வவுனியாவில் நேற்று கைது செய்யப்பட்ட இரு முஸ்ஸிம் நபர்கள்!!

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து வவுனியா முழுவதும் 500க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் முப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச் சோதனை நடவடிக்கையில் போது நேற்று (26.04.2019) மாலை சந்தேகத்திக்கிடமான முறையில் அரபாநகர் பகுதியில் சுற்றித்திரிந்த முஸ்ஸிம் நபர் ஒருவரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை அதன் பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது அவரது வீட்டிலிருந்து இராணுவத்தினரின் தொப்பி மற்றும் ஆடை என்பவற்றினை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த நபரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செக்கட்டிப்புலவு அரபாநபர் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வவுனியா நெளுக்குளம் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இராசேந்திரகுளம் பகுதியில் சந்தேகத்திடமான முறையில் திரிந்த நபரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரின் அடையாள அட்டை பதிவு நீர்கொழும்பு என காணப்பட்டதுடன் பொலிஸாரின் விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தமையினால் நீர்கொழும்பு பகுதியினை சேர்ந்த குறித்த முஸ்ஸிம் நபர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸர் தெரிவித்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் 14 பேர் கைது!!

வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் பூவரசன்குளம், நெளுக்குளம் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 14 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், ஹயஸ் ரக வான் ஓன்றினையும் தடுத்து வைத்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சுற்றி வளைப்பு செய்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 11 பேரை கைது செய்ததுடன், சந்தேகத்தின் பேரில் ஹயஸ் ரக வான் ஓன்றினையும் கைப்பற்றி தடுத்து வைத்துள்ளனர்.

வவுனியா நகர் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் கடும் சோதனை!!

வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதிகளில் வீதிகள் தடை செய்யப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் கடும் சோதனையின் பின் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இச்சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் வான் ஒன்று கைப்பற்றப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையானது இரகசிய தகவல் ஒன்றையடுத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பள்ளிவாசலுக்குள் பலத்த சோதனைக்குப் பின்னர் அனுமதி!!

வவுனியா நகரில் அமைந்து பெரிய பள்ளிவாசலுக்குள் இன்று (26.04.2019) மதியம் பொலிஸாரின் பலத்த சோதனைக்குட்படுத்தபட்டு அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாசலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா பெரிய பள்ளிவாசலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பொலிஸாரின் பலத்த சோதனைக்கு பின்னரே உள்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தலைக்கவசம், பொதிகள், பைக் போன்றன பள்ளிவாசலுக்குள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் 15நிமிடங்கள் மாத்திரமே தொழுகையும் நடைபெற்றிருந்தது.

பள்ளிவாசலினை சூழவுள்ள பகுதிகளில் அதிகளவிலான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் அவ்விடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் இரானுவத்தினர் தடை விதித்திருந்தனர்.

வவுனியாவில் மக்களால் இறந்தவர்களிற்கு உணர்ச்சி பூர்வமான அஞ்சலி!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்து பாதிக்கபட்ட அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வும் பிரார்த்தனையும் வவுனியா ஸ்ரீநகர் கிராம மக்களால் இன்று (26.04.2019) அனுஸ்டிக்கபட்டது.

ஸ்ரீ சனசமுக நிலைய வளாகத்தில் காலை குறித்த அஞ்சலி நிகழ்வு அனுஸ்டிக்கபட்டது. இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தபட்டதுடன், மெழுகுவர்தி ஏற்றி, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், பிரதேசசபை உறுப்பினர் த.யோகராசா, ஆசிரியர்களான திருமதி ஸ்ரீரஞ்சன், சோ.சுபாஜினி, லயன்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் லி.சிவச்செல்வன், கிராம அபிவிருத்திச் சங்கத்தை சார்ந்த ஜிந்துசன், சார்லஸ், மற்றும் இளைஞர்கள்,பெண்கள், தாய்மார்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வவுனியா குருமன்காட்டில் தனிமையில் நின்ற மோட்டார் சைக்கிலினால் பதற்றநிலை : பொலிஸார் குவிப்பு!!

வவுனியா குருமன்காடு சந்தியில் தனிமையில் நின்ற மோட்டார் சைக்கிலினால் இன்று (26.04.2019) காலை 7 மணியளவில் அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டது.

குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றிக்கு முன்பாக மோட்டார் சைக்கில் ஒன்று தனிமையில் நிற்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது குறித்த அச்சகத்திற்கு அருகேயுள்ள வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வி காணோளியினையும் பொலிஸார் சோதனையிட்டனர். அதன் பின்னர் குறித்த அச்சக நிலையத்தின் உரிமையாளருக்கு பொலிஸார் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

குறித்த மோட்டார் சைக்கில் தனது நண்பனது அவர் வேறு இடத்திற்கு செல்வதற்காக இவ்விடத்தில் தரித்து விட்டு சென்றதாக குறித்த அச்சக நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரிடம் வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்ட பொலிஸார் மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலிலேயே விட்டு சென்றனர்.

மோட்டார் சைக்கில் மற்றும் வாகனங்களை நீண்ட நேரம் வீதியில் தரித்து விட்டு செல்லும் சமயத்தில் பெயர், தொலைபேசி இலக்கங்களை ஒட்டி விட்டு செல்லுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா தெற்கு பிரதேச சபையில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா தெற்கு பிரதேச சபை முன்றலில் இன்று (25.04.2019) காலை 10 மணியளவில் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தலமையில் நடைபெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் முதலாவது சுடரினை தவிசாளர் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் தவிசாளரின் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு பிரதேச சபையில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் பிரதேசசபை கொடி மற்றும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் அவசர கோரிக்கை : தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்!!

பொலிஸார் அவசர கோரிக்கை

கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

குறித்த நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களே பொலிஸாரினால் தேடப்படுகின்றனர்.

இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 0718591771, 0112422176, 0112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களில் அப்துல் காதர் ஃபாத்திமா காதியா என்பவர் தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புலஸ்தீனி ராதேந்திரன் என்ற சாரா, நீர்கொழும்பு – கட்டுவாப்பட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் தலைமறைவான சஹ்ரான் ஹசீம்!!

சஹ்ரான் ஹசீம்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரி எனக் கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் சஹரான் ஹசீம், தாக்குதல் சம்பவங்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தமது குடும்பத்தினருடன் தலைமறைவானதாக அவரது சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சஹரான் ஹசீமின் சகோதரியான மொஹமட் ஹசீம் மதானியா வெளிநாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்றிடம் இதனை கூறியுள்ளார். கடந்த 18 ஆம் திகதி காத்தான்குடியில் உள்ள வீட்டுக்கு சென்றேன். பெற்றோருக்கு உணவு கொடுப்பதற்காக அங்கு சென்றிருந்தேன்.

எனினும் வீட்டில் எனது, தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் மற்றும் சஹரான் ஹசீமின் குடும்பத்தினர் எவரும் இருக்கவில்லை. அதன் பின்னர் அவர்கள் காணாமல் போயிருந்தனர். கடந்த 18 ஆம் திகதியில் இது அவர்கள் பற்றி எந்த தகவலும் எமக்கு கிடைக்கவில்லை.

இறைவன் உலகத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே படைத்திருப்பதாக சஹரான் கூறுவார். அவரது பல கொள்கைகளுடன் எனது கணவர் இணங்கவில்லை. இதனால், எமது குடும்பம் சஹரான் ஹசீம் குடும்பத்துடனான தொடர்புகளை துண்டித்துக்கொண்டது எனவும் மதானியா தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் : கிளிநொச்சியில் அறுவர் அதிரடியாக கைது!!

அறுவர் அதிரடியாக கைது

கிளிநொச்சியில் இன்று(25.04) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து நாடாளவிய ரீதியில் தேடுதல்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்படி ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வியாபார நிலையங்கள் நடாத்திவரும் நான்கு பேரும், கிளிநொச்சி ஏ9 வீதியில் தும்பினி விகாரைக்கு அருகில் ஒருவரும், கனகாம்பிகைகுளம் பிரதேசத்தை சேர்ந்து ஒருவரும் என ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு சில முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுவதாக தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கொழும்பின் இரு பிரதான பகுதிகளில் தற்கொலைதாரியின் லொறி சிக்கியது!!

லொறி சிக்கியது

ஷங்கிரி-லா ஹோட்டல் மீது தற்கொலை குண்டு தாக்கிய நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த லொறி ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறியே இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதேவேளை, லொறியில் வெடி பொருட்கள் இருந்ததா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்று கொழும்பில் சுற்றிவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மௌலவி ஓருவரை தேடி பொலிசார் வலைவீச்சு!!

மௌலவி முனாஜித்..

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நாட்டில் நிலப்பரப்பை கோரி இஸ்லாமிய மக்கள் போரில் ஈடுபடவில்லை எனவும் பொறுமையின் எல்லை தாண்டியுள்ளதால், போராட்டம் நடத்தி இஸ்லாமியர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என மௌலவி அந்த காணொளியில் கூறியிருந்தார்.

இந்த காணொளி தொடர்பாக பல தரப்பினர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், செட்டிக்குளம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.

வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த முனாஜித் என்ற மௌலவியே சமூக வலைத்தளத்தில் இந்த காணொளியை வெளியிட்டிருந்தார். 8 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய மௌலவி பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய வவுனியா மற்றும் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த மௌலவி தௌஹீத் ஜமாத் அமைப்பினை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ள பொலிஸார்!!

அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார், நீர்கொழும்பு புனித செபஸ்தியார் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயங்கள் உட்பட பல இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தன.

அன்றைய தினம் பதுளை புனித மரியாள் தேவாலயம் மற்றும் மார்க் தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பை மேற்கொள்ள வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்கள் நடமாடும் காட்சிகள் இந்த தேவாலயங்களில் உள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.

ஒரு நபர் பையொன்றை தோளில் போட்டவாறு வரும் காட்சியும் மற்றைய நபர் அதனை உன்னிப்பாக அவதானிக்கும் காட்சியும் கமராக்களில் பதிவாகியுள்ளது. ஒரு தேவாலயத்தில் தாக்குதல் இலக்கு தவறியதால், மற்றைய தேவாலயத்திற்கு செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.

கொழும்பில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்ததையடுத்து உடனடியாக செயற்பட்ட பதுளை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தேவாலயங்களுக்கு சென்று ஆராதனைக்கு வந்திருந்த மக்களை திருப்பி அனுப்பியதுடன் பங்கு தந்தைகளுக்கும் தெளிவுப்படுத்தியிருந்தனர்.

இதனால், குண்டுதாரிகளின் தாக்குதல் இலக்கு தவறியுள்ளதாக நம்பபடுகிறது. இந்த சந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதுளை தலைமையக பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பதுளை புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிப் பிரயோகம்!!

பாக்கிப் பிரயோகம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவர் கவசத்துடன் கூடிய ஆடையொன்றை அணிந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளனர்.

எனினும் சோதனை செய்வதற்கு அவர் மறுத்துள்ளார். இதனையடுத்து விமான படையினர் நிலத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இறுதியில் முதுகு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் காரணமாக பாதுகாப்பான ஆடை அணிந்திருப்பதாக குறித்த பயணி தெரிவித்துள்ளார்.

விமான படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால், விமான நிலைய நுழைவுப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐ.எஸ். தற்கொலை குண்டுதாரிகள் மேலும் தங்கியிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக சோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு குண்டு வெடிப்பில் பலியான இளம் குடும்பஸ்தருக்கு பெருந்திரளானோர் கண்ணீர் அஞ்சலி!!

இளம் குடும்பஸ்தருக்கு  கண்ணீர் அஞ்சலி

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்ட சடலங்கள், இறுதிக் கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த கிருஸ்ணமூர்த்தி தயானந்தனின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.

33 வயதான கிருஸ்ணமூர்த்தி தயானந்தன் மஸ்கெலியா – லக்ஸபான, வாழமலை தோட்டத்தை சேர்ந்தவர். இவர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் கடந்த 21ஆம் திகதி கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விசேட ஆராதனைகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின்போதே கிருஸ்ணமூர்த்தி தயானந்தன் பலியாகியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நேற்று முன் தினம் இரவு மஸ்கெலியா – வாழமலை தோட்டத்திலுள்ள அன்னாரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இடம்பெற்ற இறுதி கிரியைகளின் பின்னர் கிருஸ்ணமூர்த்தி தயானந்தனின் சடலம் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறுதி கிரியைகளிலும், சடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட நிகழ்விலும் பெருந்திரளான மக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வவுனியா நகரில் பொலிசார் கடும் சோதனை நடவடிக்கை : அச்சத்தில் மக்கள்!!

கடும் சோதனை நடவடிக்கை..

வவுனியா நகரிலும் அதை சூழவுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வீடுகளில் வவுனியா பொலிசார் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் தொடர் குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் சந்தேகத்திற்கிடமானவர்கள், ஊருக்கு புதியவர்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான அல்லது மூடிக்கிடக்கும் வீடுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு பொலிசாரால் வவுனியாவில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமானவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதனை செய்யப்பட்டு கிராம உத்தியோகத்தரினால் பதிவு செய்யப்படும் நடவடிக்கைகளும் ஒவ்வோரு கிராமசேவகர் பிரிவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனது.