இலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் விண்வெளியில் நிலைநிறுத்தப்படவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ‘ராவணா-1’ செய்மதியே இவ்வாறு நிலைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் செய்தி வௌியிட்டுள்ளது. புவியில் இருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள விண்வெளி பாதையில் குறித்த செய்மதி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
மொரட்டுவையில் உள்ள ஆதர் சீ.கிளார்க் மத்திய நிலையத்தை சேர்ந்த தரிண்டு தயாரத்ன மற்றும் டுலானி சமிக்க ஆகிய தொழினுட்பவியலாளர்கள், ஜப்பானில் உள்ள Kyushu தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்துள்ளனர்.
ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குறித்த செய்மதிக்கு ராவணா-1 என பெயரிடப்பட்டது. 1.05 கிலோகிராம் எடைகொண்ட இந்த செய்மதி 11.3cm நீளத்தையும் 10cm உயரம் மற்றும் 10cm அகலத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் இதன் குறைந்தபட்ச ஆயுட்காலம் ஒன்றரை ஆண்டுகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமான் வளைகுடாவில் எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஈரான் தெரிவித்திருக்கும் கருத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். ஓமான் வளைகுடா பகுதியில் நோர்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஓமான் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துக்கு அருகே நங்கூரமிட்டிருந்த இரண்டு எண்ணெய் கப்பல்களை குறி வைத்து, கண்ணி வெடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன. எனினும் கப்பல்களில் இருந்த சிப்பந்திகள் 44 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரானே மேற்கொண்டதாக நேரடியாக குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கா, அது குறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. எனினும், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்திருந்ததுடன், அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி அமெரிக்கா, தங்கள் மீது குற்றம் சாட்டுவதாக ஈரான் கூறியுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எவ்வாறாயினும், ஈரான் தெரிவித்திருக்கும் கருத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார். மேலும், சிறிய படகில் வந்த ஈரானிய படையினர் வெடிக்காத குண்டுகளை கப்பலுக்கு அருகில் வந்து சேகரிப்பது போலான காணொளியை அமெரிக்கா வெளியிட்டிருந்ததை டிரம்ப் சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றங்கள் நிலவி வருகின்றன. ஒபாமா ஜனாதிபதியாக இருந்த சமயத்தில், ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்தார். மேலும் ஈரான் மீதான தடையை வலுப்படுத்தினார்.
2018ஆம் ஆண்டு ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இந்த நடவடிக்கை பல நாடுகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும் கூட இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.
மே மாதம் டிரம்ப், ஈரான் மீதான தடைகளை வலுப்படுத்தினார் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில். அதன்பிறகு அணு ஆயுத ஒப்பந்தத்தின் படி ஏற்பட்டுள்ள சில விதிகளை தகர்த்து கொள்வதாக ஈரான் தெரிவித்தது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவசர கால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இருந்தமை தெரியவந்தது.
அத்துடன், யுத்தம் நிறைவடைந்த பின்னர் ரத்து செய்யப்பட்டிருந்த அவசரகால சட்டம், இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் உடன் அமுல்படுத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முஸ்லிம்கள் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதன்படி, குறித்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் 77 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பிலும், 25 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத பின்னணியில் தற்போது முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக இன்று காலை முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள் வருகைத் தந்திருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்களே இவ்வாறு வருகைத் தந்திருந்தனர். சிறார்கள், பெண்கள் என பலர், கடும் வெயிலுக்கு மத்தியில் கைதுசெய்யப்பட்டுள்ள தமது உறவுகளை பார்வையிடுவதற்காக பல மணி நேரம் காத்திருந்தனர்.
இதையடுத்து, ஒவ்வொரு உறவினர்களாக உள்ளே அனுமதித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
தமது உறவை தேடி வருகைத் தந்த கம்பளை பகுதியைச் சேர்ந்த வசிர் அஹமத், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
தனது சகோதரர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றமற்றவர் என 12 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் தெரிவித்த போதிலும், இன்று வரை அவர் விடுவிக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சுமத்தினார்.
தனது சகோதரர் மாத்திரமன்றி, பல அப்பாவி முஸ்லிம்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் நிலைக்கொண்ட பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முன்னர், அரசியல் சதிகளை முதலில் ஒழிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலுள்ள அனைத்து இனங்களும், இலங்கையர் என்ற அடையாளத்துடன் வாழ்வதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும், அவ்வாறான நிலைப்பாட்டிலுள்ள தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்தை காண்பித்து, தமிழர்களை தாக்கியவர்கள், இன்று பயங்கரவாதிகள் என்ற பெயரில் முஸ்லிம்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
30 வருட யுத்தத்தை எதிர்நோக்கிய தமக்கு, இனியும் யுத்தமொன்றை எதிர்கொள்ளும் சக்தி தமிழ் பேசும் சமூகத்திடம் கிடையாது என வசிர் அஹமத் கூறினார்.
எந்தவித குற்றமும் இழைக்காத நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த அப்பாவி முஸ்லிம் மக்களை விடுவிக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசிர் அஹமத் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்து ஒன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த இளைஞனை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞனை அவரது பெற்றோர் இன்று அடையாளம் காட்டினர்.
கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த 19 வயதான தர்மானந்தசிவம் நித்திலன் என்ற இளைஞன் விபத்து காரணமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த இளைஞனை வைத்தியசாலையில் சேர்ந்தவர்கள் எந்தவித தகவல்களையும் வழங்காமல் சென்றுள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் முழுமையாக சுயநினைவற்ற நிலையில் தனது பெயரை மித்திரன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் சத்திரசிகிச்சைக்காக சத்திரசிகிச்சை கூடத்துக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரை அடையாளம் காண உதவுமாறு கோரப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த அவரது பெற்றோர் மகனின் சடலத்தை அடையாளம் காட்டினர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். இறப்பு விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உடற் பரிசோதனையின் பின் சடலத்தை தந்தையாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
கொழும்பில் இனவாதிகள் சிலரால் வீசப்பட்ட புத்தர் சிலைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. இராஜகிரிய, லேக்ரைவ் பகுதியிலுள்ள கான் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் 12 புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த சிலர் சிலைகளை கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விரைந்து செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸார் வீசப்பட்டிருந்த புத்தர் சிலைகளை மீட்டுள்ளனர்.
மோட்டர் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று புத்தர் சிலைகளை அங்கு வீசி விட்டுச் சென்றதை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பிக்குமாரும் அந்தப் பகுதிக்கு சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இதுவொரு திட்டமிட்ட இனவாத செயல் என்றும் இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட இனவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறும் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் வறட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ் வரட்சி நிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றன.
குறிப்பாக, புதுக்குளம், மூனாமடுக் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவிலான நீர் பெறப்பட்டமையாலும், வெப்பமான வறட்சிக் காலநிலையாலும் நீர் வற்றியுள்ளது.
இதனால் அப்பகுதிக் குளத்தில் பெருந்தொகையான மீன்கள் இறந்து வருகின்றன. அத்துடன், கால்நடைகளும் நீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.
இலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப் பெற்ற வவுனியா நகரத்தின் கண்ணே ஈழத்தின் ஆறாவது ஈஸ்வர தலமாக போற்றுவதற்கு பெருமை வாய்ந்ததும், காஞ்சி காமகோடி பீடகுருவருள் பொருந்தியதுமான கோவில்க்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை ஈந்தருளும் அருள்மிகு அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் செய்த பன்னிரண்டுஆண்டுகள் நிறைவுசெய்யும் தருணத்தில் வேதாகம முறைப்படி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் கடந்த 14.06.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மேற்படி பாலஸ்தான மகா கும்பாபிஷேகம் “சாகித்திய சிரோன்மணி, நயினை குருமணி”சிவஸ்ரீ. வை.மு.ப.முத்துக்குமாரசாமி குருக்கள் (ஆதீன பிரதமகுரு, ஸ்ரீ நாகபூஷணி அம்மன்கோவில், நயினாதீவு – வடகோவை)
மற்றும் ” வேதாகம கிரியா கலாநிதி”சக்தி உபாசகர்சிவஸ்ரீ. சதா சங்கரதாஸ் குருக்கள்(ஆலய பிரதம குருமணிகள்: குறிகட்டுவான் ஸ்ரீ மனோண்மணி அம்மன் ஆலயம்பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்.) ஆகியோரது தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சபரிமலை கோயிலுக்கு பெண்கள் போகலாமா… கூடாதா என்கிற சர்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், நான்கு திருநங்கைகள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசித்தனர். அந்த நால்வருள் ஒருவர்தான் கேரளாவைச் சேர்ந்த திருப்தி ஷெட்டி. திருநங்கையான திருப்தி ஷெட்டி, ஹிரித்திக் என்கிற திருநம்பியை காதலித்து கரம் பிடித்திருக்கிறார். இவர்களுடைய காதல் திருமணம் குறித்துக் கேட்டதும், புன்னகைத்து பேசத் தொடங்கினார், திருப்தி.
என்னுடைய சொந்த ஊர் கேரளா. என் சின்ன வயசிலேயே எனக்குள்ள இருந்த பெண்மையை உணர ஆரம்பிச்சேன். ஆறாம் வகுப்பு வரைக்கும்தான் பள்ளிக்கூடத்துக்குப் போனேன். அதுக்கும் மேல என்னைப் படிக்க அனுப்பலை. வேலை பார்த்துட்டு இருந்தேன். வீட்டுல யாரும் என்னைப் புரிஞ்சிக்கலை. ஒரு கட்டத்துக்கு மேல என் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறிட்டேன்.
அப்புறம் என் எதிர்காலமே கேள்விக்குறியாகிடுச்சு. என்னை மாதிரியான திருநங்கைகள் சமூகத்தோட சேர்ந்தேன். ரெஞ்சு அம்மாதான் என்னை அவங்க பொண்ணா தத்தெடுத்துக்கிட்டாங்க. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். வாழ்க்கையில் எதுக்காகவும் துவண்டு போகக் கூடாதுங்குறதுல ரொம்பவே உறுதியா இருந்தேன். ரொம்பக் கடினமா உழைக்க ஆரம்பிச்சேன்.
சொந்தமா ஹேண்ட்கிராஃப்ட் தொழில் பண்றேன். கைவினைப் பொருள்கள், ஆடைகளை விற்பனை பண்றேன். கேரளாவின் முதல் திருநங்கை தொழில்முனைவோர் என்கிற பட்டத்தை வாங்கியிருக்கேன். அதுமட்டுமில்லைங்க ‘Thripthi Handicrafts’ன்னு பிளே ஸ்டோர் ஆப் ஓப்பன் பண்ணியிருக்கேன். இதுதவிர, நிறையப் பள்ளி, கல்லூரிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளராகவும் போறேன். எனக்கு என் வேலையில் மட்டும்தான் கவனம் இருந்துச்சு” என்றதும் ஹிரித்திக் தொடர்ந்தார்.
இவங்க, கடந்த ஆண்டு ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்கே வெச்சுதான் இவங்களைப் பார்த்தேன். பார்த்ததுமே மனசுக்குள்ளே ஒரு ஈர்ப்பு இருந்துச்சு. அவங்க ரொம்பவே கேஷுவலா பேசுனாங்க. ஆனா, நான் அவங்களை நேசிக்க ஆரம்பிச்சேன்.
இதை என் ஃப்ரெண்டுகிட்டதான் முதல்ல சொன்னேன். எனக்காக திருப்திகிட்ட அவங்களும் பேசுனாங்க. ஆனா, திருப்தி சம்மதிக்கலை. அதுக்கப்புறம் நட்பா அவங்க என்கூட பேசுனாங்க. என் மனசுக்குள்ளே அவங்க மேல இருந்த காதல் அதிகமாகிட்டே போச்சு என்றவரை நிறுத்தி, திருப்தி தொடர்ந்தார்.
என்னைப் பொறுத்த வரைக்கும் நல்லா சம்பாதிக்கணும்… லைஃப்ல நல்ல நிலைமைக்குப் போகணும்கிறதில் ரொம்பவே வைராக்கியமா இருந்தேன். காதலெல்லாம் இப்போதைக்கு தேவையில்லைனு நினைச்சேன். என்னைத் தத்தெடுத்த ரெஞ்சும்மாகிட்ட இவர் பொண்ணு கேட்டார்.
பிறகு, ரெஞ்சும்மா என்கிட்ட வந்து இவருக்காகப் பேசினாங்க. அவங்க பேசும்போதும் நான் சம்மதிக்கலை. எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கும் திருமணம் குறித்த கனவுகளெல்லாம் இருந்துச்சு. ஒரு பையனை திருமணம் செஞ்சுக்கிட்டா எத்தனை நாள்கள் அவங்க என்கூட வாழுவாங்கன்னே தெரியாது. அதுக்கு நம்ம கம்யூனிட்டியைச் சேர்ந்தவங்களையே திருமணம் செஞ்சுக்கலாமேன்னு முடிவெடுத்தேன்.
ஹிரித்திக்கும் என்னை மாதிரி பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆபரேஷன் பண்ணியிருக்கார். அவர் மேல எனக்கு எப்பவுமே மரியாதை உண்டு. அதனால் இவரையே திருமணம் செஞ்சுக்கலாம்னு முடிவெடுத்தேன்” என்று புன்னகைத்தார்.
என் திருமணத்தை கோயில்ல நடத்தணும்னு ஆசை. அதே மாதிரி கோயில்ல எங்களுடைய திருமணம் நடந்துச்சு. சாயங்காலம் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தோம். எங்களுடைய திருமணத்துக்கு எங்க திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பலரும் வந்திருந்தாங்க. நடிகர் ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் சங்கர்னு திரைத்துறை சார்ந்த நண்பர்களும் வந்திருந்தாங்க. மலையாள மீடியா நண்பர்கள் எல்லோரும் எங்க திருமணத்தில் கலந்துகிட்டது மிகப்பெரிய சந்தோஷம் என்றவரிடம் அடுத்தகட்ட பிளான் குறித்துக் கேட்டோம்.
ஹிரித்திக் டிரான்சிலேஷன் ஒர்க் பண்ணிட்டு இருந்தாரு. இப்போ என்கூட பிசினஸில் ஹெல்ப் பண்றார். இரண்டு பேரும் சேர்ந்து பிசினஸை அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகணும். என்னால குழந்தை பெத்துக்க முடியாதுங்குறதுனால இரண்டு குழந்தைங்களை அடுத்த வருஷம் தத்தெடுத்து வளர்க்கணும்னு நாங்க முடிவெடுத்திருக்கோம்.
எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா, என்னால படிக்க முடியலை. அதனால, என் பசங்களை நல்லா படிக்க வைக்கணுங்கிறது என் கனவு. என் கனவுகளுக்கு சிறகு கொடுத்தவர் என் ஹிரித்திக் எனப் புன்னகைக்கிறார், திருப்தி.
குஜராத்த்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலின் கழிவுநீர் தொட்டியை துப்புரவு தொழிலாளர்கள் 4 பேர் உட்பட 7 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மூன்று பேர்களின் பெயர்கள் அஜய் வசவா (24), விஜய் சவுகான் (22), சாஹ்தேவ் வசவா (22) என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொலிசார் ஹொட்டல் உரிமையாளர் அப்பாஸ் போரனியாவை கைது செய்துள்ளனர். பொலிசார் கூறுகையில், கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் ஒருவர் இறங்கியுள்ளார். உள்ளே வாயு கசிவு காரணமாக அவருக்கு மூச்சு திணறியது.
அவர் வெளியில் வராததை கண்டு மற்றவர்கள் உள்ளே இறங்கிய நிலையில் அனைவரும் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர். இதனிடையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பார்த்து குடும்பத்தார் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் இரு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த வேகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா.
இவருக்கு சங்கர் என்பவருடன் திருமணமாகி அஸ்வினி மற்றும் தனுஷ் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. கேட்டரிங் பணிக்காக சங்கர் 3 நாட்களுக்கு முன் சென்னை சென்றிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த நித்யா, தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 3 பேர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 28 வயது மனைவியுடன் தமிழகத்தின் திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லி கவுண்டன் புதூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த தொழிலாளியின் மனைவிக்கு குழந்தை பிறந்ததால், குழந்தையை கவனித்துக்கொள்ள, அந்த பெண்ணின் 13 வயது தங்கையை பீகாரில் இருந்து திருப்பூருக்கு வரவழைத்துள்ளார். அதன் பின் திருப்பூர் வந்த அந்த சிறுமி, தனது அக்காளுடன் தங்கி குழந்தையை கவனித்து வந்தார்.
அப்போது அவர்களின் வீட்டின் அருகே வசித்து வந்த அஜித் கர்ஷல் என்ற 26 வயது இளைஞன் சிறுமியிடம் அடிக்கடி பேசி, பழக்கத்தை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளான்.
இதையடுத்து சொந்த ஊருக்கு சென்ற அந்த இளைஞன் மீண்டும் திருப்பூருக்கு திரும்பவே இல்லை. இதற்கிடையில் சிறுமியின் வயிறு திடீரென்று பெரிதாகிக் கொண்ட சென்றதால், அந்த சிறுமியின் அக்கா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூற, இதைக் கேட்டு அக்கா அதிர்ச்சியடைந்தார்.அதன் பின் சிறுமிடம் முழுமையாக விசாரித்த போது, அருகிலிருந்த வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் கர்ப்பமானதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதால், பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கர்ப்பமாக இருந்த சிறுமிக்கு நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் பெற்ற தந்தையே தங்களை பணத்துக்கு விற்க முயன்றதால் மனமுடைந்த இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிசூர்யாநகரை சேர்ந்தவர் பத்பநாவ் புயன் (40). இவருக்கு தீபா (17) மற்றும் ஜீதா (11) என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
பத்பநாவின் மனைவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதன் பின்னர் நமீதா என்ற பெண்ணை பத்பநாவ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்து வந்த பத்பநாவ் குடிக்கு அடிமையானவர் ஆவார். குடித்து விட்டு மனைவி, மகள்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.
சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மது வாங்கவே செலவு செய்த நிலையில் பத்பநாவுக்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதையடுத்து கொடூரமான முடிவுக்கு அவர் வந்தார், அதன்படி தன்னுடைய இரண்டு மகள்களையும் பணத்துக்காக விற்க முடிவு செய்தார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த தீபா மற்றும் ஜீதா எலி மருந்து குடித்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து ஊர் மக்கள் பத்பநாவை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஊர் மக்கள் கூறும் போதும் தீபாவுக்கும், ஜீதாவுக்கும் பத்பநாவ் சொந்த தந்தை என்றாலும் மாற்றாந்தந்தை போல தான் நடந்து கொண்டார் என கூறியுள்ளனர்.
விமான விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த வினோத் ஹரிஹரனுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆனது தெரியவந்துள்ளது. இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு கடந்த 3ஆம் திகதி சென்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ-என் 32 ரக போர் விமானம் சியாங் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர்.
அதில், கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட வினோத் ஹரிஹரன் என்பவரும் ஒருவராவார். வினோத் பிறந்தது கேரளாவாக இருந்தாலும், கல்லூரிப் படிப்பை கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தான் முடித்துள்ளார்.
2011-ல் விமானப்படையில் சேர்ந்த வினோத் கடந்தாண்டு, புயல் வெள்ளம் கேரளாவை புரட்டி போட்ட போது இந்திய விமானப்படையின் சார்பில் நடைபெற்ற மீட்புப் பணியில் சிறப்பாக பணியாற்றினார். வினோத்துக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆகின்றன.
கோவை சூலூர் விமானப்படையில் பணியாற்றிய அவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் அஸ்ஸாமிற்கு மாற்றப்பட்டுள்ளார். அஸாமில் இருந்த வினோத்தின் மனைவி, விடுமுறைக்காக கோவை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், இந்தக் கோர விபத்து குறித்து கிடைத்த தகவலால் வினோத்தின் மனைவி மற்றும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் பெண்ணாக மாற ஆசைப்பட்ட 9 வயது மகனை பெற்ற தாயே, தலையை துண்டித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த ரோசனா காண்டிடோ (27) என்கிற தாய், கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கணவரிடம் இருந்து குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
9 வயது மகன், மகள் மற்றும் காதலி கேசிலா பெஸ்ஸோ (28) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ரோசனாவின் மகன் ருவான், தான் ஒரு பெண்ணாக மாற ஆசைப்படுவதாக தாயிடம் கூறியுள்ளான்.
இதனை கேட்டு கோபமடைந்த அவர், ருவானை 12 முறை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். பின்னர் அவனுடைய மர்ம உறுப்பு மற்றும் புருவங்களை அறுத்து எடுத்துள்ளார். உடலில் இருந்து தோலை அகற்றிவிட்டு, தலை உட்பட உடல்பாகங்களை துண்டுகளாக நறுக்கியுள்ளார். அவற்றில் சிலவற்றை சமைத்தும், சிலவற்றை சூட்கேசில் வைத்து சாக்கடையில் வீசியும் எறிந்துள்ளனர்.
இந்த கொடூரமான சம்பவத்திற்கு ரோசனாவின் காதலி கேசிலா பெஸ்ஸோ முழு உடந்தையாக இருந்துள்ளார். ருவான் தங்களுக்கு ஒரு சுமையாக இருந்ததாகவும், அவன் மீது வெறுப்பு மட்டுமே இருந்தது, அன்பு இல்லை என பொலிஸாரிடம் கூறியுள்ளனர். இதற்கிடையில் மீட்கப்பட்ட 9 வயது மகள் தற்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இது ஒரு பயங்கரமான வழக்கு என பொலிஸார் கூறியுள்ளனர்.
சென்னையில் அறுவை சிகிச்சை அரங்கில், மயக்க நிலையில் இருந்த பெண்ணிடம் உதவி மயக்க மருந்தாளர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மூட்டுவலியால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், குறித்த பெண் கடந்த 4ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 5ஆம் திகதி அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அரை மயக்கத்தில் இருந்த அவரிடம், உதவி மயக்க மருந்தாளர் டில்லிபாபு என்பவர் தவறாக நடந்துள்ளார்.
செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்ததால், தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண்ணால் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மயக்கம் தெளிந்த பின் குறித்த பெண் மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பெண் ஒன்லைன் மூலம் காவல் ஆணையருக்கு புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விசாரிக்க வந்த பொலிசாரிடம், குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குறித்த பெண், துரைப்பாக்கம் காவல்துறையினரிடம் மீண்டும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த பொலிசார் அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது தான் குறித்த பெண்ணிடம், உதவி மயக்க மருந்தாளுனர் டில்லிபாபு தவறாக நடந்துள்ளது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து டில்லிபாபுவை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் குறித்த பெண், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வாள் முனையில் மூதாட்டியை அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடா்பாக அயலவர்கள் கூறுகையில், மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார்.
ஓய்வு பெற்ற அரச ஊழியரான குறித்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த கும்பலொன்று வாளை காட்டி அச்சுறுத்தி, மூதாட்டியின் வாய்க்குள் துணியை அடைத்து விட்டு பணம், நகை மற்றும் தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர்.
கதவுகளை உடைத்தும், கூரையை பிரித்தும் இரு வழிகளால் கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
வாய்க்குள் துணி அடைக்கப்பட்ட நிலையில் மூச்சுவிட சிரமப்பட்ட மூதாட்டியை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்ததுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இதற்கு முன்னரும் சில தடவைகள் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் கூறுகின்றனர்.