தீயில் கருகி உயிரிழந்த பெண்!!

உயிரிழந்த பெண்

களனி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119க்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 74 வயதான அனஸ்ட்ரோஷியா மரியா அரலந்திர என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தால், மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து விட்டு, பெண்ணின் மகளும், அவரது கணவரும் அயல் வீடொன்றில் நடந்த வைபவம் ஒன்றுக்கு சென்றிருந்தனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மெழுகுவர்த்தி கீழே விழுந்து இந்த தீ பரவியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. களனி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்!!

வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள்

நாவலப்பிட்டி – கடுலஞ்சேன தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் வைத்து தங்க மாலையொன்றை அறுத்த சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய கும்பாபிஷேகம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆலயத்திற்குள் நுழைந்த ஆறு சந்தேகத்திற்கிடமான பெண்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை போல் பாவனை செய்து பெண்ணொருவரின் தங்க மாலையை அறுத்துள்ளனர்.

இதனையடுத்து தங்க மாலையை பறிகொடுத்த கூச்சலிட்ட நிலையில் ஆலயத்திற்குள் வந்த பொலிஸார் அறுக்கப்பட்ட தங்கமாலையை மீட்டுள்ளதுடன் இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பெண்களையும் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் கூறுகையில், சந்தேகநபர்களான ஆறு பெண்களும் ஆலயங்களில் இடம்பெருகின்ற விஷேட பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகங்கள் என்பவற்றுக்கு குழுவாக சென்று பக்தர்களின் தங்க நகைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் வாழைச்சேனை, புத்தளம், ஆலாவத்த, வத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் 23 தொடக்கம் 28 வரையான வயதினை உடையவர்கள் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சந்கேதநபர்களை இன்றைய தினம் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்!!

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளியாக இருந்த கௌரிக்கு இப்போது வயது 26. ரோஷன் போன்றவர்களைக் கொண்ட அடக்குமுறை ஆட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு எதிராக போராடிய இயக்கத்தைச் சேர்ந்தவர் அவர்.

“நான் சிங்களர்களைப் பார்த்ததோ அல்லது பேசியதோ கிடையாது” என்கிறார் கௌரி. “அவர்கள் கெட்டவர்கள், எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்று நினைத்திருந்தோம்” என்று அவர் கூறினார்.

ரோஷனை பொருத்தவரையில் விடுதலைப்புலிகள் வெறுப்புக்கு உரியவர்களாக இருந்தனர். 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் அவர்களுடைய தாக்குதல்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது அவர்களுடைய வெறுப்புக்குக் காரணம்.

“நாங்கள் ஒருவரை ஒருவர் எதிரியாகத்தான் பார்த்துக் கொண்டோம்” என்று பி.பி.சி.யின் ‘பிரிவினைகளைக் கடந்து’ (Crossing Divides) பகுதிக்கு அளித்த பேட்டியில் கூறினார் 29 வயதான ரோஷன்.

சிதறிவிட்ட பூமியில் மக்கள் ஒன்று சேருவது பற்றிய நிகழ்ச்சி அது“ஆனால், இப்போது திருமணம் செய்து கொண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்கள் காதலின் அடையாளம் தான் எங்களுடைய மகள்” என்று ரோஷன் கூறினார்.

எனவே, வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், குட்டி மகள் செனுலி சமல்காவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது போன்ற கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலைக்கான மாற்றத்தை ஏற்படுத்தியது எது?

பெரும்பான்மை சிங்களர்களின் தேசியவாத செயல்பாடுகள் அதிகரித்ததால் ஏற்பட்ட கோபத்தில் – 1983ல் ஒரு தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து தமிழ்ப் போராளிகளின் மோதல் இலங்கையில் ஆரம்பமானது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடித்தன. அதில் சிறுபான்மையினரான அவர்களில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர்.

கௌரியின் வாழ்வில் மோதல் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த விஷயமாகிவிட்டது. ஆனால், 2009 ஜனவரியில், திரும்ப முடியாத வகையில் மாற்றம் ஏற்பட்டது. தன்னுடைய மூத்த சகோதரர் சுப்ரமணியம் கண்ணன் ஓட்டிச் சென்ற டிராக்டர் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கியது என்ற தகவல் வந்த பிறகு அந்த மாற்றம் நிகழ்ந்தது.

வடக்கு இலங்கையில் விடுதலைப்புலிகள் வசமிருந்த விஷ்வமடு என்ற அவருடைய கிராமத்திற்கு அருகே, அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து அந்த டிராக்டர் மீது தாக்குதல் நடந்திருக்கிறது.

மனம் உடைந்த நிலையில், சகோதரரைத் தேடி சென்றபோது போராளிகளிடம் சிக்கிக் கொண்டார். 16 வயதான கௌரிக்கு அவர்கள் ஒரு வாரம் பயிற்சி அளித்து, போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டனர்.

“மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்” என்கிறார் கௌரி. “என் தோழியரில் ஒருவர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளானார். அவளைத் தூக்க நாங்கள் முயற்சி செய்தோம்.

ஆனால், அவள் சயனைடு குப்பியைக் கடித்து மரணம் அடைந்தார். மிக மோசமாகக் காயமடைந்துவிட்டதால் இனிமேல் உயிர் பிழைப்பதில் அர்த்தமில்லை என்று சொல்லி அப்படி மரணித்துவிட்டாள்” என்கிறார் கௌரி.

“நாங்கள் குளிப்பதற்கு வசதி கிடையாது. சரியான உணவு கிடையாது. சில நேரங்களில், எதற்காக வாழ வேண்டும் என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்” என்றும் கௌரி குறிப்பிடுகிறார்.

ரோஷனுக்கு 14 வயதாக இருந்தபோது 2004ம் ஆண்டில் அவருடைய வாழ்வில் உள்நாட்டுப் போரின் பாதிப்பு நிகழ்ந்திருக்கிறது.

வவுனியா மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கும், அரசு வசம் இருந்த பகுதிக்கும் இடையில் ரோஷனின் குடும்பம் வசித்த கிராமத்தில் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, விடுதலைப்புலிகளின் குண்டுவீச்சு தாக்குதல் நடந்திருக்கிறது.

பொதுமக்களும், ராணுவத்தினரும் அதில் கொல்லப்பட்டனர். அதன்பிறகு கோபமடைந்த நிலையில், தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் மக்கள் பாதுகாப்புத்துறையினருடன் ரோஷன் குடும்பத்தினர் சென்றுவிட்டனர்.

“ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தாக்குதல்கள் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம்” என்கிறார் அவர். போரில் தனது உறவு முறை சகோதரர் ஒருவரை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

“மக்கள் பயத்தில் இருந்தார்கள். கொல்லப்படுவோம் என்ற அச்சம் காரணமாக, குடும்பங்கள் ஒன்றாக பயணிக்காமல் இருந்தனர்” என்றார் அவர்.

2009ல் போர் முடிவுக்கு வந்ததற்கு முன்னாள் ஏறத்தாழ 1,00,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோதக் கொலைகளுக்கு இரு தரப்புமே காரணம் என்று 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டது.

துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்குப் பாதுகாப்புப் படையினர் தான் காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

குழந்தைகள் மற்றும் பருவ வயதை தாண்டியவர்களை போரில் ஈடுபடுத்தியதாக விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது. கௌரி ஒரு மாதத்துக்கும் மேலாகப் போரில் ஈடுபட்டிருக்கிறார்.

அவருக்கு இருதயக் கோளாறு இருப்பதாக விடுதலைப்புலிகளின் கமாண்டர்கள் அறிந்து, அவரை விடுவித்து விட்டனர். அதன் பிறகு இலங்கை ராணுவத்திடம் அவர் தஞ்சமடைந்துவிட்டார்.

அரசு மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளிகளில் கௌரியும் ஒருவர்.

பிரிவினைக்கான கோரிக்கை குறித்து திருப்தி அடைந்திருந்தபோதிலும், சிங்களர்களுடன் காலத்தைக் கழித்தபோது, அவர்கள் “மனிதாபிமானிகள்” என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இறுதியில் அவர் மக்கள் பாதுகாப்புத் துறையில் சேர்ந்தார்.

வடக்குப் பகுதியில் சமுதாய மக்களுக்கு அளிப்பதற்காக வேளாண் பண்ணைகளை அதிகாரிகள் உருவாக்கினர். அவற்றில் ஒன்றான – உடயன்கட்டு – பகுதியில் தான் தன்னுடைய எதிர்கால கணவரை கௌரி சந்தித்தார்.

2013ல் கௌரி அங்கே பணியமர்த்தப்பட்ட போது, ரோஷன் அங்கு ஏற்கெனவே ஓராண்டாக இருந்து வந்தார். தமிழ் பேசும் மக்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் அவருடைய நிலை பரிதாபகரமாக இருந்தது.

அவருக்கு மொழி பெயர்த்துக் கூறிய, கௌரியுடன் பணியாற்றியது, அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட்டது.

“அவர் தனிமையாக உணர்ந்திருக்க வேண்டும்” என்கிறார் கௌரி. “அவர் நன்றாக இருக்கிறார் என்பதை உணர்த்த விரும்பினேன். எனவே வீட்டில் சமைத்த உணவை அவருக்கு எடுத்துச் செல்வேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

வெகு விரைவிலேயே அவர்களுடைய உணர்வுகள் தெளிவாகிவிட்டன. “அவருடைய அம்மாவைக் காட்டிலும் அதிகமாக அவரை நான் நேசிப்பதாகக் கூறினேன்” என்று கௌரி கூறினார்.

“நான் விடுமுறையில் சென்றபோது கௌரி அழுதிருக்கிறார்” என்றார் ரோஷன். “வாழ்க்கைக்குத் தேவையான பணம் என்னிடம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய கௌரி விரும்பியிருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.

தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தியபோது, எதிர்ப்புகள் இருந்தன. “சிங்களப் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீ ஏன் தமிழ்ப் பெண் மீது நாட்டம் கொண்டிருக்கிறாய்?” என்று ரோஷனின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

ரோஷனின் தாயார் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னர் ஈடுபட்டிருந்த கௌரியின் சகோதரியும் இதை எதிர்த்திருக்கிறார்.

சிங்களரை மணப்பது, தமது சமுதாயத்தில் இருந்து கௌரியை பிரித்துவிடும் என்றும், கௌரியை அவர் துன்புறுத்துவார் என்றும் அவர் கருதியிருக்கிறார்.

இருவரும் பாசம் மற்றும் மரியாதை காட்டுவதைப் பார்த்து இரண்டு தரப்பு குடும்பத்தினரும் மனம் மாறியிருக்கின்றனர். “கடைசியாக நல்லது நடந்தது” என்கிறார் கௌரி.

செனுலி சமல்கா பிறந்ததில் ரோஷனின் தாயார் மகிழ்ச்சி அடைந்தார் என்கிறார் கௌரி. ரோஷனின் தாயார் இப்போது காலமாகிவிட்டார். “எங்களுடைய இளைய தேவதை எங்களை இன்னும் நெருக்கமாக்கிவிட்டாள்” என்கிறார் கௌரி.

இப்போதெல்லாம், தம்பதியினராக தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்வதாக கௌரி தெரிவித்தார். தன் சகோதரிக்கு “பிடித்தமான சகோதரராக” ரோஷன் மாறிவிட்டார் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஜோடிக்கு 2014ல் திருமணம் நடைபெற்றது. செனுலி சமல்காவை இந்து மற்றும் புத்த கோவில்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களைப் பொருத்த வரை பிரிவினை என்பது கடந்த கால விஷயமாகிவிட்டது.

இருந்தபோதிலும், 250 பேர் கொல்லப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் வெடித்த நிலையில், நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தொடங்கிவிடுமோ என்று இந்தத் தம்பதியினர் அஞ்சுகின்றனர்.

“ஒரு போரில் ஒரு தரப்பு மக்கள் மட்டும் மரணிக்கிறார்கள் என்பது அல்ல” என்கிறார் கௌரி. “இனம் அல்லது மதம் வித்தியாசமின்றி நிறைய பேர் கொல்லப்படுகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
“இன்னொரு போர் எங்களுக்கு வேண்டாம்” என்கிறார் கௌரி.

– BBC – Tamil-

கொழும்பில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தமிழ் இளம் தாய், பிள்ளைகள்!!

ரயிலில் பாய்ந்து தற்கொலை

கொழும்பில் நேற்று இளம் தாயும் இரு பிள்ளைகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மூன்று பேரும் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

இளம் தாய் ஒருவரும் இரண்டு மகன்மாருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஜெனட் தர்ஷனி ராமைய்யா என்ற 35வயது மதிக்கத்தக்க பெண்ணும் அவரது 10 மற்றும் 11 வயதுடைய மகன்களுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் வாழ வழியின்றி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரதும் உடல் சிதறிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அவரது தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து சற்று தூரத்தில் கிடந்த பையில் “எங்களுக்கு வாழ வழியில்லை” என எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நகர் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு அலங்கரிப்படுகின்றது!!

பொசன் போயா

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா மணிக்கூட்டு சந்தியடியிலிருந்து ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ முகாம் வரையிலான பகுதி பௌத்த கொடியினால் அலங்கரிக்கும் பணியில் இரானுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக ஏ9 வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ போதி தக்சிணாராமய பௌத்த விகாரையினுள் கொட்டகைகள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் விகாரைக்கு முன்பாக வெசாக் தோரணங்கள் அமைக்கும் பணியிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

நாளையதினம் இரவு வன்னி இரானுவத்தினரின் ஒழுங்ககைப்பில் ஸ்ரீ போதி தக்சிணாராமய பௌத்த விகாரையில் விசேட புஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சிப் பாசறை!!

பயிற்சிப் பாசறை

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு பால்நிலை சமத்துவ பொறுப்புடனான பாதீடு தொடர்பான பயிற்சி பாசறை ஒன்று வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (15.06.2019) காலை 9.30 தொடக்கம் மதியம் 3.30 மணிவரை நடைபெற்றது.

ட்ராண்ஸ்பேரென்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான செயலமர்விற்கு வவுனியா நகரசபை, வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபைகளை சேர்ந்த 15க்கு மேற்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இச் செயலமர்வின் விரிவுரையாளராக நளினி ரத்னராஜா கடமையாற்றியதுடன் ட்ராண்ஸ்பேரென்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனத்தின் முகாமையாளர் மங்களா சங்கர் (சட்டத்தரணி) , நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எச்.எம்மக்கீன் , சட்ட உத்தியோகத்தர் அஞ்சனா விக்ரம ஆராய்ச்சி ஆகியோர் வழிநடத்தியிருந்தனர்.

வவுனியா பாலமோட்டை குளத்தினுள் கவனிப்பாரற்று நிற்கும் காயமடைந்த யானை!!

காயமடைந்த யானை

வவுனியா பாலமோட்டை குளத்தினுள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காயமடைந்த நிலையில் காணப்படும் யானை தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா பாலமோட்டை குளத்தினுள் யானையொன்று வலது முன்னங்காலில் காயமடைந்த நிலையில் காணப்படுவதாக கிராம மக்களால் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் யானை குளப்பகுதியில் தொடர்ந்தும் காயத்துடன் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு மீண்டும் அறிவித்தல் வழங்கியதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் யானையை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

எனினும் அதற்கு சிகிச்சை அளிக்கப்படாமையினால் தொடர்ந்தும் யானை குளப்பகுதியில் காணப்பட்டு வருகின்றது. நடமாடுவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ள இவ் யானை காட்டுப்பகுதிக்குள் செல்ல முடியாத வகையில் காணப்படுகின்றமை தொடர்பில் கிராம வாசிகள் கவலை வெளியிட்டனர்.

இந் நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உததியோகத்தர் ஒருவருடன் ஊடகவியலாளர் இது தொடர்பில் கேட்டபோது, காயமடைந்த யானையினை சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அவர் வருகை தராமையினால் சிகிச்சை அளிக்கமுடியாதுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய!!

சபாநாயகர் கரு ஜயசூரிய

வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள டீ.யு.லீ நினைவு நூலகம் மற்றும் மஹாகருணா பள்ளியினை இன்று (15.06.2019) காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

வவுனியாவிற்கு இன்று காலை 9 மணியளவில் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய ஏ9 வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ போதிதக்சிணாராமய பௌத்த விகாரைக்கு சென்று விகாரதிபதி சியம்பலாகஸ்வெல விமல சாரநாயக்க தேரரிடம் ஆசிகளை பெற்றதுடன் வவுனியாவில் தற்போதைய நிலமைகள் பற்றியும் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் 10.30 மணியளவில் ஈரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள டீ.யு.லீ நினைவு நூலகம் மற்றும் மஹாகருணா பள்ளியினை திறந்து வைத்தார்.

இக் கட்டிட திறப்பு விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச மற்றும் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த வெளிநாட்டவர்கள், பௌத்த விகாரதிபதிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மாணவன் செய்த செயல்!!

மாணவன் செய்த செயல்

தமிழகத்தில் கல்லூரி தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருச்சி கே.கே. நகரை சேர்ந்த மாணவி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மூலம் அவரது நண்பர்கள் சரவணக்குமார், பாலாஜி ஆகியோர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளனர்.

இந்நிலையில் தோழி மூலம் மாணவியின் செல்போன் நம்பரை பெற்ற சரவணக்குமார், அவரை உயிருக்கு உயிராக காதலிப்பதாக வசனம் பேசியுள்ளார். மாணவிக்கு முதலில் சாதாரண எஸ்எம்எஸ் அனுப்பியவர், நாளடைவில் ஆபாச எஸ்எம்எஸ்சை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி சரவணக்குமாரை கடுமையாக எச்சரித்து அனுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் ஒரு கட்டத்தில் தனது நண்பர்கள் அருண், அஸ்வின், பாலா மற்றொரு பாலா உள்ளிட்ட 4 பேருடன் மாணவி வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் சரவணக்குமாரை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதுடன் மேலும் 2 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எடலைப்பட்டியில் உள்ள பசுமை பூங்காவிற்கு வரவேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன மாணவி சரவணக்குமாரை சந்திக்க சென்ற போது அவரிடம் பணம் வாங்கி கொண்டு, சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தன்னுடைய நம்பரை பிளாக் செய்ததால் ஆத்திரமடைந்த அவர், தோழி போன் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் மாணவி தந்தையிடம் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதபடி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் பொலிசார் போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருக்கு துணை போன 4 பேரையும் தேடி வருகின்றனர்.

புகையிரதத்தில் மோதுண்டு தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி!!

தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக பலி

கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மூன்று பேர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பொலிஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து அழுத்கம நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த மூவரும் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த மூன்று பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிறுமியின் படுக்கையறைக்குள் மறைந்திருந்த நபர் : வெளியான உண்மைகள்!!

படுக்கையறைக்குள் மறைந்திருந்த நபர்

அமெரிக்காவின் Mt. Juliet பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் ஒரு இளைஞர் நுழைவதைக் கண்ட அயலகத்தார் ஒருவர் பொலிசாருக்கு தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் அந்த வீட்டின் கூரைக்கடியில் உள்ள பகுதியில் அவர் ஒளிந்திருப்பதைக் கண்டு அவரைக் கைது செய்தனர்.

Matthew Casto (18) என்னும் அந்த நபர், சற்று முன்னர்தான், அதே வீட்டிற்குள் முன்னொரு முறை அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். அந்த வீட்டில் வசிக்கும் ஒரு 14 வயது சிறுமியின் படுக்கையறைக்கு மேல் உள்ள கூரைக்கடியில் அவரை பொலிசார் கைது செய்தார்கள்.

கைது செய்யும்போது அவர் முரண்டு பிடித்ததால் டேஸர் என்னும் கருவியை பயன்படுத்தித்தான் அவரை கைது செய்ய முடிந்தது. ஏற்கனவே ஒரு முறை அதே வீட்டிற்குள் நுழைந்ததற்காக Casto கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதோடு அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தார். விசாரணையில், சிறிது காலமாகவே அந்த வீட்டின் கூரைக்கு கீழ் Casto மறைந்து வாழ்ந்ததும், அந்த சிறுமி தூங்கியதும் அவளது அறையிலுள்ள துணி வைக்கும் ஷெல்ஃப் வழியாக அவர் வெளியே வருவதுண்டு என்பதும் தெரியவந்துள்ளது.

இரண்டாவது முறையாக Casto அதே பெண்ணின் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால்,அரசாணை ஒன்றை மீறியதற்காகவும், அத்து மீறி நுழைந்ததற்காகவும், சட்ட விரோதமாக ஒரு வீட்டுக்குள் நுழைந்ததற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிகிறது.

நடிகை வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்த விஷால் : பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பெண்ணுக்கு நேர்ந்த கதி

நடிகர் விஷால் பெண் ஒருவரின் வீட்டுக்குள் இரவில் சுவர் ஏறி குதித்து சென்றார் என அவதூறு பரப்பிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழில் வெளியான மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் நடித்தவர் காயத்ரி சாய். சென்னையில் குடியிருக்கும் இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் ’கொங்கு நாட்டு இளவரசி’ என்ற பெயரில் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் விஷ்வதர்ஷினி என்ற பெண் காயத்ரியுடன் நட்பானார். பின்னர் ஒரு நாள் காயத்ரி வீட்டுக்கு சென்ற விஷ்வதர்ஷினி அவரிடம் அவசரமாக ரூ 20,000 கடன் கேட்ட நிலையில் காயத்ரியும் கொடுத்தார்.

இதன்பின்னர் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் விஷ்வதர்ஷினி தனது பேஸ்புக்கில் காயத்ரி மற்றும் அவர் மகள் குறித்து அவதூறு பரப்பினார். மேலும் நடிகர் விஷால், காயத்ரி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து இரவில் சென்றதாகவும் பதிவிட்டு அதிரவைத்தார்.

இது தொடர்பாக காயத்ரி கடந்தாண்டு நவம்பர் மாதம் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் விஷ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அவர் சில மாதங்கள் கழித்து நேற்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து காயத்ரி கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக எனக்கு நீதி கிடைத்துள்ளது. விரைவில் விஷ்வதர்ஷினிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். விஷ்வதர்ஷினியைக் கைது செய்த சென்னை போலீஸ் ஆணையருக்கு நன்றி. விஷால் எனக்கு சிறு வயது முதலே நன்றாகத் தெரியும். என் வீட்டுக்கு வருவார், அவர் ஏன் சுவர் ஏறி குதித்து வரவேண்டும் என கூறியுள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரிபவர்களை குறிவைத்த இளம்பெண் : அழகில் மயங்கிய இளைஞர்கள்!!

அழகில் மயங்கிய இளைஞர்கள்

வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய இளைஞர்களை குறி வைத்து இந்திய பெண் மிக பெரிய மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோரம் அர்ச்சனா. இவர் திருமண தகவல் மைய இணையதளத்தில் தன்னை மணக்க மாப்பிள்ளை வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதோடு தனது பெயர் புஷ்தயி என்ற தகவலோடு தனது புகைப்படம் என ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய இளைஞர் அர்ச்சனா அழகில் மயங்கி அவரை தொடர்பு கொண்டார். இருவரும் இணையதளம் மற்றும் போன் மூலம் பேசி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.

பின்னர் திருமண நிச்சயத்துக்கு தனக்கு புடவைகள், பிளாட்டினம் மோதிரம் வாங்க பணம் வேண்டும் என இளைஞரிடம் அர்ச்சனா கேட்க முகத்தையே பார்க்காத பெண்ணின் வங்கி கணக்குக்கு அவர் ரூ 1,50,000 அனுப்பினார். பின்னர் அர்ச்சனாவை தொடர்பு கொள்ள இளைஞர் முயன்ற போது போன் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த இளைஞர் இது குறித்து ஹைதராபாத்தில் இருக்கும் தனது பெற்றோருக்கு தகவல் கொடுக்க அவர்கள் அர்ச்சனா வீட்டுக்கு சென்று பார்த்த போது அப்படி ஒருவரே அங்கு இல்லை என்றும் தாங்கள் ஏமாற்ற பட்டதும் தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் பொலிசில் புகார் அளித்த நிலையில் ஹைதராபாத்தின் பெகும்பெட் பகுதியில் இருந்த அர்ச்சனாவை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

பொலிசார் கூறுகையில், அர்ச்சனா இது போல திருமண தகவல் மைய இணையதளம் மூலம் பல பெயர்களில் பலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். வேறு அழகான பெண்ணின் புகைப்படத்தை அவர் இதில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே அவர் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்கள் தான் அர்ச்சனாவின் குறியாக உள்ளனர். அர்ச்சனாவுக்கு கடந்த 2016-ல் பிரவீன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

அவளை செருப்பால் அடியுங்கள் : 36 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண்ணை ஒரு கும்பல் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்ராஜநகர் மாவட்டத்தின் கொடிகேஹள்ளியை சேர்ந்த பெண் ராஜாமணி (36). இவர் சிறிய உணவகம் நடத்தி வருவதோடு சிட்பண்ட் தொழிலும் செய்து வருகிறார்.

இதற்கிடையே, ராஜாமணி சமீபத்தில் சிலரிடம் ரூ.50,000 கடன் வாங்கிய நிலையில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடனை திருப்பிச் செலுத்தாததற்காக நேற்று ராஜாமணியை கடன் கொடுத்த சிலர் மின்கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர்.

நீண்ட நேரமாக மின்கம்பத்தில் கட்டிவைத்து அவரை சித்ரவதை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோவில், அவளைச் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடியுங்கள் எனச் சிலர் உரக்கச் சொல்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்துள்ள பொலிசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் குளத்தில் புதையுண்ட காட்டு யானையை மீட்க நடவடிக்கை!!

வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியிலுள்ள குளத்தில் யானை ஒன்று நேற்று முதல் புதையுண்ட நிலையில் காணப்படுவதாக ஓமந்தை பொலிசார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இன்று அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து யானையை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை குளத்தின் நடுவே புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது. தற்போதைய வரட்சி நிலை காரணமாக குளத்தின் தண்ணீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. யானைக்கு காலில் காயங்கள் ஏதும் ஏற்பட்டிருக்கலாம் அதன் காரணமாகவே யானையினால் நகர முடியவில்லை என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகர்கள் இணைந்து யானையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கிழக்கு பல்கலையில் பகிடிவதை : நான்கு மாணவர்கள் படுகாயம்!!

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதையின் போது நான்கு மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதையினால் நான்கு மாணவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் 4 மாணவர்கள் மீது சம்பவதினமான நேற்று இரவு 2 ஆம் ஆண்டில் கல்விபயின்று வரும் மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டு அவர்கள் மீது தாக்குல் நடாத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.