால் அங்கு அதிக விலைக்கு தேனீர் விற்பனை செய்யப்படுகிறது என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலில் இருந்தபடியே பக்கிங்காம் அரண்மனையை ரசித்தபடி தேனீர் அருந்துவதற்கு வெள்ளிப் பாத்திரத்தில் தேனீர் வழங்கப்படுகிறது என அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் பயன்படுத்தும் செயலியால் ஆபத்து : உங்கள் அந்தரங்கள் அம்பலமாகும் அபாயம்!!

செயலியால் ஆபத்து

சமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலியின் செயற்பாடு குறித்து அதன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தலங்களில் புதிதாக வைரலாகியுள்ள FaceApp செயலி பயன்படுத்துவதன் மூலம் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இணையத்தில் பிரபலமடைந்துள்ள #AgeChallenge என்பதனை அனைவரும் விரும்பி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த செயலி திடீரென பிரபலமடைந்துள்ளமையினால் பயனாளர்களின் தரவுகளுக்கு ஆபத்து ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் புதிய கேள்வி எழுந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளது.

விசேடமாக தமது கையடக்க தொலைபேசியில் உள்ள அனைத்து புகைப்படங்களும் இந்த செயலியை உருவாக்கியவரிடம் செல்கின்றதா என சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செயலியை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொண்ட நபர்களில் ஒருவர் இதனை பயன்படுத்த வேண்டாம் என டுவிட்டர் ஊடாக எச்சரிக்கை விடுத்தமையினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த செயலியில் உள்ளடக்கப்படும் புகைப்படம் எத்தனை காலம் சேமிக்கப்பட்டிருக்கும் என்பது தொடர்பில் சரியான தகவல் வெளியிடப்படாமையனால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த செயலி ஊடாக கையடக்க தொலைபேசியில் உள்ள புகைப்படங்கள் அனுமதியின்றி வெளியேற கூடும் என புதிய கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளதாக சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த செயலியை பயன்படுத்த வேண்டாம் என இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா விவசாயத் திணைக்கள வளாகத்தில் தீப் பரவல்!!

தீப்பரவல்

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தின் அனுசரனை ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (18.07.2019) மதியம் 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி நிலையத்தில் காணப்படும் வயல் நிலத்தில் ஓர் இடத்தில் ஏற்பட்ட தீ வயல் முழுவதும் பரவி பற்றி எரிந்தது.

அதனையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் வயலில் ஏற்பட்ட தீப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ ஏற்பட்ட பகுதி வெற்று வயல் என்பதினால் விவசாய திணைக்களத்தின் ஆராய்ச்சி நிலையத்தின் நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.தீ விபத்து ஏற்பட்டத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.