வவுனியா வைத்தியசாலைக்குள் சோதனைகள் தீவிரம்!!

சோதனைகள் தீவிரம்

வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும் மக்கள் உள்ளே செல்லும் போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த தகவலின் அடிப்படியிலே இவ்வாறான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டதுடன் வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் முதல் பார்வையிட வருபவர்களது பொதிகள், ஆடைக்கு மேலாக அங்கிகள், தலை கவசங்கள் ஏதெனும் அணிந்திருந்தால் அவற்றையும் சோதனை செய்து வைத்தியாசலைக்கு பொலிஸார் அனுமதித்து வருகின்றனர்.

அத்துடன் இன்று கொழும்பு களுபோவில வைத்தியசாலைக்குள் மர்மப்பொதி இருந்ததாக கிடைத்த தகவலையடுத்து விஷேட பாதுகாப்பு பலப்படுத்தப்படு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வைத்தியசாலைக்குள் இருந்து பொதுமக்களை வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பேரூந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர்!!

பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கடும் பாதுகாப்பு பரிசோதனையின் பின் பயணிகள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் வவுனியா பேரூந்து நிலையத்தில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பேரூந்து நிலையத்திற்குள் உள்நுழையும் பேரூந்துகளிலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு கைகளில் தங்கள் பயணப் பொதிகளை எடுத்துச் செல்லூமாறு பணிக்கப்படுவதுடன், சந்தேகத்திற்கிடமானவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் பேரூந்து நிலையத்திற்குள் உள்நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொழும்பின் பிரதான பகுதியில் பதற்றம் : வெடிபொருட்களுடன் மோட்டார் சைக்கிள்!!

கொழும்பின் பிரதான பகுதியில் பதற்றம்

கொழும்பில் மர்மான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஐந்துலாம்பு சந்திக்கு அருகில் இந்த இந்த மோட்டார் சைக்கிள் நிற்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள் இருந்த நிலையில், பொலிஸாரினால் அது வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் பொருத்தப்பட்ட நிலையில் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் சந்தேகத்திற்கமான முறையில் எந்தவொரு வாகனத்தை கண்டாலும் மக்கள் அச்சம் கொள்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!!

தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு..

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களை அடுத்து இலங்கையின் பலப்பகுதிகளில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (23.04.2019) காலை 8.30 மணியளவில் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரச திணைக்களங்களின் உத்தியோகஸ்தர்கள் கலந்துக் கொண்டுடதுடன் அரசாங்க அதிபரினால் ஏற்றப்பட்ட தேசிய கொடி அரைக்கம்பத்தில் விடப்பட்டது.

அதன் பின்னர் உயிர்நீத்த மக்களுக்காகவும் காயமடைந்த மக்களுக்காகவும் இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

வவுனியா பூந்தோட்டம் வர்த்தகர்களினால் குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி!!

உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி

கொழும்பின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த மற்றும் உயிர்நீத்தவர்களுக்களுக்காக பிராத்தனையும் அஞ்சலி நிகழ்வும் வவுனியா பூந்தோட்டம் வர்த்தகர்களின் ஏற்பாட்டில் பூந்தோட்டம் சந்தியில் இன்று (23.04.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வர்த்தகர் லோரன்ஸ் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மெழுவர்த்தியேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் அப்பகுதியிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் கொண்டிருந்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் பொலிசார் தீவிர சோதனை!!

பொலிசார் தீவிர சோதனை

வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வைத்தியசாலைக்கு வரும் அனைவரது பொதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சினால் இன்று வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வைத்திசாலைக்கு வரும் நோயாளர்கள் முதல் பார்வையியாளர்கள் வரை பொதிகள், ஆடைக்கு மேலாக அங்கிகள் ஏதெனும் அணிந்திருந்தால் அவற்றையும் சோதனை செய்து வைத்தியாசலைக்கு பொலிஸார் அனுமதித்து வருகின்றனர்.

கொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி : நான்காவது காணொளி வெளியானது!!

நான்காவது காணொளி வெளியானது..

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி வெடித்து சிதறும் காணொளி வெளியாகி உள்ளது.

தற்கொலை குண்டுதாரி தோளில் பையுடன் லிப்டில் ஏறுகிறார். அங்கு மேலுமொரு தற்கொலை குண்டுதாரி உள்ளார். இரண்டு பேரும் ஒரே லிபட்டில் 13வது மாடிக்கு செல்கின்றனர். அங்கிருந்தவர்கள் 3 மாடியிலுள்ள ஹோட்டல் உணவறைக்கு சென்று நடமாடும் போது அங்கு வெடித்து சிதறியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பு தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் மூன்று காணொளிகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் 27 இடங்கள் இலக்கு : புலனாய்வு பிரிவினர் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள்!!

ஒரே நேரத்தில் 27 இடங்கள் இலக்கு

நாட்டில் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய சம்பவ தினத்தன்று ஒரே நேரத்தில் 27 இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளை வெடிப்புச் சம்பம் தொடர்பிலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த குண்டு தெஹிவளை சென் மேரிஸ் தேவாலயத்தை இலக்கு வைத்துக் கொண்டுவரப்பட்டதாகவும், பொலிஸாரின் பாதுகாப்பு காரணத்தினால், தாக்குதல்தாரி மீண்டும் தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கு குண்டை கழற்றி வைக்கும்போது அது வெடித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை தெஹிவளை சென் மேரிஸ் தேவாலயத்தின் காணிக்கை பெட்டி சம்பவனாளுக்கு முதல் நாள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தேசிய தவ்ஹீத் அமைப்பின் தலைவர் என கூறப்படும் முக்கிய சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹஷிம் சங்ரில்லா தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், அவரின் மரபணு சோதனைகளை நடத்தி உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தகவல்.

அத்துடன் தேசிய தவ்ஹீத் அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய அரசியல் வாதிகள், செல்வந்தர்கள் உள்ளிட்ட பலர் தொடர்பிலான தகவல்கள் குற்றபுலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

வவுனியாவில் தொடர் குண்டு வெடிப்பில் மரணித்தவர்கள் நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை!!

ஆத்மசாந்திப் பிரார்த்தனை

தொடர் குண்டு வெடிப்பில் மரணித்த பொது மக்களின் ஆத்மசாந்தி வேண்டிய விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் தேவஸ்தானம் என்பன இணைந்து இந்த நிகழ்வை கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மரணித்த உறவுகளுக்கு சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி மரணித்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தனர்.

வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தான பிரதம குரு நா. பிரபாகரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆத்மசாந்தி மற்றும் அஞ்சலி நிகழ்வில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம்,

முன்னாள் வடமாகாண சபை உறுப்டபினர் செ.மயூரன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர், அந்தணர்கள், சமூக செயற்பாட்டளர்கள், மாவட்ட இந்து ஆலய ஒன்றியத்தினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆத்ம சாந்திப் பிரார்த்தைனயிலும், அஞ்சலி நிகழ்விலும் பங்கேற்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியான சோகம் : குண்டுத்தாக்குதலில் மடிந்த பச்சிளம் குழந்தைகள்!!

ஐவர் பலியான சோகம்

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடந்த ஈஸ்டர் ஆராதனையின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்நத 5 பேர் அடங்குகின்றனர்.

கதிரான பஹல கதிரான பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்றில் சிரேஷ்ட முகாமையாளராக கடமையாற்றி வந்த ரங்கன பெர்னாண்டோ, அவரது மனைவி தனாதரி குறுப்பு ஆராச்சி, இவர்களின் பிள்ளைகளான 6 வயதான பேபியோலா பெர்னாண்டோ, 4 வயதான மத்துமி லியோனா பெர்னாண்டோ, 11 மாத குழந்தையான சேத் மஸ்தி பெர்னாண்டோ ஆகியோரே தாக்குதலில் பலியானியுள்ளனர்.

இவர்களுடன் ஆராதனையில் கலந்துக்கொண்ட வீட்டில் வேலை செய்து வந்த 55 வயதான பிலமினா பெரேரா என்ற பெண்ணும் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கையின் தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ் அமைப்பின் அதிரடி அறிவிப்பு!!

ஐ.எஸ் அமைப்பின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை பொறுப்பேற்பதாக ஐஸ் பயங்கரவாத அமைப்பு சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகைப்படங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்தவர்கள் ஐ.எஸ் அமைப்பின் போர் வீரர்கள் என அமாக் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரஜைகளையும் இலக்கு வைத்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ் அமைப்பிற்கு தொடர்புடைய இணையத்தளம் ஒன்றின் முதல் பக்கத்தில் 3 தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படம் மற்றும் ஐஎஸ் கொடி பதிவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Abul Barra, Abul Mukhtar மற்றும் Abu Ubaida என்ற மூவரே இந்த படத்தில் தோன்றிய மூவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளியாகிய புகைப்படங்களுக்கு அமைய தற்கொலை குண்டுத்தாக்குதல்தாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் தலைவர் ஸஹாரன் ஹசின் இந்த புகைப்படங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், இந்த தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றமைக்கான காரணங்களை அவர்கள் வௌிப்படுத்தவில்லை எனவும் ரொய்ட்ர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்கள் : கண்ணீரில் மட்டக்களப்பு!!

கண்ணீரில் மட்டக்களப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 25 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் பெயர்கள், படங்களுடனான கண்ணீர் அஞ்சலி பதாதைகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் நாளான நேற்று முன்தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது.

தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், உணவகம் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு சம்வங்கள் இடம்பெற்றிருந்தன.

இதில் வெளிநாட்டவர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இறுதியாக வந்த தகவலின் படி 321 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 38 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தார். அத்துடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்று இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பின் முக்கிய பகுதியில் வெடிகுண்டு மீட்பு!!

வெடிகுண்டு மீட்பு

நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப் பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்த நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் 310க்கும் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்றம் : நடந்தது என்ன?

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பிலிருந்து கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நாட்டிலிலுள்ள அனைத்து வைத்தியசாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் வழமையாக கடமையில் உள்ள பொலிஸாரின் எண்ணிக்கையினை விட இன்று (23.04.2019) சற்று அதிகமான பொலிஸார் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நீண்டநேரமாக தரித்து நிற்கும் வாகனங்கள், பொதிகளுடன் உட்செல்லும் நபர்கள், சந்தேகத்திடமாக நிற்கும் நபர்களை பொலிஸாரின் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

வைத்தியசாலையிலிருந்து பொதுமக்கள் மற்றும் நோயார்களை வெளியேற்றியதாக வெளிவந்த தகவல் உண்மைக்குபுறம்பானது. அவ்வாறான எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனவும் வழமையை விட வைத்தியசாலையில் சற்று பாதுகாப்பு மாத்திரம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு குண்டு வெடிப்பில் பலியான தாய், மகளின் இறுதிக்கிரியைகள்!!

தாய், மகளின் இறுதிக்கிரியைகள்

நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியான தாய் மற்றும் மகளின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலிய பிரஜைகளான இவர்கள் 17 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின், மெல்பேர்ன பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்கள் இருவரும் ஈஸ்டர் தினமான நேற்று முன்தினம் ஆராதனைகளில் பங்கு கொள்வதற்காக கட்டுவபிட்டி செபஸ்னடியன் தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திலேயே தாயும், மகளான பத்து வயது சிறுமியும் பலியாகியுள்ள நிலையில் இன்று அவர்களது இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, மெல்பேர்னில் வைத்து பிறந்த தனது மகளுக்கு தற்போது 10 வயதே ஆவதுடன், அவள் பியானோ இசைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள் என இறந்துள்ள சிறுமியின் தந்தை கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

மேலும், இருவரினதும் சடலங்கள் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் அனைத்து பாடசாலைகளும் 29ம் திகதி ஆரம்பமாகும்!!

கல்வியமைச்சு விடுத்த அறிவித்தல்

இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 29ஆம் திகதியே ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இலங்கையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றும், இன்றும் விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அரசாங்க பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.