இலங்கை மக்களுக்கு மிக முக்கிய அறிவுறுத்தல்!!

முக்கிய அறிவுறுத்தல்

கடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவி வரும் காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவ கூடிய சாத்தியம் காணப்படுவதால் மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணம், குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயை பரப்ப கூடிய நுளம்பு வகையின் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை குறிப்பாக பாடசாலை, மதவழிபாட்டு தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களிலேயே காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இலங்கையின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பெண்ணிடம் யாழ். மற்றும் புத்தளம் முகவரிகளில் இரு அடையாள அட்டைகள்!!

புத்தளம் பிரதேச செயலாளர் செயலகத்திற்கு நேற்று மதியம் சென்றிருந்த பெண்ணொருவரிடம் இருந்து இரண்டு அடையாள அட்டைகளை, அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த பெண் தற்போது, புத்தளம் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசித்து வருபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் பிரதேச செயலாளர் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பெண்ணை சோதனையிட்ட போது, ஒரு அடையாள அட்டையைஅந்த பெண் வழங்கியுள்ளார்.

அவர் வைத்திருந்த கை பையை சோதனையிட்ட போது, மற்றுமொரு அடையாள அட்டையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பெண்ணிடம் இருந்த ஒரு அடையாள அட்டை யாழ்ப்பாண முகவரியில் எடுக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய அடையாள அட்டை புத்தளத்தில் உள்ள முகவரியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டைகள் எந்த காரணத்திற்காக எடுக்கப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. சந்தேகநபரான பெண் தொடர்பாக புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

புத்தளம் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அதியுச்ச பாதுகாப்பு!!

அதியுச்ச பாதுகாப்பு

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தைச் சுற்றி பெருமளவிலான இராணுவம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். நல்லூர் ஆலயத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக கூறி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது பரபரப்பான நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழுலுக்குள் அனுமதிக்கப்படாததுடன் பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற அக் கடிதத்தில் எனது கணவரும், வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

குறித்த அநாமதேய கடிதம் தொடர்பில் ஆளுநர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து குறித்த பாதுகாப்பு கெடுபிடிகள் நல்லூர் ஆலய வளாகத்திலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக் கடிதம் தொடர்பிலும் பொலிசார் தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளார்.

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!!

தேர்த் திருவிழா

வவுனியா – குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் இன்று காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பக்தர்கள் சூழ இன்று (17.05.2019) அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காளிகாம்பாள் உள்வீதி வலம் வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன்போது, அடியார்கள் அங்கபிரதட்சனை, காவடிகள் மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.

இதேவேளை, காலை பத்துமணியளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது.

வவுனியாவில் பெண் மீது அங்கசேட்டை செய்த இளைஞன் கைது!!

பெண் மீது அங்கசேட்டை

வவுனியா தர்மலிங்கம் வீதியில் நேற்று இரவு கணவனுடன் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மீது அங்கசேட்டை செய்த இளைஞனை கணவனின் உதவியுடன் பொலிசாரிடம் பிடித்துக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு வவுனியா, தர்மலிங்கம் வீதியில் கணவனுடன் நடந்து சென்ற குடும்பப்பெண் மீது அப்பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் அங்கச் சேட்டை மேற்கொண்டுள்ளார். கணவனுடன் சென்ற பெண் நடந்தவற்றை கணவனுக்குத் தெரியப்படுத்தி குறித்த இளைஞனையும் அடையாளம் காட்டியுள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசாரைக் கண்டதும் இளைஞன் தப்பிக்க முயற்சித்துள்ளார். பொலிசார் இளைஞனை மடக்கிப்பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றிணையத் தொடங்கியுள்ளதையடுத்து நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞனை தொடர்ந்தும் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் நூல்கள் வழங்கி வைப்பு!!

நூல்கள் வழங்கி வைப்பு

வவுனியா பொது நூலகத்திற்கு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தினால் 70 நூல்கள் அடங்கிய தொகுதியொன்று இன்றையதினம் (16.05.2019) காலை 12 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தியாவை அறிவோம் எனும் திட்டத்தின் கீழ் 51 நூல்கள் அடங்கிய தொகுதியொன்றையும் யாழ். இந்தியத் துணைத்தூதகரத்தின் சார்பில் 16 நூல்கள் அடங்கிய தொகுதியொன்றினையும் சேர்த்து மொத்தமாக 70 நூல்கள் அடங்கிய தொகுதியினை வவுனியா பொது நூலகத்தில் வைத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் அவர்களிடம் கையளித்தார்.

அதன் பின்னர் வவுனியா பொது நூலகத்தினையும் பார்வையிட்டார். இந் நிகழ்வில் வவுனியா பொது நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வாறான 70 நூல்கள் அடங்கிய தொகுதி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட நூலகங்களுக்கு இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் பாலச்சந்திரன் அவர்களினால் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாய்க்கு பெயர் வைத்ததற்காக கைதான நபர் : அப்படி என்ன பெயர் வைத்தார் தெரியுமா?

சீனாவில் சட்டத்திற்கு புறம்பான பெயர்களை நாய்களுக்கு வைத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான பேன் என்கிற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய இரு நாய்களுக்கும் `Chengguan, Xieguan’ என பெயர் வைத்துள்ளார்.

அதனை சமூகவலைத்தள பக்கமான WeChat-லும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது பொலிஸாரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, உடனடியாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இளைஞரை கைது செய்தனர்.

சீனாவில் `Chengguan’ என்றால் நகர்ப்புறங்களில் சிறிய குற்றங்களைக் கண்காணிப்பவர்களைக் குறிக்கும். `Xieguan’ என்றால் டிராஃபிக் அதிகாரிகள் போன்றவர்களைக் குறிக்கும்.

நாய்களுக்கு இப்படி பெயர் வைத்து, சட்ட அமலாக்க அதிகாரிகளை அவமானப்படுத்தியதால் தற்போது இளைஞருக்கு 10 நாட்களுக்கு சிறப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள பேன், இது சட்டவிதமானது என்பது எனக்கு தெரியாது. நான் விளையாட்டிற்காக தான் அப்படி வைத்தேன் என கூறியுள்ளார்.

சுருங்கும் சந்திரனின் மேற்பரப்பு : விஞ்ஞானிகள் தகவல்!!

சுருங்கும் சந்திரனின் மேற்பரப்பு

அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், கடந்த 1969 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. அதேபோல், சந்திரன் குறித்து தொடர்ந்து சர்வதேச விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்திரனின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது தெரிய வந்துள்ளது. அதனை வைத்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி சந்திரன் நாளுக்கு நாள் சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரனில் ஏற்படும் நில நடுக்கங்கள், நில அதிர்வுகளே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சந்திரனின் உட்பரப்பில் வெப்பமும், குளிரும் மாறி மாறி நிலவுகிறது. இதுவும் சந்திரன் படிப்படியாக சுருங்கி வருவதற்கு காரணம் என்றும் தாமஸ் வாட்டர்ஸ் என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

அன்று 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியின் இன்றய பரிதாப நிலை : கண்ணீர் சம்பவம்!!

சிறுமியின் பரிதாப நிலை

14 வயதில் முதல் திருமணம், அதன் பின் இரண்டாவது திருமணம், பாலியல் வன்கொடுமை என பல சித்ரவதைகளை அனுபவித்த பெண் இறுதியாக உடம்பில் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயதில், அவரை விட அதிக வயது கொண்ட நபருடன் திருமணம் நடந்துள்ளது. அதற்காக அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு 10,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்க்கை, தாம்பத்தியம் இதுகுறித்த எந்தப் புரிதலும் இல்லாத சிறுமி பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவதாக திருமணம் நடந்துள்ளது. அப்போது அவர் முதல் திருமணத்தை விட, தன்னுடைய இரண்டாம் திருமணத்திலே மிக மோசமான சூழலை சந்தித்துள்ளார். தன்னுடைய இரண்டவது கணவன் ஒரு அரக்கன் அவனும் அவனது நண்பர்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாகவும், சுமார் 20 நபர்களால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அந்த பெண் வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன்; குழந்தைகளைக் கொன்று விடுவேன் என மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். குழந்தை இரண்டாவது கணவரிடம் இருப்பதால் இதை அவர் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளார்.

மூன்று குழந்தைகளில் முதல் குழந்தை முதலாவது கணவருக்கு பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை இரண்டாவது கணவருக்கும் மூன்றாவது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதில் பிறந்துள்ளது.

இதைப் பற்றி எல்லாம் குடும்பத்தினரிடம் கூறிய போதும், எந்த ஒரு பலனும் இல்லை, இதனால் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்த போதும், அங்கும் ஒரு பலன் இல்லை, இதனால் விரக்தியடைந்த அவர் தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

80 சதவீத தீக்கயாங்களுடன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் இதுவரை 14 பேரை கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய ஆசை எல்லாம் இது தான் : கணவர் ராம்கிக்காக இப்போதும் நெகிழும் நிரோஷா!!

நெகிழும் நிரோஷா

தமிழ் சினிமாவில் 90’களில் வெற்றிகரமாக வலம வந்த நடிகைகளில் ராதிகாவின் தங்கையான நிரோஷாவும் ஒருவர், தன்னுடைய முதல் படமான அக்னி நட்சத்திரமே இவரை வேற லெவலில் அறிமுகப்படுத்தியது.

அதன் பின் பாண்டிய நாட்டு தங்கம், இணைந்த கைகள் என நடித்து வந்த இவர், நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும், சீரியல்கள் மற்றும் வெள்ளித்திரையில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் என்னுடைய திரைப்பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துருக்கிறேன்.

ஆனால் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்னுடைய கணவர் ராம்கி தான், நாங்க இருவரும் போராடித்தான், கல்யாணம் செய்துகிட்டோம்.

அது ரொம்பவே சுவாரஸ்யமானது. இப்போவரை நான் நடிச்சுகிட்டிருந்தாலும், சினிமா துறையில் எனக்குப் பெரிசா எந்த ஆசையுமில்லை. ஆனா, என் கணவருக்கு அதிக புகழ் கிடைக்கணும்னு ஆசைப்படறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நல்லூர் ஆலயத்தை தாக்குவோம் : அனாமதேய கடிதத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!!

நல்லூர் ஆலயம்

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு இன்றையதினம் வந்த அனாமதேய கடிதத்தால் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பப்பட்ட குறித்த அனாமதேய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் ஆலயத்தை வரும் 18ஆம் திகதி தாக்கவுள்ளனர் என குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

பிக்பாஸில் எனக்கு நீங்க சொன்னது ஞாபம் இருக்கு : கமலை வெளுத்து வாங்கிய நடிகை காயத்ரி!!

கமலை வெளுத்து வாங்கிய நடிகை காயத்ரி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இதுபோன்ற முட்டாள்தனமான பேச்சுக்களை விட்டு விட்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். கொலைகாரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. தீவிரவாதத்தில் மதத்தை கொண்டு வர வேண்டாம். நீங்கள் திரையுலகில் சிறந்த மனிதர் என்பதில் ஐயம் இல்லை, ஆனால் அரசியல் என்பது மேடை நாடகம் இல்லை.

மோசமான அரசியல்வாதிகளான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா ஆகியோரின் ஆதரவை பெற, மக்களிடம் அனுதாபத்தை பெற அழுவது போன்றவற்றை விட்டுவிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அரசியலில் மேலும் ஒரு நடிகராகிவிடாதீர்கள்.

மேலும் மற்றொரு ட்வீட்டில் அவர் கூறுகையில், ‘வேறு ஒரு மதத்தினர் வசிக்கும் பகுதியில் இந்து மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது ஏன்?. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தானே? இந்துக்களுக்கும் கமல் தீவிரவாதியா?, பயங்கரவாதியா? தவறான வார்த்தைகளை நியாயப்படுத்தாதீர்கள். அவரது வார்த்தை முட்டாள்தனமானது.

இந்து மதத்தை அவமதிப்பது போல கமல், கி.வீரமணி, ஸ்டாலின் ஆகிய சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இது போன்று யாரும் பேச துணிவிருந்ததில்லை. நீங்களும் இதைப் போல செய்ய வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மன்னிப்பு மன்னிக்கறவங்களோட மன்னிப்பு கேக்கறவங்க தான் பெரிய ஆளு, நல்ல மனிதர் என்று நீங்கள் என்னிடம் பலமுறை கூறி இருக்கிறீர்கள்.

இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் ஆகிவிடாது. இதில் நீங்கள் மதத்தினை உள்ளே கொண்டு வராதீர்கள். மாற்றத்தை கொண்டு வருவீர்கள் என்று மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் மற்றவர்களைப் போல நீங்களும் இருப்பதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நான் அவன் இல்லை பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர்!!

ஏமாற்றிய இளைஞர்

இணையத்தின் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிய இளைஞரை ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘நான் அவன் இல்லை’ படத்தில் வரும் காதநாயன், இளம்பெண்கள் பலரையும் ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிடுவான். அந்த படைத்தை போல நிஜ சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினம் பொலிஸாரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், ஜவகர் சுக்ரா (32) என்கிற ஜவகர் பாலகுமாரை நான் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேட்ரிமோனியல் இணையதளத்தில் சந்தித்து காதலித்தேன்.

மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி ஆசை வார்த்தை காட்டியதோடு, தொழில் துவங்குவதற்கு பணம் தேவைப்படுவதாக என்னிடம் இருந்து ரூ. 18 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு தப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் ஜவகரை தொடர்பு கொண்டபோது தொழில் நிமித்தமாக சிங்கப்பூரில் இருக்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் அவருடைய செல்போன் சிக்னல் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை காட்டியுள்ளது. உடனே விரைந்து சென்ற பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல பெண்களை இதுபோல் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

சென்னையை சேர்ந்த மம்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற இளம்பெண் மாப்பிள்ளை வேண்டி 2015ம் ஆண்டு மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அதில் அறிமுகமான ஜவகர் பாலகுமாரின் பேச்சில் மயங்கிய மம்தா தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துள்ளார்.

பின்னர் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு கர்ப்பமடைந்த நிலையில் மம்தாவை தவிக்கவிட்டு, பெங்களூரு செல்வதாக கூறி, அவரிடம் இருந்து ரூ. 6.5 லட்சம் பணமும், ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பெற்றுக்கொண்டு ஜவகர் மாயமாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மம்தா 2017ம் ஆண்டே பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்துள்ளார். இதேபோல 2016ம் ஆண்டு ஆந்திர மாநில மேட்ரிமோனியல் இணையதளத்தில், பார்வதி என்கிற பெண்ணை சந்தித்துள்ளார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது ரூ. 10 லட்சம் பணமும், 20 சவரன் நகையும் வரதட்சணையாக பெற்றதோடு மட்டுமில்லாமல், அதன்பிறகும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு ஜவகர் பாலகுமாரன் குடும்பத்தார் கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளனர்.

மம்தாவிடம் கூறியதை போலவே பார்வதியிடமும் பொய் கூறி ஹோட்டலில் தவிக்கவிட்டு தப்பியுள்ளார். அடுத்து பெங்களூரை சேர்ந்த ஸ்வாதி, அனு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண விழாவில் அனைவர் முன் நடனடமாடிய மனைவி : கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!!

நடனடமாடிய மனைவி

பீகார் மாநிலத்தில் அனைவர் முன்பும் நடனமாடிய மனைவியை, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மாஞ்சி. இவருடைய மனைவி முனியா தேவி கடந்த 10 நாட்களுக்கு முன்பாக, உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மாஞ்சியும் அவருடைய மாமனார் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் கோலாகலமாக நடைபெற்ற திருமண நிகழ்வில், மாஞ்சி அவருடைய மனைவி முனியா தேவி உட்பட உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் முனியா தேவி நடனமாடியுள்ளார். அதனை பார்த்த மாஞ்சி, நடனமாட வேண்டாம் என மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய பேச்சை உதாசீனப்படுத்திவிட்டு, முனியா தேவி தொடர்ந்து நடனமாடியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாஞ்சி, தனியாக தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு போய் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மயக்கமடைந்த முனியாவை அந்த இடத்திலே விட்டு சென்றுள்ளார். இதற்கிடையில் அப்பகுதியாக வந்த ஒருவர், முனியா மயக்கமடைந்து கிடப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது திருமணத்திற்கு வருகை தந்திருந்த அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தலைமறைவாக உள்ள மாஞ்சியை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

வெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன்.. மனைவி, மகளை இழந்துவிட்டேன் என கதறல்!!

மனைவி, மகளை இழந்துவிட்டேன் என கதறல்

கேரளாவில் கடன் வாங்கிய வங்கியில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததால் மானம் போய்விட்டதாக கருதி தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் மனைவி லேகா (42). தம்பதிக்கு வைஷ்ணவி (19) என்ற மகள் உள்ள நிலையில் அவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த சந்திரன் வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.

இந்நிலையில் உடல்நிலை பிரச்சனை காரணமாக வெளிநாட்டு வேலையை ராஜினாமா செய்த சந்திரன் உள்ளூருக்கு வந்து கிடைத்த வேலையை செய்து வந்தார். தான் கட்டி வந்த வீட்டுக்கு ரூ.8 லட்சம் செலுத்தியுள்ள நிலையில், மேலும் ரூ.6.80 லட்சம் செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் சந்திரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் கட்டி வந்த வீட்டையும் அதைச் சுற்றி நிலத்தையும் விற்க ரூ. 24 லட்சத்துக்குப் சந்திரன் பேரம் பேசியுள்ளார். மேலும் மே 14-ம் தேதி கடனை அடைத்து விடுவதாகச் சந்திரனின் மனைவி லேகா வங்கி அதிகாரிகளுக்கு உறுதி அளித்துள்ளார். ஆனால், நிலத்தை நினைத்தது போல விற்க முடியவில்லை. இதனால், வங்கி அதிகாரிகள், லேகாவுக்கு தொடர்ச்சியாகப் போன் செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால், பயந்து போன லேகா மானம் மரியாதை போய் விட்டதாகக் கருதினார். இதையடுத்து லேகா மகள் வைஷ்ணவியுடன் தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

வங்கி அதிகாரிகளின் கெடுபிடியால் தாய், மகள் தற்கொலை செய்ததை அடுத்து குறித்த வங்கி முன்னர் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சந்திரன் கூறுகையில், எங்கள் நிலத்தையும் வீட்டையும் கைப்பற்ற வங்கி அதிகாரிகள் முயன்றார்கள்.

எங்கள் நிலத்தை வாங்க ஒப்புக்கொண்டவர்கள், கடைசி நேரத்தில் முடிவை மாற்றியதால் எங்களால் கடன் பணத்தை தர முடியவில்லை. தற்போது என் மனைவி மகளை இழந்து தவிக்கிறேன் என கதறியபடி கூறியுள்ளார்.

படிப்பதற்காக 16 வயது மகளை வீட்டில் பூட்டிவிட்டு சென்ற பெற்றோர் : பின்னர் நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம்

இந்தியாவில் வீட்டில் வைத்து பெற்றோரால் பூட்டப்பட்ட 16 வயது சிறுமி, தீ விபத்தில் வெளியே வரமுடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் தாதர் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஷரவானி சவான்(16) என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் பெற்றோர் திருமணத்திற்கு கிளம்பியுள்ளனர்.

அப்போது சிறுமி வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல், படிக்க வேண்டும் என்பதற்காக அவரை வீட்டில் ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஷரவானி அறையினுள் பூட்டப்பட்டதால் வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்துள்ளார். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பலத்த தீக்காயங்களுடன் சிறுமி ஷரவானி மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பாதி வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியபோது, சிறுமியின் அறையில் இருந்து மண்ணெண்ணெய் அல்லாத காலி டப்பா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது விபத்து தானா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.