உந்துருளி விபத்தில் ஒருவர் பலி : 4 பேர் காயம்!!

விபத்தில் ஒருவர் பலி

கரந்தெனிய – எருவ்வல பாலத்தின் அருகாமையில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கரந்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து குறித்த கரந்தெனிய காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் கால்களால் விமானம் ஓட்டும் பெண்!!

கால்களால் விமானம் ஓட்டும் பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த விமானி, தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கோக்ஸ்(30). விமானியான இவருக்கு பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லை. இவர் பிறந்தபோது, பெற்றோரே இவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.

எனினும், ஜெஸ்ஸிகாவை முழு சுதந்திரத்துடனும், தன்னம்பிக்கையுடனும் வளர்த்து வந்துள்ளனர். சிறு வயதில் ஒரு விமானப் பயணத்தின்போது, ஜெஸ்ஸிகாவுக்கு விமானி ஆக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தனது மேற்படிப்புக்கு பிறகு, விமானம் ஓட்டும் பயிற்சியில் இறங்கினார் ஜெஸ்ஸிகா. கடும் பயிற்சிக்கு பிறகு 2008ஆம் ஆண்டு, லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்குவதற்கான சான்றிதழை ஜெஸ்ஸிகா பெற்றார்.

ஒரு விமானியாக மட்டும் இவரைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுவதில்லை. ஏனேனில் கார் ஓட்டுதல், சமையல், கராத்தே என அனைத்து துறைகளிலும் ஜெஸ்ஸிகா ஒரு ரவுண்ட் வருகிறார். மேலும் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராக இருக்கும் ஜெஸ்ஸிகா, பல மேடைகளில் தன்னுடைய பேச்சால் பலரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதுகுறித்து ஜெஸ்ஸிகா கூறுகையில்,

‘எனது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. எனது வாழ்க்கையை நான் என் போக்கில் வாழ விரும்பினேன். எனக்கு பல முன்னுதாரணமான ஆட்கள் இருக்கிறார்கள். வரும் தலைமுறைக்கு நானே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைத்தேன்’ என தெரிவித்துள்ளார்.

பூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : கோர சம்பவம்!!

4 பேர் சடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த சுப்பிரமணியன் (52) என்பவர் சாலையில் பிஸ்கட், சிகரெட் என மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றினை நடத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் கட்டிய 2 மாடி வீட்டில் தாயார் ருக்மணி (72), மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) ஆகியோருடன் வசித்து வந்தார். வழக்கமாக காலை நேரத்திலே வியாபாரத்திற்கு சென்று கடையை திறக்கும் சுப்பிரமணி, இன்று நீண்ட நேரமாகியும் கடையை திறக்காமல் இருந்துள்ளார்.

இதனால் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டின் வெளிப்புற கேட் பூட்டப்பட்டிருந்தது. காலிங் பெல்லை நீண்டநேரம் அழுத்தியும் கதவு திறக்கப்படவில்லை. செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அருகாமையில் இருந்த ஹேமாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்து வந்த ஹேமாவின் உறவினர்கள் சுவர் ஏறிக்குதித்து இடதுபக்க ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் சென்றனர்.

அப்போது வீட்டு மேல்மாடியில் உள்ள படுக்கை அறையில் சுப்ரமணி, மனைவி ஹேமா, தாயாரருக்மணி, மகள் ஷிவானி ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கிடந்த குளிர்சாதன பாட்டிலையும் கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், தொழில் முன்னேற்றத்திற்காக சுப்பிரமணி கந்துவட்டிக்கு அதிக கடன் வாங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது. பணம் கொடுத்தவர்கள் அதிக நெருக்கடி கொடுத்தாலே தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

பத்து நாட்களுக்கு முன்னரே தோண்டப்பட்ட குழி… கணவர், குழந்தையை கொன்று புதைத்த இளம் மனைவி வழக்கில் அதிர்ச்சித் தகவல்!!

கணவர், குழந்தையை கொன்று புதைத்த  மனைவி

தமிழகத்தில் கணவர், குழந்தையை கொன்று புதைத்த பெண் 10 நாட்களுக்கு முன்னரே அவர்களை புதைக்க குழியை தோண்டியது தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீபிகா (19) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு பிரவீன்குமார் (1) என்ற குழந்தை உள்ளது.

கடந்த 13ம் திகதி முதல் ராஜாவும், பிரவீன்குமாரும் காணாமல் போனார்கள். இதுகுறித்து தீபிகா அங்குள்ளவர்களிடம் கூறி உள்ளார். இந்த தகவல் ராஜாவின் சகோதரிகளுக்கு தெரியவந்தது. உடனே ராஜா வீட்டுக்கு வந்து தீபிகாவிடம் விசாரித்தனர். வீட்டில் ரத்தக்கறை போல இருக்கிறதே என கேட்டுள்ளனர்.

அதற்கு தீபிகா ஏன் வீணாக சந்தேகப்படுகிறீர்கள்? ரத்தக்கறை இல்லை என்று கூறி சமாளித்தார். ஆனால், அவர்களின் சந்தேகம் தீரவில்லை. இதனால் பொலிசில் புகார் செய்தனர். இதையடுத்து பொலிசார் தீபிகாவிடம் விசாரித்தனர். அப்போது, 12ம் திகதி கணவருடன் சண்டை ஏற்பட்டதாகவும், அன்று இரவு ராஜா வீட்டில் தூங்கும்போது கணவன் தலையில் கல்லைபோட்டு கொலை செய்து புதைத்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

பின்னர், புதைத்த இடத்தை தீபிகா பொலிசாரிடம் காண்பித்தார். இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர். தீபிகா அளித்த வாக்குமூலம் குறித்து பொலிசார் கூறுகையில், ராஜாவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. 12ம் திகதி குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீபிகா அன்று இரவு தூங்கும்போது கணவனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். அந்த சத்தம் கேட்டு குழந்தை எழுந்து அழுதுள்ளது. கணவரை கொலை செய்தது பொலிசில் தெரிந்தால், தான் சிறைக்கு செல்ல நேரிடும். இதனால், தனது குழந்தையை கொலைக்காரியின் மகன் எனக் கூறுவார்கள் என்று கருதி தனது குழந்தையை துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் சடலங்களை வீட்டின் அருகே புதைத்துள்ளார் என பொலிசார் கூறியுள்ளனர்.

இதனிடையே, ராஜா மற்றும் பிரவீன்குமார் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கணவரையும், மகனையும் கொலை செய்த தீபிகா ஒருவரே எப்படி 2 பேரின் சடலத்தையும் கொண்டு வந்து புதைத்திருக்க முடியும். எனவே, இதற்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தனரா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன்படி, ராஜாவின் நண்பர் ஜெயராஜ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களின் திருமணம் நடந்து சிறிது நாளில் ராஜாவின் தந்தையான சுப்பிரமணி இறந்தார். அதன்பிறகு, 2 நாட்களில் அவரது மனைவியான நிர்மலாவும் உயிரிழந்திருக்கிறார். இதற்கும் தீபிகாதான் காரணமாக இருக்கும் என்று ராஜாவின் சகோதரிகள் கூறினர்.

ஏனெனில், தீபிகாவிற்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளது என்றும் ராஜாவின் சகோதரிகள் குற்றம்சாட்டினர். இதோடு தீபிகா 10 நாட்களுக்கு முன்பே வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி வைத்திருந்தார். எனவே கணவன் மற்றும் மகனை தீபிகா திட்டமிட்டு கொலை செய்து புதைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சொந்த குடும்பத்தையே தீ வைத்து கொன்றுவிட்டு நாடகமாடிய அண்ணன் : மனைவியுடன் கைது!!

கொன்றுவிட்டு நாடகமாடிய அண்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் சொத்துக்காக சொந்த குடும்பத்தையே தீ வைத்து எரித்த இளைஞரை மனைவியுடன் சேர்த்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜு – கலைச்செல்வி தம்பதியினருக்கு, கோவர்த்தனன், கவுதமன் என்கிற இரண்டு மகன்கள் இருந்தனர். கோவர்த்தனனுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பாக திருமணம் முடிந்துவிட்டது. இளையமகன் கவுதமனுக்கு வரும் ஜூன் 6-ம் திகதி திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது.

கடந்த 14-ம் தேதி அன்று ராஜு, கலைச்செல்வி மற்றும் இளைய மகன் கவுதமன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் உறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென ஏசி வெடித்து சிதறியதில் மூன்று பேருமே உயிரிழந்துவிட்டதாகவும், அதனை பார்க்க சென்ற கோவர்த்தனனும் அவருடைய மனைவியும் மயங்கிய நிலையில் அறையில் கிடந்ததாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கலைச்செல்வியின் சகோதரர் ஜெய்சங்கர், தன்னுடைய சகோதரி விபத்தில் இறக்கவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று கோவர்த்தனன் சட்டையில் ரத்தக்கறை இருந்ததாகவும் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் கோவர்த்தனன் மற்றும் அவருடைய மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ராஜுவிற்கு சொத்து மதிப்பு அதிகம் இருப்பதால் கூலிப்படையை வைத்து கொலை செய்யப்பட்டனரா என்கிற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஏசியில் பழுது ஏற்பட்டு தான் தீ விபத்து ஏற்பட்டதா என்பதை அறிந்து கொள்வதற்காக, ஏசி பழுது நீக்கும் நிபுணர்களை கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.

ஓடிவந்து பேசிய சிறுவர்களின் உடல்கள் சிதறுண்ட நிலையில் : கண்ணீர் மல்க சம்பவத்தை நேரில் கண்ட அருட்தந்தை!!

சிறுவர்களின் உடல்கள் சிதறுண்ட நிலையில்..

“புத்தாடைகள் அணிந்து மலர்ந்த முகத்துடன் ஓடிவந்து பேசிய சிறுவர்களின் உடல்கள் சிதறுண்ட நிலையில் கிடப்பதை கண்ட போது…” என கொழும்பு கொச்சிக்கடை தற்கொலை குண்டுத் தாக்குதலை நேரில் கண்ட அருட்தந்தை ஜேய் மரியரட்ணம் கண்களில் நீருடன் சம்பவத்தை விபரிக்கிறார்.

கொழும்பு சொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடைபெற்ற போது அருட்தந்தை ஜேய் மரியரட்ணம் திருப்பலி பூசையை ஒப்புக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது தனது மனநிலை எப்படியிருந்தது என்பது தொடர்பில் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – இந்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற வேளையில் உங்களுடைய தலைமையிலேயே திருநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இத்தருணத்தில் அதிசயிக்கத்தக்க விதமாக கடவுளின் கிருபையால் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள். ஆயினும், இத்தகைய ஆபத்தை கடந்து வந்துள்ள தங்களது மனநிலை எவ்வாறாக உள்ளது?

பதில் – (கண்களில் கண்ணீர் மல்கியவராய்) திருப்பலி ஆரம்பமாவதற்கு முன் ஆலயத்தின் நுழைவாயிலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பே சென்று அங்கு கூடியிருந்த மக்களுடன் குறிப்பாக பல சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடினேன்.

அழகான புத்தாடைகள் அணிந்து கள்ளங்கபடமற்ற மலர்ந்த முகத்துடன் ஓடி வந்து என்னுடன் பேசியதையும் பின்பு அவர்களின் சிதறுண்ட உடல்களுடன் கிடப்பதையும் கண்ட என் மனநிலையை விபரிக்க வார்த்தைகளே இல்லை. அச்சம்பவம் நினைவில் வரும் போதேல்லாம் என் கண்கள் குளமாகின்றன.

அந்த தருணத்தில் எவரும் எதிர்பாராத வண்ணம் ஏற்பட்ட இத்தகைய பாரிய குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட இழப்புக்களோ ஏராளம். இறை சந்நிதானத்தில் கூடியிருந்த பக்தர்களின் உடல்கள் சிதறுண்ட காட்சிகளை கண்ணுற்ற போது செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றேன்.

சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என இரத்த வெள்ளத்தில் மிதந்த தருணங்கள் என் மனக்கண்முன் வந்து செல்கின்றன. மரணஓலத்திலும் கூட அந்தோனியாரே! என அவலக்குரல் எழுப்பிய பக்தர்களின் சத்தம் என் செவிகளில் ஒலித்த வண்ணமே உள்ளது. இதனை என்றுமே என் வாழ்நாளில் மறக்க முடியாது.

இத்தகைய செயலை புரிந்தவர்கள் மேல் கடும் சினம் ஏற்பட்டது. ஏனெனில் மன அமைதியை தேடி மக்கள் கூடும் இறை சந்நிதானத்தில் இத்தகைய இழிச்செயலை புரிந்தமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

இருப்பினும் கத்தோலிக்க குருவாக அருட்பணியாற்றும் நிலையில் குருத்துவத்தின் மேன்மையின் மகத்துவத்தையும், திருவிவிலியத்தின் படிப்பினைகளுக்கும் கட்டுப்பட்ட ஒருவராக சகிப்புத் தன்மையுடன் செயற்பட வேண்டியவராக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் அருட்தந்தை ஜேய் மரியரட்ணம்.

-தமிழ்வின்-

இலங்கை இணையத்தளங்களை அதிரவைத்த சைபர் தாக்குதல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சைபர் தாக்குதல்

இலங்கையில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த சில இணையத் தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு ஏனைய இணையத்தளளங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் இணையத்தளம் மற்றும் குவைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உட்பட நாட்டின் பல இணையதளங்கள் மீது குறித்த சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுள்ளன.

இதனால் மேற்படி இணையத்தளங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் தற்பொழுது அவற்றுள் சில இணையத்தளங்களின் முடக்கம் சீர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சில இணையதளங்களை மீளவும் இயங்கவைக்கும் செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த சைபர் தாக்குதல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இணையத்தளங்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா ஆசிகுளத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு!!

நீர் சுத்திகரிப்பு நிலையம்

வவுனியா ஆசிகுளத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் வன்னிபாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறுநீரக நோய் தடுப்பு செயல்திட்டத்தின் கீழ் சுமார் பதினைந்து இலட்சம் ரூபா நிதியிலும் வவுனியா பூனாவ கடற்படையினரின் பங்களிப்பிலும் ஆசிகுளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா ஆசிகுளம் சனசமூக நிலைய தலைவர் பி.கணேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உபதவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உபதவிசாளர் மகேந்திரன், பிரதேசசபை உறுப்பினர் உத்திரியநாதன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை நேற்று வவுனியா மாவட்டத்தில் இச்செயல்திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா செலவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் : ஐ.நா கடும் கண்டனம்!!

ஐ.நா கடும் கண்டனம்

பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள்சபையின் செயற்குழு இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளது.

நாடுகடத்தப்படுகின்ற அதிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஆண்டு மாத்திரம் பிரித்தானியா 43 இலங்கை அகதிகளை பலவந்தமாக நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடவடிக்கை, கண்டனத்துக்குரியதும் ஆபத்தானதுமான செயற்பாடு என்று துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி!!

ஜனாதிபதி மைத்திரி

சிறைக் கைதி ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். லக்மினி இந்திக்க பமுனுசிங்க என்ற சிறை கைதி ஜனாதிபதியிடம் விடுத்த இரண்டு கோரிக்கைக்கு அமைய அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிறைச்சாலையில் இருந்து லக்மினி இந்திய பமுனுசிங்க சமூக விஞ்ஞான பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது களனி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பட்டப்படிப்பை கற்று வருகிறார். 2005ஆம் ஆண்டு இலங்கை குத்துச்சண்டை வீரரான அவர், தேசிய குத்துச்சண்டை போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்காக சிறைச்சாலை வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதியை சந்தித்த அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலதிக பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கும், குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்குமாறு குறித்த கைதி ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது கோரிக்கைக்கு செவி கொடுத்த ஜனாதிபதி அதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். சிறைக்கைதியின் கோரிக்கை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வவுனியாவில் பெண் சேஷ்டை புரியும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை : வர்த்தக சங்கம் அதிரடி!!

வவுனியா நகரில் கடந்த சில காலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான சேஷ்டைகள், பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றதுடன், காவல் நிலையத்தில் முறைப்பாடுகளும், கைதுகளும் இடம்பெற்று வரும் நிலையில்,

நேற்று வவுனியா வர்த்தக சங்கத்தினால் கடும் கண்டனம் தெரிவித்தும் எச்சரிக்கை விடுத்தும் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வவுனியாவில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான அங்க சேஷ்டைகள், பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாக எமது வர்த்தக சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது

கடந்த இரண்டு தினங்களில் வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளரின் மகன் மற்றும் அவருடைய நண்பரான மற்றுமொரு வர்த்தக நிலையத்தின் பணியாளர் இணைந்து பெண் ஒருவர் மீது அங்க சேஷ்டை புரிந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்

இவ்வாறான வர்தகர்களையும் வர்த்தக நிலையங்களையும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்படும் வர்த்தக நிலையங்களையும் வவுனியா வர்த்தக சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இது போன்ற செயற்பாடுகளை எதிர்காலங்களில் இடம்பெறாமல் இருக்க வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வர்த்தக சங்கம் எச்சரிக்கிறது.

தொடர்ந்தும் இவ்வாறான பாலியல் சேஷ்டைகள், இரட்டை அர்த்த வார்த்தைப் பிரயோகங்கள், வர்த்தக நிலைய வாயிலில் நின்று இரட்டை அர்த்தத்தில் வாடிக்கையாளர்களை கூவி அழைப்பது போன்ற விடயங்களிற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் மேலான கவனத்தை இந்த விடயம் தொடர்பாக செலுத்த வேண்டும் என வர்த்தக சங்கம் கேட்டுக்கொள்வதுடன், எதிர்வரும் காலங்களில் இது போன்ற முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எதிராக வர்த்தக சங்கம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதையும் பொது மக்களுக்கு குறித்த வர்த்தக நிலையத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகிறது என அறிவிக்கப்படும் எனவும் அறியத்தருகிறோம் .

எனவே எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்து சமூக அக்கறையுடன் செயல்படுமாறும் வர்த்தகர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கம் அறிவிக்கின்றது.

எங்கள் வாழ்க்கையை விட அவர்கள் உயிர் தான் முக்கியம் : பலரின் உயிரை காப்பாற்றிய இலங்கை தம்பதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

பலரின் உயிரை காப்பாற்றிய இலங்கை தம்பதி

இலங்கையில் கடந்த 13ஆம் திகதி இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் சில குடும்பங்களை ஒரு தம்பதி பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கடந்த 13ஆம் திகதி இலங்கையின் சில பகுதிகளில் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள், நிறுவனங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் நாத்தாண்டியா நகரில் உள்ள இஸ்லாமியர்கள் வீடுகள் சூறையாடப்பட்டது. இதில் சில இஸ்லாமிய குடும்பங்களை தாக்குதலில் இருந்து சிங்கள தம்பதியான சுஜிவம்வி சந்திமா மற்றும் குமரா காப்பாற்றியுள்ளனர்.

சுஜிவன்வி வீட்டில் தற்போது இருக்கும் இஸ்லாமியரான ஹலிமி கூறுகையில், எங்கள் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்த வந்தார்கள். அப்போது சுஜிவன்வி தான் இது சிங்களவரின் வீடு என கத்தினார், இதனால் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

சம்பவத்துக்கு பின்னர் சுஜிவன்வியும் அவர் கணவர் குமராவும் தான் எங்களுக்கு உணவு கொடுத்தனர், நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றி கடன் பட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

இது குறித்து சுஜிவன்வி கூறுகையில், ஹலிமா உட்பட 4 பேர் கொண்ட அவர் குடும்பத்தையும், இன்னொரு இஸ்லாமிய குடும்பத்தையும் தாக்க சிலர் முயன்றார்கள். அப்போது அவர்களை காப்பாற்ற நினைத்தோம், ஆனால் அது எங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என உணர்ந்திருந்தோம்.

ஆனால் அப்போது எங்கள் வாழ்க்கையை விட அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே அதிகமாக இருந்தது என கூறினார். அதே போல முகமது ரிஸ்வி மற்றும் அவர் குடும்பத்தார் 14 பேரை ஒரு அறையில் சுஜிவம்வி மற்றும் குமாரா ஆகியோர் மறைத்து வைத்தனர்.

இதன் மூலம் அவர்கள் வீட்டருகில் வந்த கும்பல் அந்த வீட்டில் சிங்களர்கள் இருப்பதாக நினைத்து அதை தீவைத்து எரிக்க வில்லை. அவர்களுக்கும் தங்களை காப்பாற்றிய தம்பதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் அமைதியான முறையில் வெசாக் கொண்டாட்டம்!!

வெசாக் கொண்டாட்டம்

வவுனியாவில் அமைதியான முறையில் வெசாக் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. வவுனியா நகரம் முழுவதும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொலிஸார், இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலத்திலிருந்து வவுனியா நகர் வரை கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

விகாரைகள், அரச அலுவலகங்கள், திணைக்களங்கள், வங்கிகள், நிறுவனங்கள் என்பவற்றுக்கு முன்னாலும் வெசாக் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்த பெண்!!

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து..

நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து, அவருடைய வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய் (19) என்கிற ஒன்பது மாத கர்ப்பிணி பெண், கடந்த ஏப்ரல் 23ம் திகதியிலிருந்து மாயமாகியுள்ளார்.

அன்றைய தினம் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போன் செய்த 46 வயது பெண் ஒருவர், தனக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை எந்த அசைவும் இல்லாமல் இருப்பதாக கூறியுள்ளார். உடனே விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர்.

குழந்தை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், போன் செய்த அந்த பெண் குழந்தையின் இறுதிச்சடங்கிற்காக நிதி திரட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது குழந்தையின் டிஎன்ஏ, போன் செய்த பெண்ணுடனும், அவருடைய கணவருடனும் ஒத்துப்போகவில்லை.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதற்காக பொலிஸார் இன்று அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவருடைய வீட்டின் பின் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், விசாரணை மேற்கொண்ட போது சடலமாக கிடந்த பெண் மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய் என்பதை அடையாளம் கண்டுகொண்டனர். உடனே சந்தேகத்தின் பேரில், 46 வயது பெண், அவருடைய கணவர், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிளாரிஸ் ஃபிகியூரோரா (46), அவருடைய கணவர் பியோட்டர் போபாக் (40) மற்றும் மகள் Desiree Figueroa (24) ஆகியோர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து பெண் பொலிஸார் ஒருவர் கூறுகையில், மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய் தாய்மார்களால் இயக்கப்பட்டு வரும் ஒரு பேஸ்புக் குழு மூலம் இந்த பெண்ணை சந்தித்துள்ளார்.

குழந்தைக்கு தேவையான ஆடைகளை தருகிறேன் என அவர் கூறியதை கேட்டு மார்லன் ஓச்சோ-உரோஸ்டெகுய், இங்கு வருகை தந்துள்ளார். முதலில் அவருடைய கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரையும், குழந்தையையும் கொன்று புதைத்த இளம் மனைவி… அதிரவைக்கும் வாக்குமூலம்!!

அதிரவைக்கும் வாக்குமூலம்

தமிழகத்தில் கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவரும் தீபிகா என்ற பெண்ணும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு பிரனீஷ் (1) என்ற குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த 13ம் திகதி முதல் தனது கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என தீபிகா நேற்று பொலிஸ் புகார் அளித்தார். இது தொடர்பாக பொலிசார் தீபிகாவிடம் கூடுதல் விபரங்களை கேட்ட போது அவரின் பேச்சில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் ராஜா மற்றும் பிரனீஷை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் புதைத்ததாக கூற பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடல்களை புதைத்ததாக தீபிகா கூறிய இடத்தில் இருந்து துர்நாற்றம் வரும் நிலையில், அங்கு தோண்டிப் பார்க்க பொலிசார் முடிவுசெய்துள்ளனர்.

இதனிடையே கணவர் நாள்தோறும் குடித்துவிட்டுவந்து சித்திரவதை செய்ததாகவும், இதனால் வேறு வழியின்றி கொலை செய்ததாகவும் தீபிகா வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது. ராஜாவை கொன்ற பிறகு கொலையாளியின் பிள்ளை என பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் குழந்தையையும் கொலை செய்ததாக தீபிகா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

வவுனியா நகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வவுனியா நகரசபையில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் இன்று (18.05.2019) மாலை 5.30 மணிக்கு நகரசபையின் தவிசாளர் ஆர்.கௌதமன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இறுதிப் போரின் போது உயிர்நீத்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து உறவுகளின் ஆத்ம சாந்திக்காக மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.