இலங்கையர்களுக்கு கிடைத்த மற்றுமொரு புதிய வசதி!!

இலங்கையில் வீட்டில் இருந்தபடி பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் நிற்காமல் இணையம் மற்றும் GPS தொழில்நுட்பம் ஊடாக தூர பயணங்களுக்கான பயண ரிக்கெட்டினை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் புதிய டோக்கன் முறை ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த டோக்கன் முறை அறிமுகப்படுத்துவதன் மூலம் மிகவும் இலகுவாக பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பயணிகளின் சேவைகளை விரிவுப்படுத்துவதற்காக இந்த டோக்கன் முறை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது பயனாளர்களுக்கு இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக இந்த வசதியை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

விமானத்தில் ஏற முயன்ற போது வசமாக சிக்கிய இலங்கைத் தமிழர்!!

இந்தியாவின் பெங்களூரில் வைத்து 35 வயதான இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஹங்கேரிக்கான விமானத்தில் ஏற முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவர் இந்திய கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்துள்ளதுடன், தமிழரான இவர் இலங்கையின் மேல் மாகாணத்தை சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

2012ஆம் ஆண்டு மதுரைக்கு சென்ற அவர் அங்கேயே தங்கிவிட்டதாகவும், 2019இல் பெங்களூருக்கு சென்ற அவர் அங்கு வைத்தே இந்திய கடவுச்சீட்டை பெற்றுள்ளார் எனவும் தெரியவருகிறது.

இலங்கையில் முச்சக்கரவண்டி பயணிகளுக்கான அறிவித்தல்!!

பயணிகளுக்கான அறிவித்தல்

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழில் தொடர்பான தேசிய முச்சக்கரவணடி சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மேலும் சில காரணங்களை அடிப்படையாக கொண்டு முதலாவது கிலோ மீற்றருக்கான முச்சக்கரவண்டி கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

ஆனாலும் இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு முச்சக்கர வண்டிகளின் மேலதிக பாகங்களின் விலை அதிகரிப்பும் காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய தற்போது முதலாவது கிலோ மீற்றருக்கு 50 ரூபாவும் இரண்டாவது கிலோ மீற்றருக்கு 40 ரூபாவும் அறிவிடப்படுகின்றது. அதிகரிப்பிற்கமைய முதலாவது கிலோ மீற்றருக்கு 60 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் இரண்டாவது கிலோ மீற்றருக்கு 40 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.

பிரபல பாடசாலை மாணவனின் புத்தக பையில் இருந்த நாக பாம்பு!!

தங்காலை பிரதேசத்தில் பிரபல பாடசாலையில் பயிலும் மாணவனின் புத்தக பையில் நாக பாம்பு இருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், பாம்பு பாடசாலைக்கு வெளியே உள்ள காட்டில் விடப்பட்டுள்ளது.

மாணவன் தனது உணவு பொதியை புத்தகப்பையில் இருந்து எடுக்க முயற்சித்த போது, பாம்பு கையில் பிடிப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மாணவன் உடனடியாக வகுப்பாசிரியருக்கு தெரியப்படுத்தியுள்ளார். விரைந்து செயற்பட்ட ஆசிரியர், பையை மூடி அதனை வகுப்பறைக்கு வெளியில் எடுத்து சென்று பாடசாலையின் பாதுகாப்புக்கு இருந்த பெற்றோரிடம் வழங்கியுள்ளார்.

பெற்றோர் பையை சோதனையிட்ட போது, அதில் 3 அடி நீளமான நாக பாம்பு இருந்துள்ளது. அதனை அவர்கள் பாடசாலைக்கு வெளியே உள்ள காட்டில் விட்டுள்ளனர்.

பள்ளிவாசலுக்கு அருகில் இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் : 3 பேர் படுகாயம்!!

அனுராதபுரத்தில் இரு முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப்பத்திக்கொல்லாவ பள்ளிவாசலுக்கு அருகில் இந்த மோதல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தகவல்களை வழங்கிய நபர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எல்லவெவ பிரதேச வீட்டில் ரம்ழான் பெருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட வேளையில் இரு குழுக்களுக்கு இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

விருந்தினை முடித்துக் கொண்டவர்கள் வீடு நோக்கி செல்லும் போது, இரு தரப்பிற்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தராறு மோதலாக மாறியுள்ளது. பின்னர் எல்லவெவ பள்ளிவாசலுக்கு அருகில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருந்தில் கலந்து கொண்ட 30 வயதான கடற்படை அதிகாரி, 26 மற்றும் 31 வயதுடைய மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கெப்பத்திக்கொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் பாரவூர்தி குடைசாந்து விபத்து : ஏழு பேர் படுகாயம்!!

பாரவூர்தி குடைசாந்து விபத்து

வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று (11.06) காலை 8.30 மணியளவில் பாரவூர்தி குடைசாந்து விபத்துக்குள்ளானதில் எழுவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றிகொண்டு பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தி சாரதியின் வேகக் கட்டுப்பாட்டையிழந்து குடைசாந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பாரவூர்தியில் பயணித்த எழுவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மடுகந்தை பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்திய சிறுவன் : சிகிச்சை பலனின்றி இந்தியாவில் மரணம்!!

சி.விதுசன்

கண்ணீர் சிந்தி வரைந்த ஓவியத்தோடு தன் வரைதலுக்கு விடைகொடுத்து அனைவரையும் கண்ணீரால் உறையவைத்துள்ளான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் சி.விதுசன்.

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் நேற்று (10.06) மாலை மரணத்தை தழுவியுள்ளார்.

பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் தரம் 6 இல் கல்வி கற்றுவந்த சிவனேசன் விதுசன் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலதிக சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பலரும் முன்வந்து நிதியுதவி அளித்து அவரை இந்தியாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பியிருந்தனர்.

சில நாட்களாக இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த விதுசன் நேற்றையதினம் சிகிச்சைகள் பலனின்றி இந்தியாவில் காலமானார்.

சிகிச்சைக்காக 75 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக முகநூல்களிலும் ஊடகங்களின் வாயிலாகவும் பெற்றோரால் விடப்பட்ட கோரிக்கைக்கமைய வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் லண்டன் பழைய மாணவர்களால் சுமார் 16 இலட்சம் ரூபா உட்பட பல உபகாரிகளால் பணத்தினை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க உதவியிருந்தனர்.

இவ்வாறு விதுசனின் உயிரைக்காக்க வேண்டுமென தம்மாலான உதவிகளை வழங்கியிருந்தவர்களுக்கு பெற்றோர் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் விதுசன் மீண்டும் குணமடைந்து வருவான் என எதிர்பார்த்த பலரும் இன்று அவனது இழப்பை தாங்கமுடியாது கவலையடைந்துள்ளனர். இச் சம்பவம் ஒட்டுமொத்த வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : மீறினால் 5 வருட சிறைத்தண்டனை!!

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களின் தேசிய அடையாள அட்டை பாவனை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வோறொருவருக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது அல்லது புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டின் கீழ் சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இத்தகைய குற்றவாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அல்லது 5 வருட சிறைத்தண்டனையை விதிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அருகில் உள்ள பொலிஸிற்கு அல்லது திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை காணாமல் போகுமிடத்து, புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல் போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்குமாயின் கிராம உத்தியோகத்தர் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். இன்னொருவரின் தேசிய அடையாள அட்டையை தம்வசம் வைத்திருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார்.

கடைசியாக பதிவு செய்த இன்ஸ்டாகிராம் தகவல் உண்மையானது : துபாய் பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட இளம்பெண்!!

கொல்லப்பட்ட இளம்பெண்

துபாய் பேருந்து விபத்தில் கொல்லப்பட்ட இளம்பெண் பதிவு செய்த கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது உண்மையானதாக அவரது நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய அமீரகத்தின் துபாயில் ஒரு 5 நட்சத்திர ஹொட்டலில் பணியாற்றி வந்தவர் ரோஷினி. இந்தியரான இவர் ஓமான் நாட்டில் நண்பர்களுடன் ரம்ஜான் விடுமுறையை கழித்துவிட்டு பேருந்தில் திரும்பியுள்ளார்.

ஓமானில் இருந்து திரும்பும் முன்னர் ரோஷினி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வீட்டுக்கு திரும்ப நேரமாகிவிட்டது என பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார். இந்த நிலையிலேயே ரோஷினி அந்த பேருந்து விபத்தில் சிக்கி கொல்லப்பட்டுள்ளார். துபாயில் உள்ள ஜபல் அலி பகுதியில் அவருக்கு இறுதி அஞ்சலி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளது.

ஓமான் அரசின் பயணிகள் சொகுசு பேருந்து, ராஷீதியா மெட்ரோ நிலைய பெயர் பலகையில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஓமான் தலைநகரான மஸ்கட்டில் சென்று திரும்பி வந்தவர்களே விபத்தில் சிக்கியவர்கள்.

விபத்தில் சிக்கிய 17 பேரில் 12 பேரும் இந்தியர்களாவர். இதில் 8 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். ரோஷினியின் அந்த இன்ஸ்டாகிராம் பதிவு, அவர் துபாய்க்கு திரும்புவதை இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவித்துலனர்.

ஓடும் ரயிலில் 40 ஆண்களால் துஸ்பிரயோகத்திற்கு இரையான சுவிஸ் பெண்!!

சுவிஸ் பெண்

லூசெர்ன் செல்லும் ரயில் ஒன்றில் 40 ஆண்களால் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை சுவிஸ் பெண்மணி ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். Schwyz பகுதியில் இருந்து லூசெர்ன் செல்லும் ரயில் ஒன்றில் குறித்த 37 வயது பெண்மணி சம்பவத்தன்று பயணம் செய்துள்ளார்.

அவர் இருந்த பெட்டியில் பயணிகள் எவரும் இல்லை என்பதால், தாமிடமிருந்த புத்தகம் ஒன்றை வாசித்தபடி பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் Arth-Goldau பகுதியில் வைத்து 40 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெட்டியில் ஏறியுள்ளது.

பெண் ஒருவர் தனியாக பயணமாவதை கவனித்த அந்த கும்பல், அவரின் அருகாமையில் வந்து கிண்டலும் கேலியுமாக கும்மாளமிட்டுள்ளது. நடப்பது எதையும் கவனத்தில் கொள்ளாமல் இருந்த அந்த பெண்மணியை அந்த ஆண்கள் கும்பல் வம்புக்கு இழுத்துள்ளது.

மேலும், சத்தமிட்டு ஆபாசமாக பேசியுள்ளனர். ஒருகட்டத்தில் அந்த பெட்டியில் இருந்து வேறு பகுதிக்கு செல்லலாம் என எண்ணியதாகவும், ஆனால் தாம் அந்த ரயிலின் முன்பகுதியில் இருப்பதால் வேறு பகுதிக்கு செல்வது கடினமானது என்பதால் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பவை அனைத்தையும் கண்டும் காணாமலும் அவர் அதில் பயணம் செய்துள்ளார். எவரும் தமது உடம்பில் கை வைக்கவில்லை என்றாலும், தனித்து பயணப்படும் ஒரு பெண்ணிடம் இவ்வாறாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகம் அல்லது பலாத்கார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகம் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

450 மில்லியன் டொலர் டா வின்சி ஓவியத்தின் உரிமையாளர் இவரா? மர்மம் விலகியது!!

டா வின்சி ஓவியம்

லியோனார்டோ டா வின்சியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றை 450 மில்லியன் டொலருக்கு கைப்பற்றிய நபர் தொடர்பில் தற்போது மர்மம் விலகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு லியோனார்டோ டா வின்சியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான “Salvator Mundi” என்ற ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஓவியத்தை சாதனை விலைக்கு பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் வாங்கியதாக தகவல் வெளியானது.

சுமார் 450 மில்லியன் டொலர் தொகைக்கு விலைபோன அந்த ஓவியத்தின் உரிமையாளர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. ஆனால் இறுதி வரையில் அந்த மர்ம நபர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகாமல் ரகசியம் காக்கப்பட்டது.

தற்போது அந்த ஓவியம் சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் சகல வசதிகளும் கொண்ட உல்லாசப்படகில் பாதுகாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியமானது இளவரசர் சல்மானின் பெயரில் இன்னொரு சவுதி இளவரசர் வாங்கியதாக பிரபல பத்திரிகை அப்போதே தகவல் வெளியிட்டது.

ஆனால் அந்த தகவலை குறித்த ஓவியத்தை ஏலம் நடத்திய நிறுவனம் மறுத்திருந்தது. தற்போது எகிப்தில் உள்ள கடற்கரை நகரம் ஒன்றில் இளவரசர் சல்மானின் படகு நிறுத்தப்பட்ட நிலையில், அதனுள் டா வின்சியின் Salvator Mundi ஓவியம் இருப்பதை தனியார் ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. உப்பு கலந்த கடற்காற்று 500 ஆண்டுகள் பழமையான அந்த ஓவியத்திற்கு உகந்தது அல்ல என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர் ஊருக்கு வந்து மகளுக்கு நடத்திய திருமணம் : குவியும் பாராட்டு.. ஏன் தெரியுமா?

குவியும் பாராட்டு..

ஜேர்மனியில் பணிபுரியும் தமிழர் ஒருவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர் முத்துசேகர். இவர் ஜேர்மனியில் ஊர்ந்து நகரக்கூடிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முத்துசேகரின் மகள் திருமண நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்து அவர் அசத்தியிருக்கிறார்.

அவர் கூறுகையில், திருமண மண்டபங்களில் கொட்டப்படும் சாப்பாடுக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு தீர்வு அளிக்கும் விதமாகவே கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்தேன்.

ஜேர்மனியில் திருமணம் மண்டபங்கள் மட்டுமல்லாது பெரிய உணவகம், அடுக்குமாடிக்குடியிருப்பு போன்ற இடங்களில் தேங்கும் கழிவுகளை அதற்கான இயந்திரத்தில் போட்டு உரமாக மாற்றுகிறார்கள்.

அதாவது 100-ல் இருந்து 500 கிலோ கழிவுகள் இந்த இயந்திரத்தில் போட்டால் கழிவுகளின் மொத்த எடையிலிருந்து ஐம்பது சதவீதம் நமக்கு உரமாக மாற்றித் தருகிறது இந்த உரம் தென்னை, மா, பலா போன்ற மரங்களுக்கும் செடிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். கல்யாண மண்டபங்கள் இதுபோன்ற இயந்திரங்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களிடம் இதற்கான குறைந்த கட்டணத்தை மண்டபங்கள் வசூல் செய்வதோடு இதிலிருந்து கிடைக்கும் உரத்தையும் நல்ல விலைக்குக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார்.

மோடிக்கு மைத்திரி கொடுத்த பரிசு : செய்து முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதாம்!!

குறுகிய நேரப் பயணமாக இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமாதி நிலை புத்தர் நிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்காவை வந்தடைந்தார். அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச மரியாதையுடன் வரவேற்றார்.

கொழும்பை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடினார். இதன்போது சமாதி நிலை புத்தர் நிலை ஒன்றை மைத்திரிபால சிறிசேன அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்தப் புத்தர் சிலை ஒரு சிறப்பு நண்பரிடம் இருந்து கிடைத்த சிறப்பு பரிசு என்று இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இப் புத்தர் நிலை வெண்தேக்கு மரத்தில், கையால் செதுக்கப்பட்டதாகும். இதனைச் செதுக்க இரண்டு ஆண்டுகள் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியான முத்திரை என அழைக்கப்படும், யோக நிலையில் புத்தர் அமர்ந்திருக்கும் வகையில் இந்த புத்தர் சிலை செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓடும் விமானத்தில் அவசர வழியை திறந்த பெண் பயணி!!

ஓடும் விமானத்தில் அவசர வழியை, கழிவறை என நினைத்து பெண் பயணி ஒருவர் திறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச ஊடகம் ஓன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு ‘பிகே 702’ என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

விமானத்தில் 40 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, பெண் பயணி ஒருவர், கழிவறை என நினைத்து, விமானத்தின் அவசர வழியை திறந்துவிட்டார்.

அதனால், பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கு மிதவை விரிந்தது. விமான ஊழியர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திடீரென அவசர வழி திறந்ததால் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

சுமார் 7 மணி நேர தாமதத்துக்குப் பிறகு அந்த விமானம் மீண்டும் இஸ்லாமாபாத் புறப்பட்டு சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் முதியவரை காணவில்லை : பொலிசில் முறைப்பாடு!!

முதியவரை காணவில்லை

வவுனியா பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஓருவரை காணவில்லை என வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த இ.தேவராஜா (வயது 74) என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டில் இருந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பில் பல்வேறு இடங்களிலும் அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில் அவரை கண்டு பிடிக்காமையால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு : எவ்வளவு தெரியுமா?

எரிபொருளின் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, தற்போது புதிய விலையாக 138 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது. பெற்றோல் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.