சிரியாவில் தலை துண்டித்து கொல்லப்பட்ட தன்னுடைய தந்தையின் உடலை எடுத்து வர, தன்னால் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் என அவருடைய மகள் சபதம் எடுத்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த டேவிட் ஹைன்ஸ் என்கிற தொழிலாளி கடந்த 2013ம் ஆண்டு காரில் சென்றுகொண்டிருந்த போது, துப்பாக்கி முனையில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்.
இவருடன் சேர்த்து இத்தாலியை சேர்ந்த ஃபெடெரிகோ மோட்கா மற்றும் வேறு 2 பேர் கடத்தப்பட்டனர்.
18 மாதங்கள் கைதிகளாக இருந்த போது பல சித்ரவதைகளை அனுபவித்துள்ளனர். பின்னர் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜிகாதி ஜான் என அழைக்கப்படும் முகம்மது எம்வாசியால் பாலைவனம் ஒன்றில் வைத்து தலை துண்டித்து கொல்லப்பட்டார்.
அதேசமயம் இவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட ஃபெடெரிகோ மோட்காவை, 5 மில்லியன் டொலர் கொடுத்து இத்தாலி அரசு மீட்டது. அதன் பிறகு ஆவணப்படம் ஒன்றில் தோன்றிய ஃபெடெரிகோ மோட்கா, தனக்கும் டேவிட் ஹைன்ஸ்க்கும் இடையில் உள்ள நட்பு மற்றும் அங்கு அனுபவித்த சித்ரவதைகள் குறித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் டேவிட் ஹைன்ஸின் மகள் பெத்தானியா (22), சிரியாவில் இருந்து தன்னுடைய தந்தையின் உடலை எடுத்து வருவேன் என கூறியிருப்பதோடு, அதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார் என கூறியுள்ளார்.
Honduras நாட்டில் கடலுக்குள் விமானம் விழுந்த நிலையில் உள்ளே இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Honduras தலைநகர் Tegucigalpaவில் இருந்து Trujillo நகர் நோக்கி ஒரு சிறிய விமானம் நேற்று கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்த நிலையில் நேராக Honduras தீவில் உள்ள கடலுக்குள் விழுந்தது.
இதில் விமானத்தில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர், இன்னொருவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பின்னர் அவரும் உயிரிழந்தார்.
பிரட்லி போஸ்ட், பெய்லி சோனி, டோனி டுப்லர், விமானி பேட்ரிக் போர்செத் மற்றும் ஆண்டனி டுப்லர் ஆகியோர் தான் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் கனடியர்கள் என்பதும் சுற்றுலாவுக்காக அவர்கள் Honduras வந்ததும் தெரியவந்துள்ளது. விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வவுனியாவில் இளைஞரொருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் நேற்று மாலை வவுனியா நகரிலிருந்து மன்னாருக்கு செல்லும் பிரதான சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள எரிபொருள் நிலைய பகுதியில் தனிமையில் நின்ற இளைஞரொருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிரு்நது 750 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின் இன்று அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று அதிகாலை வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இன்று அதிகாலை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து முப்படை பாதுகாப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது.
பொங்கல் நிகழ்வுக்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இராணுவத்தின் முழுமையான உடல் பரிசோதனைகளின் பின்னர் ஆலய சுற்றுவளாகத்துக்குள் செல்ல அனுமதிக்க படுகின்றார்கள்.
கடந்த 13ஆம் திகதி உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு தீர்த்தம் எடுக்கும் வைபவம் முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் இடம்பெற்றது.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் சென்று அங்கு உப்புநீரில் விளக்கு எரிக்கப்படுவதோடு நேற்று வரை வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து நேற்றைய தினம் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் இடம்பெற்றது. முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறுவது வழமையாக காணப்படுகின்றது.
அந்தவகையில் இன்று அதிகாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு சைபர் தாக்குதல் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேற்படி பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிது மீகாஸ்முல்ல தெரிவிக்கையில், சில இணையதள உரிமையாளர்கள் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேற்று சைபர் தாக்குதலுக்கு இலக்கான டொட் கொம் மற்றும் டொட் எல்.கே ஆகிய இணையத்தள முகவரி பரப்புகளை கொண்ட பல இணையத்தளங்கள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பெற்றோருடன் இணைந்து நாளை பாடசாலைகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர், முன்னாள் கல்வி அமைச்சர்கள் இருவர், பேராசிரியர் பந்துல குணவர்தன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கொழும்பு எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரவித்துள்ளனர்.
அதற்கமைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட அனைவரும் நாளை பாடசாலைகளுக்கு செல்லவுள்ளனர். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுவதனை தவிர்ப்பதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் பாதுகாப்பினை பொலிஸார் மற்றும் படையினர் உறுதி செய்துள்ளனர். அதனை மேலும் உறுதி செய்வதற்காக இவ்வாறு எதிர்க்கட்சி தலையிடுவதனை பிரதமர் பாராட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி அனைவரையும் பாடசாலைக்கு வருமாறும் வழமை போன்று செயற்படுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 22ம் திகதி முதல் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருணாகலில் மக்கள் பதற்ற அடைந்தமையினால் அந்தப் பகுதியில் பெருமளவு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். தும்மலசூரிய நகரத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக நேற்று மாலை வெளியாகிய போலியான தகவலினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு பிரிவினர் தும்மலசூரிய பிரதேசத்தில் குவிக்கப்பட்டதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்மலசூரிய நகரத்திற்கு அருகில் கரதாவில பாலத்திற்கு அடியில் 500 வெற்று துப்பாக்கி ரவைகளை இராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தாக்குதல் தொடர்பான தகவல்கள் பரவத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலியான தகவல் காரணமாக அந்தப் பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதனால் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து நால்வரை இன்று (19) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அல்லைநகர், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 42, 24, 21 மற்றும் 25 வயதுடைய நால்வரே கைது செய்துள்ளனர். மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் குடும்ப வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
இந்நிலையில். தந்தையும் மகனும் மாறி மாறி தாக்கியதில் காயங்களுக்குள்ளானதோடு மேலும் மகனின் நண்பர்கள் இருவர் தந்தையை தாக்குவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, நாளை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் தொடருந்து நிலையத்துக்கு அண்மையில் தொடருந்துடன் மோதுண்டு குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.
விபத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத்தலைவர் மதுபோதையில் இருந்தார் என்றும் அதனாலேயே தொடருந்துடன் மோதுண்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் சைக்கிளில் சென்றவரை நையாண்டி செய்து இரும்புத்தடியால் தாக்கி தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சனிக்கிழமை(18) மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர் அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் தற்போது கண்டி வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நோன்பு காலம் தனது குடும்பத்திற்கு என ஸம் ஸம் வீதியை சேர்ந்த முகம்மது பஸில் தம்சீர் (வயது 49) என்பவர் மீன்களை கொள்வனவு செய்து அதனை தனது வீட்டிற்கு சென்று கொடுத்து விட்டு வெளியேறி வீதியால் சென்றுள்ளார்.
அதே நேரம் அவ்வீதியை சேர்ந்த மருதமுனை வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றுகின்ற ஏ.எம் தமீம் என்பவர் திடிரென இரும்பு குழாயினால் தலையில் பலமாக தாக்கி தப்பி சென்றுவிட்டார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த முகம்மது பஸில் தம்சீர் என்பவரை அயலவர்கள் தூக்கி முச்சக்கரவண்டி ஒன்றில் மருதமுனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை மேற்கொள்ள மறுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் ஊடகங்களிடம் குறிப்பிட்டனர். மேலும் அடித்த சந்தேக நபர் அதே வைத்தியசாலையில் நின்று கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து நோய் காவு வண்டி மூலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
எனினும் அங்கும் சிகிச்சை பலனளிக்கமுடியாமையினால் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது சுயநினைவிழந்து சிகிச்சை பெற்று வருவதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த 2016 அன்று படுகாயமடைந்த நபருடன் முரண்பட்டு சமாதானமாக செல்வதாக தெரிவித்து வந்த சந்தேக நபர் தற்போது தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காயமடைந்த நபரை அவரது வீட்டருகே நிற்கின்ற இளைஞர்கள் முதல் கொண்டு தாக்கியவர் வரை கேலி செய்வதாகவும் இதன் காரணமாகவே 2016 வரை சண்டை ஒன்று ஏற்பட்டு பொலிஸ் நிலையம் வரை சென்று சமாதானம் ஆனதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் சில முக்கியஸ்தர்களின் பிள்ளைகளும் இத்தாக்குதலில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என அங்குள்ள மக்கள் பெயர்கள் சிலவற்றை குறிப்பிட்டு ஊடகங்களிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அந்நாட்டின் புகழ்மிக்க மருத்துவராக உயர்ந்திருக்கிறார் இலங்கை தமிழரான உமேஸ்வரன் அருணகிரிநாதன். குறிப்பாக புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கிடையே பரவலாக அறியப்படும் இதயமாற்று அறுவை சிகிச்சை நிபுணரான உமேஸ்வரனின் வாழ்க்கை பயணத்தை அறிவதற்காக பிபிசி அவரிடம் பேசியது.
உமேஸ்வரனின் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள்; இரண்டாவது குழந்தையான இவர்தான் குடும்பத்தின் முதல் ஆண் குழந்தை. இவருக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி என பெரிய குடும்பமாக உற்றார் உறவினர் சூழ யாழ்ப்பாணம் அருகேயுள்ள புத்தூரில் வாழ்ந்து வந்தனர்.
எனக்கு அப்போது எட்டு வயதிருக்கும். அப்போது, எனக்கு உள்நாட்டுப் போரின் தீவிரமும், அர்த்தமும் தெரிந்திருக்கவில்லை. அந்த சமயத்தில்தான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒருவரை பார்க்க நேர்ந்தது.
எங்களது வீட்டருகே நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவரை பார்ப்பதற்காக நாங்கள் சென்றிருந்தபோது, எனது கண்களை அம்மா கையால் மூடிக்கொண்டார். ஆனால், எப்படியோ கண்ணை கொஞ்சம் திறந்து படுகாயங்களுடன் உயிரிழந்திருந்த அந்த நபரை பார்த்துவிட்டேன்.
அன்றைய தினம் முதல் இன்றுவரை அந்த காட்சிகள் மனதில் ஓடும் போதெல்லாம் உடல் முழுவதும் வியர்க்கிறது; தூக்கம் பறிபோகிறது; பயம் படருகிறது” என்று உள்நாட்டுப் போரின் வீரியத்தை உணர்ந்த நாள் குறித்து உமேஸ்வரன் விளக்குகிறார்.
உள்நாட்டுப் போரின்போது இலங்கை ராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களை தாங்கள் முதலை என்று அழைத்ததாக கூறும் உமேஸ்வரன், தனக்கு சுமார் பத்து வயதிருக்கும்போது, தங்களது குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்த ராணுவம் முதலைகளை (ஹெலிகாப்டர்களை) கொண்டு குண்டு மழையை பொழிந்ததாக கூறுகிறார்.
முதலில் எங்களது பகுதியை வட்டமிட ஆரம்பித்த முதலையை பார்த்த அம்மா, முன்னெச்சரிக்கையாக எங்கள் ஐந்து பேரையும் வீட்டருகே இருந்த மரத்தினடியில் எங்களை தனித்தனியே உட்கார வைத்தார். அருகிலுள்ள வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை கூடவே வைத்திருந்த நிலையில், எனது அம்மாவின் செயல் அப்போது எனக்கு கோபமூட்டியது. ஆனால், இப்போதுதான் அதன் முக்கியத்துவம் புரிகிறது.
இப்படி போரின் காரணமாக நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருக்க, மற்றொரு புறம் ஒரு சிறுநீரகம் செயலிழந்ததாலும், போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாததாலும் எனது அக்கா உயிரிழந்துவிட்டார். அவரது மறைவு எங்களுக்கு பேரிடியாக அமைந்தது. அப்போது, ‘நீ நல்லா படிச்சு மருத்துவர் ஆகணும், நம்ம வீட்லயே ஒரு மருத்துவர் இருந்தா இந்த மாதிரி நடக்காம பாத்துக்கலாம்’ என்று என்னிடம் அம்மா கூறியதே நான் பல்வேறு தடைகளையும் கடந்து மருத்துவராவதற்கு அடிப்படை” என்று உமேஸ்வரன் கூறுகிறார்.
அதே சூழ்நிலையில், ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த உமேஸ்வரனின் ஆசிரியர்கள் போரின் காரணமாக பள்ளிக்கு வராததாலும், இவரது பெற்றோர்கள் அனுப்ப விரும்பாததாலும் கல்வி அதோடு தடைபட, குடும்பத்தின் வறுமை நிலையை கருதி மண்ணெண்ணெய் வாங்கி விற்று வீட்டிற்கு உதவியதாக அவர் மேலும் கூறுகிறார். பின்னர் போர் காரணமாக உமேஸ்வரனை அவர் தாய் அக்கம்பக்கத்தினரிடம் பேசி, ஜெர்மனிக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டதாக கூறுகிறார்.
ஜெர்மனிக்கு கொழும்பிலிருந்துதான் செல்ல முடியுமென்பதால், நானும் அம்மாவும் யாழ்ப்பாணத்திலிருந்து காலடியாகவும், லாரி, பேருந்து, ரயில் போன்றவற்றின் மூலமாகவும் போர் நடைபெற்று கொண்டிருந்த பல்வேறு பகுதிகளையும், ராணுவத்தின் பரிசோதனைகளையும் தாண்டி எட்டு நாட்களில் கொழும்பை சென்றடைந்தோம்.
தற்காலத்தில் கூகுளில் சொடுக்கிய அடுத்த நிமிடமே எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. ஆனால், அப்போது சரியான முகவரை தேடி கண்டுப்பிடிப்பதும், முடிவுகளை எடுப்பதும் மிகவும் கடினமான காரியமாக இருந்தது. தங்குவதற்கு வீடின்றி வாகன நிறுத்துமிடத்தில் தங்கி எனக்கு தேவையான பாஸ்போர்ட், ஜெர்மனிக்கு அழைத்து செல்வதற்கு உதவும் முகவர் போன்றவற்றை இறுதி செய்வதற்கும், எனது வருகை குறித்து ஜெர்மனியில் இருக்கும் எனது தாய் மாமாவிடம் இசைவுபெறுவதற்கு ஆறு மாதங்களாகி விட்டது.
எழுப்பி, நான் தனியாக வெளிநாடு செல்லவுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அம்மா என்னுடன் வரவில்லை என்று தெரிந்ததும், நான் அழத் தொடங்கிவிட்டேன். அம்மா உடனடியாக என்னை சமாதானப்படுத்தியதுடன், ‘எக்காரணம் கொண்டும் ரகசியம் வெளியிட கூடாது, குடிப்பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது’, ‘நன்றாக படித்து டாக்டராக வேண்டும்’ உள்ளிட்ட விடயங்களை விளக்கினார்” என்று தனது நினைவலைகளை பட்டியலிடுகிறார் உமேஸ்வரன்.
12 வயதில் கண்ணீருடன் இலங்கையிலிருந்து தன்னந்தனியாக புறப்பட்ட உமேஸ்வரனின் ஜெர்மனியை நோக்கிய பயணம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களானது. ஆம், முன்பின் தெரியாத பத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் முதலில் கொழும்புவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர், இரண்டு வாரங்களுக்கு ஒரே அறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்து, துபாய் வழியாக கானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜெர்மனிக்கு வர வேண்டிய நான், துளியும் சம்பந்தமில்லாத பல்வேறு நாடுகளுக்கு அடுத்தடுத்து அழைத்துச் செல்லப்பட்டது எனக்கு பயத்தை உண்டாக்கியது. ஆனால், கானாவுக்குள் வந்திறங்கி, என்னைவிட கருப்பான மக்களை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ஏனெனில், எனக்கு சிறுவயதிலிருந்தே ‘நான்தான் ரொம்ப கறுப்பு’ என்று நினைத்திருந்த நிலையில், எனக்கு இது மிகவும் ஆச்சர்யமானதாக இருந்தது” என்று உமேஸ்வரன் கூறுகிறார்.
கானாவில் உமேஸ்வரன் அழைத்து செல்லப்பட்ட இடத்தில் ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இருந்தனர். இந்நிலையில், ஒரே இடத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்த நிலையில், அருகிலுள்ள டோகோ நாட்டிற்கு கானாவின் எல்லை வழியே சட்டவிரோதமாக முகவர் செல்லுமாறு கூறியதாகவும், அதன் பிறகு மீண்டும் ஒரு மாதம் கழித்து பழைய இடத்திற்கே வந்ததாகவும் உமேஸ்வரன் கூறுகிறார்.
இடைப்பட்ட காலத்தில் எனக்கு 13 ஆகியது. என்னுடைய காத்திருப்பு நேரம் அதிகமானதால், ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுந்தான் உணவு தர முடியுமென்று முகவர் கூறிவிட்டார். நான் தவித்தது ஒரு புறமிருக்க, என் தாய்-தந்தை-சகோதர, சகோதரிகள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது கூட தெரியாமல் நான் பரிதவித்தேன். இந்நிலையில், மீண்டும் அங்கிருந்து நைஜீரியாவுக்கு அழைத்துச் சென்றார்கள்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் சுமார் இரண்டு வாரகாலம் இருந்த உமேஸ்வரன், பின்பு போலி விசா மூலம் ஸ்பெயின் வழியாக ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரை சென்றடைந்தார்.
போலி விசாவின் மூலமாக நைஜீரியாவிலிருந்து புறப்பட்ட உமேஸ்வரன், அதே விசாவுடன் ஜெர்மனியில் தரையிறங்கினால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தனது முகவர் சொல்லி கொடுத்தபடி, அந்த விமானத்தில் பயணித்த இலங்கை தமிழர்கள் ஒன்றன் பின்னொன்றாக கழிவறைக்கு சென்று தங்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கிழித்து போட்டுவிட்டு வந்ததாக உமேஸ்வரன் கூறுகிறார்.
பாஸ்போர்ட்டை கிழித்து போட்டவுடன், ஜெர்மனியில் தரையிறங்கியதும், ‘என் உண்மையான பெயரை எக்காரணம் கொண்டும் சொல்ல கூடாது’ உள்ளிட்ட முகவர்கள் அளித்த வழிமுறைகளை மனதில் நிலைநிறுத்திக் கொண்டேன். பிராங்க்பர்ட் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், மற்ற பயணிகளை போல வெளியேறினோம். விமான நிலையத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியே சென்றுவிடலாம் என்று அந்த விமானத்தில் பயணித்த நாங்கள் அனைவரும் திட்டமிட்டிருந்த நிலையில், நான் என்னையே அறியாமல் நன்றாக தூங்கிவிட்டேன்.
தூங்கி எழுந்து பார்த்ததும், ஜெர்மானிய காவல்துறை அதிகாரி ஒருவரும், மொழிபெயர்ப்பாளராக தமிழர் ஒருவரும் இருந்தனர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது நான் நேரில் கண்ட விடயங்கள், அந்த காவல்துறை அதிகாரியை பார்த்ததுமே அச்சமடைய வைத்தது. ஆனால், அவர்கள் ஆச்சர்யமளிக்கும் வகையில், என்னிடம் மிகவும் பணிவாக நடந்துக்கொண்டனர். என் பெயர் உள்ளிட்ட சில விவரங்களின் ரகசியத்தை காத்தாலும், என்னுடைய அவலநிலையை எடுத்து கூறினேன்.
ஆச்சர்யமளிக்கும் வகையில், அந்த காவல்துறை அதிகாரி என்னைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு, சாக்கலேட் ஒன்றை அளித்தார். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பிறகு, என்னை போன்ற சிறுவர்களை வைத்திருக்கும் அறைக்கு அழைத்து சென்று, பீட்சா போன்ற உணவுகளை கொடுத்தனர். என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்போதுதான் பீட்சாவை சாப்பிட நேர்ந்தது; ஆனால், எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை.
இந்நிலையில், ஜெர்மனியில் இருக்கும் என் மாமாவின் அலைபேசி எண்ணை விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுக்க அவரை வரவழைத்து தகுந்த ஆவணங்களை சரிபார்த்த பின் அவரது வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்” என்று உமேஸ்வரன் விளக்குகிறார்.
தமிழை தவிர்த்து வேறெந்த மொழியிலும் அப்போது புலமை இல்லாத உமேஸ்வரன், ஜெர்மன் மொழி பெரும்பான்மையாக இருக்கும் அந்நாட்டிற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்வதற்காக ஆறு மாதங்கள் மொழிப் பயிற்சியை பெற்ற பிறகு, நேரடியாக ஏழாவது வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
ஏழாம் வகுப்பு முதல் ஜெர்மன் மொழி மட்டுமின்றி, அதன் மக்கள், வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணவு முறை போன்றவற்றை படிப்படியாக கற்றுக்கொண்டு வந்த உமேஸ்வரனுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது வாழ்வின் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நடந்ததாக கூறுகிறார்.
9ஆம் வகுப்பு படிக்கும்போது ஜெர்மன் மொழியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உரையாட கற்றுக்கொண்ட சமயத்தில், எனது வகுப்பிற்கான மாணவ தலைவனை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் ஆறாம் வகுப்பு வரை படித்த நான் வகுப்பின் மாணவ தலைவனாகவும் செயல்பட்டதை போன்று, இங்கேயும் இருக்க விரும்புகிறேன் என்று தெரிவிக்க, வகுப்பின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எங்களது ஒட்டுமொத்த பள்ளியின் தலைவனாகவும் விளங்கினேன்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில், நான் பத்தாம் வகுப்பு படித்த முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று ஜெர்மானிய அரசிடமிருந்து உத்தரவு வந்ததை கண்டு அதிர்ந்துவிட்டேன். ஒருகட்டத்தில் மொட்டை மாடிக்கு சென்று, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டேன்.
பின்பு, எனது அம்மா பட்டப் பாட்டையும், நான் ஜெர்மனியை அடைவதற்கு பட்ட வேதனையையும் நினைத்து பார்த்தேன். மறுதினம் பள்ளிக்கு சென்று அனைவரிடமும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டேன். அதைத்தொடர்ந்து, பள்ளியில் என்னுடன் படித்தவர்கள், ஆசிரியர்கள் என பலரும் இணைந்து பணம் திரட்டி அரசின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தோம்.
நாங்கள் மேற்கொண்ட முதல்கட்ட முயற்சியின் காரணமாக பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை ஜெர்மனியில் இருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஹம்பர்க் நகர மாணவ தலைவர்கள் குழுவில் ஒருவனான என்னை, அம்மாகாணத்தின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நான், என் வாழ்க்கை பயணத்தை விளக்கியதுடன், நான் ஜெர்மனிலேயே இருப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்” என்று தனது பள்ளி வாழ்க்கையின் முக்கிய தருணங்களை விவரிக்கிறார் உமேஸ்வரன்.
ஹம்பர்க் மாகாண நாடாளுமன்றத்தில் உமேஸ்வரனது உரையை கேட்டவர்கள், அவரை தொடர்ந்து ஜெர்மனிலேயே தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் ஒருபகுதியாக, பள்ளிப்படிப்பை முடித்த அவரது கனவான மருத்துவத்தில் சேர்ப்பதற்கு உதவியது மட்டுமின்றி, அவரை தற்காலிகமாக டென்மார்க் அனுப்பி, அங்கிருந்து பல்கலைக்கழக படிப்பை படிப்பதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க வைத்து, அவரை மீண்டும் ஜெர்மனிக்கு வரவழைப்பது வரையிலான பல்வேறு உதவிகளை ஆசிரியர் ஒருவர் தானே முன்னின்று செய்ததாக அவர் கூறுகிறார்.
1999ஆம் ஆண்டு நான் எனது மருத்துவப் படிப்பை தொடங்கினேன். என்னுடைய படிப்பு முதல் தங்குமிடம், இலங்கையில் வாழும் குடும்பத்தினருக்கு உதவி செய்வது வரை அனைத்திற்கும் தேவையான பணத்தை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டே பகுதிநேரமாக பணி செய்து சம்பாதித்தேன். எனது படிப்பின் கடைசி ஆறு ஆண்டுகள் நான் படித்த பல்கலைக்கழகத்திலேயே பகுதிநேரமாக பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. படிப்பு, இரவுநேரத்தில் பணி என்று இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ததால், ஆறாண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை நான் எட்டாண்டுகளில் முடித்தேன்.
அதன் பிறகு, இருதய அறுவை சிகிச்சை நிபுணருக்கான பயிற்சியை கடந்த பதினோரு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த நான், இனவெறி உள்ளிட்ட பல்வேறு தடைகளையும் தாண்டி, இம்மாத தொடக்கத்தில் எனது பட்டத்தை பெற்றுள்ளேன். இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட கனவு மட்டுமின்றி, எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரின் கனவும் நிறைவேற்றியுள்ளது” என்று பெருமையுடன் கூறுகிறார் உமேஸ்வரன் அருணகிரிநாதன்.
இலங்கை உள்நாட்டுப் போர் முதல் ஜெர்மனியின் புலம்பெயர்ந்தவர்கள் சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாளராக உயர்ந்தது வரையிலான தனது வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக வைத்து, உமேஸ்வரன் இதுவரை இரண்டு புத்தகங்களை ஜெர்மானிய மொழியில் எழுதியுள்ளார்.
“மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற எனது புத்தகங்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நான் பேசியதை கேட்ட ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர், அந்நாட்டு அதிபர் தலைமையில் நடைபெறும் அகதிகள் தொடர்பான நிகழ்ச்சியில் என்னை சிறப்புரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்படி, சென்ற ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில், ‘நான் பார்ப்பதற்குதான் வேறொரு நாட்டை சேர்ந்தனாக தெரிகிறேன்; ஆனால், உள்ளுக்குள்ளே நான் ஜெர்மானியன்; அது என்னுடன் பழகினால்தான் தெரியும்’ என்ற பொருளை உதாரணத்துடன் விளக்கினேன். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னிடம் பேசிய ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல், என்னை வெகுவாக பாராட்டினார்.”
எனது வாழ்வின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணமான எங்களது அம்மா, என்னுடைய இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பியை பெரும்பாடுபட்டு நல்ல நிலைக்கு கொண்டுவந்தார்; தற்போது அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் குடிமகன்களாக உள்ளனர்.
ஆனால், பல்வேறு காரணங்களினால், எங்களது அம்மாவை நான் இலங்கையிலிருந்து கிளம்பிய 15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதர, சகோதரிகளுடன் இணைந்து 2005ஆம் ஆண்டுதான் லண்டனில் சந்திக்க முடிந்தது. அதன் பிறகு எங்களது தந்தையை இயற்கை எய்துவிட்டார். நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்டில் இருந்தாலும், தனது பாரம்பரியத்தையும், சொந்த மண்ணையும் விட்டுக்கொடுக்க முடியாத எங்களது அம்மா தற்போது இலங்கையிலே வசித்து வருகிறார்” என்று தனது வாழ்க்கையின் பெருமைமிகு தருணங்களை உமேஸ்வரன் அருணகிரிநாதன் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று மாலை ஓடையில் நீராடிய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நாளை திங்கட்கிழமை பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்தின் உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு இளைஞர்களுடன் சென்று பொழுதை கழித்துக்கொண்டு இளைஞர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் நீரிழ் மூழ்கியுள்ளார்.
இதன்போது மற்றைய நபர் குறித்த நண்பரை காப்பாற்ற சென்றபோது அவரும் மூழ்கியுள்ளார். இந்த நிலையில் அங்கு நின்றவர்களினால் காப்பாற்றச்சென்றவர் காப்பாற்றப்பட்ட நிலையில் மூழ்கியவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் சுமார் 45நிமிடங்களுக்கு பின்னர் குறித்த நபர் மீட்கப்பட்டு இருவரும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மூழ்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் பெரியகல்லாறு கலைமகள் வீதியைசேர்ந்த 17வயதான தே.தீமோதி ஆகாஸ் என்னும் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இளைஞனான பெரியகல்லாறு பங்களா வீதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் அக்சயன் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பெண் ஒருவர், பப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ விவகாரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், பெண்கள் உதவி மையமான அபயம் தொண்டு நிறுவனத்துக்கு போனில் தொடர்புக் கொண்டு அப்பெண், பப்ஜி பார்டனருடன் சேர்ந்து வாழ கணவரை விவகாரத்து செய்ய வேண்டும் எனவும், அதற்கு உதவுமாறு கோரியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தொண்டு நிறுவனத்தின் பெண் நிர்வாகி உடனே தொடர்பு கொண்ட பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினர் முன்னிலையில் அப்பெண்ணுடன் பேசியுள்ளனர்.
அதில், அப்பெண் தொடர்ந்து பல மணிநேரம் போனில் பப்ஜி விளையாடி வருவதால், குடும்பத்தினருடன் சிறு முரண்பாடு உள்ளதாக பெண் நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சில பயிற்சிகளை மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
தவிர, கணவருடன் விவாகரத்து பெற்று குடும்பத்தாரை விட்டு பிரிவது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்யவும் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வை முதன் முறையாக காண்பதாக பெண் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரை சேர்ந்த இளம்பெண் பிரபல பாடகரும் தனது கணவருமான அலீப் அசீஸிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அவர் தன்னை ஏமாற்றியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் பிரபல நடிகர் மற்றும் பாடகராக இருப்பவர் அலீப் அசீஸ் (28). இவர் மனைவி பெல்லா (25). தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவரிடம் விவாகரத்து கோரி பெல்லா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், அலீப் எப்போதும் என்னை ஏமாற்றுவார், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. என்னை அவர் ஏமாற்றியதற்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரம் என்னிடம் உள்ளது என கூறினார்.
ஏற்கனவே பெண் ஒருவருடன் அலீப் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் தனது மனைவியிடம் அது குறித்து அவர் மன்னிப்பு கேட்டார். இதோடு இரண்டு நடிகைகளுடன் அலீப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அலீப் மாதம் சிங்கப்பூர் டொலர் மதிப்பில் S$329 பணத்தை தனது மகன் செலவுக்கு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ராஜகுமார். செம்பரை கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகள் கனிமொழி. ராஜகுருவுக்கும், கனிமொழிக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜனுக்கு தலையில் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விடயம் மணமகளின் அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். தந்தை இறந்த தகவலை தெரிவித்தால் தனது சகோதரி கனிமொழி திருமணம் நின்று விடும் என்று கருதிய அவர் அண்ணன், அந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்துக்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து விட்டார்.
நேற்று காலை ராஜகுரு- கனிமொழி திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. பின்னர் மணமகளின் உறவினர் ஒருவர் நடராஜன் இறந்த தகவலை அங்கிருந்த சிலரிடம் தெரிவிக்கவே, அந்த தகவல் திருமண மண்டபம் முழுவதும் பரவியது. இதைக்கேட்ட கனிமொழி,அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். மணமகன் குடும்பத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அனைவரும் மருத்துவமனை சென்று உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை நடராஜன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் மணக்கோலத்துடன் மணமகள் கலந்து கொண்டார். காலையில் மகள் திருமணம் நடந்த நிலையில், மாலையில் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
யாழ்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையாக இடம்பெற்றது. மூவரும் காரில் மண்கும்பான் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றது.
வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்த்து என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.