26 ஆண்டுகளாக சிறையில் வாடும் மகேந்திரன் : குடும்பத்தார் விடுக்கும் கோரிக்கை!!

சிறையில் வாடும் மகேந்திரன்

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.

அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.ஆனால், அந்த 12 ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், விளக்கமறியலின் பொருட்டும் விடுவிக்கப்படாமல் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.

ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்து, சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உரையாற்றியபோது சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் செல்லப்பிள்ளை மகேந்திரன் பற்றியும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களின் குடும்ப சூழல் எப்படி உள்ளது என்பது குறித்து அறிய மகேந்திரன் குடும்பத்தினரை பிபிசி தமிழ் சந்தித்தது. மகேந்திரனுக்கு திருமணமாகி அப்போது ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. 1993ஆம் ஆண்டு ராணுவத்தினர் மட்டக்களப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.இறுதியாக, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கிணங்க நீண்ட கால சிறைத் தண்டனையை மகேந்திரன் இப்போது அனுபவித்து வருவதாக அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முறக்கொட்டான்சேனை மகேந்திரனின் சொந்த ஊர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து சிறிது காலம் மகேந்திரன் செயற்பட்டதாக அவரின் குடும்பத்தார் கூறுகின்றனர்.

பிறகு அந்த அமைப்பில் இருந்து விலகி, திருமணம் செய்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தான், மட்டக்களப்பிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக நடத்தப்பட்ட, படையினரின் சுற்றி வளைப்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்தையும் அதற்குப் பிறகு மகேந்திரனுக்கு என்னவானது என்பதையும், அவரின் மருமகள் மெரீனா பிபிசியிடம் விவரித்தார்.

“ராணுவத்தினருடன் இணைந்து அப்போது செயற்பட்ட, முகம் மறைத்த ‘ஆள்காட்டி’ ஒருவரால், எனது மாமா காட்டிக் கொடுக்கப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்டார்.

பிறகு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர் சார்பாக சட்டத்தரணிகளை வைத்து வாதிடுமளவுக்கு எங்களுக்கு வசதியிருக்கவில்லை. அந்த நிலையில்தான், அவருக்கு 70 வருடங்கள் சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது,” என்கிறார் மெரீனா.

மகேந்திரனுக்கு நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். மகேந்திரனின் சிறைக் காலத்தில்தான் அவரின் அப்பாவும், அம்மாவும் இறந்தார்கள்.

அம்மாவின் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் மட்டுமே மகேந்திரனுக்குக் கிடைத்தது.இவ்வாறான விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என, தொடச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது குறித்து சாதகமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், முறக்கொட்டான்சேனையில் சந்தித்த மகேந்திரனின் மூத்த சகோதரி புஷ்பவதியும் இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்தார்.

“விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, பிடிபட்டவர்களில் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அது போல், மகேந்தினுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி, அவரையும் விடுவிக்க வேண்டும்.

இதனை ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன். அப்பாவும், அம்மாவும் இறக்கும் போது, அவர் எங்களுடன் இருக்கவில்லை. அம்மாவின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டும்தான் அவரைக் கொண்டு வந்தார்கள்.

அப்போது எங்கள் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை,” என்றார் புஷ்பவதி.சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மகேந்திரனுக்கு இப்போது 46 வயதாகிறது. தனது இளமைக் காலத்தை சிறைக்குள்ளேயே அவர் தொலைத்துவிட்டார்.

அவரை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சிறைக் கைதிகள் தினத்தன்று, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சந்தித்ததாக கூறும் மெரீனா நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களால் மகேந்திரன் பாதிக்கப்பட்ட நிலையிலேயே, சிறைவாசத்தை அனுபவதித்து வருகிறார் என்றார்.

இதேவேளை, மகேந்திரனை விடுவிடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனையடுத்தே மகேந்திரன் குறித்து நாடாளுமன்றில் வியாழேந்திரன் உரையாற்றியதாகவும் மெரீனா தெரிவித்தார்.

இதனையடுத்து, “மகேந்திரனின் விடுதலை தொடர்பில், நடவடிக்கைகள் எதையாவது மேற்கொண்டுள்ளீர்களா” என, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் பிபிசி வினவியது.

அதற்கு பதிலளித்த அவர்; “மகேந்திரனுக்கு 68 வருடங்களைக் கொண்ட சிறைத்தண்டனையும், ஒரு ஆயுள் தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, அவர் சுமார் 30 வருடங்களை சிறையில் கழித்துள்ளார்”.

“சிறைச்சாலை சென்று அவரை நான் சந்தித்தேன். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். நடப்பதற்குக் கூட முடியாத நிலையில் இருக்கின்றார். அந்த சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகள், தங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், மகேந்திரனின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் வேண்டிக் கொண்டனர்” என்று கூறியதோடு, “மகேந்திரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமும், ஏனைய உயர் மட்டத்தவர்களிடமும் தொடர்ச்சியாக பேசி வருகிறேன்,” என்றார்.

இதேவேளை, இவ்வாறானவர்களின் விடுதலை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம்சாட்டினார்.

சுமார் 03 தசாப்த காலத்தையும், தனது இளமைக் காலத்தையும் சிறைக்குள் தொலைத்து விட்ட மகேந்திரன், விடுதலை பெற்று வந்து, தங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே, அவரின் குடும்பத்தாரினுடைய பேரவாவாக உள்ளது.

இறுதி யுத்தத்தின் போது 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் படையினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை ஊடாகவே புனர் வாழ்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஆனால், மகேந்திரன் இறுதி யுத்தத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர் என்பதால், அவரை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
– BBC Tamil-

வவுனியா காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

காலநிலையில்  திடீர் மாற்றம்

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை சாதாரண நிலைமையை விடவும் அதிகரித்து காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் சாதாரண அளவை விடவும் 04 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம், பதுளை, கட்டுகஸ்தோட்டை, நுவரெலியா மற்றும் இரத்மலானை ஆகிய பிரதேசங்களில் வெப்பநிலை சாதாரண அளவை விடவும் 03 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம், குருணாகல், புத்தளம், இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இரவு நேரத்திலேயே இவ்வாறு வெப்பநிலை சாதாரண அளவை விடவும் அதிகரித்து காணப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தனது இரு பிள்ளைகளுடன் இளம் தமிழ் பெண் தற்கொலை : தாயார் வெளியிட்ட தகவல்!!

தமிழ் பெண் தற்கொலை

அண்மையில் தனது இரு பிள்ளைகளுடன் இளம் தாய் ஒருவர் கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார். தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத காரணத்தினாலேயே, அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் மரண விசாரணையின் போது தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலில் இருந்து குதித்து இளம் பெண் ஒருவரும், அவரின் இரு பிள்ளைகளும் தற்கொலை செய்துகொண்டனர். கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 32 வயதான ஜெனிட்டா தர்ஷினி ராமைய்யா என்பவரே இவ்வாறு தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் மரண வாக்குமூலம் வழங்கியபோது,

“தனது மூத்தமகளாகிய ஜெனிட்டா தர்ஷினி அவளது முதல் மகனுக்கு 6 மாதம் இருக்கும் போது அவருடைய கணவருடன் வெளிநாடு சென்றார். பின் விசா பிரச்சினையின் காரணமாக அவர் பிள்ளைகள் இருவருடன் நாடு திரும்பினார். எனினும், நாடு திரும்பிய அவர் பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்ப்பதற்காக முயற்சி செய்து வந்தார். பிள்ளைகள் வெளிநாட்டில் ஆங்கில மொழியில் கற்றதினால் இங்கு பாடசாலையில் சேர்ப்பதற்கு சிக்கலாக இருந்தது.

உரிய ஆவணங்களும் இருக்கவில்லை. பிள்ளைகள் ஆரம்ப கல்வியை ஆங்கிலத்தில் பெற்றிருந்ததனால் சர்வதேச பாடசாலையில் சேர்க்க வேண்டிய நிலைஏற்பட்டது. இதற்காக பல சர்வதேச பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்றகாக அவர் முயற்சி செய்து வந்தார்.

சம்பவ தினத்தற்கு முன், அதாவது கடந்த 13ம் திகதி வியாழக்கிழமையும் பாடசாலையொன்றில் அனுமதி கேட்பதற்கு சென்ற போது பெருந்தொகையான பணம் கேட்கப்பட்டது. இதன்போது நான் மகளுக்கு உதவுவதாக கூறினேன்.

பின் மறுநாள் காலை நான் இனிமேல் உங்களுக்கு சுமையாக இருக்கமாட்டேன் அம்மா என்று மகள் கூறினார். பின்னர் பிள்ளைகளுடன் தேவாலயத்திற்கு செல்வதாக கூறியுள்ளார். இதன் பின்னரே பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தாய் தனது மரண விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் ஜூன் மாதத்துக்குரிய இரண்டாவது வார சபை அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு குறித்து மஹிந்த அணியான பொது எதிரணி கேள்வி எழுப்பும் எனத் தெரியவருகின்றது. நாடாளுமன்ற அமர்வையொட்டி ஆளுங்கட்சி நாடாளுமன்றக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதேவேளை, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரவாக ஆராயப்படவுள்ளன. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நேற்று மாலை பலர் கைது!!

யாழில் பலர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்குவில் பொற்பதி வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பின்னால் மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த அனைவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 10 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள், கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த வீட்டில் பெற்றோல் குண்டை வீசியதோடு அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த அனைவரும், இன்று மாலை கொக்குவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சுதுமலை பகுதியிலும், நேற்று மாலை வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருந்ததாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் துப்பாக்கி சூடு : ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சிதறி ஓட்டம்!!

துப்பாக்கி சூடு

டொராண்டோ ராப்டர்ஸ் அணிவகுப்பின் போது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு கூடைப்பந்து ரசிகர்கள் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த NBA சாம்பியன்ஷிப் போட்டியில், முதன்முறையாக வெற்றி பெற்று டொராண்டோ ராப்டர்ஸ் அணி வரலாற்று சாதனை படைத்தது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நாதன் பிலிப்ஸ் சதுக்கம் அருகே டொராண்டோ ராப்டர்ஸ் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராப்டர்ஸ் பயிற்சியாளர் நிக் நர்ஸ் மற்றும் ஒளிபரப்பாளர் மாட் டெவ்லின் ஆகியோர் ரசிகர் கூட்டத்தில் பேசினர்.

அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிதறி ஓடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த துப்பாக்கி சூடானது அணிவகுப்பில் நடைபெற்றதா? அல்லது அதன் அருகாமையில் நடைபெற்றதா? என்பது குறித்து இன்னும் விளக்கப்படவில்லை.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வவுனியா ஓமந்தை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (16.06) மதியம் 12 மணியளவில் ஆலயபரிபாலனசபையின் நிர்வாக சபை உறுப்பினர் வே.சந்திரமோகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் உட்பட பலரும் கலந்துகொண்டு வசந்த மண்டபத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கம்பரெலிய நிதியில் ஐந்து இலட்சம் ரூபாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வசந்த மண்டபம் 30 இலட்சம் ரூபா செலவில் கிராம மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், கிராம அமைப்புக்கள், அப்பகுதி கிராம மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவில் இராணுவ சோதனை சாவடிக்கு முன்னால் விபத்து : ஐவர் படுகாயம்!!

ஐவர் படுகாயம்

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் சோதனை சாவடிக்கு முன்னால் மூன்று விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளது. குறித்த விபத்துக்களில் சிக்கி ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேர் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதன்படி இன்று காலை முள்ளியவளை தண்ணீருற்று இராணுவ சோதனை சாவடியில் வாகன விபத்திற்கு உள்ளாகிய வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் இன்று பிற்பகல் முள்ளிவாய்க்கால் இராணுவ சோதனை சாடிக்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவர் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சற்று முன்னர் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகாமையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகமே வியந்து நோக்கிய சாதனை : புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

அதிர்ச்சித் தகவல்கள்

இந்த உலகில் பல்வேறு ஜீவராசிகள் வாழும் போதும் ஆறாம் அறிவை கொண்ட மனித இனம் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் பகுத்தறிவை கொண்ட மனிதனிடம் பொது அறிவு (General Knowledge) இல்லாவிடின் இந்த உலகத்தில் முட்டாளாகவே அடையாளப்படுத்தப்படுகிறான்.

நமக்கு பொது அறிவு பல்வேறு வழிகளின் மூலம் கிடைக்கிறது. அதனடிப்படையில் சிறுவயதிலிருந்தே நம்மை பின் தொடர்ந்து வரும் பொது அறிவு வினாவே “நிலாவில் முதன் முதலாக காலடி வைத்தவர் யார்?” என்பது. இந்த கேள்வியை கேட்டு முடிப்பதற்கு முன்னரே பலரது உதடுகளும் விடையை முணுமுணுத்துவிடும்.

சரி இப்பொழுது எதற்கு இந்த கேள்வி. மனித இனம், பகுத்தறிவு, பொது அறிவு என்று ஆரம்பிக்கிறீர்களே! நீங்கள் என்ன விடயத்தை கூற விளைகின்றீர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. ஆம், நான் கூற வந்த விடயத்திற்கும், சிறுவயதிலிருந்தே நம்மை பின் தொடர்ந்து வருவதாக நான் கூறிய கேள்விக்கும் இடையில் சம்பந்தம் இருக்கிறது.

ஏனெனில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் (எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதியுடன் 50 வருடங்கள்), புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969 ஜூலை 16ஆம் தேதி அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.

* நீல் ஆம்ஸ்ட்ராங் 1930, ஆகஸ்ட 5இல் பிறந்தார். பி.எஸ் (ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்), எம்.எஸ் (ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்) படித்தவர். * எட்வின் ஆல்ட்ரின் 1930, ஜனவரி 20இல் பிறந்தார். இவரும் பி.எஸ் பட்டதாரி. நிலவில் இறங்கிய இரண்டாவது மனிதன் என்ற பெருமை பெற்றவர்.

* மைக்கேல் காலியன்ஸ் 1930, அக்டோபர் 31இல் இத்தாலியில் பிறந்தார். இவரும் பி.எஸ் பட்டதாரி. ‘அப்பல்லோ 11’ பயணத்துக்கு பின் அமெரிக்காவின் நேஷனல் ஏர் அண்ட் ஸ்பேஸ் மியூசியத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார்.

ஜூலை 20ஆம் திகதி நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கினர். விண்கலத்தில் பயணம் செய்த மூன்று வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்கலத்திலிருந்து இறங்கி முதலில் காலடியை நிலவில் பதித்தார்.

இதன் அடையாளமாக, அமெரிக்காவின் தேசியக் கொடியை நிலவில் நாட்டிய நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற சாதனையும் படைத்தார். பின் 20 நிமிடம் கழித்து எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினார்.

நிலவுக்கு மனிதனை அனுப்பி சாதனை மைல் கல்லில் தனி இடம்பிடித்த அமெரிக்கா, அப்பல்லோ 11 விண்கலத்தை 20 பில்லியன் டொலர் செலவில் தயாரித்திருந்தது.

இதேவேளை நிலவிலிருந்து வெற்றியுடன் திரும்பிய அப்பல்லோ 11 விண்கலம் 8 நாட்களுக்கு பின், ஜூலை 24இல் கொலம்பியாவில் வெற்றிகரமாக தரை இறங்கியது என்பது வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது.

ஆனால், எந்தவொரு தாக்கத்திற்கும் பருமனில் சமனானதும், திசையில் எதிரானதுமான மறு தாக்கம் காணப்படும் என்பது நியூற்றனின் மூன்றாவது விதி.

அதன் படி உலகமே வியந்து நோக்கிய இந்த சாதனை தொடர்பிலும் பல்வேறு கருத்துகள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி அமெரிக்கா நிலவிற்கு மனிதனை அனுப்பியதும், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது மற்றும் அமெரிக்க கொடியை நாட்டியது என்ற விடயங்கள் பொய் என்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நிலவில் கால்வைத்த கதை பொய் என்ற விடயத்தை கூறுபவர்களின் கருத்து இவ்வாறு அமைகிறது.

நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தவுடன், “அவர்களால் செய்ய முடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்ட முடியும்” என்று சவால் விட்டது அமெரிக்கா.

அதன் பிறகு தான், அமெரிக்கா “அப்போலோ 11” என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. இந்த நிலையில் “நிலவில் இறங்கி நீல் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த” புகைப்படங்கள் சில ஆராய்ச்சியாளர்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது அடுக்கடுக்காக வெளிவந்தன அதிர்ச்சி தகவல்கள். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த படத்தில் அப்படியென்ன கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் சொன்னது என்னவென்றால், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பது தான். அத்துடன் அந்த படம் நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என அடித்து கூறினார்கள்.

அந்த கால கட்டத்தில் “ஹாலிவுட்டில் நிலாவை போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்” என “Science Fiction” பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிகின் மனைவி கருத்து வெளியிட்டார்.

இந்த விடயங்கள் உலக மக்களின் மூளையை குழப்பதற்குள் தள்ளி வைத்து விட ஆராய்ச்சியாளர்கள் மேலும் சில தகவல்களை வெளியிட்டார்கள், நிலவிற்கு அப்பல்லோ – 11 விண்கலம் அனுப்பப்படவில்லை என்பதையும், நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி பதிக்கவில்லை என்பதையும் நிரூபிக்க.

1) முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளிபட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே தவிர, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.

2) நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்க கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்த கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.

3) அதேபோல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படி இருக்கையில் அவர்கள் நடந்த காலடி தடம் எப்படி இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.

4) சுற்றிலும் focus லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.

இப்படியாக பல விடயங்களை முன்வைத்து நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமே அது என்று தமது கருத்தை உறுதியாக எடுத்துரைத்தார்கள்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக நிலவி வருகிறது குழப்பம். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தாரா? இல்லையா?. இந்த மர்மத்திற்கு விடை கிடைக்க வேண்டுமெனில் அமெரிக்கா தான் ஏதாவது கூற வேண்டும் என்பதே உண்மை

வவுனியா மூனாமடு குளத்தில் இறந்த மீன்களை அகற்ற நடவடிக்கை!!

இறந்த மீன்களை அகற்ற நடவடிக்கை

வவுனியாவில ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் சிறுபோகத்திற்கு அதிக நீரை இறைத்து பயன்படுத்தியமை காரணமாக மூனாமடுக் குளத்தின் நீர் வற்றியமையால் இறந்த மீன்களினை அகற்றுவதற்தற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுகாதார பணிமனையில் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா, புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மூனாமடு குளத்தின் கீழ் விதைக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் சிறுபோக விவசாய நிலங்களுக்கு அதிகளவிலான நீரை பயன்படுத்தியமையால் குளத்தது நீர் வற்றியுள்ளது.

இதன்காரணமாக நீர் இன்றி அக்குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகின்றது. இது குறித்து வவுனியா சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட சுகாதார பரிசோதர்கள் குறித்த நீர்பானசன குளத்தின் பங்காளர்களின் துணையுடன் இறந்த மீன்களை அகற்றி புதைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த குளத்தின் நீர்மட்டத்தை கவனத்தில் கொள்ளாது சிறுபோக நெற்செய்கைக்கு நீர் இறைக்கப்பட்டமையே மீன் இறப்புக்கு காரணம் எனவும், சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பற்ற செயற்பாடே இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

யாழில் நடு வீதியில் இளம் பெண்ணிற்கு நடந்த மிகப் பெரும் கொடூரம் : கொலையாளியான பெரிய தந்தை!!

மிகப் பெரும் கொடூரம்

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இளம்பெண் விரட்டிச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரே இந்த பாதகத்தை அரங்கேற்றினார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார். காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாக பிணக்குக் காணப்பட்டது. அதனைச் சாட்டாக வைத்து பெரிய தந்தையார் கத்தியுடன் சென்று பாடசாலைக்கு முன்பாக வைத்து பெறாமகனுக்கு வயிற்றில் குத்தியுள்ளார் அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.

அதனால் கத்தியால் குத்தியவர் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளார். வழியில் பெறாமகளைக் கண்டுள்ளார். அவரைக் கத்தியால் குத்த முற்பட்ட போது, அந்தப் பெண் பெரிய தந்தையாரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அந்தப் பெண்ணை பெரியதந்தையார் துரத்திச் சென்றுள்ளார். ஓடிச் சென்ற அந்தப் பெண் தடுமாறி வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளார். அதன்போது அவரை கழுத்து அறுத்து பெரியதந்தையார் கொலை செய்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த 4 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!!

தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி

ஐதராபாத் மாநிலத்தில் திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் இளம் காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் கோதாவரி அருகே செல்போன் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த சந்தோஷ் (28), செல்போன் கடையில் வேலை செய்து வந்த அர்ச்சனா (28) என்பவருடன் அறிமுகமாகியுள்ளார்.

சில நாட்களிலே இருவரும் காதல் வலையில் விழுந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து இருவரும் ஐதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வந்துள்ளனர். அங்கு சென்ற சில நாட்களிலே அர்ச்சனாவிற்கு வேறு இடத்தில் வேலை கிடைத்துள்ளது.

இதற்கிடையில் தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட இருவரும் தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று அர்ச்சனா நீண்ட நேரமாகியும் வேலைக்கு வராததால், கடையின் உரிமையாளர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கதவு பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அங்கு இருவரும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை பார்த்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகம் கடிக்கும் பழக்கத்தால் தோல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்!!

புற்றுநோய் பாதிப்பு

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் இளம்பெண் ஒருவர் தமது நகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய்க்கு இரையாகியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தோல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானதால் அவரது கட்டைவிரல் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் கர்ட்னி வித்தோர்ன் என்பவர் பாடசாலையில் சக மாணவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான பின்னர் நகம் கடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த பழக்கம் ஒருகட்டத்தில் இவரது கட்டைவிரலில் உள்ள நகம் மொத்தமும் கடித்தே துப்பியுள்ளார். இந்த நிலையில் தமது கட்டைவிரல் கருமையாக உருமாறுவதை கவனித்த கர்ட்னி, சுமார் நான்கு ஆண்டு காலம், தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து அதை மறைத்து வந்துள்ளார்.

இது ஒருகட்டத்தில் தோல் புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மருத்துவர்களால் இது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவளது கட்டைவிரலைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், கடந்த வாரம் மருத்துவர்களால் அவரது கட்டைவிரல் வெட்டப்பட்டுள்ளது.

தமது நகம் கடிக்கும் பழக்கமே தோல் புற்றுநோய்க்கு காரணம் என தெரியவந்த அந்த கணம் தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என கூறும் கார்ட்னி, நகமே இல்லாத கட்டைவிரலை தமது பெற்றோர் மற்றும் நண்பர்களிடன் காட்ட தாம் அச்சப்பட்டதாகவும், அதன் பின்னர் போலி நகங்களுடன் சமாளித்ததாகவும் கார்ட்னி குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்னியின் 16-வது வயதில் பாடசாலையில் ஏற்பட்ட வருத்தம் தரும் நிகழ்வுகளே, தமக்கு மன அழுத்தங்களையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதாகவும், அதுவே நகம் கடிக்கும் பழக்கத்தில் கொண்டு சேர்த்ததாகவும், தற்போது கட்டைவிரல் இல்லாத நிலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கார்ட்னி சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண தண்டனையிலிருந்து தப்பிய சிறுவன் : சவுதி அரசு முக்கிய முடிவு!!

மரண தண்டனையிலிருந்து தப்பிய சிறுவன்

சவுதி அரேபியா அரசுக்கு எதிராக நண்பர்களை திரட்டி போராடியதாக கூறி மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட இளைஞரை விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் சிறுபான்மையினரான ஷியா பிரிவினரை சேர்ந்த 13 வயது சிறுவன் Murtaja Qureiris, அரசுக்கு எதிராக நண்பர்களை திரட்டி போராடியதாக கூறி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் முர்தாஜாவுக்கு மரண தண்டனை விதித்து ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது முர்தாஜா மீதான மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்படுவார் எனவும் சவுதி அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முர்தாஜா கடந்த 2014 ஆம் ஆண்டு, தமது 13-வது வயதில் அரசுக்கு எதிராக ஆளைத் திரட்டி போராடியதாக கூறி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முர்தாஜா பொலிசார் மீதும் மருந்தகம் மீதும் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறும் சவுதி நிர்வாகம்,

2014 ஜனவரி மாதம் ஜேர்மனி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பலில் முர்தாஜாவும் ஒருவர் என சுட்டிக்காட்டியுள்ளனர். முர்தாஜா தமது 10-வது வயதிலேயே நண்பர்களை திரட்டி அரசுக்கு எதிராக போராடியதாக கூறும் சவுதி நிர்வாகம், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய பின்னரே, தற்போது மரண தண்டனையை ரத்து செய்துள்ளனர்.

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!!

தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து பெரியபுல்லுமலை வெலிக்காகண்டி குளக்கட்டு நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. ஏறாவூரைச் சேர்ந்த மொஹமட் இர்பான் என்பவரின் முச்சக்கர வண்டியே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியில்மொஹமட் இர்பானின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். மனைவியையும் பிள்ளைகளையும் இறக்கிவிட்டு முச்சக்கர வண்டியை அடுத்த பக்கமாக திருப்பும்போது தீப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தீப்பற்றியதையடுத்து முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக வெளியே பாய்ந்துள்ளார். மேலும் அதிக அளவான வெப்பம் காரணமாக குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதித்ததாக தெரிவித்து பெண் கைது : உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு!!

பௌத்த சின்னம் பொறித்த ஆடையை அணிந்திருந்ததாக காரணம் காட்டி பொலிஸாரால் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கு எதிராக பெண் ஒருவர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

கண்டி, கொலங்கொட என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய மஸாஹிமா எனும் பெண் ஒருவரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா நுஸ்ரா சறூக் ஆகியோரின் ஆலோசனைக்கிணங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, இந்த வழக்கை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் சார்பாக தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பெண் அணிந்திருந்த ஆடையொன்றில் பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் அவர் பௌத்த மதத்தை அவமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி, மஹியங்கணை பொலிஸார் கடந்த மே மாதம் 17ஆம் திகதி, அவரைக் கைது செய்து, 18ஆம் தேதி மஹியங்கணை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இதன்போது, குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஜுன் மாதம் 03ஆம் திகதி சம்பந்தப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் வாதங்களைக் கவனத்திற் கொண்ட நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கியது.

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் ஆடையில் காணப்பட்ட வடிவம், தர்மச் சக்கரம்தானா என்பதை அடையாளம் காண்பதற்காக, அதனை புத்த சமய அலுவல்கள் ஆணையாளருக்கும், தர நிர்ணய சபைக்கும் தாம் அனுப்பி வைத்ததாகவும், ஆனால், அதனை ஒப்பீடு செய்வதற்குரிய சரியான தர்மச் சக்கர வடிவம் தம்மிடம் இல்லை என, அவர்கள் தெரிவித்து விட்டதாகவும், மஸாஹிமாவுக்கு பிணை வழங்கிய அன்று, நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, தனது ஆடையில் இருந்த வடிவத்தை காரணம் காட்டி, தன்னை கைது செய்து தடுத்து வைத்திருந்தமையின் மூலம், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண் மஸாஹிமா உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.