வரிசையாக கொண்டு செல்லப்பட்ட சடலங்கள் : நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்!!

கண்ணீரில் நனைந்த சோகம்

ஈஸ்டர் நாளான நேற்று முன்தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் நீர்கொழும்பில் கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு பதிவாகியிருந்த நிலையில் அந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறு உயிரழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கதறியழுது உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா முழுவதும் 500க்கும் மேற்பபட்ட பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிப்பு!!

முப்படையினர் குவிப்பு

கொழுப்பில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து வவுனியா முழுவதும் 500க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பின் பல பாகங்களில் வாகனங்களிலிருந்து குண்டுகள் மீட்க்கப்படுவதுடன் தற்கொலை குண்டுதாரிகளும் நடமாடுவதாக பாதுகாப்பு பிரிவினர் விடுத்துள்ள அறிவித்தலையடுத்து நாட்டின் பல பாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இன்றையதினம் 300க்கு மேற்பட்ட பொலிஸார் , 100க்கு மேற்பட்ட இரானுவத்தினர், 20க்கு மேற்பட்ட விமானப் படையினர் , 30க்கு மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் மற்றும் அனைத்து புலனாய்வு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,

குறிப்பாக அனைத்து பிரிவினரும் இரவு பகலாக வவுனியாவிலுள்ள பிரதான ஆலயங்கள், பள்ளிவாசல், கிறிஸ்தவ தேவாலயங்கள், பௌத்த பன்சல மற்றும் முஸ்ஸிம் மக்களின் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகள், வீதி சோதனை சாவடிகள், வவுனியா நகர் போன்ற பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்து கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு!!

நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் வவுனியா மாவட்ட இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என அனைவரும் இணைந்து இன்று திங்கட்கிழமை மதியம் வவுனியா நகர் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடியேற்றி தமது அனுதாபங்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன் கருப்புக்கொடிகளை பறக்கவிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு!!

ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி வாவி பகுதியில், கை இல்லாத நிலையில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று காலை காயங்களுடன் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 45வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், வாவியில் ஓலையெடுக்கச் சென்ற வயோதிப பெண் ஒருவர் குறித்த சடலத்தினைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலத்தில் கையொன்று இல்லாத நிலையில் காயங்கள் காணப்படுவதாகவும், சடலத்தினை முதலை கடித்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாநகர முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் சடலத்தினை பார்வையிட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்கவில் பொம்மை தலைகளால் பதற்றம்!!

பொம்மை தலைகளால் பதற்றம்

கட்டுநாயக்க சந்தியில் அமைந்துள்ள தபாலகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பதில் பொம்மைகளின் தலைகள் வைக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றில் வெடிகுண்டுகள் உள்ளனவா என்ற பரிசோதனைகளை அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க சந்தியுடனான போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தலைகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று நள்ளிரவு முதல் எதுவும் நடக்கலாம் : பொதுமக்கள் தெரிந்திருக்கவேண்டிய எச்சரிக்கை தகவல்கள்!!

பொதுமக்கள் தெரிந்திருக்கவேண்டிய எச்சரிக்கை தகவல்கள்

இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர கால சட்டம் என்றால் என்ன : அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் .

இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும். இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கத்தால் நேற்றில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அவசர கால தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் எங்கேயும் எதற்காகவும் சுடப்படலாம்.

இந்த அதிகாரத்தின் கீழ் முப்படையினரும் 24 மணி நேரமும் கடமையில் இருக்க வேண்டும். விடுமுறைகளை எடுக்க முடியாது.

இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்த நேரத்திலும் எவ்வித காரணமின்றியும் கைது செய்யப்படலாம். அத்துடன் சந்தேகத்தின் பேரில் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும்.

இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல், அதிக ஒலி எழுப்புதல் உட்பட ஆயுதங்களை உடமையில் (முகச் சவரம் செய்யும் அலகு, ஊசி என்பனவற்யைும்) வைத்திருத்தல் பாரிய குற்றமாகும்.

அத்துடன் தீவிரவாதத்திற்கு ஒத்துழைத்தல், நிதிசேகரித்தல் உட்பட பல விடயங்கள் இதற்குள் அடங்கும்.

சாதாரண சிவில் கடமைகளுக்கு கூட பொலிஸாரின் கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ஒருவர் விசாரணைகள் எதுவும் இன்றி எவ்வளவு காலத்திற்கேனும் தடுத்துவைக்க முடியும்.

கைதுக்கு முன்னோ கைதுக்கு பின்னரோ விசாரணை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

கைது செய்யப்படும் போது யாராவது தப்பியோட முயன்றால் சுட்டுப்பிடிப்பதற்கும் அதிகாரம் உள்ளது.

அதேவேளை கைது செய்யப்படும் நபர் தேவையெற்படின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கும் உரிமை உண்டு.

விசாரணைக்காக புலனாய்வுப் பிரிவினரின் கைகளுக்கும் ஒப்படைப்பதற்கான சரத்துக்களும் உண்டு.

மேலும், அவசரகாலச்சட்டமானது, மக்களின் அல்லது வாகனங்களின் போக்குவரத்துக்களை தடை செய்யவும், பாதுகாப்பு பிரதேசங்களை உருவாக்கி, அங்கு வெளியிலிருந்து செல்பவர்களைத் தடுக்கவும் அனுமதி அளிக்கின்றது.

பாதுகாப்பு பிரிவினரின் கடமைக்குக் குந்தகம் விளைவிக்கும், குறிப்பிட்ட நபர்களை, குறிப்பிட்ட பகுதிக்கு வருவதற்கும், அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிப்பதற்கும், தடைசெய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது.

மக்கள் வாழும் பகுதிகளில், உடனாடியான பாதுகாப்புப் பிரதேசத்தை உருவாக்கி, அவர்களைப் பாதுகாக்கவும் காவற்துறையினர்க்கு அதிகாரம் அளிக்கின்றது.

யாரையும் அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்வதற்கு அனுமதி வழங்க உள்துறை அமைச்சரிற்கு அதிகாரம் வழங்குகின்றது.

நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பவர்கள் எனச் சந்தேகப்படும் யாரையும் கைது செய்து விசாரைண செய்ய முடியும்.

விழா மண்டபங்களையோ அல்லது திரையங்குகளையோ அல்லது கூட்டம் நடக்கும் இடங்களையோ, உடனடியாக மூடுவதற்கும் அங்குள்ளவர்களை வெளியேற்றுவதற்கும் அனுமதி அளிக்கின்றது.

ஒரு கூட்டமோ, அல்லது சந்திப்புகளோ, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதனைத் தடை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் இருக்கும் ஆயுதங்களை, அனுமதி பெற்றிருந்தாலும் கூட, பறிமுதல் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் சமயத்தலங்களுக்கு பாதுகாப்பு தொடர்கின்றது!!

பாதுகாப்பு தொடர்கின்றது

இலங்கையில் முக்கிய சில பகுதிகள் மற்றும் தேவாலயங்களில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினையடுத்து நேற்று மாலை வவுனியாவில் உள்ள சமயத்தலங்களுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம், பள்ளிவாசல், ஆலயம் போன்ற பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. சந்தேகத்திடமான முறையில் சமயத்தளங்களிற்குள் பிரவேசிக்கும் நபர்களை பொலிஸார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

அத்துடன் நேற்றையதினம் பிரகடனப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணிக்கு நிறைவடைந்தமையினையடுத்து வவுனியாவில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் நகரின் நிலைமை வழமை போன்றே காணப்படுகின்றது.

மட்டக்களப்பில் குண்டு வெடிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக.. நெஞ்சை பதைபதைக்க செய்யும் புகைப்படங்கள்!!

நெஞ்சை பதைபதைக்க செய்யும் புகைப்படங்கள்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களும், புகைப்படங்களும் நெஞ்சை பதைபதைக்க செய்கின்றன.

சீயோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பாக அதாவது சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னர் தேவாலயத்திற்குள் சிறார்கள் இறைவனுக்காக பாடல் பாடி, நடனமாடியுள்ளனர்.

கொடூர குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று பல உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இறைவன் உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு குறித்த சிறார்கள் மகிழ்ச்சியுடன் கழித்த தருணங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும் சீயோன் தேவாலயத்தில் வெளிப்புறமாகவே குண்டு வெடிப்பு நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை முழுவதும் இன்று மீண்டும் ஊரடங்குச்சட்டம்!!

ஊரடங்குச்சட்டம்

இலங்கையில் இன்று மீண்டும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் படி இன்று இரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும்.

இலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து மக்களின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் இன்று காலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உணவு சாப்பிட தாமதமாக சென்றதால் இலங்கை குண்டுவெடிப்பில் பிழைத்த லண்டன் பேராசிரியர்!!

கிரன் அரசரட்னம்

இலங்கையின் Shangri-La ஹொட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் லண்டன் பேராசிரியர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இலங்கையில் 8 இடங்களில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் லண்டனில் உள்ள Imperial College Business School-ல் பேராசிரியராக பணிபுரியும் கிரன் அரசரட்னம் (41) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

அதாவது, இலங்கையில் சமூக நிறுவனம் ஒன்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிக்காக கிரன் லண்டனில் இருந்து வந்துள்ளார். அவர் Shangri-La ஹொட்டலில் தங்கியிருந்த நிலையில் காலை உணவு சாப்பிடும் இடத்தில் குண்டு வெடித்தது.

அப்போது உணவு சாப்பிட அவர் தாமதமாக கிளம்பியதால் உயிர் தப்பித்தார். இது குறித்து கிரன் மிரட்சியுடன் கூறுகையில், நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக பிரித்தானியாவுக்கு சென்றேன்.

நான் Shangri-La ஹொட்டலின் 18வது மாடியில் இருந்து கீழே காலை உணவு சாப்பிட என் அறையை விட்டு வெளியில் வந்தேன்.

அப்போது என் மனதின் கவனம் வேறு எங்கோ சென்றது, பின்னர் மீண்டும் அறைக்குள் சென்று என் டெபிட் கார்டை எடுத்து வந்தேன், அப்போது தான் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. பின்னர் வெளியில் வந்து பார்த்த போது ஆங்காங்கே ரத்தங்கள் சிதறி கிடந்தன, பலரும் பதறியடித்து அங்குமிங்கும் ஓடினார்கள்.

பின்னர் அவசர வழியாக வெளியில் சென்றேன், நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து லண்டன் சென்றேன். இப்படியொரு காட்சியை இலங்கையில் மீண்டும் பார்ப்பேன் என நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

வவுனியா இளைஞன் குண்டுத்தாக்குதலில் பலி : இறுதிக் கிரிகைகள் வவுனியாவில்!!

இறுதிக் கிரிகைகள்..

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றையதினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் நான்காம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய முகமட் நிஸ்தார் நலீர் என்ற இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்த குறித்த இளைஞனின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் இன்று (22.04.2019) நடைபெற்றது.

இறுதிக்கிரியையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா கலந்து கொண்டு உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அரசாங்க இழப்பிடான ஒரு லட்சம் ரூபாவினை வழங்கி வைத்தனர்.

குறித்த இளைஞனின் இறுதிக்கிரியையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின், வவுனியா நகரசபை உபநகரபிதா சு.குமாரசாமி, பொலிஸார், கிராமசேவையாளர், இளைஞர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் குண்டுவெடிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!!

இலங்கையில் குண்டுவெடிப்பு

இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்புச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அவசர தகவல்களை அறிந்துகொள்வதற்காக, 24 மணிநேர சேவையை 011 302 4873, 011 302 4883 மற்றும் 011 201 3039 ஆகிய இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள் 0112 32 3015 என்ற இலக்கத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பிதாவே இவர்களை மன்னியும் : இலங்கை குண்டு வெடிப்பின் கொடுமையை உணர்த்தும் புகைப்படம்!!

பிதாவே இவர்களை மன்னியும்

இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 262 பேர் இறந்துள்ளதுடன் 450 பேர் படுகாயமடைந்துள்ளனர் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், ஷங்கிரில்லா நட்சத்திர ஹொட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் , கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் தெஹிவளை மற்றும் தெமட்டைகொடை ஆகிய 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயேசுவின் சிலை மீது இரத்தம் படிந்திருக்கும் புகைப்படம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்தபோது அதில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்து போனவர்களின் இரத்தம் அங்கிருந்த இயேசு நாதரின் சிலுவையில் தெறித்துள்ளது.

பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்ற வார்த்தைகள் இயேசு நாதரை சிலுவையில் அறைந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்…. ! குறித்த புகைப்படத்திற்கும் அந்த வார்த்தைகள் பொருந்துவதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன்மை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் : சுவிஸிலிருந்து வந்த தமிழ் குடும்பம் பலி!!

தமிழ் குடும்பம் பலி

நேற்று இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்று இன்று மீண்டும் சுவிஸ்க்கு திரும்பவிருந்த நிலையில் நேற்று காலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கொழும்பு விடுதியில் வெடித்த குண்டுக்கு தாயும் தந்தையும் இரையாகியுள்ளனர்.

இவர்களின் 3 பிள்ளைகளில் ஒருவர் காயமடைந்திருப்பதும் வேதனைக்குரியதொன்று. குறித்த வெடிப்புச் சம்பவத்தில், சுவிஸ் பேர்ண் பகுதியில் வசித்த தம்பதிகளான விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Bern Bumpliz Kiosk நாதன் மற்றும் அவரது மனைவியான கெளரி என அழைக்கப்படும் கேதாரகெளரி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

வவுனியா இளைஞன் சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலி!!

வவுனியா இளைஞன் குண்டுவெடிப்பில் பலி

கொழும்பு சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த இளைஞனொருவன் உயிரிழந்துள்ளார். இதன்போது வவுனியா – வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய இஸ்தார் முகமத நளிம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தினை வவுனியாவில் இருக்கும் தனது இல்லத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஒன்பது இடங்களில் அதாவது மூன்று தேவாலயங்களிலும், மூன்று ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கொழும்பில் அமைந்துள்ள முக்கிய நட்சத்திரக் ஹோட்டல்களில் இருந்து ஆட்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்றம் : பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர்கள்!!

வெள்ளவத்தையில் பதற்றம்

வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிய குண்டுகளை கொண்டு செல்லும் வானுடன் அதன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் வான் ஒன்றில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல இடங்களில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெள்ளவத்தையில் வெடிகுண்டு வெடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பின் பல பிரதேசங்களில் தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கில் குண்டுகள் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தாக தெரிய வருகிறது. வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதியில் வைத்து குண்டுகளுடன் வான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வான் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட வீடு ஒன்று பாணந்துறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.