வவுனியா நகரசபையினால் முதலாம் குறுக்கு தெரு வீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் வடிகால் அமைக்கும் பணியினால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
நகரசபையினால் ஒதுக்கப்பட்ட நிதியில் வவுனியா முதலாம் குறுக்கு தெரு வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வடிகால் அமைக்கும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடிகால் அமைப்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக குழி தோண்டப்பட்டுள்ளது. இன்றுடன் பத்து நாட்கள் கடந்துள்ள நிலையிலும் குறித்த குழியினை தாண்டி வர்த்தக நிலையங்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ செல்ல முடியாத நிலையில் பொதுமக்களும் வர்த்தகர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு விரைவாக வடிகால் அமைக்கும் பணியினை பூர்த்தி செய்து தருமாறும் வாடிகால் அமைக்கும் பணி நிறைவுறும் வரை மாற்று ஏற்பாடொன்றினை மேற்கொள்ளுமாறும் வர்த்தகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து நகரசபை உப நகரபிதா சு. குமாரசாமியிடம் கேட்டபோது, அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள் பலர் இம் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர். கால்வாய்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட ஒப்பந்த தாரர்களிடம் இவ்விடயம் குறித்து பணிக்கப்பட்டுள்ளது அவர்களே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
கண்டியின் பல பகுதிகளில் இரவு நேரத்தில் ஆளில்லா விமானம் பறந்து திரிவதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக தலாத்துஓய, மாரசன்ன, முதுனகடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பறந்து திரிகின்றன.
தினமும் இரவில் வெவ்வேறு நேரங்களில் இந்த ஆளில்லா சுற்றி திரிவதனை பலர் அவதானித்துள்ளனர்.
இரவு 7 – 11 மணி வரையிலான காலப்பகுதியியேயே இதனை அதிகமாக அவதானிக்க முடிவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
முதுனகடையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேல் இந்த ட்ரோன் விமானம் பயணிப்பதாகவும், மீண்டும் மாரசன்ன, தெல்தோட்டை பிரதேசத்தை நோக்கி அவை பயணிப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை அதுதொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
அண்மையில் குறித்த பகுதியில் பறந்த ஆளில்லா மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் அந்த கமரா கடற்பகுதிக்குள் சென்று மறைந்திருந்தது.
கடந்த 21ம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலை அடுத்து இலங்கையில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பின் தேடுதலின் போது ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களில் அதிகளவான ட்ரோன் கமராக்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாதிய ரீதியான தாக்குதலால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முழு விவரங்கள் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். அவருக்கு சமூக சேவை செய்வதே மிகப்பெரிய கனவாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 306/34ன் கீழ் அக்ரிபடா காவல் நிலையத்தில் இது தொடர்பாக மூன்று இருப்பிட மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து முழு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மீரஜ் – சங்லி என்ற இடத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்தார் பாயல். 2018ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக மும்மையில் உள்ள டோபிவாலா மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்திருந்தார். பின்தங்கிய வகுப்பை சேர்ந்த இவர், இடஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இந்நிலையில், அங்கு பணியாற்றும் மூன்ற மருத்துவர்கள் தொடர்ந்து பாயல்-ஐ சாதி ரீதியான கடுமையான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகின்றது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். பாயலின் தாய் ஆபீதா தட்வி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அம்மருத்துவமனையின் டீனிடம் வழங்கியுள்ளார்.
புற்று நோய்க்காக அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஆபீதா, பாயல் சந்தித்த இன்னல்களை தாம் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார்.அப்போது புகார் அளிக்க நினைந்த ஆபீதா வை பாயல் தடுத்ததாகவும் அவர் கூறினார். மேலும் நோயாளிகளுக்கு முன்பாகவே பாயலை அங்குள்ள சில மூத்த மாணவர்கள் அவமானப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவம் பயிலவிட மாட்டோம் என்று மிரட்டியதால் பாயல் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
பாயலின் மனநிலை குறித்து அவரது தாய் வருத்தத்தில் இருந்திருக்கிறார். மேலும் அத்துறையில் இருந்து மாற்றிக் கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் கடும் இன்னல்கள் சந்தித்த பாயல் தன் வாழ்க்கையை கடந்த 22ஆம் திகதி முடித்து கொண்டார்.
மகாராஷ்டிரா இருப்பிட மருத்துவர்கள் அமைப்பு (MARD) இதில் சம்மந்தப்பட்ட மருத்துவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அத்துறை தலைவரையும் நீக்க வேண்டும் என்று பாயலின் குடும்பம் வலியுறுத்தியுள்ளனர்MARD அமைப்பின் உறுப்பினர்கள் பாயலுக்கு மரியாதை செலுத்தி,
“எங்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்கள் குடும்பத்துடன் துணை நிற்போம். எங்கள் பிரார்த்தனைகள்” என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அவருடன் பயின்ற மாணவர்கள் அவரின் பிரிவு குறித்து வருத்ததில் உள்ளனர்.
அமெரிக்காவில் காட்டில் பெண்ணொருவர் 17 நாட்கள் தனியாக சிக்கி கொண்ட நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் அமண்டா எல்லெர் (35). யோகா பயிற்சியாளரான இவர் கடந்த 8-ம் திகதி மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதிக்கு காரில் சென்றிருக்கிறார்.
பின்னர் அங்கு ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்றிருக்கிறார். அதன் பின்னர் அவர் திரும்பவேயில்லை. அமண்டாவை அவர் குடும்பத்தார் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் மற்றும் பணப்பையை அவர் காரிலேயே விட்டு சென்றது தெரியவந்தது.
அமண்டாவை 1000-க்கும் மேற்பட்டோர் தேட தொடங்கியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அவர் குடும்பத்தார் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து தேடிய நிலையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அமண்டா உயிருடன், நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமர்ந்திருப்பதை மீட்புக் குழுவினர் கண்டதும், அவரைப் பத்திரமாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். கால்களில் பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
17 நாள்கள் காட்டுக்குள் இருந்த அந்த பதற்றமான நொடிகளையும், சாப்பிட உணவில்லாமல் இலைகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததையும் அமண்டா கண்ணீரோடு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.
கோடை வெயிலின் தாக்கத்தால் கடல் வெப்பநிலை அதிகரித்து மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளப்பாறைகள் வேகமாக அழிவை சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பவளப்பாறை காலனிகள் அதிகமாக அமைந்துள்ளன. குழி மெல்லுடலிகள் எனப்படும் பவளப்பாறைகளானது, மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாக மட்டுமின்றி அவற்றின் உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கின்றன. மேலும், கடற்கரை பகுதிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும் விளங்குகின்றன.
30 சதுர கி.மீ. அழிந்தது : மன்னார் வளைகுடா பகுதியில் 110 சதுர கி.மீ. பரப்பளவில் பவளப்பாறை காலனிகள் இருந்தன. சட்டவிரோதமாக வெட்டி எடுத்தல், முறையற்ற மீன்பிடிப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் கடந்த 50 ஆண்டுகளில் 30 சதுர கி.மீ. பரப் பளவில் பவளப்பாறை காலனிகள் அழிந்துவிட்டன. இதையடுத்து பவளப்பாறைகளை வெட்டி எடுக்க மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு தடை விதித்தது.
தற்போது புவி வெப்பநிலை உயர்வு காரணமாக வெளிருதல் (Coral Bleaching) ஏற்பட்டு பவளப்பாறைகள் ஆபத்தை சந்தித்து வருகின்றன. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடல் வெப்பநிலை வழக்கத்தைவிட உயர்ந்ததே இதற்கு காரணம்.
2 கட்டமாக ஆய்வு : இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு கூறியதாவது:எங்களது ஆய்வு குழுவினர் மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளை கடந்த ஏப்ரல் 15 முதல் 24-ம் தேதி வரையும், இம்மாதம் 15 முதல் 23-ம் தேதி வரையும் ஆய்வு செய்துள்ளனர்.
கடந்த மாதம் தூத்துக்குடி, மண்டபம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பட்டினம்மருதூர், காரைச்சல்லி தீவு, முயல் தீவு உள்ளிட்ட 8 பவளப்பாறை படுகை பகுதிகளிலும், இம்மாதம் அதே பகுதிகளில் உள்ள வான் தீவு, காசுவாரி தீவு உள்ளிட்ட 9 பவளப்பாறை படுகை பகுதிகள் மற்றும் பாக் வளைகுடா பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
வெளிறுதல் அதிகரிப்பு : தூத்துக்குடி பகுதியில் (வான் தீவு) ஏப்ரல் மாதம் நடத்திய ஆய்வில் பவளப்பாறைகளில் 3 சதவீதம் அளவுக்கு தான் வெளிறி இருந்தது. மே மாதம் இது 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுபோல் கீழக்கரை பகுதியில் (முள்ளி தீவு) 35 சதவீதம், மண்டபம் பகுதியில் (குருசடை தீவு) 28 சதவீதம், பாக் வளைகுடா பகுதியில் 12 சதவீதம் அளவுக்கு பவளப்பாறை வெளிறுதல் அதிகரித்து காணப்பட்டது.
கடல் வெப்பநிலை குறைந்தால் வெளிறுதல் நின்று, பவளப்பாறைகள் மீண்டும் புத்துயிர் பெறும். ஆனால், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால் பவளப்பாறைகள் உயிரிழக்க நேரிடும்.
வவுனியாவிலுள்ள பிரபல்யமான வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவருடைய பெயரைப்பயன்படுத்தி ஆதாரமற்ற அவதூறான தகவல்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரத்தை கூட்டத்தில் விநியோகித்த பழைய மாணவர்கள் இருவருக்கு எதிராக நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வர்த்தகரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பழைய மாணவர்கள் நேற்று பொலிசாரால் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதற்கு மன்னிப்புக் கோரியதையடுத்து விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முந்தினம் (26.05) ஞாயிற்றுக்கிழமை நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நகரிலுள்ள வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும், அவதூறான தகவல்களையும் பரப்பியதாக நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் குறித்த வர்த்தகர் ஒருவரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிசாரால் அத்துண்டுப்பிரசுரத்தினை வெளியிட்ட பாடசாலையின் பழைய மாணவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகளின்போது பழைய மாணவர் ஒருவரினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்திற்கு மன்னிப்புக் கோரியதுடன் தனக்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளதால் இவ்வாறான துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் குறித்த வர்த்தகருக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தும் எந்தவித நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என உறுதியளித்தார்.
பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பிரதேச சபை தலைவர், பாடசாலையின் பழைய மாணவர்களினால் இனிவரும் காலங்களில் குறித்த வர்த்தகரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது என உறுதி மொழி வழங்கியதையடுத்து துண்டுப்பிரசுரம் வெளியிட்ட பழைய மாணவர்களை எச்சரித்து பொலிசார் விடுவித்துள்ளனர்.
நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற பாடசாலை அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பழைய மாணவர்கள் இருவரினால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கிய துண்டுப்பிரசுரத்திலேயே குறித்த வர்த்தகரின் பெயரை பயன்படுத்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கச் சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் இராணுவத்தினரால் இன்று திருப்பி அனுப்பப்பட்டனர்.
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக ஒரு பகுதியினர் பூந்தோட்டம் முகாம் பகுதிக்கு சென்றிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள முறிப்பு கிராமத்தைத்தில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கம் என்பவற்றைச் சேர்ந்த 11 பேர் அடங்கிய குழுவினரே இவ்வாறு வருகை தந்திருந்தனர்.
வவுனியா நகரில் இருந்து மூன்று முச்சக்கர வண்டியில் நிவாரணப் பொருட்களுடன் அவர்கள் வருகை தந்த நிலையில் வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம் பகுதியில் மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்பட்டதுடன், வருகை தந்தவர்களின் விபரங்களைப் பெற்றுக் கொண்ட இராணுவத்தினரும், பொலிசாரும் அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க முடியாது எனத் தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதன்போது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்தானிகராலயத்தின் அனுமதி பெற்று அவர்கள் ஊடாக பொருட்களை வழங்குமாறும் இப்பகுதிக்குள் எவரையும் உட்பிரவேசிக்க விட முடியாது என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு, முறிப்பு கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில், உறவினர்கள் அற்ற நிலையில் ஏதிலிகளாக தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கு உலர் உணவு வழங்கி அவர்களை பார்வையிடுவதற்காக 92 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து வந்தோம்.
இராணுவமும், பொலிசாரும் எம்மை அவர்களை சந்திக்க விடாது திருப்பி அனுப்பி விட்டனர். அகதிகளைப் பார்வையிடுவதும் அவர்களுக்கு உதவுவதும் மனித உரிமை ஆகும். ஆனால் அதற்கு இடமளிக்கப்படவில்லை. எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். இதேவேளை, வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் 35 வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் தமிழ் மன்னன் சங்கிலியனின் 400ஆவது நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சங்கிலிய மன்னனின் ஆத்ம சாந்தி கிரியைகள் இடம்பெற்றதுடன் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் தமிழ் மன்னன் சங்கிலியனின் 400ஆவது நினைவுநாள் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய தலைவர் அ.மாதவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய குருக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ். கச்சேரி – பூவங்குலம் பெந்தகொஸ் தேவாலயத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று வான் ஒன்றும் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
வான் மற்றுமொரு வாகனத்தை முந்த முற்பட்ட வேளையில் எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது வானில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், வானின் சாரதி தப்பி ஓட முயற்சித்த வேளை போது பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக் கூட்டத்தில் ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தியதாகவும் தகாத வார்த்தைப்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்து அதற்க்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 9 மணியளவில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
ஆசிரியர்களான நாங்கள் மிகப்பெரிய பொறுப்பினை கையில் எடுத்திருக்கின்றோம். எங்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மனம் நோகடிக்கும் போது இந்தச் சமூகம் தனது கடமையை விட்டுச் சென்றால் இப்பாடசாலை என்னாவது? மூவாயிரம் மாணவர்களின் கல்வி நிலை என்னாவது? அதிபரில் தவறு இருக்கலாம், ஆசிரியர்களில் தவறு இருக்கலாம், மாணவர்களில் தவறு இருக்கலாம் தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. தவறு இருந்தால் தகுந்த முறையில் அவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்படலாம்.
ஆதாரங்களை நிரூபித்து தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்கலாம். நாங்களும் அவற்றிற்கு மாறாக நிற்கவில்லை. ஆனால் ஒரு சமூகத்தில் பெரிய ஒரு சபையில் எங்களின் பாடசாலையின் அதிபர் தண்டிக்கப்பட்டது எங்கள் அனைவருக்கும் கவலையளிக்கின்றது.
ஆசிரியராக நாங்கள் அவமானமடைந்திருக்கின்றோம். பெண் ஆசிரியராக அவமானமடைந்திருக்கின்றோம். இதற்கான இந்தக்குற்றங்களை முன்வைத்தவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவதுரையில் நாங்கள் மாணவர்களிடம் செல்ல மாட்டோம். எந்த முகத்தை வைத்துகொண்டு செல்வது? மாணவர்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றார்கள். என்ன பதிலை சொல்வது?
எமது கல்வித்திணைக்களம் இதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு இதனுடன் தொடர்புடைய ஆசிரியர்களை தற்காலிகமாக இடை நிறுத்தவேண்டும். இதுவே எங்கள் அனைவரின் கோரிக்கையாகும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டபோது பாடசாலைக்குச் சென்ற வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்னன் பாடசாலை அதிபருடன் மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்து 30நிமிடம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு வகுப்புக்களுக்குச் சென்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் ஆசிரியரும் இலங்கை ஆசிரியர்கள் சேவைகள் சங்கத்தின் செயலாளருமான சிவகரன், பாடசாலையின் பழைய இரும்பு, சத்துணவில் பாரியளவில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
த.அமிர்தலிங்கம் அவர்கள் இந்தப் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து பெருந்தொகையான நிதியும் பொருந்தொகையான பாடசாலையின் பொருட்களும் குறிப்பாக பழைய இரும்புகள் திருடப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ்விடயத்தில் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை பாடசாலை ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருக்கின்றது.
ஆசிரியர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். அது அவர்களுடைய கருத்து. அவர்கள் தமது கோரிக்கையினை முன்வைப்பதற்கு அதிகாரமிருக்கின்றது. எங்களுடைய சங்கம் என்ற ரீதியிலும் ஆசிரியர் என்ற ரீதியிலும் இந்த இலவசக் கல்வியை அனுபவித்து வருகின்ற பிள்ளைகளினுடைய தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு விடயத்தை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
பல இலட்சம் ரூபா நிதி ஊழலாகியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் அதிகளவான நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது. பாடசாலையிலுள்ள பழைய இரும்புகள் போன்ற பொருட்கள் அதிபரினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில மொழி மூலம் நடைபெற்ற வகுப்புக்கள் அதிபரினால் தடை செய்து நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு மாணவர்களும் வெளியே நிற்கின்றனர். அதிகாரிகளின் உறவினருக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. மாணவர் அனுமதியின்போது ஊழல் இடம்பெறுகின்றது.
பாடசாலையிலிருந்த பெருமளவு இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அரசாங்க பொதுக்கணக்கில் இடப்படவில்லை. இவ்வாறு எண்ணிலடங்காத தவறுகளை அதிபர் மேற்கொண்டு வருகின்றார். ஆசிரியர்களை கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு சர்வதிகாரியாக நடத்துகின்றார். தன்னை எதிர்ப்பவர்களை இடமாற்றம் செய்வது என்று பாரதூரமான விளைவுகளை அதிபர் ஏற்படுத்துகின்றார்.
இதைப் புரிந்துகொண்ட பாடசாலைச் சமூகமும் பாடசாலை அபிவிருத்திச்சங்கமும் நேற்று கலாச்சார மண்டபத்தில் கூடியபோது பதவி விலகுவதாக அறித்த அதிபர் மீண்டும் இன்று பாடசாலைக்கு வந்து ஆசிரியர்களை வகுப்பறைக்குச் செல்லவிடாது தனக்கு ஆதரவாக பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆசிரியர்களை ஒன்றுகூட்டி பாடசாலைக்கும் கல்வித்துறைக்கு முரணான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இப் பிரச்னையை பல மட்டங்களுக்கு முறையிட்டு உடனடியாக இது குறித்த விசாரணையை நடாத்தி அரச பொது நிதியைத்திருடுகின்ற எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் தண்டணைக்குட்படுத்த வேண்டும். என்று எங்களுடைய சங்கம் சார்பாகவும் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் என்ற ரீதியிலும் கோரிக்கை விடுகின்றேன். என்று மேலும் தெரிவித்தார்.
வவுனியா – நெளுக்குளம், சாம்பல்தோட்டம் சந்திப்பகுதியில் நேற்று மதுபோதையில் கிராம மக்களை அச்சுறுத்திய நபர் ஒருவரை இடியன் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சாம்பல்தோட்டம் டிஸ்கோ சந்தியை சேர்ந்த 33வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது நபர் ஒருவர் மதுபோதையில் கிராம மகக்களை அச்சுறுத்தி வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபர் வீட்டிற்குச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளார் துரத்திச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணிகளிலிருந்த்து அவர் இடியன் துப்பாக்கி ஒன்றினை தன்வசம் வைத்திருப்பதாக பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மரக்காரம்பளையிலுள்ள கைவிடப்பட்ட மர்ம வீடு ஒன்று இன்று(27.05) காலை படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சில பொருட்கள் ஆவணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை படையினர் புலனாய்வுப்பிரிவினர் இணைந்து மரக்காரம்பளையிலுள்ள பாவனையற்ற கைவிடப்பட்ட வீடு ஒன்றினை நீதிமன்ற அனுமதியுடன் செய்தனர். அங்கு கைவிடப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உடல் அங்கிகள், ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசாரும் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் பயல் தத்வி (26) என்கிற இளம் பெண் மருத்துவர் கடந்த 22ம் திகதியன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அன்றைய தினம் காலை நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு நேரே விடுதிக்கு சென்ற பயல், நீண்ட நேரம் கதவை திறக்காமல் இருந்துள்ளார். 4 மணி நேரம் கழித்து தான், அவர் தூக்கில் தொங்குவதை மற்றவர்கள் பார்த்துள்ளனர்.
உடனடியாக மீட்கப்பட்ட பயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனேவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பயல் தத்விவியின் தாய் அபேடா தத்வி, தற்கொலைக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
என்னுடைய மகள் இடஒதுக்கீட்டின் மூலமாக தான் மருத்துவ சீட்டு பெற்றார். அதனை வைத்து மூன்று மூத்த பெண் மருத்துவர்கள் சித்ரவதை செய்வதாக எங்களிடம் கூறினாள். நாங்களும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதி பாதுகாப்பாளரிடம் புகார் அளித்தோம்.
அவரும் அந்த மூன்று பேரை அழைத்து இனிமேல் இதுபோன்று நடந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார். மே மாதம் 22ம் திகதியன்று மதியம் நான் என்னுடைய மகளுக்கு போன் செய்தேன். இன்னும் அவளுடைய சீனியர்கள் சாதி பெயரை சொல்லி சித்ரவதை செய்வதாக என்னிடம் வேதனை தெரிவித்தாள்.
நானும் தந்தையும் உடனடியாக மும்பைக்கு கிளம்பி வந்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொலிசாரிடம் புகார் கொடுப்பதாக அவளிடம் கூறினேன். ஆனால் அவள் சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள் என கூறியுள்ளார்.
மேலும், நாங்கள் புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் எங்களுடைய மகள் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார் என கண்ணீர் மல்க பேசியுள்ளார். பயலின் தந்தை சலீம் கூறுகையில், முதல் ஆறு மாதங்கள் நன்றாக இருந்தன. சில வார்த்தைகள் இருவருக்குள்ளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
டிசம்பர் 2018-ல் நடந்தவை பற்றி எங்களிடம் பயல் கூறினாள். அதனை உடனே பயலின் கணவர் சல்மான் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதுபோன்ற விடயங்கள் நடப்பது சகஜம். அதனை புறக்கணிக்குமாறு அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவர்கள் ஹேமா அஹுஜா, பக்தி மேஹார் மற்றும் அன்கிதா கந்தெல்வால் ஆகியோர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.