மாத்தறையில் நேற்று முன்தினம் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் குழுவினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
அக்குரெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த கசுன் சம்பத் என்ற 30 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அக்குரெஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்வதற்காக 15 விசேட பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மஸ்கெலியா – ஸ்டொக்கம் தோட்டத்தில் 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியொருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் ஸ்டொக்கம் தோட்டத்தினை சேர்ந்த ராமச்சந்திரன் ஆனந்தஜோதி என்ற 16 வயது சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த மாணவியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை மேற்படி பாடசாலை மாணவி தூக்கிட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சடலம் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் அவர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு தனது வீட்டிலேயே தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கந்தபுரம் யங்கன்குளம் பகுதியில் நேற்று (21.05.2019) மாலை கைக்குண்டொன்று வெடித்துள்ளதுடன் மேலும் ஒர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட யங்கன்குளம் பகுதியிலுள்ள தோட்டக்காணி ஒன்றினை காணி உரிமையாளர் நேற்று (21.05.2019) மாலை பேக்கோ இயந்திரம் மூலம் துப்பரவு செய்துள்ளார்.
பேக்கோ மூலம் அகற்றப்பட்ட கழிவுகளை ஒர் இடத்தில் ஒதுக்கி அதனை தீயிட்ட சந்தர்ப்பத்தில் கழிவுகளில் இருந்து ஒர் கைக்குண்டொன்று வெடித்துச் சிதறியுள்ளது. எனினும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை
இதனையடுத்து காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்துசம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது வெடிக்காத நிலையில் மேலும் ஒர் கைக்குண்டினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டும் மீட்கப்பட்ட கைக்குண்டை செயலிக்க செய்யும் பொருட்டும் வவுனியா நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டு இன்று (22.05.2019) சற்று முன் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்பவ இடத்தில் தற்போது பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டு 82- வகையினை சேர்ந்தது என பொலிஸார் தெரிவித்துடன் மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராமத்தில் வீசிய மினி சூறாவளியினால் ஆலயம் மற்றும் 06 வீடுகள் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று(21.05) மாலை வவுனியாவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தபோதே மினி சூறாவளி ஏற்பட்டது.
இவ்வாறு திடீரென வீசிய மினிசூறாவளியுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பயன்தரு மரங்களான தென்னை, வாழை மற்றும் பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
06 வீடுகளின் கூரைகளும், ஶ்ரீ ஆதிவிநாயகர் ஆலயத்தினதும் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், கூரைக்கு பயன்படுத்தப்பட்ட வெட்டு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.
இங்கு காணப்பட்ட நிரந்தர வீடுகளே பகுதியளவும் சேதமைந்துள்ளதுடன் வீட்டினுள் இருந்த பொருட்கள் மழையினால் நனைந்துள்ளதாகவும் கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் ஓமந்தைப் பகுதியில் ஓரு வீடு சேதமடைந்துள்ளது. மேலும் ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் வீட்டின் கூரை பகுதி வீழ்ந்தமையால் இருவர் காயமடைந்துள்ளனர்.
சென்னையில் 8 பேர் மீது குடிபோதையில் இருந்த நபர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெற்குன்றத்தில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் கன்னியப்பன் என்பவர் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார்.
இவர், வெள்ளிப்பட்டறையில் வேலை பார்க்கிறார். இவரின் மனைவி ரஞ்சனி. ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கர். இவர், பெயின்டராக வேலை பார்க்கிறார். இந்த வீட்டின் இரண்டாம் மாடியில் அழகுமுத்து, கருப்பசாமி, வாஞ்சிநாதன், பி.வேல்முருகன், வீரமணி, எஸ். வேல்முருகன், அசோக், ப.வேல்முருகன் ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு 8 பேரும் வீட்டு மொட்டை மாடியில் மது அருந்து கொண்டிருந்த போது அங்கு குடிபோதையில் கன்னியப்பனும், பாஸ்கரும் வந்தார்கள். இருவரும் அந்த எட்டு பேருடன் வாக்குவாதம் செய்த நிலையில் பின்னர் சண்டையாக மாறியது.
இதை பார்த்த ரஞ்சினி கன்னியப்பனையும் பாஸ்கரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். வீட்டின் வெளியில் 8 பேரும் உருட்டுகட்டையுடன் வந்து தகராறு செய்தனர்.
பின்னர் வீட்டை திறந்து கொண்டு வெளியில் வந்த கன்னியப்பன், வெள்ளிப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து 8 பேர் மீதும் வீசிய நிலையில் அவர்கள் வலியால் அலறித்துடித்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கன்னியப்பனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் சி.ஆர்.பி.எஃப்பில் பணிபுரியும் நபர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கரில் உள்ள பக்தோல் கிராமத்தை சேர்ந்தவர் அனில் பைகரா. இவர் சி.ஆர்.பி.எஃப்பில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இளம்பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் குழந்தையில்லை.
இந்நிலையில் அதே ஊரில் அங்கன்வாடியில் பணிபுரியும் ஒரு பெண்ணை அனில் காதலித்து வந்தார். பல்வேறு ஊர்களில் பணிபுரிந்த அனில் ஊருக்கு வரும்போதெல்லாம் மனைவியுடன் நேரத்தை செலவிடுவதை விட அதிக நேரத்தை தனது காதலிடமே செலவிட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று அனில் செய்த விசித்திர காரியத்தை பார்த்து ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதாவது தனது காதலியை திருமணம் செய்து கொண்ட அனில் அதன் உடன் தனது மனைவியையும் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
அரசு பணியில் இருப்பவர் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இன்னொரு பெண்ணை மணப்பது குற்றம் என்ற நிலையில் அனில் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. அனில் கூறுகையில், எனக்கு முதல் திருமணம் மூலம் குழந்தையில்லை, அதனால் தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் காதலர்கள் திருமணம் செய்யவிருந்த நிலையில் தற்கொலை மிரட்டல் விடுத்து காதலனின் தாய் திருமணத்தை நிறுத்தியதால் தற்போது காதலன் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
திருவள்ளூரை சேர்ந்தவர் கனகா. இவர் நேற்று மகளிர் காவல் நிலையத்துக்கு தனது காதலன் குமார் உடன் வந்தார்.இருவர் கையிலும் பூமாலை இருந்த நிலையில் கனகா உறவினர்களும் உடன் வந்தனர்.
இருவருக்கும் அங்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குமாரின் அம்மா அங்கு வந்து, இந்தக் திருமணம் நடந்தால் இங்கேயே தீக்குளிப்பேன் என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் திருமணம் நடக்காமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த கனகா, உன்னை எவ்வளவு தூரம் நம்பினேன். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாயே, என்னை திருமணம் செய்யாத நீ, சிறைக்குச் செல் என குமாரை நோக்கி கூறினார்.
இதையடுத்து, குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கனகா கொடுத்த புகாரின்பேரில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த திருமணம் நடக்காததற்கு பணம் தான் காரணம். குமாரும், கனகாவும் 8 வருடங்களாக காதலித்தார்கள்.
இந்த சமயத்தில் குமாருக்கு வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன் தன் கழுத்தில் தாலி கட்டவேண்டும் என கூறிய கனகா குமாரை காவல் நிலையத்துக்கு வரவழைத்தார்.
ஆனால் நல்ல வேலை கிடைத்ததால் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்ணை குமாருக்கு திருமணம் செய்துவைக்க அவர் தாய் விரும்பி இந்த திருமணத்தை நிறுத்தினார். இதற்கு குமாரும் திடீரென சம்மதம் தெரிவித்தார். அதனால் தான் அவரை கைது செய்தோம் என கூறியுள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சொந்த மகன் காதலித்து கைவிட்ட இளம்பெண்ணின் திருமணத்தை அவரது தந்தையே ஆடம்பரமாக நடத்தி வைத்த சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படத்தை மிஞ்சும் இச்சம்பவம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் நடந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கோட்டயம் மாவட்டம் திருனக்கர பகுதியில் குடியிருக்கும் ஷாஜி என்பவரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து, பின்னர் இருவரும் திருமணம் செய்யும் நோக்கில் தலைமறைவாகினர்.
இந்த நிலையில் இளம்பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவான இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
விசாரணையில் இருவருமே திருமண வயதை எட்டவில்லை என்பதால், நீதிமன்றம் இருவரையும் பெற்றோருடன் செல்ல உத்தரவிட்டது. மட்டுமின்றி எதிர்காலத்தில் காதலர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் இரு வீட்டாரும் முழு மனதுடன் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனிடையே குறித்த இளம்பெண் தங்களது குடியிருப்பில் இருந்தபடியே கல்லூரி படிப்பை முடித்தார். அந்த இளைஞர் கல்லூரி விடுதியில் தங்கியபடியே படிப்பை முடித்தார்.
இந்த நிலையில் அந்த இளைஞர் இன்னொரு பெண்ணை காதலித்துள்ளார். மேலும், தந்தையுடன் ஐக்கிய அமீரகத்தில் வேலைக்கும் சென்றுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு முதல் காதலியை மறந்த இளைஞர், தமது இரண்டாவது காதலியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தகவலை அறிந்த ஷாஜி தமது மகனை எதிர்த்ததுடன், மகனுக்காக இதுவரை சேகரித்த சொத்துக்களை, மகனால் கைவிட்ட இளம்பெண்ணின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். மேலும் ஒரு மணமகனையும் தேடிப்பிடித்த அவர் அந்த இளம்பெண்ணின் திருமணத்தையும் ஆடம்பரமாக நடத்தி வைத்து தமது சொல்லை காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் கோட்டயம் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை திருநங்கை ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை திருநங்கையிடம் இருந்து மீட்டு தருமாறு மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயசண்முகநாதன். காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் திருநங்கையான பபிதா ரோஸ், சமீபத்தில் தன் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசியதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
அப்போது விஜயசண்முகநாதனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இரு மாதங்களாக காதலித்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். விஜயசண்முகநாதன், பபிதா ரோஸை திருமணம் செய்தது பற்றி, அவரது மனைவி சக்தியிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார்.
இது தொடர்பான உண்மை சமீபத்தில் சக்திக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே திருமணமான தனது கணவரை, மனைவியான நான் உயிருடன் இருக்கும்போதே மறுமணம் செய்துக்கொண்ட பபிதா ரோஸை கைது செய்து,
தன் கணவரை தன்னிடம் மீட்டுக் கொடுக்கும் படி சக்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். சக்தி அளித்த புகார் ஏற்றுகொள்ளப்பட்டாலும் அதன் மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.
தமிழகத்தில் இளம்பெண்ணுக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கும்மிடிபூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த குமரேசனின் மகள் ஆர்த்தி (21). பொறியியல் பட்டதாரியான ஆர்த்திக்கு அவர் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஆர்த்தி மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆர்த்தியின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 31 ஆம் நாள் நினைவை முன்னிட்டு வவுனியா நகர ஜூம்மா பெரிய பள்ளி வாசலில் விசேட தொழுகையும் இரங்கல் நிகழ்வும் இன்று மதியம் 12.15 மணிக்கு இடம்பெற்றது.
வவுனியா நகர ஜூம்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் சலீம் ஹாஜ்சியார் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த உறவுகளுக்காக விசேட தொழுகை இடம்பெற்றதுடன் அவர்கள் நினைவாக இரங்கல் உரைகளும் இடம்பெற்றன.
இதில் மதத்தலைவர்கள், வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், நகரசபைத் தலைவர், நகரசபை உபதலைவர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், வர்த்தக நலன்புரிச்சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது இரங்கல் உரைகளை வழங்கினர்.
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் வரலாற்றிலேயே மறக்க முடியாத நாளாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதம் கடக்கின்றது.
21ஆம் திகதி காலை 8.45 மணியளவில் முதல் தாக்குதல் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பதிவானது.
தொடர்ந்து, மட்டக்களப்பு – சியோன் தேவாலயம், நீர்கொழும்பு – கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், கொழும்பில் சினமன் கிராண்ட் ஹோட்டல், சங்கரில்லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிகல் இன், தெமட்டகொடை மகவில பூங்கா போன்ற பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் பல அப்பாவி மக்களின் உயிர் கொத்து கொத்தாக பறிபோனது. இத்தாக்குதல்களில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்தில் இன்று நினைவு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க தமது வேண்டுதல்களை முன்வைத்ததோடு உயிரிழந்தவர்களுக்காக மனதுருகி பிரார்த்தனை செய்து கொண்டனர்.
வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த பிக்குகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வவுனியாவில் புந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வெளிநாட்டு அகதிகள் சிலர் தாங்க வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மூன்று மதத்தலைவர்கள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிர்ந்த ஏனைய நான்கு பிரதேசசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் சிலரும் பொதுமக்கள் சிலருமாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
இதன்போது வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் இருந்து அகற்றவேண்டும் என தீர்மானித்ததுடன் அவர்கள் இங்கு தங்கவைத்தமை தொடர்பிலும் கடும் ஆட்சேபனையை வெளியிட்டனர்.
அத்துடன் குறிப்பிட்ட தினத்திற்குள் அவர்களை வவுனியாவில் இருந்து வெளியேற்றாவிட்டால் எதிர்ப்பை வெளியிடுவோம் எனவும் தெரிவித்தனர். இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு மகஜர்களை கையளிப்பது எனவும் பூந்தோட்டத்தில் வெளிநாட்டு அகதிகளை தங்கவைத்துள்ள முகாமுக்கு செல்வது எனவும் தீர்மானித்து மகஜருடன் அரச அதிபர் பணிமனைக்கு சென்றிருந்தனர்.
இதன்போது அரசாங்க அதிபர் இல்லாத காரணத்தினால் மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்ததுடன் அகதிகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பினர். எனினும் மேலதிக அரசாங்க அதிபர், அகதிகள் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தொடர்பான எந்த வித விடயங்களும் தம்மிடம் இல்லை எனவும் பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மகஜரை கையளிக்க சென்ற போதிலும் அவர் இல்லாத நிலையில் வேறு ஒருவரிடம் மகஜரை கையளித்த பின்னர் பூந்தோட்டம் முகாம் பகுதிக்கு சென்றனர்.
இதன்போது அதிகளவான இராணுவத்தினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்ததுடன் முகாமுக்கு செல்லும் பாதையும் பார ஊர்தியினால் வழிமறிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கடும் மழைக்கு மத்தியில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் மற்றும் குழுவினர் முகாம் பகுதிக்கு செல்ல முற்பட்டபோது பொலிஸார் அவர்களை உள் செல்ல முடியாது என தெரிவித்ததுடன் அவர்களை அங்கேயே தடுத்து வைத்திருந்தனர்.
இதன்பேது வவுனியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து குழுவினரை செல்ல முடியாது என தெரிவத்ததை அடுத்து பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் தமது கோரிக்கைக்கு பதில் தராத பட்சத்தில் தம்மாலான நடவடிக்கையை ஓரிரு நாட்களில் எடுப்போம் என தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.
வவுனியாவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மடுக்கந்தை விகாராதிபதி தலைமையில் நகரசபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த குருமார்,
இங்கு அகதிகளாக வந்திருப்பவர்கள் விபரங்கள் அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை. அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள். ஐஎஸ் மற்றும் தெளபிக் ஜமாத் அமைப்பினர்கள் கூட இவர்களூடாக உள்நுழைந்திருக்க கூடும் என சந்தேகமுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், இங்குள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலையில் புதிய பிரச்சனை இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடாது. அதனால் வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைக்க அனுமதிக்க முடியாது.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற ஆணையாளர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், சாதகமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பிக்குமார் தெரிவித்தனர்.
இது தொடர்பில், வவுனியா அரச அதிபர், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் மனு ஓன்றினை கையளித்தனர்.
இக் கலந்துரையாடலில் பௌத்த குருமார், போதகர், இந்து மதகுரு, வவுனியா நகர சபை தலைவர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உப தவிசாளர், நகரசபை உறுப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நீர்கொழும்பில் இருந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 35 அகதிகள் கடந்த சனிக்கிழமை இரவு முதல் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 21.04.2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா இ.போ.ச சாலையில் இன்று (21.05.2019) காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மெழுவர்த்தி சுடரும் ஏற்றப்பட்டது.
இவ் அஞ்சலி நிகழ்வில் இ.போ.ச வவுனியா சாலையின் முகாமையாளர், உப முகாமையாளர், கணக்காளர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், சாரதிகள், நடத்துனர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக வவுனியாவிலுள்ள பெரும்பாலான சமய வழிபாட்டுத் தலங்களில் இன்று (21.05.2019) காலை 8:45 மணியளவில் மணியோசை ஒலிக்க செய்யப்பட்டதுடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.
இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் ஒரு மாதப் பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக 21ஆம் திகதி வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விடுத்த கோரிக்கையினையடுத்தே இவ் நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.