வவுனியா நகரசபை ஊழியர்கள் நான்கு பேர் இன்று (25.04.2019) மதியம் குழி ஒன்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விசவாயு தாக்கி மரணமடைந்துள்ளனர்.
வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள மாடு வெட்டும் கொள்கலன் பகுதியில் மாட்டின் கழிவுகள் கொட்டப்படும் குழியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த நகரசபை தொழிலாளர்களில் நால்வர் குறித்த குழியிலிருந்து தாக்கிய விசவாயு காரணமாக மரணமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கழிவுகளை குழியிலிருந்து அகற்றுவதற்காக குழியின் மூடியை திறந்து உள் இறங்கிய ஒருவர் திடீரென மயங்கி உள்ளே விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற ஒவ்வொருவராக மயங்கி குழிக்குள் விழுந்து இறந்துள்ளதாக நேரில் கண்ட சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு – கண்டி வீதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ, பஸ்யால காட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாம் ஒன்று உள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் காட்டுக்குள் நுழைந்து விசேட சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொண்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பிற்கு முன்னர் அந்த பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுக்குள் 4 பேர் மறைந்திருப்பதாகவும், அவர்கள் தப்பிக்க முடியாதளவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அந்தப் பகுதியில் முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. இந்த முகாம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 600 பேர் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமதிய்யா நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் காணப்படுகின்ற யுத்த சூழ்நிலை காரணமாக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை தொடர்ந்து நீர்கொழும்பில் தங்கியிருந்த வீடுகளில் இருந்து வௌியேறுமாறு அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்தே அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அஹமதிய்யா நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாகிஸ்தான் நாட்டவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் எழுந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்த மக்கள் அச்சப்பட வேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது தீவிர சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
சந்தேகத்திற்கிடமான வாகனங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. பல பிரிவுகளாக பொலிஸ் படை தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கான பல வீதிகள் மூடப்பட்டு சோதனையிடப்படுகிறது.
கொழும்பு மாத்திரமன்ற நாட்டின் முழு பகுதியும் தீவிர சோதனை உட்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். நாவாந்துறை ஐந்து சந்திப் பகுதியில் வைத்து இன்று காலை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் இணுவில் ஆலயத்திற்கு அருகில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொதியின் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிரடிப் படையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். குண்டு செயலிழக்கும் குழுவும் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
எனினும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
குறித்த பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இருந்த பொதியினை சோதனை செய்த இராணுவத்தினர் அதனை அங்கிருந்து கொண்டு சென்றுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கை காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
தாக்கம் குறைத்த குண்டு வெடித்தமையினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர். நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள காணி ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
வவுனியாவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை (25.4) மேற்கொண்டனர்.
வவுனியா பட்டானிச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேரூந்து நிலையம், மதஸ்தளங்கள் என்பற்றில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந் நிலையிலேயே இன்று வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அதிகாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகர் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவரை விரட்டிசென்று மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இன்று (25.04) காலை10.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டத்தில் இருந்து வவுனியா நகர் பகுதி நோக்கி தலைக்கவசம் இன்றி சென்ற இளைஞனை போக்குவரத்து பொலிஸார் விரட்டி சென்று குடியிருப்பு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளையும் குறித்த இளைஞனையும் அழைத்துச் சென்றுள்ளர்.
தலைக்கவசம் இல்லாது சென்றதன் காரணமாகவே குறித்த இளைஞன் துரத்தி செல்லப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன, மத நல்லுறவை வலுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் முகமாக சர்வமத குழுவினருக்கும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவுக்கும் இடையில் இன்று மாவட்ட செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது சர்வமத குழுவினரால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுவதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றோம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் இன, மத, பேதமின்றி ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதுடன், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கொடுரமான தாக்குதல்களை வவுனியா மாவட்ட சர்வ மதக் குழுவினர் ஆகிய நாம் வன்மையாக கண்டிப்பதுடன், வவுனியாவில் மூன்று இனத்தவர்களும், நான்கு மதத்தவர்களும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும், பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அதற்கு சர்வமத குழு ஒத்துழைப்பு வழங்கும். வவுனியா மாவட்ட அரச அதிபரும் ஏனைய அதிகாரிகளும் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவ வேண்டும் என கோரியிருந்தனர்.
இதன்போது பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மதத்தலைவர்கள் கலந்து கொண்டதுடன் குண்டு தாக்குதல் தொடர்பில் தமது கவலையை தனித்தனியாக வெளிப்படுத்தியதுடன், ஒற்றுமையாக பயணிப்பது குறித்தும், தற்போதைய நிலமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் அரச அதிபருடன் கலந்துரையாடியிருந்தனர்.
அரச அதிபரும் இன, மத ரீதியாக அசம்பாவிதங்கள் ஏற்படா வண்ணம் இருக்க அனைத்து அதிகாரிகளும், முப்படையினரும், பொலிசாரும், ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் எந்நேரமும் ஏதாவது பிரச்சனைகள் எனில் மாவட்ட செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இதன்போது தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் மதத்தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர், உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் கடந்த (21.04) ஈஸ்ரர் தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் நேற்று (24.04) நடைபெற்றது.
வவுனியா வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் முதலாவது சுடரினை கல்லூரியின் முதல்வர் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
நாடு முழுவதும் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் வேண்டி விசேட ஆராதனை நிகழ்வு வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை (23.04) இடம்பெற்றது.
போதகர் பி.என.சேகர் தலமையில் நடைபெற்ற இப்பிராத்தனையில் வவுனியா மாவட்ட கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த தலைமை போதகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வானது வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள தூய ஆவியானவர் ஆலயத்தில் நடைபெற்றதுடன் இவ் ஆராதனை நிகழ்விற்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
ஆராதனை நிகழ்வில் உரையாற்றிய நாற்சதுர சுவிசேச சபையின் தலைமை போதகர, நாட்டில் கிறிஸ்தவர்களை குறிவைத்து மிலேச்சத்தனமான வெடிகுண்டு தாக்குதல் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு ஆறுதல் தர இயேசு கிறிஸ்துவை நோக்கி பிராத்திப்பதுடன், நாட்டு மக்கள் அமைதியாக இருந்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறும் கோரிக்கை விடுத்ததுடன்,
இப்பாதக செயலை செய்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கான தண்டனையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
தெஹிவளையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையை சேர்ந்த 24 வயதான பியுமி ஷானிகா சல்காது என்பவரே உயிரிழந்துள்ளார்.
விவசாய திணைக்களத்தில் உதவி முகாமையாளராக செயற்பட்ட இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். படிப்பில் சிறந்த நிலையில் காணப்பட்டவர், தொழிலுக்கும் மிகவும் அக்கறையுடன் சென்று வருவார் என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று நுகேகொடை பிரதேசத்தில் வகுப்பறைக்கு சென்றிருந்தார்.
அன்று 11 மணியளவில் குண்டு வெடிப்பதனால் மகளுக்கு அழைத்து அவதானமாக இருக்குமாறு கூறினேன். பயப்பட வேண்டாம் அம்மா நான் படிக்கின்றேன் என மகள் கூறினார். சில மணி நேரங்களின் மீண்டும் அழைத்தேன் மகள் பதிலளிக்கவில்லை.
இறுதியாக அவரை சடலமாக வீட்டிற்கு கொண்டு வந்தனர் என தாயார் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தெஹிவளையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்திருந்தனர்.
நீர் கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் தாம் தப்பிப் பிழைத்ததாக பிரபல கிரிக்கட் வீரர் தசுன் சங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினமன்று நிச்சயமாக தாம் தேவாலயம் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது வழமை என்ற போதிலும், சனிக்கிழமையன்று 170 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து அனுராதபுரத்திலிருந்து வீடு வந்த காரணத்தினால் களைப்பு காரணமாக தாம் தேவாலயம் செல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார். எனினும், தாயும் பாட்டியும் தேவாலயத்திற்கு சென்றிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெய்வாதீனமாக இரண்டு பேரும் காயங்களுடன் உயிர் பிழைத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேவாலயமும் சிதிலமாகியிருந்தது எனவும் அந்தக் காட்சியை பார்த்த எவரும் தேவாலயத்திற்குள் இருந்த எவரும் உயிருடன் இருப்பார்கள் என நம்ப மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவாலயத்திற்கு விரைந்த போது முதலில் தாயை தேட வேண்டுமென்பதே எனது இலக்காக இருந்தது, நானும் நாண்பர்களும் தாயை தேடிக் கண்டு பிடித்தோம் அவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். பின்னர் பாட்டியாரைத் தேடிக் கண்டு பிடித்தோம் அவரைச் சுற்றியிருந்த அனைவரும் பிணமாகவே கிடந்தனர், தெய்வாதீனமாக பாட்டி உயிருடன் இருந்தார்.
உடனடியாக அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினோம். இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மிகவும் சகவாழ்வான மக்கள் அடுத்தவரை பற்றி புறம் பேசாது தங்களுடைய பணிகளைளே மேற்கொள்ளும் மக்கள், இந்த சம்பவம் பேராதிர்ச்சியையும் கவலையையும் நீங்கா வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புர்கா அணிந்த ஒருவர் வத்தளை பகுதியில் வீதியில் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த மக்களுக்கு குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை சுற்றிவளைத்த மக்கள் சோதனை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் யோசனையை கொண்டு வந்திருந்தார். இதனையடுத்து எச்சரிக்கும் வகையிலான இரு தொலைபேசி அழைப்புகள் ஆசு மாரசிங்கவுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல்கள், கிறிஸ்தவ, கத்தோலிக்க மற்றும் வெளிநாட்டவர்களை இலக்கு வைக்கும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என விமானப்படை புலனாய்வு பிரிவு கூறியுள்ளது.
மக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள், அரச மற்றும் தனியார் சொத்துக்கள் இலக்கு வைத்து இந்த தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கேட்டு கொண்டுள்ளது.