மனிதவெடிகுண்டாக மாறி பெண்ணை கட்டிபிடித்த நபர் : இருவரும் உடல் சிதறி பலி!!

கேரளாவில் திருமணமான பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் நபர் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று தானும் உடல் சிதறி இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தின் நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர். இவர் மனைவி அமினா (37). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நாசர் அதே பகுதியில் கணினி மையம் வைத்துள்ளார். அதன் அருகில் பென்னி (47) என்பவர் நாற்காலி வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு நாசர் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்ற நிலையில் அவரது வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது பென்னி மற்றும் அமினா ஆகியோர் உடல் சிதறி இறந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து பொலிசார் விசாரித்த போது நாசரின் மனைவி அமினா மீது பென்னிக்கு காதல் மலர்ந்துள்ளது.

ஆனால் இந்த காதலை அமினா ஏற்கவில்லை, இதனால் ஆத்திரமடைந்த பென்னி அமினா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அங்கு சென்றார்.

பின்னர் தனது உடலில் தயாராக கட்டி வைத்திருந்த வெடிகுண்டை அமினாவை கட்டிபிடித்த நிலையில் வெடிக்க செய்துள்ளார். இதில் இருவரும் உடல் சிதறி பலியானது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கட்டுநாயக்கவில் பாதுகாப்புக் கருதி முக அடையாள அமைப்புக்கருவிகள்!!

கட்டுநாயக்க விமானத்தளத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு Facial Recognition System (FRS) என்ற முக அடையாள அமைப்புக்கருவிகள் நிறுவப்படவுள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து இந்த கருவிகளை , ஐக்கிய நாடுகளின் போதைவஸ்து மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் இதனை அன்பளிப்பாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

இது ஏனைய நாடுகளில் சுங்கப்பிரிவினருக்கு சிறப்பான பயன்பாட்டை தந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த கருவிகளை பொருத்துமாறு ஏற்கனவே இலங்கையிடம் கேட்டுக்கொண்டபோதும் அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை.

இந்தக்கருவிகள் மூலம் விமான நிலையத்தில் இருந்து தப்பிச்செல்ல முயலும் எவரையும் கண்டுபிடிக்கமுடியும்.

இந்த கருவிகளின் மூலம் போலிக்கடவுச்சீட்டுக்களை பயன்படுத்துவோரை இலகுவில் கண்டறியமுடியும்.

இந்தக்கருவிகளை பொருத்தும்போது அதனுடன் இணைந்து 10 உயர்தொழில்நுட்ப புகைப்படக்கருவிகள் உள்ளடங்கவுள்ளன.

இவை மென்பொருளுடன் இணைக்கப்பட்டு ஆள்அடையாளங்கள் தெளிவாக காட்டப்படுகின்றன.

ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்னர் பங்களாதேஸ் விமான நிலையத்தில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இலங்கையை அச்சுறுத்திய பிரதான தற்கொலை குண்டுதாரியின் மனைவி மற்றும் மகள் கைது!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட பிரதான தீவிரவாதியின் மனைவி மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் சாய்ந்தமருதுவில் வைத்து கைது செய்யப்ட்டுள்ளனர்.

கல்முனை பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தினால் படுகாயமடைந்த சிறுமி மொஹமட் சஹ்ரானின் மகள் எனவும் பெண் அவரது மனைவி எனவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த 26ம் திகதி சிறப்பு அதிரடி படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கல்முனை பிரதேசத்தில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

26 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு பாதுகாப்பான வீட்டில் இருந்து துப்பாக்கி சூடு மற்றும் குண்டுவெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை பாதுகாப்பு படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி பாதுகாப்பான வீடுகளை சோதனையிடும் போது அந்த வீட்டில் இருந்து ஆண், பெண்கள் உட்பட சிறுவர்களின் 15 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அந்த வீடடில் இருந்து காயங்களுக்குள்ளாக்கப்பட்ட 4 வயதுடைய சிறுமி மற்றும் பெண்ணொருவர் இராணுவத்தினரால் கல்முனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்பினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயதுடைய சிறுமியான மொஹமட் சஹ்ரான் றுசைனா என்பர் சஹ்ரானின் மகள் எனவும், காயமடைந்த பெண்ணான அப்துல் காதர் பாத்திமா சாதியா என்பர் அவரின் மனைவி எனவும் விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்

மொஹமட் சஹ்ரான் தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரும் கொழும்பு, சங்கரில்லா ஹொட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

யாழில் வீட்டினுள் தோண்டப்பட்ட (Underground) கிணறு கண்டுபிடிப்பு!!

யாழ்.ஐந்து சந்தி பகுதியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவதும் தேடுதல் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அப்பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட போது வீட்டினுள் நிலபதிப்பின் கீழ் (மார்பிள்) கிணறு ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

வீட்டினுள் கிணறு தோண்டப்பட்டு அதன் மீது மார்பிள் பதித்து மறைத்து கிணற்றினை பயண்படுத்தி வந்துள்ளனர். குறித்த கிணறு தொடர்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இந்த தேடுதலில் போதே அதேப் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் நிலக்கீழ் தளம் (Underground) கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வாளுடன் இளைஞன் கைது!!

யாழ். நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்தில் வீச முற்பட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவாந்துறையில் இன்று அதிகாலை முதல் படையினர் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே சந்தேகநபர் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வாளை குளத்துக்குள் வீச முற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டுள்ளார். அதனால் சந்தேகநபர் அதனை கீழே போட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், வாளுடன் சந்தேகநபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தேடப்பட்டு வந்த ஐஎஸ் அமைப்பின் பெண் தீவிரவாதி கைது!!

பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் என கருதப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மாவெனெல்ல – மாரவில பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்னர். 500 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சந்தேகிக்கப்படும் சிலரின் புகைப்படங்களை வெளியிட்டிருந்த பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியிருந்தனர்.

மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களே பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களாகும்,

இந்நிலையிலேயே, பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பாத்திமா லதீபா என்ற பெண் மாவெனெல்ல – மாரவில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

கடையை பூட்டிவிட்டு கடைக்குள் தலைமறைவாகியிருந்த இரு சகோதரர்களும் பிடிபட்டது எவ்வாறு?

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்கள் இன்று அதிகாலை நாவலப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குண்டுவெடிப்பினை மேற்கொண்டு தலைமறைவாகியிருந்த இரண்டு பிரதான சந்தேக நபர்கள் உட்பட சந்தேக நபர்கள் பயணித்த வேன் வண்டியும் வேன் வண்டியினை செலுத்திய சாரதியோடு மூன்று பேர் நாவலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து நாவலப்பிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல், அரபி முஸ்லிம் பாடசாலை போன்ற சந்தேகமான இடங்களை நேற்று நாவலப்பிட்டி பொலிஸார், இராணுவத்தினர், விஷேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகமான முறையில் வேன் வண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, வேன் வண்டியின் சாரதியையும் நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யபட்ட வேன் சாரதியிடம் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்த வேன் யாருடையது இந்த வேனில் பயணித்தவர்கள் யார் என விசாரணைகளை மேற்கொண்ட போதே கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பிரதான குண்டுதாரிகள் இருவர் கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தலைமறைவாகியுள்ளதாகவும் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நான் தான் குறித்த வேன் வண்டியில் ஏற்றி வந்ததாகவும் இவர்கள் இரண்டு பேரும் சகோதரர்கள் என பொலிஸாருக்கு குறித்த வேன் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சாரதியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கம்பளை பகுதியில் உள்ள பாதணி விற்பனை நிலையத்தினை நாவலப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்த போதும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டு இருந்தது இதன் போது குறித்த வர்த்தக நிலையத்தில் போடப்பட்டிருநத பூட்டினை உடைத்து பாதணி விற்பனை நிலையத்திற்குள் புகுந்த பொலிஸார் இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நிலத்தின் கீழான பதுங்கு குழி ஒன்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புடன் பூஜை வழிபாடுகள்!!

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினசரி ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாட்டினையடுத்து வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் வழமையினை விட அதிக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் , வவுனியா புனித சூசையப்பர் தேவாலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்துடன் தேவாலயத்தினுள் உள்செல்லும் அனைவரும் பொலிசாரின் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

அத்துடன் ஆலயத்தினுள் செல்வதற்கு ஆலய நிர்வாகத்தினால் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது

குறிப்பாக பாதுகாப்பு பணியில் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் , இரானுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் பெரும்பாலான தேவாலயங்களில் வழிபாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது.

வவுனியா பஜார் வீதி இரானுவத்தினர் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் : சோதனைகள் தீவிரம்!!

வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து பஜார் வீதியூடாக பள்ளிவாயில் வரையிலான பகுதியில் இன்று (28.04.2019) காலை 9.30 மணி தொடக்கம் இராணுவத்தினரும் பொலிசாரும் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் வீதிகள் தடை செய்யப்பட்டு உள்செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் பலத்த சோதனை நடவடிக்கைகளுக்கு உள்படுத்தபட்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டிகளின் ஆசனங்கள் , முன் பெட்டி அனைத்தும் சோதனைக்குட்படுத்தபடுவதுடன் கார் மற்றும் மோட்டார் சைக்கில்களின் பொதிகள் வைக்கும் பகுதியினை திறந்து பொலிஸார் சோதனைக்குட்படுத்துகின்றனர்.

இச் சோதனை நடவடிக்கையின் போது அடையாள அட்டையின்றி முச்சக்கரவண்டியில் பொருட்களை ஏற்றிச்சென்ற முச்சகரவண்டியின் சாரதியினை பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியினை நேற்றையதினம் (27.04.2019) இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையின் போது 11 ஆண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸ் விசாரணையின் பின் இருவர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வெடித்துச் சிதறிய தற்கொலை குண்டுதாரி : மற்றுமொரு காணொளி வெளியானது!!

கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது.

கின்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரின் காணொளியை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கொழும்பில் பிரதான மூன்று ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 30 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கிறிஸ்தவர்களையும் வெளிநாட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே இந்த தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் நேற்று தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வெளியிட்ட அதிர்ச்சிக் காணொளி!!

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மோதல் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தற்கொலை தாக்குதல் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று சிறப்பு அதிரடி படையினரால் முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்தே இந்த கும்பல் காணொளியை வெளியிட்டுள்ளது.

அவர்களின் முழுக் குடும்பமும் ஆயுதங்களுடன் கூட்டாக இந்த காணொளியை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த காணொளி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய தாக்குதலில் ஆறு ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் கடந்த இரு நாட்களில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் சோதனையில் 14 பேர் கைது!!

வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் பூவரசன்குளம், நெளுக்குளம் பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 14 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், ஹயஸ் ரக வான் ஒன்றினையும் தடுத்து வைத்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகரப் பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சுற்றிவளைப்பு செய்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 11 பேரை கைது செய்ததுடன், சந்தேகத்தின் பேரில் ஹயஸ் ரக வான் ஓன்றினையும் கைப்பற்றி தடுத்து வைத்துள்ளனர்.

அத்துடன், அரபாநகர் பகுதியில் சுற்றித்திரிந்த முஸ்ஸிம் நபர் ஒருவரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரிடம் அடையாள அட்டை இருக்கவில்லை. அதன் பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது அவரது வீட்டிலிருந்து இராணுவ சீருடையை ஒத்த தொப்பி மற்றும் ஆடை என்பவற்றை கைப்பற்றியதுடன் குறித்த நபரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் மன்னார் பகுதியில் இருந்து பூவரசன்குளத்தில்
வந்து நின்ற ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பூவரசன்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இராசேந்திரங்குளம் பகுதியில் சந்தேகத்திடமான முறையில் திரிந்த நபரை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் அவரின் ஆள் அடையாள அட்டை பதிவு நீர்கொழும்பு என காணப்பட்டதுடன் பொலிஸாரின் விசாரணைகளின் போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தமையினால் நீர்கொழும்பு பகுதியினை சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான காரை கண்டுபிடித்த விமானப்படையின் மோப்ப நாய்!!

 

கொழும்பு பம்பலப்பிட்டி ஓஷன் டவர் கட்டிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை விமானப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

விமானப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவின் மர்லி என்ற மோப்ப நாய் கட்டிடத்தில் இருந்த இந்த காரை இன்று அடையாளம் கண்டுள்ளது.

தேடுதல் நடத்தப்பட்ட போது மர்லி என்ற இந்த மோப்ப நாய் காருக்கு அருகில் சென்று நின்று தொடர்ந்தும் மோப்பம் பிடித்துள்ளது. இதற்கு அமைய காரின் உரிமையாளர் உட்பட நான்கு பேரை விமானப்படையினர் கைது செய்து, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பம்மைபடுவில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு சோதனைச்சாவடி : அச்சத்தில் மக்கள்!!

 

வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் கடும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கை மேற்கோள்ளபட்டு வருகின்றது. இதன் நிமித்தம் வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் செல்லும் பயணிகள் இறக்கி விடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே வாகனங்களில் பயணம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர்.

பயணிகள் கொண்டு செல்லும் பொதிகள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கபட்டு வருவதுடன், மாலை 6 மணிக்கு பின்னர் பம்பைமடு ஊடாக ஈச்சங்குளம் செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்தும் தடைசெய்யபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் வெடித்து சிதறிய 6 தற்கொலை குண்டுதாரிகள்!!

 

கல்முனை – சாய்ந்தமருதில் 6 தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 15 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

மோதல் காரணமாக படுகாயம் அடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேரக தெரிவித்துள்ளார்.