ஐம்பது ஆண்டுகளாக சுவீடன் நாட்டில் நடைபெறும் vatterunden திறமைக்கு சவால் என்னும் சர்வதேசச்சிறப்பு ஓட்ட நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. சர்வதேசச்சிறப்பு ஓட்ட நிகழ்வின் விதிமுறையானது 24 மணிநேரத்துக்குள் ஓடி முடிப்பதேயாகும்.இந்நிலையில் குறித்த ஓட்ட நிகழ்வில் இருவர் 13 மணிநேரத்துக்குள்ளே ஓடி முடித்து சாதனையை தம்வசமாக்கியுள்ளனர்.
இப்போட்டியின் போது பத்து தரிப்பிடங்களில் ஓட்ட வீரர்களுக்கான முதலுதவி மற்றும் சிற்றுண்டி நிலையம் அமைக்கப்பட்டு வீரர்களுக்கான ஊக்கப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். 25,000 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டிகள் பங்கேற்றுள்ளதுடன்,நிகழ்வின் இறுதியில் பாராட்டுச்சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வு 14.06.19 இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகிய ஓட்ட நிகழ்வு மறுநாள் காலை 15.06.19 உடன் நிறைவு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படவுள்ளது. இது 2018 ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இது வழங்கப்படவுள்ளது
இதேவேளை அரச ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டு 107 வீதத்தினால் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அதிகரிப்புக்களுக்காக 2019ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தில் 12 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன்கீழ் ஏற்கனவே ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களுக்கு 2800 ரூபா முதல் 20ஆயிரம் ரூபா வரையில் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.
இளைப்பாறிய காவல்துறை பரிசோதகர்களுக்கு 4200, இளைப்பாறிய சிரேஸ்ட நிறைவேற்று அலுவலர்களுக்கு 16000 ரூபா, இளைப்பாறிய அமைச்சின் செயலாளர்களுக்கு 20000 ரூபா என்ற அடிப்படையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ போதி தக்சிணாராமய பௌத்த விகாரையில் விகாராதிபதி சியம்பலாகஸ்வெல விமல சாரநாயக்க தேரரின் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதேபோன்று மடுக்கந்த விகாரையிலும் விசேட பூஜைகள் இடம்பெற்றன.
இந்த பூஜை வழிபாடுகளில் பௌத்தர்கள் மட்டுமன்றி மூவின மக்களும் கலந்து கொண்டதுடன், புத்தரிசி எடுத்து வந்து விகாரையில் தானமும் செய்தனர்.
அத்துடன் வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா வழிகாட்டலில் 21 ஆவது மற்றும் 56 டிவிசன் இராணுவத்தினர் கலந்து கொண்டதுடன் மூன்று மாடுகளையும் காணிக்கையாக வழங்கியிருந்தனர். மேலும் வவுனியாவில் பொசன் கொண்டாட்டங்கள் பரவலாக இடம்பெற்றது.
துருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் ஏ330 ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே கடலில் மூழ்கடித்துள்ளனர் அந்நாட்டு அதிகாரிகள். துருக்கியின் வடமேற்குப் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக எடிர்னே மாகாண துணை ஆளுநர் அலி உய்சல் தெரிவித்துள்ளார்.
எடிர்னே மாகாணத்தில் உள்ள பிரைஸ் துறைமுகத்திலிருந்து சில மைல் தொலைவில் விமானம் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஸ்கூபா டைவிங் சுற்றுலாவை ஈர்க்க ஏகன் கடலில் 30 மீட்டர் ஆழத்தில் 65 மீட்டர் நீள விமானம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து துணை ஆளுநர் அலி உய்சல் கூறியதாவது, ஏகன் கடற்பகுதி சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான தளமாக திகழ்கிறது. ஸ்கூபா டைவிங் சுற்றுலா வேறுபட்ட சந்தைப் பிரிவைக் கொண்டுள்ளது.
ஒரு சாதாரண சுற்றுலா மூலம் 500-600 டாலருக்கும் குறைவாக வருமானம் ஈட்ட முடியும், அதே நேரத்தில் ஸ்கூபா டைவிங்கிற்காக வரும் சுற்றுலாப் பயணிகளால் 2,000-3,000 டாலர் சம்பாதிக்கலாம். இந்த காரணத்திற்காக தான் விமான் கடலில் மூழ்கடிக்கப்பட்டது என அலி உய்சல் குறிப்பிட்டுள்ளார். 1995 ஆம் ஆண்டு தனது சேவையை தொடங்கிய ஏர்பஸ் ஏ330ரக பயணிகள் விமானம் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் தங்கையின் திருமணத்திற்கு விடுமுறை கிடைக்காததால், மருத்துவர் தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்கிற மருத்துவர் (36), கடந்த புதன்கிழமையன்று நடைபெறவிருந்த தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் மருத்துவ துறை தலைவர் கீதா கட்வால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஓம்கார், வியாழக்கிழமையன்று விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் ஓம்கார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் ஒன்றுகூடி, தலைமை மருத்துவருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓம்காரின் தந்தை கூறுகையில், சில தினங்களுக்கு முன் எங்களுக்கு போன் செய்த மகன், காரணமே இல்லாமல் தலைமை மருத்துவர் அதிக சித்ரவதை கொடுப்பதாக கூறினான். அவனுடைய சகோதரியின் திருமணத்திற்கு ஆசையாக வாங்கிய துப்பட்டாவால் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளான் என வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கீதா அடிக்கடி ஓம்காருக்கு தொந்தரவு கொடுத்து வந்தது மற்ற மருத்துவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. அதேசமயம் சிகிச்சையின் போது குழந்தை இறந்த சம்பவத்தில் ஓம்காரின் அசாதாரண நிலையே காரணம் என கீதா பொய் புகார் அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள், ஓம்கார் குடும்பத்திற்கு கீதா சார்பில் 1 கோடி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் மாவேலிக்கர பகுதியை சேர்ந்த செளமியா என்ற பெண் பொலிஸ் அதிகாரியே பட்டப்பகலில் நடு சாலையில் வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளார். இவருக்கும் முக்கிய குற்றவாளி அஜாஸ் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் அஜாஸின் குணம் அறிந்த செளமியா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, செளமியா வேறு திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது 3 பிள்ளைகளும் உள்ளனர். ஆனால் அஜாஸ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்துள்ளார். மேலும் செளமியாவுடன் போன் மூலம் தொடர்பில் இருந்தும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி செளமியாவை அடிக்கடி மிரட்டியும் வந்துள்ளார். ஒருகட்டத்தில் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் எனவும், அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால் அதற்கு காரணம் அஜாஸ் என்பவரே என பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் என தமது 12 வயது மகன் ரிஷிகேஷிடம் செளமியா கூறியிருந்துள்ளார்.
தற்போது செளமியா கொல்லப்பட்ட நிலையில், சிறுவன் ரிஷிகேஷ் பொலிசாரிடம் தமது தாயார் தெரிவித்த அனைத்து சம்பவங்கலையும் விலாவாரியாக ஒப்புவித்துள்ளான். செளமியா காவல்துறையில் இணைந்த காலம் தொட்டே அஜாஸ் நோட்டமிட்டு வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இருவரும் சில காலம் நட்பாக பழகி வந்துள்ளனர். அப்போது அஜாஸிடம் இருந்து செளமியா வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாயை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், தனது தாயாருடன் இணைந்து சென்று திருப்பி அளித்துள்ளார்.
ஆனால் அஜாஸ் அந்த பணத்தை கைப்பற்ற மறுத்துள்ளதுடன், அவர் குடியிருக்கும் கொச்சி நகரில் இருந்து செளமியாவை மாவேலிக்கரையில் கொண்டுசென்று விட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஜாஸ் சொந்த வேலை நிமித்தம் இரண்டு வாரங்கள் விடுப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் செளமியாவை கொலை செய்யும் நோக்கிலே அவர் விடுமுறையில் இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி செளமியாவின் உடற்கூறு ஆய்வு இன்று மாவேலிக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி அஜாஸ் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
ஐதராபாத் நகரில் இளம்பெண்ணின் உடம்பில் புகுந்துள்ள அசுத்த ஆவிகளை துரத்துவதாக கூறி அவரை சீரழித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள போரபந்தா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அஸம் என்ற பெயரில் அறியப்படும் அப்பகுதியில் உள்ள மந்திரவாதியே 19 வயதான யுவதியை பாலியல் பலாத்காரம் செய்தவர். பாதிக்கப்பட்ட யுவதியை குறித்த மந்திரவாதிக்கு முன்னரே பழக்கம் இருந்ததால், அடிக்கடி அவரது குடியிருப்புக்கு வந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில், குடியிருப்பில் அசுத்த ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இது ஆபத்தை வரவழைக்கும் என யுவதியின் பெற்றோரை அஸம் நம்ப வைத்துள்ளார். மட்டுமின்றி, பயப்பட தேவை இல்லை எனவும், அனைத்து பூசைகளையும் தாம் முன்னின்று நடத்த தயார் எனவும் அஸம், யுவதியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் ஒருபகுதியாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள தர்கா ஒன்றில் சென்றில் வழிபாடு நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த யுவதியும் அவரது பெற்றோரும், மந்திரவாதி அஸமும் இணைந்து கர்நாடகா மாநிலம் பிடர் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குவைத்து குறித்த யுவதியை சிகிச்சை என்ற பெயரில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
தொடர்ந்து ஐதராபாத் திரும்பிய பின்னரும் குறித்த யுவதியை பலாத்காரம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக ஒருமுறை கெட்ட ஆவிகளை துரத்த வேண்டும் என கூறி, யுவதியின் பெற்றோரை குடியிருப்புக்கு வெளியே அனுப்பி விட்டு, யுவதியை துஸ்பிரயோகம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் யுவதி பெற்றோருக்கு தெரியப்படுத்தவே, கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள் பொலிசாரை நாடியுள்ளனர். இதனையடுத்து அந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் சௌமியா (31).
இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அவர் மீது கார் ஒன்று மோதியது, அதன் பின் அதன் உள்ளே இருந்த நபர் ஒருவர், செளமியா தப்ப முயன்றதை அறிந்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார்.
இதனால் இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், சம்பவ தினத்தின் போது செளமியாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர் ஓடி வந்துள்ளனர்.
அதற்கு முன்னரே அந்த நபர் செளமியாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி, அதன் பின் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, அங்கிருந்து தப்பிக்கு முயன்ர போது அவர்கள் பிடித்துள்ளனர். அப்போது இளைஞரின் உடலிலும் தீக்காயம் இருந்தது தெரியவந்தது. சௌமியாவின் கணவர் புஷ்கரன் வெளிநாட்டில் இருக்கிறார்.
அவருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி செளமியாவை எரித்து கொலை செய்தவர் ஆலுவா போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் அஜாஸ் (33) என்பது தெரியவந்துள்ளது. ஒரு பெண் போலீஸ் அதிகாரியை மற்றொரு ஆண் பொலிஸ் அதிகாரி தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணை உறவினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோகைமலை அருகே உள்ள கருங்கல்பட்டியை சேர்ந்தவர் மணிவாசன் (22). கடவூர் பாலவிடுதி அருகே உள்ள செம்பியநத்தம் பகுதியை சேர்ந்தவர் ரம்யா (20).
இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலைபார்த்தபோது, கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரம்யாவுக்கும் அவரது உறவினரின் மகனுக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இதுகுறித்து ரம்யா தனது காதலன் மணிவாசனிடம் தெரிவித்து உள்ளார்.
இதனால் மணிவாசனும், ரம்யாவும் வீட்டை விட்டு வெளியேறி தோகைமலை அருகே மங்காம்பட்டியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட சில மணி நேரங்களில் ரம்யாவும், மணிவாசனும் தோகைமலை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ரம்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். அப்போது தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரிஸ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், பெற்றோருடன் செல்ல ரம்யா மறுத்தார். தனக்கு தாலிகட்டிய கணவன் மணிவாசனுடன் செல்வதாக தெரிவித்தார்.
இதனால் மணிவாசனின் பெற்றோர்களுடன் ரம்யாவையும், மணிவாசனையும், பொலிசார் காரில் அனுப்பி வைத்தனர். இந்த கார் மணப்பாறை-குளித்தலை மெயின் ரோட்டில் மேட்டுபட்டி அருகே சென்றபோது, 2 காரில் ஆயுதங்களுடன் இருந்த ரம்யாவின் உறவினர்கள் ரம்யா சென்ற காரை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து தாக்கினர்.
பின்னர் காரில் இருந்த ரம்யாவை தாங்கள் வந்த ஒரு காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். மற்றொரு காரில் காத்திருந்தவர்கள் மணிவாசன் மற்றும் அவருடன் இருந்தவர்களை தாக்கினர். இதில் மணிவாசன் மற்றும் அவரின் தந்தை சேகர், தாய் அமுதா ஆகியோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் ரம்யாவை கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
பாலவிடுதி அருகே உள்ள சிங்கம்பட்டியில் ரம்யாவை கடத்தி வைத்திருப்பது பொலிசாருக்கு தெரியவந்ததால், சிங்கம்பட்டிக்கு விரைந்து சென்று ரம்யாவை மீட்டு குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகளை, அவருடைய தந்தை கத்தியால் குத்தி கால்வாயில் தூக்கி வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தன்னுடைய மாமா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இது பிடிக்காத அவருடைய தந்தை படிப்பை நிறுத்திவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த சிறுமி, படிப்பை தொடர வேண்டும் என தன்னுடைய ஆசையினை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய தந்தை மகனுடன் சேர்ந்து மகளை கத்தியால் குத்தி கால்வாயில் தூக்கி வீசிச்சென்றுள்ளார்.
ஆனால் இதிலிருந்து தப்பி பிழைத்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவி கூறுகையில், நான் திருமணத்திற்கு மறுத்ததால், பின் பக்கத்திலிருந்து துணியால் என்னுடைய சகோதரன் கழுத்தை இறுக்கினான்.
அப்போது என்னுடைய தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தினார். வலி தாங்க முடியாமல் விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். தாகம் எடுத்ததால், தண்ணீர் வேண்டும் என கேட்டேன். உடனே அவர் என்னை கால்வாயில் தூக்கி எறிந்துவிட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து நான் இறந்துவிட்டேனா என்பதை உறுதி செய்ய மீண்டும் அந்த இடத்திற்கு வந்தார்.
ஆனால் அதற்குள் அங்கிருந்து நான் தப்பிவிட்டேன் என கூறியுள்ளார். சம்பவம் குறித்து சிறுமியின் மாமா கூறுகையில், சிறுமியின் சகோதரியை தான் நான் திருமணம் செய்துள்ளேன். அவர் பல மாதங்களாக எங்களுடைய வீட்டில் தங்கி தான் படித்து வந்தார். படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்.
அவரை திருமணம் செய்துகொள்ள முயன்று அவருடைய தந்தை தோல்வியடைந்ததால், இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கற்சிலைமடு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த இருவரும் ஒட்டுசுட்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி எரு ஏற்றி கொண்டு பயணித்த லொறியொன்றே கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது. விபத்து இடம்பெற்ற போது லொறியில் இருந்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவருமே காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் முதன்முறையாக அதிநவீன மோட்டார் வாகனம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஹர்ஷ சுபசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2014ஆம் ஆண்டு இந்த மோட்டார் தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் வாகனத்திற்காக பயன்படுத்தப்பட்ட பாகங்கள் அனைத்தும் 100 சதவீதம் இலங்கையிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியலாளர்களான ஷஷிரங்க டி சில்வா உட்பட குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு இதனை பூர்த்தி செய்துள்ளனர்.
இலங்கை நிபுணர்களின் கண்காணிப்பில் இந்த மோட்டார் வாகனம் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது. முழுமையான மின்சார சக்தியில் பயணிக்கும் இந்த மோட்டார் வாகனம் சுமார் 1500 கிலோ கிராம் நிறையில் காணப்படுகின்றது. இந்த வாகனம் 3.6 நொடிபொழுதில் ஒரு கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. இதன் முழுமையான வேகம் மணிக்கு 240 கிலோ மீற்றராகும்.
இரண்டு பேர் மாத்திரம் பயணிக்க கூடிய வகையில் இந்த மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக இந்த மோட்டார் வாகனத்தை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த, பதுளை பிரதேச பிரபல பாடசாலையின் மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று காலை 7.30 அளவில் கொக்கல்ல ஓயா நீர்த்தேக்கத்தின் அருகில் ஆற்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பதுளை இசுரு உயன மாவத்தை பகுதியை சேர்ந்த 19 வயதான லக்ஷிகா மதுவந்தி என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த யுவதி கடந்த 14ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்ததாக உறவினர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, கந்தகெட்டிய பொலிஸார், பிரதேச மக்களின் உதவியுடன் மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாணவியின் சில பொருட்கள் கொக்கலா ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் காணப்பட்ட நிலையில் பொலிஸார் அவற்றை மீட்டிருந்தனர். இதனையடுத்து அந்த பிரதேசத்தில் தேடுதல் நடத்தப்பட்டது. மூன்று நாட்களின் பின் இன்று காலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை கொண்டு வரும் ஆற்றின் கீழ் பகுதியில் மாணவியின் சடலம் சிக்கியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் பதுளை நீதவான் முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், மாணவி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த தாய் அவரது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்கப்பட்ட பை ஒன்றிலிருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றில் அவர் சில விடயங்களை எழுதியுள்ளார்.
தாய் மற்றும் பிள்ளைகள் இருவரும் நேற்று முன்தினம் மாலை 6.20 மணியவில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதுண்டுள்ளனர். இது திடீர் விபத்தாக இருக்கலாம் என பொலிஸார் ஆரம்பத்தில் எண்ணிய போதிலும் அந்த பெண்ணுடையதாக இருக்கும் என சந்தேகிக்கப்படும் பையில் இருந்த கடிதத்தை சோதனையிட்டு பார்க்கும் போது அது தற்கொலை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், “நான் மற்றும் எனது பிள்ளைகளின் மரணத்திற்கு தர்ஷினி ஆகிய நான் மாத்திரமே பொறுப்பு. எனது வறுமை மற்றும் சுகயீனமே இந்த தீர்மானத்திற்கு காரணம்…. இப்படிக்கு தர்ஷினி” என குறிப்பிடப்பட்டுள்ளது. 32 வயதான ஜெனிட்டா தர்ஷினி ராமைய்யா என்ற இந்த தாயார் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். உயிரிழந்த இரண்டு பிள்ளைகளும் 8 மற்றும் 12 வயதான மகன்களாகும்.
உயிரிழந்தவர்களின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சடங்களை பொறுப்பேற்க அவர்களின் உறவினர்கள் வந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் கணவர் டுபாயில் பணி செய்ததாகவும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அவர் இலங்கை வந்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்ததுள்ளளர்.
எனினும் கணவன், மனைவி, பிள்ளைகள் குறித்தும் அக்கறை இல்லை எனவும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரே அவர்களை பராமரித்து வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மன்னார் வீதியில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஏற்படுத்திய குழியால் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வவுனியா பிரதேசத்தில் வீதியோரங்களில் குழிகள் தோண்டப்பட்டு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் நேற்று இரவு குளுமாட்டுச்சந்திக்கு அண்மையில் வவுனியா மன்னார் வீதிக்கு குறுக்காக குழாய் பொருத்துவதற்காக பாரிய குழி தோண்டப்பட்டுள்ளதுடன் இன்று காலைவரை (16.06) குறித்த வேலை முடிவடையாமையினால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
வவுனியா மன்னார் பிரதான வீதி அதிகளாவான போக்குவரத்து நிறைந்த வீதியாக காணப்படும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் குழாய் பொருத்துவதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருக்க வேண்டிய நிலையில் மாற்று வீதி தொடர்பான ஒழுங்கான தெளிவூட்டல்கள் கூட வழங்கப்படாமல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறித்த வேலையை மேற்கொண்டிருக்கின்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.
இதேவேளை வீதியை முழுமையாக வெட்டி குழி தோண்டப்பட்டமை தொடர்பில் குறித்த வீதியை பயன்படுத்துவோர் விசனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக குறித்த வேலைப்பகுதிக்கு பொறுப்பானவருடன் தொடர்புகொள்ள முயற்சித்தபோதிலும் அங்கிருந்தவர்க்கு அவர் தொடர்பான விடயம் தெரியாமையினால் அவர்களின் கருத்தை கேட்க முடியாது போயுள்ளது.