யாழில் ஆசிரியை ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். அராலி வள்ளியம்மை வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் இளம் ஆசிரியை ஒருவரே தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய இளம்பெண் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீண்ட நாட்களாக குற்றவாளியை பொலிசார் தேடி வந்த நிலையில், அவரது காதலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் சர்ரே பகுதியில் வசிக்கும் பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி என்னும் கிரண் தேசி (19) கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ம் திகதி வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றிருக்கிறார். அதற்குப்பின் அவர் வீடு திரும்பவில்லை.
பின்னர் எரிந்த நிலையில் இருந்த அவரது காருக்குள் உயிரற்ற நிலையில் தேசியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் தேசி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு பொலிசார் வந்தனர்.
குற்றவாளியை நீண்ட நாட்களாக பொலிசார் தேடி வந்த நிலையில், தேசியின் காதலரான ஹர்ஜோத் சிங் டியோ (21) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கியதையடுத்து டியோவை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அதை தற்போது வெளியிட இயலாது என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேலும் சிலருக்கும் கொலை தொடர்பான முக்கிய தகவல்கள் தெரியும் என்றும் தாங்கள் நம்புவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வான்கூவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட டியோ காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்தியாவில் சாக்குமூட்டையில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மங்களூர் நகரில் இரு தினங்களுக்கு முன்னர் வெவ்வேறு இடங்களில் சாக்குமூட்டைகளில் பெண்ணின் உடல் துண்டுதுண்டாக மீட்கப்பட்டது.
இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஸ்ரீமதி ஷெட்டி என தெரியவந்தது. பொலிசார் தற்போது ஷெட்டியின் இருசக்கர வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். வாகனம் முழுவதும் ரத்தகறை இருந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.
அந்த வாகனத்தை பயன்படுத்தியே கொலையாளி ஷெட்டியின் உடல்பாகங்களை தனித்தனியாக போட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். பொலிசார் கூறுகையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுதீப் என்பவரை ஷெட்டி திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் சுதீப்பின் நடத்தை பிடிக்காமல் அவரிடம் ஷெட்டி விவாகரத்து கோரினார். சம்பவம் தொடர்பாக சுதீப் மற்றும் 4 சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரித்து வருகிறோம்.
சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் வழக்கமாக காரில் தனது மின்சார பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு செல்லும் ஷெட்டி சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்துள்ளது. வெகுவிரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என கூறியுள்ளனர்.
இந்தியாவில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் இளம்பெண் வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
அப்படி மேற்கு வங்கத்தில் உள்ள கோபிபல்லவ்பூர் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஓட்டு போட ஞாயிறு காலை பசந்தி என்ற இளம் பெண் வீட்டிலிருந்து கிளம்பி சென்றார்.
ஆனால் அதற்கு முன்னரே மருத்துவமனையில் இருந்த அவரது கணவர் ராமன் உயிரிழந்துள்ளார், தான் விதவையாகி விட்டோம் என்பதை அறியாத பசந்தி ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வந்தபின்னர் தான் கணவர் இறந்தது அவருக்கு தெரியவந்தது.
இதன் பின்னர் மருத்துவமனையின் பிணவறைக்கு சென்று கணவரின் சடலத்தை பார்த்து பசந்தி கதறி அழுதார். இது குறித்து பசந்தியின் மைத்துனர் ஹீரன் கூறுகையில், ராமன் பாஜக கட்சியில் உள்ளார், அவர் வாக்குச்சாவடி பணியில் சனிக்கிழமை இரவு இருந்த போது மர்ம நபர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதன்பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், இதையடுத்தே அவர் உயிரிழந்தார் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், ராமன் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பெருமூளையில் காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது, இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.
இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தண்டித்த குடும்பம்
பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஒருவரை சவுதி அரேபிய குடும்பம் ஒன்று கொளுத்தும் வெயிலில் மரத்தில் கட்டிவைத்து தண்டனை அளித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள பணக்கார குடும்பம் ஒன்றில் கடந்த பல மாதங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார் 26 வயதான அகோஸ்டா பரூலோ. சம்பவத்தன்று விலை உயர்ந்த மரச்சாமான்களை அவர் கொளுத்தும் வெயிலில் விட்டுவிட்டு வேறு பணிகளில் மும்முரமாகியுள்ளார். இது அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அகோஸ்டாவை கொளுத்தும் வெயிலில் மரத்தில் கட்டிவைத்து தண்டனை அளித்துள்ளனர்.
இதை அவருடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டவர் புகைப்படமாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சகம் தலையிட்டு, அவரை உடனடியாக தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவர் பிலிப்பைன்ஸ் திருபியதாகவும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 2.3 மில்லியன் பிலிப்பைன்ஸ் மக்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சரிபாதி பெண்கள் என கூறப்படுகிறது
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் வஜிர அபேவர்தன சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.
வெசாக் விடுமுறை சனிக்கிழமை வருவதனால் திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திர்வரும் திங்கட்கிழமை (20) அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் வஜிர அபேவர்தன சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான இலத்திரனியல் பொருட்களுடன் ஜேர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவர் இன்று காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அவரது உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இராணுவத்தினரால் இலத்திரனியல் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேகநபரான அந்த பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்னார் – பேசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பேசாலை 7ஆம் வட்டாரம் யூட் வீதியில் வசித்து வந்த பிறின்ஸ்டன் ரயனா என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையின் பின் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுவனால் எழுதி வைக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது கிடைத்துள்ளது.
குறித்த கடிதம் கடந்த 08.05.2019 அன்று திகதி இடப்பட்டு எழுதப்பட்டுள்ளதோடு, தனக்கும் தனது தந்தைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், தான் கேட்பவை எவற்றையும் அவர் வாங்கி தருவது இல்லை எனவும், தந்தை 2ஆம் திருமணம் முடித்தது தனக்கு பிடிக்கவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியா சென்றால் அங்கே தன்னை நன்றாக கவனிப்பார்கள் எனவும், தான் இந்தியா செல்வதாகவும் உயிரிழந்த சிறுவனால் எழுதப்பட்டதாக கருதப்படும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுவனின் தாயார் இறந்த நிலையில் அவனுடைய தந்தை மறுமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த சிறுவனின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களின் போது இராணுவ சீருடையில் வந்த நபர் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையை இராணுவ அதிகாரி வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறித்த நபர் உண்மையில் இராணுவ வீரரா? அல்லது திட்டமிட்ட வகையில் வேறு நபர்கள் அந்த ஆடையில் வந்தார்களா என்பது குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவ உடையில் துப்பாக்கியுடன் வேடிக்கை பார்க்கும் நபரின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் இராணுவ சிப்பாய் என உறுதி செய்யப்பட்டால் அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான காணொளிகள் இருப்பின் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் பாதுகாப்பு பிரிவிடம் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்ட போதும் VPN செயலி பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இவ்வாறு இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறிய மூவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். எனினும் பொலிஸாரினால் முஸ்லிம் மக்களிடம் இலஞ்சம் பெறுவதாகவும், அதனை காட்டி கொடுப்பதாகவும் பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தகவல் பரப்பப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மாத்தறை பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமகாலத்தில் பேஸ்புக் உட்பட சமூகவலைத்தங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் VPN பயன்படுத்தி இந்த சந்தேக நபர்கள் இந்த தகவலை அனுப்பியுள்ளனர்.
இதன் மூலம் இனங்களுக்கு இடையில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கும், பொலிஸார் மற்றும் பொது மக்களுக்கு இடையில் மோதல் ஏற்படுத்துவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 34, 29, 27 வயதுடைய மாத்ததறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். VPN பயன்படுத்தி தவறான செய்திகளை பரப்புவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்ம பொதியொன்று
காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் காணப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலை அண்மித்துள்ள பாலத்தின் அருகே கைவிடப்பட்ட நிலையில் மர்ம பொதி ஒன்று காணப்படுவதாக நேற்று (14.05) இரவு பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் மர்மப் பொதியினை சோதனையிட்டுள்ளார்கள்.
இதனால் அப்பகுதி வீதிகளும் முடக்கப்பட்டு இராணுவத்தினரால் கடும் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாளம்பைக்குளம் பகுதியில் பதற்றநிலை ஏற்ப்பட்டுள்ளது. சோதனைக்குட்படுத்தப்பட்ட மர்ம பொதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்து நான்கு கூரிய வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று இரவு பொலிஸாரும் இராணுவத்தினரும் அப் பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தார்கள் எனினும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் நாளைய தினம் அதிகளவான வெப்பமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இன்று வெப்பமான வானிலை நிலவக்கூடும். இதன்காரணமாக, நீர்வெளியேறுதல், அதிக களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம் – பிரியா குடும்பம் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு சிறு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
எனினும், இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், சட்டநடவடிக்கை காரணமாக அந்த நடவடிக்கை இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். இதையடுத்து நடேசலிங்கம் – பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21ம் திகதி மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது.
எனினும், நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது. ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இறுதி முயற்சியாக உயர்நீதிமன்றில் இக்குடும்பம் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இக்குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி நாளை மெல்பன் state library முன்பாக பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தயாராவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து நேற்று காலை முதல் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு உதவிகளை வழங்கினார் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவரை இந்தியா மூன்று வருடங்களாக கண்காணித்து வந்துள்ளது.
ரொய்ட்டர் செய்தி சேவையை மேற்கோள்காட்டி colombo gazette வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இலங்கையில், தாக்குதல்களை மேற்கொண்ட குழுக்களுக்கு இடையில் தொடர்பாளராக 24 வயதுடைய ஆதில் அனீஸ் செயற்பட்டு வந்தார் என சந்தேகிப்பதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் அந்த இளைஞருக்கு இருந்த தொடர்பு குறித்து இந்தியா கண்காணித்து வந்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த தகவல்களை இலங்கை அதிகாரிகள் பகிரங்கப்படுத்தவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை உறுதி செய்துள்ளார், கடந்த 25ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரியொருவரும் குஜராத்தை சேர்ந்த அதிகாரியொருவரும் இந்த நபர் குறித்து இலங்கைக்கு தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், கைதுசெய்யப்பட்டுள்ள நபர் பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் அரசியல் பயின்று, பின்னர் கணணித்துறையில் மேற்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ஜவேரி பகுதியில் இரவில் கீழே சிந்தும் தங்கங்கள், வடிகால் வழியாக வெளியேறும் தங்கத்துகள்களை கண்டுபிடிக்கும் வேலையை ஒரு கும்பல் செய்து வருவது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது ஜவேரி பஜார் பகுதி. இந்தப் பகுதி தான், இந்தியாவுக்குத் தேவையான 60 சதவிகிதம் தங்கத்தைத் தருகிறது. இங்கு 7000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளும், தங்கப் பட்டறைகளும் உள்ளன.
இங்கு ஒருநாள் வர்த்தகம் ஒரு கோடியை தாண்டுமாம். இந்த தங்கப் பட்டறைகளில் பணிபுரியும் நகை ஆசாரிகள், தங்களின் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லும்போது, அவர்களின் சட்டை, தலைமுடி ஆகியவற்றில் இருக்கும் தங்கத்துகள்கள், அவர்கள் வெளியில் வரும்போது கடையின் வாசலில் வெளியேறிவிடும்.
சிலர், வேலை முடிந்ததும் தங்களின் கை கால்களைச் சுத்தம்செய்கையிலும் தங்கத்துகள்கள் வடிகால் வழியாக வெளியேறுகிறது. அவற்றைக் கண்டுபிடிக்கும் வேலையைத் நடு இரவில் செய்கிறது இந்தக் கும்பல்.
இதற்காக கத்தி, பிரஷ், துடைப்பம் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இது குறித்து ஆரிப் (17) என்ற சிறுவன் கூறுகையில், முதலில், மண்ணில் இருக்கும் தங்கத்தைப் பிரிக்க, பாயும் நீரில் கழுவுவோம். தங்கத்தை கண்களால் பார்க்க முடிந்தாலும் அவற்றைக் கையில் எடுக்க முடியாது.
பிறகு, மண்ணில் உள்ள இரும்புத் துகள்களை காந்தத்தின் உதவியுடன் பிரிப்போம். இறுதியில் உள்ள கலவையுடன் பாதரசத்தைக் கலந்து சூடேற்றுவோம். அதன் மூலம் தங்கம் தனியாகப் பிரிந்துவிடும் மொத்தமாக ஒரு நாளுக்கு 200 முதல் 1500 ரூபாய் வரை கிடைக்கும். எங்களுக்கு அதிர்ஷ்ட நாளாக இருந்தால் லட்சங்களிலும் பணம் கிடைக்கும் என கூறியுள்ளார்.