வவுனியாவில் நாளை (19.06) நீர் வினியோகம் துண்டிக்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிலைய பொறுப்பதிகாரி வி.ராகுலன் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள திருத்த வேலை காரணமாக காலை 8.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை வவுனியா மாவட்டத்தில் நீர் வினியோக நடவடிக்கைகள் நிறுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மணிப்புரம்,சுந்தரபுரம், தோணிக்கல், பண்டாரிக்குளம் மற்றும் உக்குளாங்குளம் பகுதிகளில் புதிய நீர் வினியோக இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன் வவுனியாவில் 2019 ஆம் ஆண்டு 343 இணைப்புக்களும் மொத்தமாக 2728 நீர் வினியோக இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
வென்னப்புவ பிரதேசத்தில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பண்டிருப்புவ, லுனுவில பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
தீயில் எரிந்தே குறித்த 58 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பண்டிருப்புவ, லுனுவில பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
பெண் ஒருவரை கொலை செய்வதற்காக 20 இலட்சம் ரூபா பணம் மற்றுமொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. உணவட்டுன பிரதேசத்தில் வசிக்கின்ற பெண் ஒருவரை கொலை செய்வதற்காகவே இவ்வாறு பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் குறித்த பெண்ணை கொலை செய்வதற்கு ஒப்பு கொண்ட பெண்ணொருவரும், அவருக்கு துணையாக இருந்த நபரும் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேசத்தை சேர்ந்த பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உள்ளூராட்சி சபை ஒன்றின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை செய்யப்படவிருந்த பெண்ணின் கணவரே இந்த ஒப்பந்தத்தை மற்றைய பெண்ணுக்கு வழங்கியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்தப் பெண்ணின் ஒப்பந்தம் வழங்கிய கணவர், வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கந்தபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நாகர் இலுப்பைக்குளம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்ககோரி இன்று (18.06.2019) மதியம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 50 மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், நாகர் இலுப்பைக்குளத்தில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள போதும் 43 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள போதும், எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் என்றே நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் திருமதி எம்.குரூஸ், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது 147 மாதிரிக் கிராமங்களை வவுனியாவில் அமைத்துள்ளது. பரவலான வீடமைப்பு திட்டங்களுக்கு எமக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
பயனாளிகள் தெரிவானது பிரதேச செயலகத்தினூடாக எங்களுக்கு வழங்கப்படுகிறது இருந்தபோதும் எமது அதிகாரவரம்புக்குட்பட்டு எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (18.06.2019) காலை 11.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புகையிரத நிலைய வீதியில் இலங்கை வங்கி அருகே தரித்து நின்ற விசேட அதிரடிப்படையினரின் வாகனம் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து புகையிரத வீதி வழியாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான முதியவர் காயமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு போக்குவரத்து பொலிஸார் சமூகமளிக்க முன்னர் விசேட அதிரடிப்படையினர் விபத்துக்குள்ளான அவர்களது வாகனத்திற்கு எடுத்துக்கொண்டு அவ்விடத்தினை விட்டுச்சென்றனர்.
வவுனியா செட்டிக்குளம் காந்திநகர் பகுதியில் இன்று (18.06.2019) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலத்தினை மீட்டடெடுத்துள்ளதாகவும் 26 வயதுடைய பரணி என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இம் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா – பாலமோட்டை பகுதியில், கடந்த ஐந்து தினங்களாக காலில் காயமடைந்த நிலையிலிருந்த யானைக்கு இன்று காலை கால்நடை வைத்தியரினால் சிகிச்சையளிக்கப்பட்டு காட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, பாலமோட்டை குளத்திற்கு அருகே கடந்த ஐந்து தினங்களாக நடக்க முடியாமலிருந்த காட்டு யானை ஒன்றினை அவதானித்த அப்பகுதி கிராம மக்கள் இது தொடர்பில் கடந்த சனிக்கிழமை ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில், அங்கு சென்ற பொலிஸார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைக்கு அருகில் சென்று யானையின் நிலைமைகளை அவதானித்தபோது யானையின் காலில் காயமடைந்து காணப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை வடபிராந்திய வனஜீவாரிகள் திணைக்களத்தின் கால்நடை வைத்திய அதிகாரி கிரிதரன் அப்பகுதிக்கு சென்று காட்டு யானைக்கு சிகிச்சையளித்துள்ளார். யானைக்கு கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இரண்டு மணித்தியாலயமாக மேற்கொண்ட மருத்துவச் சிகிச்சையின் பின்னர் யானை காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ரயில் பயணங்களில் ஈடுபடுவோரின் நன்மை கருதி இலவச Wi-Fi வலையமைப்புகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்தர இணைய வசதிகளை வழங்கும் தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து 53 ரயில் நிலையங்களில் 83 Wi-Fi வலையமைப்புகளை ஸ்தாபிக்கவுள்ளன.
53 ரயில் நிலையங்களுக்கு முழுமையாக Wi-Fi வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. அதற்காக அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் தங்கள் பங்களிப்புகளை வழங்கவுள்ளது. நாட்டின் அனைத்து பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ரயில் நிலையங்களுக்காக இணைய வசதிகளை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமாக இந்த Wi-Fi வலையமைப்புகள் காணப்படுகின்றன. எனினும் எதிர்வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநித்துவம் செய்யும் வகையில் இந்த Wi-Fi வலையமைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொடருந்து தொழிற்சங்கங்கள் நாளைய தினம் நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டமானது சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் தொடருந்து சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோர் இணையவுள்ளனர்.
இந்த நிலையில் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட தொடருந்து பயணிகளான மக்கள் அனைவரும் இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் மாவேலிக்கர பகுதியை சேர்ந்த செளமியா என்ற பெண் பொலிஸ் அதிகாரியே பட்டப்பகலில் நடு சாலையில் வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளார். இவருக்கும் முக்கிய குற்றவாளி அஜாஸ் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் அஜாஸின் குணம் அறிந்த செளமியா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, செளமியா வேறு திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது 3 பிள்ளைகளும் உள்ளனர். ஆனால் அஜாஸ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். மேலும் செளமியாவுடன் போன் மூலம் தொடர்பில் இருந்தும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி செளமியாவை அடிக்கடி மிரட்டியும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் எனவும், அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் அதற்கு காரணம் அஜாஸ் என்பவரே என பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் என தமது 12 வயது மகன் ரிஷிகேஷிடம் செளமியா கூறியிருந்துள்ளார்.
தற்போது செளமியா கொல்லப்பட்ட நிலையில், சிறுவன் ரிஷிகேஷ் பொலிசாரிடம் தமது தாயார் தெரிவித்த அனைத்து சம்பவங்கலையும் விலாவாரியாக ஒப்புவித்துள்ளான். செளமியா காவல்துறையில் இணைந்த காலம் தொட்டே அஜாஸ் நோட்டமிட்டு வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இருவரும் சில காலம் நட்பாக பழகி வந்துள்ளனர். அப்போது அஜாஸிடம் இருந்து செளமியா வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாயை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், தனது தாயாருடன் இணைந்து சென்று திருப்பி அளித்துள்ளார்.
ஆனால் அஜாஸ் அந்த பணத்தை கைப்பற்ற மறுத்துள்ளதுடன், அவர் குடியிருக்கும் கொச்சி நகரில் இருந்து செளமியாவை மாவேலிக்கரையில் கொண்டுசென்று விட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஜாஸ் சொந்த வேலை நிமித்தம் இரண்டு வாரங்கள் விடுப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் செளமியாவை கொலை செய்யும் நோக்கிலே அவர் விடுமுறையில் இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி செளமியாவின் உடற்கூறு ஆய்வு இன்று மாவேலிக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி அஜாஸ் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
நாகர்கோவிலில் திருமண நாளன்று மணமகன் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பொறியாளராக வேலை செய்து வரும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த இளைஞருக்கும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து இருவீட்டாரும் சேர்ந்து பத்திரிக்கை அடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தனர். திருமணத்தை ஒட்டி இருவீட்டிலும் ஏராளமான உறவினர்கள் குவிந்திருந்தனர். மணமகனும் இரண்டு நாட்களுக்கு முன்னே ஊருக்கு திரும்பியுள்ளார்.
நேற்றிரவு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மணமகன் சிரித்து பேசிக்கொண்டிருந்துள்ளார். 9 மணியளவில் நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிய மணமகன், குளிர்பானம் வாங்கிவிட்டு சிறிது நேரத்தில் திரும்பிவிடுவேன் என கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பிவில்லை. இதனால் அங்கு குழுமியிருந்த உறவினர்கள் அனைவருமே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாப்பிள்ளை கிடைக்காததால் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்கு செல்போன் சிக்னலை வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒருமலை கிராமத்தை காட்டியது. இதனால் மணமகன் கடத்தப்பட்டுள்ளாரா என்கிற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில், விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
பெரிய அளவில் காயத்துடன் வந்ததால், இதுபற்றி தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்தது.
எதனால், காதலனுக்க இவ்வளவு காயம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கையில், அந்த பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண் காதலன் மீது ஆசிட் வீசியதை ஒப்பு கொண்டார். ஆசிட் வீச்சில் அந்த இளைஞனுக்கு முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அந்தப் பெண்ணுக்கும் கைகளில் காயம் இருந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 96-ஆக அதிகரித்துள்ள நிலையில், வெயில் காரணமாக 61 பேர் உயிரிழந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்களில் தண்ணீருக்காக மக்கள் தெருக்களில் அலைந்து திரியும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்யும் அளவிற்கு இருக்கிறது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டது. கடந்த ஜூன் 1-ஆம் திகதி பிறகு நோய் அறிகுறியுடன் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 197 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 91 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 96 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனிடையே, பீகாரில் கடும் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வெப்ப அலையால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுரங்காபாத், கயா, நவாடா ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 9 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கயாவில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.2 நாட்களில் மட்டும் அவுரங்காபாத்தில் 25 பேர் உயிரிழந்தது பெரும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதால் வரும் 19-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குழந்தைகள் லிச்சி பழம் சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது, அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக மூளைகாய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் மணப்பெண்ணின் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பிரேமா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான வரவேற்பு நிகழ்வு அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக பிரேமா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அங்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது பூட்டிய வீடு திறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோல் உடைக்கப்பட்டு உள்ளிருந்த 3.50 பவுன் தங்க நகை, மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அறிந்து உடனடியாக விரைந்து வந்த பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி), கடந்த சனிக்கிழமை (15) அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்காமல் போனமைக்கு இலங்கை அணி மீது தண்டனைகள் எதனையும் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த 50 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இந்த ஊடக சந்திப்பில் இலங்கை அணியின் வீரர்களோ அல்லது பயிற்சியாளர்களோ அல்லது இலங்கை அணியின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளோ எவரேனும் பங்கேற்றிருக்கவில்லை.
“இலங்கை கிரிக்கெட் சபை (SLC), ‘சனிக்கிழமை சம்பவம்’ தொடர்பில் ஐ.சி.சி. உடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருப்பதுடன், இதேமாதிரியான சம்பவம் இந்த உலகக் கிண்ணத்தில் மீண்டும் இடம்பெறாது என்பதனை உறுதி செய்துள்ளது.” என இலங்கை கிரிக்கெட் சபை திங்கட்கிழமை (17) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தது.
மேலும், இலங்கை கிரிக்கெட் சபை தமது அறிக்கையில் இலங்கை அணியின் முகாமைத்துவத்துவத்திற்கும் இந்த சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்திருந்தது.
“இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அணியின் முகாமைத்துவ குழுவுக்கு விதிமுறைகளுக்கு அமைவாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஐ.சி.சி. இன் உலகக் கிண்ணத்தில் விளையாடும் அணி, விதிமுறைகளுக்கு அமைவாக நடக்க வேண்டும்.”
தமது ஆறாவது உலகக் கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் சனிக்கிழமை (21) விளையாடவுள்ள இலங்கை அணி தற்போது லீட்ஸ் நகரில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் பயனார்களுக்காக புதிய கட்டுப்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது. மரணித்த ஒருவர் குறித்து வெளியிடப்படும் கேலி செய்திகள் அல்லது மரணத்தை தூண்டும் வகையில் கருத்துக்களைபதிவிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான கருத்துக்கள் ஆரம்பத்தில் பேஸ்புக் எந்தவித தடையையும் ஏற்படுத்தவில்லை. எனினும் தற்போது புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பற்றி பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் பேஸ்புக் நிறுவனத்திடம் முறையிடலாம். பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது பேஸ்புக் கணக்கினை Memorialized பக்கத்தில் சேர்க்கும் வசதியை அந்நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.