செல்ஃபி மோகத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!

கர்நாடக மாநிலத்தில் சூடசந்திரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நந்தினி . இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு நந்தினி தனது தோழிகளுடன் சுற்றிப்பார்க்க சென்றிருந்தார். 13 வது மாடிக்கு சென்ற அவர்கள் செல்பி எடுத்து உற்சாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

நந்தினி தனது செல்போனில் செல்பி புகைப்படம் எடுப்பதற்காக தடுப்பு சுவர் இல்லாத மாடியில் விளிம்பின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். திடீரென கால் தடுமாறியதால் கீழே விழுந்தார்.

13-வது மாடியிலிருந்து கீழே விழுந்த நந்தினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். ரத்த வெள்ளத்தில் கிடந்த நந்தினியை கண்ட தோழிகள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரது பெற்றோருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் நந்தினி செல்பி எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது தடுமாறியதால் கீழே விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

 

தனது சிறுநீரால் தினமும் கண்களை கழுவும் பெண் : இணையவாசிகள் அதிர்ச்சி!!

இந்தியாவின் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்களை சிறுநீரால் கழுவும் காணொளி வெளியிட்டிருந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் விசனங்களை வெளியுட்டுள்ளனர்.

புனேவைச் சேர்ந்தவர் நூபுர் பிட்டி என்பவரே தனது இன்ஸ்டாவில் , தான் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Urine Eye Wash — Nature’s Own Medicine’ என்ற தலைப்பில் காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது, தினந்தோறும் காலை நேரத்தில் எனது சிறுநீரில் கண்களை கழுவுவதால் கண்ணில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் மற்றும் சிவத்தல் உள்ளிட்ட பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது

என்றும் இது இயற்கை மற்றும் மாற்று சிகிச்சைமுறை மீதான தனது நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கண் பராமரிப்புக்கு சிறுநீர் பாதுகாப்பானது அல்ல. இது போன்ற செயல் கண் எரிச்சல், தொற்று மற்றும் பார்வை இழப்பு உள்ளிட்ட தீங்குகளை ஏற்படுத்தும் என்றும், இந்த மாதிரி முட்டாள் தனமாக செயப்ல்படாதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கியத் தகவல்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(27) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 995,802 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 35,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 281,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 32,210 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் (22 karat gold 8 grams) விலையானது 257,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 30,740 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams)245,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 266,000 ரூபாவாகும்.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 246,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களுக்கு ஏற்படப்போகும் கொடிய ஆபத்து : உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள பாபா வங்காவின் கணிப்பு!!

2088ஆம் ஆண்டில், பூமியில் ஒரு அறியப்படாத வைரஸ் பரவும் எனவும் அந்த வைரஸ் காரணமாக மனிதர்கள் விரைவாக வயதானவர்களான தோற்றத்திற்கு மாறி விடுவார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில், துல்லியமாக உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன்னமே கணித்துள்ளார், அவை நிறைவேறியும் இருக்கின்றன.

இந்நிலையில், தற்போது அவர் கணித்திருந்த ஒரு வைரஸ் நோய்த்தாக்கம் பற்றிய கணிப்பு சமூக ஊடகங்களில் மிக பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

அடுத்த 6 தசாப்தங்களுக்குப் பிறகு ஏற்படக் கூடிய இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவர்கள் என பாபா வங்காவின் கணிப்பு தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்த வைரஸ் பற்றிய பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகலாம், ஆனால் இன்றைய மாறிவரும் காலநிலை,

உயிரியல் போர் மற்றும் ஆய்வகங்களில் வைரஸ்கள் உருவாக்கப்படும் சூழலில் இது மிகவும் கவலைக்குரிய விடயமாக மாறக்கூடும் என பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

பாபா வங்காவின் முழுப் பெயர் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா என்பதாகும், அவர் 1911இல் பிறந்துள்ளார்.

அவர் மேற்குலகின் பால்கன் நோஸ்ட்ராடாமஸ் என்றும் கருதப்படுகிறார். பாபா வங்கா குழந்தை பருவத்தில் ஒரு விபத்தில் தனது பார்வையை இழந்ததாகவும், அதன் பிறகு எதிர்காலத்தைப் பார்க்கும் திறனைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பாபா வங்காவின் பல கணிப்புகள் பெருமளவில் உண்மையாகியுள்ளதாகவும் அவரின் கணிப்புகளில் 9/11 தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, பராக் ஒபாமா ஜனாதிபதியானமை மற்றும் இந்திரா காந்தியின் படுகொலை ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் : எரிந்த நிலையில் சடலம் மீட்பு!!

குருநாகல் பிரதேசத்தில் முடி வெட்ட சென்ற ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிந்தவர் குருநாகல், தொரட்டியாவ பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மதியம் தொழிலதிபர் முடி வெட்டப் போவதாகக் கூறி ஜீப்பில் வீட்டை விட்டுச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது கையடக்க தொலைபேசியும் இயங்காமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் கட்டம்புவ பகுதியில் கால்நடைகளை பார்க்கச் சென்ற ஒருவர், ஜீப்பில் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய, மேலும் விசாரணையில், வாகனமும் அந்த நபர் காணாமல் போன தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கு இந்த விடயம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தில் உயிரிழந்து கிடந்தவர் தனது கணவர் என மனைவியால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மர்மான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தந்தையை பார்க்க சென்ற இளைஞனுக்கு நடந்த துயரம் : சோகத்தில் தவிக்கும் குடும்பம்!!

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இணுவில் மேற்கைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞருக்கு வலிப்பு வருவதாகவும் நேற்று முன்தினம் (25) பிற்பகல் தந்தையாரின் மரக்காலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் தெல்லிப்பளையில் உள்ள அவர்களின் பிறிதொரு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன். மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பகிடிவதையால் பல்கலை மாணவன் உயிரிழப்பு : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது

செய்யப்பட்ட 11 மாணவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11 மாணவர்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேரூந்து விபத்து!!

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதியின் நேர்மையான செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

42,100 ரூபாய் பணத்தோடு தவறவிட்ட பணப்பையை பாதுகாப்பாக வைத்திருந்து இரண்டு மாதங்களின் பின்னர் பாதுகாப்பாக பணத்தொகையுடன் பயணியிடம் ஹட்டன்- கொழும்பு தனியார் பஸ் சாரதி கையளித்துள்ளார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது பஸ்ஸில் கொழும்பிலிருந்து ஹட்டன் வந்த பயணியொருவர் பொதியொன்றை தவற விட்டு சென்றுள்ளார்.

தேடி வருவார் என பாதுகாப்பாக பொதியை வைத்திருந்த பஸ் சாரதி பொதியை, பிரித்து பார்த்தபோது அதில் ஒருத்தொகை பணமும் மருத்துவ சிகிச்சைக்கான அட்டை உள்ளிட்ட ஆவணங்கள்

இருப்பதை கண்டு உடனடியாக ஹட்டன் பஸ் தரிப்பிட நிலைய அதிகாரிகளிடம் உரியவரை தேடி ஒப்படைக்குமாறு பொதியை கையளித்துள்ளார்.

அதன் பின்னர் அதிகாரிகள் பொதியின் உரிமையாளரை தேடி வரவழைத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் முன்னிலையில் 42100 ரூபாய் பணத்தையும் ஆவணங்களையும் நேற்று (26) கையளித்துள்ளனர்.

ஹட்டன்- கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸின் உரிமையாளரும் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை பலரும் பாராட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த ஆசிரியர் நேற்றையதினம் பாடசாலையில் இருந்து வரும்போது மருதனார்மடம் பகுதியில் வைத்து முகத்தை மூடி துணி கட்டியிருந்த நபர் ஒருவர் அவரது தங்கச் சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் நேற்றையதினமே 26 வயதுடைய குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஹெரோயினுடன் கைதாகி 8 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கைதான மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வடக்கு பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி : தேசிய மக்கள் சக்தி வெளிநடப்பு!!

வவுனியா வடக்கு பிரதேசசபையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசசபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (27.06.2025) மாலை நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் ஒருவரை பிரேரிக்குமாறு கோரப்பட்ட நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் தி.கிருஸ்ணவேணி பிரேரிக்கப்பட்டார். தேசிய மக்கள் சக்தி சார்பில் ஞானமுத்து அகிலன் பிரேரிக்கபட்டார்.

தவிசாளராக இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டமையால் வாக்கெடுப்பின் மூலம் அதனை தெரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் வாக்கெடுப்பை இரகசியமாகவா, அல்லது பகிரங்கமாக நடாத்துவது என ஆணையாளரால் கோரப்பட்டது.

இதன்போது தெரிவுகளை ரகசியமாக நடாத்துமாறு தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசியமக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சியின் இரு உறுப்பினர்கள் என 8 பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபையில் மீதம் 15 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தெரிவுகளை பகிரங்கமாக நடாத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடாத்தப்பட்டது.

அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட கிருஸ்ணவேணிக்கு 15 வாக்குகள் ஆதரவாக கிடைக்கப்பெற்றது.

அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் 2 வாக்குகளும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 4 வாக்குகளும்,சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்குமாக 15 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.

வெற்றிபெறுவதற்கு 12 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 15 வாக்குகள் கிடைக்கப்பெற்ற கிருஸ்ணவேணி புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதனின் பெயர் பிரேரிக்கப்பட்டது. உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் சஞ்சுதன் போட்டியின்றி உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஜனநாயகம் மீறப்படுகின்றது : வெளிநடப்பு செய்த தேசிய மக்கள் சக்தி!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுகளின் போது ஜனநாயகம் மீறப்படுவதாக குற்றம்சாட்டி தேசியமக்கள் சக்தி உறுப்பினர்கள் பிரதேசசபையின் முதல் அமர்வில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.

வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று (27.06.2025)நடைபெற்றது.

இதன்போது சபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சி சார்பில் பா.பாலேந்திரனின் பெயர் பிரேரிக்கப்பட்ட நிலையில் தேசியமக்கள் சக்தி சார்பில் ராஜலிங்கம் கார்த்தீபனின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

தவிசாளராக இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டமையால் வாக்கெடுப்பின் மூலம் அதனை தெரிவதற்கான நடவடிக்கை ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் வாக்கெடுப்பை இரகசியமாகவா, அல்லது பகிரங்கமாக நடாத்துவது என அவரால் கோரப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர் கார்த்தீபன் தெரிவுகளை ரகசியமாக மாத்திரம் நடாத்துமாறு கோரிக்கை முன்வைத்தார்.

ஏனெனில் இது கட்சித்தலைவர்களால் திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உறுப்பினர்கள் நடக்கவுள்ளனர். இதனால் மக்களின் ஆணை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே ரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதன் மூலமே உறுப்பினர்களின் உண்மை நிலை வெளிப்படும்.

கொழும்பில் ஒரு நடைமுறை இங்கு ஒரு நடைமுறையா. என கேள்வி எழுப்பியதுடன் ஆணையாளர் நடுநிலையாக செயற்படவில்லை என குற்றம்சாட்டினார். அவரது கருத்துக்கு ஆதரவாக அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.

இதன்போது சட்டம் இவ்வாறே சொல்கின்றது. அதன்படியே தெரிவுகளை என்னால் நடாத்தமுடியும். அதில் உங்களுக்கு எதேனும் பிரச்சனை இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம். எனவே இந்த நிகழ்வை குழப்ப வேண்டாம். தெரிவுகளை நடாத்த ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணையாளரால் பதில் வழங்கப்பட்டது.

இதனை ஏற்க்க மறுத்த தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவுகளை புறக்கணித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தேசியமக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களுடன், இலங்கை தொழிலாளர் கட்சியின் 2 உறுப்பினர்கள், சுயேட்சை குழுவின் ஒரு உறுப்பினர் என 9 உறுப்பினர்கள் இதன்போது வெளிநடப்புசெய்தனர்.

எனினும் சபையில் போதிய கோரம் இருந்த நிலையில் தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சங்கு கூட்டணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உபதவிசாளராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (27.06.2025) காலை நடைபெற்றது.

இதன்போது தெரிவுகளை ரகசியமாக நடாத்துமாறு தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசியமக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி,மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் 9பேர் வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17 பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடாத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடாத்தப்பட்டது. அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட பா.பாலேந்திரனுக்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைக்கப்பெற்றது.

அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும், ஐக்கியமக்கள் சக்தியின் 3 வாக்குகளும், ஜனநாயக தேசிய கூட்டணியின் 2 வாக்குகளும், ஈபிடிபியின் ஒரு வாக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒரு வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்கும் சுயேட்சைக் குழுவின் ஒரு வாக்குமாக17 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.

வெற்றிபெறுவதற்கு 14 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 17 வாக்குகள் கிடைக்கப்பெற்ற பாலேந்திரன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக சங்கு கூட்டணியின் பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரியின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் கோணேஸ்வரி உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை தமிழ்மக்கள் கூட்டணியின் ஒரு உறுப்பினர் தவிசாளர் தெரிவின் போது நடுநிலமை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளான கனரக வாகனம்!!

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் கனரக வாகனம் ஒன்று மரத்தில் மோதியதால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த கனரக வாகனம், அதிகாலை 5.00 மணியளவில் கந்தளாய் – கண்டி பிரதான வீதியின் 92ஆம் கட்டைப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியுள்ளது.

விபத்து நேரத்தில் ஓட்டுநர் ஒருவரே வாகனத்தில் இருந்ததாகவும், தூக்கம் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சாரதிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் விளைவாக தொலைத்தொடர்பு வயர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மாற்றம் கண்ட தங்க விலை : தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்!!

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் அதிகரித்து வந்த எண்ணெய் விலை இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், தங்க விலையிலும் இன்று (26) சிறிய அளவில் அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலை 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 248,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்!!

இரத்தினபுரி, உருபொக்க – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பனமுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய வெலேகே அஞ்சன சதுரங்க என்ற இளைஞன் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர் வேலைக்குச் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர், அப்பகுதி மக்களால் எம்பிலிபிட்டிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் எம்பிலிபிட்டிய பனமுற பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.