தீக்குளித்து தற்கொலை செய்த இளம்பெண் : அவர் கொடுத்த மரண வாக்குமூலம்.. வீடியோவை பார்த்து அதிர்ந்த உறவினர்கள்!!

அதிர்ந்த உறவினர்கள்

இந்தியாவில் இளம் பெண் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புனேவை சேர்ந்த சேத்தன். இவருக்கும் யோகிதா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். சேத்தன் மற்றும் யோகிதா ஆகிய இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் யோகிதா விஷம் குடித்த நிலையில் பின்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார்.இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட யோகிதாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னர் மருத்துவர் மற்றும் பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், என் கணவரும், மாமனார், மாமியாரும் என்னை அடித்து கொடுமைப்படுத்தினார்கள். இதனால் தான் நான் தீக்குளித்தேன் என கூறினார்.

யோகிதாவின் உறவினர்கள் கூறுகையில், வரதட்சணை கேட்டு யோகிதாவை அவர் கணவர் வீட்டார் வெகு காலமாகவே கொடுமைப்படுத்தி வந்தனர். ஆனால் யோகிதாவுக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மரண வாக்குமூலம் கொடுத்ததை நம்பமுடியவில்லை.

மருத்துவமனையில் யோகிதா சிகிச்சையில் இருக்கும் போது எடுத்த வீடியோவை பொலிசார் எங்களிடம் காட்டிய போது அதிர்ந்துவிட்டோம். ஏனெனில் அவர் பேசும் நிலையிலேயே இல்லை என கண்கூடாக தெரிந்தது என கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக யோகிதாவின் கணவர் சேத்தன் மற்றும் மாமனார், மாமியார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வங்கியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு : தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்த தாய், மகள்!!

பரிதாபமாக உயிரிழந்த தாய், மகள்

கேரளாவில் கடன் கொடுத்த வங்கியிலிருந்து மிரட்டல் விடுத்ததால் 19 வயது மாணவி தனது தாயாருடன் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன் . இவரது மனைவி லதா. இந்த தம்பதிகளுக்கு வைஷ்ணவி என்ற 19 வயது மகள் இருக்கிறார். வைஷ்ணவி தனியார் கல்லூரியில் BBA படித்து வந்தார். இந்நிலையில், வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த சந்திரனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதற்கிடையில், இவர்கள் வீடுகட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஒரே மகள் என்பதால் எல்லாமே மகள் பெயரிலேயே செய்வது தான் தம்பதியின் வழக்கம். அதனால், புதிய வீட்டையும் `வைஷ்ணவி ‘ என்ற பெயரிலேயே ஆசை ஆசையாகக் கட்டி வந்தனர்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார் சந்திரன். இதையறிந்த கனரா வங்கி ஊழியர்கள், மகள் பெயரில் கட்டி வரும் வீட்டுக்கு ரூ.8 லட்சம் செலுத்தியுள்ள நிலையில், மேலும் ரூ.6.80 லட்சம் செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால், சந்திரன் மகள் பெயரில் தாங்கள் கட்டி வந்த வீட்டையும் அதைச் சுற்றி நிலத்தையும் விற்க ரூ. 24 லட்சத்துக்குப் பேரம் பேசியுள்ளார். தங்களுக்குச் சொந்தமான நிலத்தை விற்று மே 14-ம் தேதி கடனை அடைத்து விடுவதாகச் சந்திரனின் மனைவி லேகா வங்கி அதிகாரிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், சொன்னபடி, மே. 14 ஆம் திகதி அவர்களால் குறித்த நிலத்தை விற்று பணம் கொடுக்க முடியவிலை. இதனால், வங்கி ஊழியர்கள் தங்களின் சொத்துக்களை கைப்பற்றப் போவதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாகவும் போன் செய்து லதாவை மிரட்டியுள்ளனர்.

இதனால், மிகுந்த மனவேதனையிலிருந்த லதா தனது மகள் வைஷ்ணவியுடன் தீக்குளித்து தற்கொலை முயற்சித்துள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் லதாவையும், வைஷ்ணவியையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

வழியிலேயே வைஷ்ணவி மரணமடைந்தார். லேகா 90 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.வங்கி அதிகாரிகள் செய்த டார்ச்சரால் தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்தார் இந்தியப் பெண்!!

உலக சாதனை

இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஆரோயி பண்டிட், எடை குறைந்த சிறிய ரக விளையாட்டு விமானம் மூலம் தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

மும்பையை சேர்ந்த ஆரோயி பண்டிட், 2018 யூலை 30ம் திகதி தனது நண்பன் கீதீர் மிசுகிட்டாவுடன் ஓர் ஆண்டு உலக சுற்றுப்பயணத்தை தொடங்கி தொடர்ந்து பறந்து வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மே 13ம் திகதி மஹி என்ற சிறிய ரக விமானம் மூலம் தனியாக பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டு ஆரோயி, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து வழியாக அட்லாண்டிக் பெருங்கடலை தாண்டி சுமார் 3000 கி.மீ கடந்து மே 14ம் திகதி கனடாவின் இகாலுட் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

இதன் மூலம் சிறய ரக விமானம் மூலம் ஆட்லாண்டிக் பெருங்கடலை கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார் ஆரோயி பண்டிட். மேலும், கிரீன்லாந்து மேல் தனியாக பறந்த முதல் பெண் விமானி என்ற சாதனையையும் ஆரோயி படைத்துள்ளார்.

ஜூலை 30ம் திகதி நாடு திரும்பவுள்ள ஆரோயி மற்றும் கீதீர் மிசுகிட்டா இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார்கள் என கூறப்படுகிறது.

சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல் : இளைஞனைக் காப்பாற்றிய மனிதம்!!

இளைஞனைக் காப்பாற்றிய மனிதம்

களனி விகாரைக்கு அருகில் இன்று பிற்பகல் விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளில் பயணித்த முஸ்லிம் இளைஞரொருவர் வீதியோரத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதி சிங்கள மக்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கியுள்ளதுடன், அவசர அம்பியுலன்ஸ் சேவைக்கு தொடர்பை ஏற்டுத்தி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த மக்கள் அந்த இளைஞனுக்கு உதவியுள்ளமையானது, ஜாதி, மத பேதம் தாண்டிய மனிதம் இன்னமும் இலங்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

கடந்த உயர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டின் நல்லிணக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சில விசமிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்படி சம்பவமானது நல்லதொரு பாடத்தை நாட்டு மக்களுக்கு புகட்டியுள்ளதுடன், இன கலவரத்தை தோற்றுவிக்க முயற்சிக்கும் மனித நேயமற்ற விசமிகளுக்கு இலங்கையில் இடமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது.

கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீச்சு!!

செருப்பு வீச்சு

மதுரை திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நோக்கி காலணி வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதம் குறித்து பேசினார்.

அதில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனவும், அவர் தேச தந்தை காந்தியை படுகொலைச் செய்த நாதுராம் கோட்சே என கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரதமர் மோடி துவங்கி சினிமா பிரபலங்கள் பலரும் அவருடைய கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதனால் 2 நாட்களாக கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடாமல் இருந்தார். அவருடைய வீட்டிற்கும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர். இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் தான் பேசியது குறித்து விளக்கம் கொடுத்தார்.

அப்போது பாஜக கட்சியை சேர்ந்த 10க்கு ம் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென கமல்ஹாசனை நோக்கி காலனியை வீசியெறிந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் வயதில் பரிதாபமாக உயிரிழந்த நாட்டுக்காக பெருமை சேர்த்த தமிழர்!!

பெருமை சேர்த்த தமிழர்

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழரான நிச்சல் வீரர் பாலகிருஷ்ணன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக சென்னை வந்த அவர், தனது தோழி ஒருவருடன் காரில் சென்றுள்ளார். அரும்பாக்கம் வழியாக வீடு திரும்பிய நிலையில், லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அவரது கார் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது.

இந்த சம்பவத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அண்ணாநகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தாயும் மகளும் பலி!!

தாயும் மகளும் பலி

இரத்தினபுரி – எகொடமல்வல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது, இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எகொடமல்வல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய லாலனி புஷ்பலதா மற்றும் அவரது தாயான 75 வயதுடைய ​கே.நந்தவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த மகளோடு தகாத உறவினைப் பேணி வந்த நபரொருவரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் பதற்றம் : கைக்குண்டுடன் நபர் கைது!!

கைக்குண்டுடன் நபர் கைது

மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று இரவு குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த தந்தை கைக்குண்டுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்குடும்பத்திலுள்ள தந்தை மகனுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின்னர் மறைத்து வைக்கப்பட்ட புதிய கைக்குண்டு ஒன்றினை எடுத்து வீட்டுக்குச் சென்று வெடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் இச்சம்பவத்ததை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் உடனடியாக மடு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் தேடுதல் சோதனை மேற்கொண்ட பாலம்பிட்டி 317ஆவது படையினர் கைக்குண்டை எடுத்து வந்த 55வயதுடைய பெரியபண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பத்தையடுத்து பெரியபண்டிவிரிசான் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் பொலிசார் படையினர் இணைந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு வவுனியாவிலுள்ள குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர் ஹெரோயினுடன் கைது!!

ஹெரோயினுடன் கைது

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் நேற்று இரவு ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கடந்த மாதம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தண்டனை பெற்றுள்ளார் என்பது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவு பொலிசார் நேற்று இரவு பண்டாரிகுளம் பகுதியில் சென்ற நபர் ஒருவரை சோதனைக்குட்படுத்தியபோது அவரது உடமையிலிருந்து ஒரு கிராம் 240 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்தில் வைத்து கடந்த மாதம் கேரள கஞ்சா பொதியுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தண்டனை பெற்றுள்ளார் என்பது பொலிசாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை : பொலிஸார் அறிவிப்பு!!

சஹ்ரானின் மகள்

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 4 வயதான மகள் தாயுடன் குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

எனினும் இதிலிருந்து தப்பித்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

பயங்கரவாத அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்ற இலங்கையர் : தந்தை வெளிப்படுத்தும் இரகசியங்கள்!!

சிரியாவுக்கு சென்ற இலங்கையர்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய சிரியாவுக்கு சென்ற இலங்கையரான மொஹமட் முஹூசித் இசாக் அஹமட் என்பவரின் தந்தை பயங்கரவாத விசாரணை பிரிவில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். இந்த விடயத்தை பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில் மேலும்,

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பில் இருக்கும் மொஹமட் முஹூசித் இசாக் அஹமட் என்ற எனது மகன், தனது மகளான அஸ்மாவுடன் இலங்கைக்கு வந்த போது பொதி ஒன்றை என்னிடம் கொடுத்தார். இதன்போது மொஹமட் அருஸ் மொஹமட் சுபைஹிர் சிரியாவில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வட்ஸ் அப் மூலம் என்னை தொடர்பு கொண்டு, அறிவிக்கும் வரை அந்த பொதியை கவனமாக வைத்திருக்குமாறு கூறியிருந்தார்.

இந்த தொலைபேசி அழைப்பு கிடைத்து சில தினங்களுக்கு பின் முகத்தை முற்றாக மூடிய முஸ்லிம் பெண் ஒருவர் வீட்டுக்கு வந்து, சிரியாவில் உள்ள மொஹமட் அருஸ் மொஹமட் சுபைஹிருக்கு வழங்குமாறு மற்றுமொரு பொதியை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து நான் மற்றைய பொதி இருந்த இடத்தில் இந்த பொதியையும் வைத்திருந்தேன். இதன் பின்னர் என்னை தொடர்பு கொண்ட சுபைஹிர், பொதிகளில் உள்ள பணத்தை அமெரிக்க டொலர்களாக மாற்றி, அறிவிக்கும் வரை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறினார்.

அந்த பொதிகளில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் இருந்தது. வெள்ளவத்தையில் உள்ள மூன்று வெளிநாட்டு நாணயமாற்று நிலையங்களுக்கு சென்று பணத்தை டொலர்களாக மாற்றி, வீட்டில் படுக்கை அறையில் உள்ள அலுமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்தேன் என மொஹமட் முஹூசித் இசாக் அஹமட் என்பவரின் தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி முறைப்பாட்டுக்கு அமைய முறைப்பாடு செய்த நபரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்த பின், 23,500 அமெரிக்க டொலர் பணத்தை கைப்பற்றியதாகவும் இந்த பணம் சட்டரீதியான பணமாக என்பதை கண்டறிய விசாரணை நடத்துமாறு மத்திய வங்கிக்கு உத்தரவிடுமாறும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பணம் சட்டரீதியான அமெரிக்க டொலர்களான என்பது சம்பந்தமான விசாரணை நடத்தி, அறிக்கை ஒன்றை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதி முகாமையாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் குகனின் 20 ஆவது நினைவு தினம்!!

20 ஆவது நினைவு தினம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜா (குகனின்) 20வது நினைவு தினம் இன்று (15.05.2019) காலை வவுனியா வைரவப்புளிங்குளம் யங் ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோரோதாரலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்,

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபைத் தலைவர் து. நடராஜசிங்கம் (ரவி) பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், கட்சியின் தோழர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் மெழுவர்த்தியும் ஏற்றினார்கள்.

இலங்கைக்கு தேனிலவு வந்த போது உயிரிழந்த லண்டன் மனைவி : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

உயிரிழந்த லண்டன் மனைவி

இலங்கைக்கு தேனிலவு வந்த இடத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்ல அவரின் கணவருக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனை சேர்ந்தவர் கிளன் சந்தாரியா (33) இவர் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான உஷிலா படேல் (31) என்பவரும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் இலங்கைக்கு தேனிலவு வந்தனர். இருவரும் கடந்த 23ஆம் திகதி இலங்கையில் உள்ள காலி அமாரி ஹொட்டலுக்கு வந்தனர்.

கடந்த 25ஆம் திகதி உணவருந்திய தம்பதியினர் இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதில் உஷிலா படேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து உஷிலா மரணத்தில் அவர் கணவருக்கு தொடர்பிருக்கலாம் என்ற அடிப்படையில் அவர் லண்டனுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கிளம் லண்டனுக்கு செல்ல தற்போது காலி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது, உஷிலா மரணத்தில் கிளமுக்கு தொடர்பிருக்காது என நீதிமன்றம் நினைப்பதால் அவர் லண்டனுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வியாழன் அன்று கிளம் லண்டனுக்கு கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான தடவியல் பரிசோதனை அறிக்கைகள் இன்று கிடைக்கவில்லை. எனவே ஆகஸ்ட் 7 வரை விசாரணையின் நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பில் உடன் பிறந்தவர்களை பறிகொடுத்த சகோதரர்… அவருக்கு இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு தெரியுமா?

இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு தெரியுமா?

இலங்கை குண்டு வெடிப்பில் உடன் பிறந்தவர்களை பறிகொடுத்த சகோதரர், குடும்பத்தினருக்காக நிதி திரட்டி வருவதாகவும், அதற்கு உதவும் படியும் கேட்டுள்ளார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இருக்கும் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலினால் 253-பேர் பலியாகினர்.

இதில் 40-பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த Amelie(15) மற்றும் Daniel Linsey(19) ஆகியோர் பலியாகினர். இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் Amelie(15) மற்றும் Daniel Linsey(19)-ஐ பறிகொடுத்த அவர்களின் சகோதரர் குடும்பத்தினருக்காக நிதி திரட்டி வருகிறார். 500,000 டொலர்கள் வரை நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாகவும், தற்போது வரை £78,000 டொலர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், அடுத்த இரு வாரங்களுக்குள் வழமைக்குத் திரும்பும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்புக்காக அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோர விபத்தில் மூவர் பலி!!

மூவர் பலி

கெக்கிராவை மடாடுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிறபகல் இடம்பெற்றதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் ஒன்றும் எதிரே வந்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் , குறித்த வேனில் பயணித்த குழுவினர் மாத்தளை – கவடயாமுன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.