அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை நாய் : நட்சத்திர ஹோட்டலுக்குள் சிக்கிய வெடிபொருள்!!

இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் பெரும் பீதியில் மூழ்கியுள்ளது.

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

பல இடங்களில் வெடிகுண்டுகள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலான குண்டுகளை இராணுவத்தின் K-9 விசேட பிரிவின் மோப்ப நாயான ‘பிராங்க்’ மோப்பம் பிடித்து கண்டுபிடித்துள்ளது.

இலங்கை பொலிஸாருடன் இணைந்து சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த நாயின் செயற்பாடு குறித்து வியப்பு அடைந்துள்ளனர்.

மனிதர்களை விடவும் மிகவும் அபாரமான முறையில் குண்டுகளை இனங்கண்டுபிடித்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அமெரிக்க வெடிபொருள் நிபுணர் ஒருவரின் பொதியில் வெடிபொருள் இருந்தமை குறித்து மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அமெரிக்க வெடிபொருள் நிபுணர் ஒருவரின் அறையை மோப்பநாயான ‘பிராங்க்’ மோப்பம் பிடித்துள்ளது.

குண்டுவெடிப்பு விசாரணைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க நிபுணர் வந்திருந்தார். அவரது அறையில் இருந்த இயந்திரம் ஒன்றில் சிறிதளவு வெடிபொருள் இருந்தமையினால், அதை மோப்பம் பிடித்தே பிராங்க் குறித்த அறையை அடையாளம் காட்டியுள்ளது.

இதன்போது குறித்த அமெரிக்க நிபுணர் வெளியில் சென்றிருந்ததால் அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொண்டு குறித்த அதிகாரி வரவழைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் சிறிதளவு வெடிபொருள் ஒட்டிக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மோப்ப நாயின் அபார திறமை குறித்து அமெரிக்க அதிகாிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியா கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு!!

வவுனியா கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளது

வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பொலிசார், புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் இணைந்து இன்று மாலை விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன் போது தாவூத் முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசல கூடத்தினை சோதனையிட்ட சமயத்தில் மலசல கூட தாவாரதில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கைக்குண்டு, மூன்று மிதிவெடி, பதினைந்து தோட்டாக்கள், இரண்டு ஆர்பிஐி குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் குறித்த நிலையத்தின் உரிமையாளரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த உணவகம் தொடர்பாக அண்மைகாலமாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட 44பேர் சீஐடியினரிடம் ஒப்படைப்பு : விசாரணைகள் தீவிரம்!!

குண்டுத் தாக்குதல்களையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 44 பேர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களையடுத்து நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

இதன்போது பலர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கையில்,

பயங்கரவாதத் தாக்குதலையடுத்து நாட்டில் பாதுகாப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினராலும், 15 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினராலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸ் மற்றும் முப்படையினர் ஆகியோர் இணைந்து இதனை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் மர்மப் பொதியினால் பரபரப்பு : 30 நிமிடம் போக்குவரத்துத் தடை!!

வவுனியா ஏ9 வீதி, சாந்தசோலை சந்தியில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில் காணப்பட்ட மர்மப் பொதி ஒன்றினால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பதற்றமான நிலமை காணப்பட்டதுடன், 30 நிமிடங்கள் ஏ9 வீதி போக்குவரத்தும் தடைப்பட்டது.

ஏ9 வீதி சாந்தசோலை சந்தசோலை சந்தியில் உள்ள பேரூந்து தரிப்பிடத்தில் மர்மப் பொதி ஒன்று கிடப்பதாக 3.15 மணியளவில் இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் பதற்றமான நிலை காணப்பட்டது.

ஏ9 வீதி போக்குவரத்தினை தடை செய்த இராணுவத்தினர் குண்டு செயலிழக்கச் செய்யும் படைவீரர்களின் உதவியுடன் குறித்த மர்மப்பொதியை சோதனை செய்தனர்.

இதன்போது குறித்த பொதியில் வெடிபொருட்கள் எவையும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பொதியினை அவ்விடத்தில் வைத்து விட்டு யாழ் நோக்கிச் சென்ற பேரூந்து ஒன்றினை தவற விட்டதால் விரட்டிச் சென்றதாகவும், அப் பொதி தன்னுடையது எனவும் ஒரு இளம் குடும்பத்தினர் வருகை தந்து குறித்த பொதியினை இராணுவத்தினரிடம் உரிமை கோரினர்.

இதனையடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்த இராணுவத்தினர் குறித்த பொதியை அவர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் காரணமாக ஏ9 வீதி போக்குவரத்து சுமார் அரை மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

இதேவேளை வீதி ஓரங்களில் எந்தவொரு பொதியினையும் வைக்க வேண்டாம் எனவும், வாகனங்களை அடையாளப்படுத்தாது நிறுத்த வேண்டாம் எனவும் இராணுவத்தினர் அறிவுறுத்தினர்.

கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு!!

கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி கிளிநொச்சி பொலிஸாரும், படையினரும் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிடமான கையடக்க தொலைபேசிகள், கமரா மற்றும் துப்பாக்கி ரவைகள் போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

பொருட்கள் இரும்புடன் கலந்து வந்திருக்கலாம் எனவும் கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு, சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நாவற்குடாவினை சேர்ந்த ரஞ்சித் சுரங்க நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கல்லடி – வேலூர் பகுதியை சேர்ந்த பிரசாந் கிருஜா எனும் 35 வயதுடைய பெண் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரங்க என்பவரின் மனைவி குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகளும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இவ்விரு உயிரிழப்புக்கள் மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 28ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் நிரந்தரமாக நிறுத்தப்படும் சாத்தியம்!!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உள்ளதாக இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கவில்லை என்றால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடு பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே அந்த நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு சேவை வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

போலிப் பிரச்சாரங்கள் பரவுகின்றது என கூறி அரசாங்கம், சமூக வலைத்தளங்களை முடக்காமல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறுபிள்ளைகளுக்கு உட்பட இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பாடசாலைகளில் ICT பாடங்களின் போது இதனை தெளிவுபடுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா பட்டக்காடு பகுதியில் வீடுகளுக்குள் இரானுவத்தினர் புகுந்து திடீர் சோதனை!!

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இலங்கை முழுவதும் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று (29.04.2019) காலை 8.30 மணி தொடக்கம் 9.30 மணி வரை சுமார் ஒரு மணிநேரம் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் இருபதுக்கு மேற்பட்ட பொலிஸாருடன் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

அப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்குள் பொலிஸாருடன் இரானுவத்தினர் இணைந்து சென்று அலுமாரி, கட்டில் பின்பகுதி, கூரையின் பகுதி, அனைத்து அறைகள், வீட்டின் வெளிப்பகுதி போன்ற அனைத்தையும் சோதனைக்குட்படுத்தியதுடன் அடையாள அட்டையினை பதிவினையும் மேற்கொண்டனர்.

எனினும் இச் சோதனை நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனை!!

தொடர் குண்டுவெடிப்பில் மரணித்த பொதுமக்களின் ஆத்மசாந்தி வேண்டிய விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் வேப்பங்குளம் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இன்று (28.04.2019) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

மரணித்த உறவுகளுக்கு சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி மரணித்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தனர்.

இவ் ஆத்மசாந்தி மற்றும் அஞ்சலி நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அருட்சகோதரி, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆத்ம சாந்திபிப் பிரார்த்தனை!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி வேண்டியும் காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டியும் வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனை இன்று(28.04) காலை இடம்பெற்றது.

ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இப்பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய நினைவுத்தீபம் பொதுமக்களால் ஏற்றப்பட்டதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆலய பரிபாலன சபைத்தலைவர் எஸ்.வசீகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா அந்தணர் ஒன்றிய ஆலோசகரும் போசகருமாகிய முத்து.ஜெயந்திநாதக்குருக்கள் ஆலய குரு கந்த.துஷியந்த குருக்கள் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிறைசூடி இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் கிராம அலுவலர் பரராஜசிங்கம் பரிபாலன சபையினர் பொதுமக்கள் அறநெறி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையை உலுக்கிய தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண் : கைகொடுத்த அவுஸ்திரேலியா!!

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணுக்கு எல்லா உதவியும் செய்வோம் என அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தலைவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில் இலங்கையை சேர்ந்த ஜீவனா என்ற இளம்பெண்ணின் பெற்றோரும் பலியானார்கள்.

இந்நிலையில் ஜீவனாவுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தலைவர் அன்னஸ்டசியா பலஸ்சுக் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈஸ்டர் தினத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஜீவனா தனது பெற்றோரை இழந்துள்ளார்.

அவருக்கு எல்லா உதவியும் செய்வதோடு குயின்ஸ்லாந்து துணையாக இருக்கும்.

இலங்கை சமுதாயத்துடன் சேர்ந்து இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

கொழும்பு குண்டு வெடிப்பில் மகளை பறிகொடுத்த இஸ்லாமியர் : அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் செல்லும் பரிதாபம்!!

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் மகளை பறிகொடுத்த இஸ்லாமிய தந்தை, கண்ணீர்விட்டு வேதனையுடன் கூறியுள்ளார்.

தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் பலர் இறந்துள்ளனர். இதனால் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் அவர்களை தினமும் எண்ணி கண்ணீர்விட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இஸ்லாமியர் முகமது அரோசின் மகள் பாத்திமா அஸ்லா பலியாகியுள்ளார்.

இவர் தனது மகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய பெயர் அரோஸ், மனைவியின் பெயர் ரிவ்டா, மூத்த மகளின் பெயர் பாத்திமா அப்ரா, இப்போது இறந்திருப்பது பாத்திமா அஸ்லா, மோகன் அர்ஸத் என்ற மகன் இருக்கிறான் என்று கூறியுள்ளார்.

கிறிஸ்துவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட இவர், மனைவி வீட்டாரின் விருப்பத்தின் படி தனது பிள்ளைகளை நீர்கொழும்பில் உள்ள தேவாலயத்திற்கு அனுப்பி வந்துள்ளார், அங்கு தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அவரின் மகள் இறந்துள்ளார்.

2 மாதங்களாக வீடு திரும்பாத காதல் மனைவி : உருக்கமான கடிதம் எழுதிவிட்டு கணவன் எடுத்த முடிவு!!

தர்மபுரியில் காதல் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதால், விரக்தியில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (26) என்பவர் தன்னுடைய கல்லூரி காலத்தின் போது, ஜெயபிரியா என்பவரை காதலித்துள்ளார்.

இவர்களுடைய திருமணத்திற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து பெண் வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய பொலிஸார் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் தங்கி படித்து வந்த தம்பியின் அறைக்கு சென்ற சசிகுமார், ஆள் இல்லாத சமயம் பார்த்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும்போது சசிகுமார் எழுதிய வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், நானும் எனது மனைவி ஜெயபிரியா என்பவரும் 4 வருடங்களாக காதலித்து 17.7.2017 அன்று திருமணம் நடந்தது.

அந்த திருமணம் பல பிரச்சினைகளை கடந்த காதல் திருமணம். எங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருந்தது.

திருமண வாழ்க்கை 2 வருடம் அதில் ஒரு குழந்தை உருவாகி அந்த குழந்தை 4 மாதம் இருந்து இதயதுடிப்பு இல்லை என்று கருக்கலைப்பு செய்யப்பட்டது.

அதற்கு பின்பு எனது மனைவியை இன்னும் அதிகமாக நேசித்தேன். எனக்கும், ஜெயபிரியாவுக்கும் எந்தவித சண்டையும் வந்தது இல்லை. அவள் கோபப்படுவாள் ஆனால், 5 நிமிடத்தில் சரியாகிவிடும்.

எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் 4.2.2019 தான். அன்று வேலையின் காரணமாக நான் வெளியூருக்கு சென்று விட்டேன். எனது மனைவி 6.2.2019 அன்று எனக்கு செல்போனில் தொடர்புக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு செல்வதாக கூறினாள். திருமணம் முடிந்து 2 வருடம் ஆகிறது. எனவே, அங்கு உள்ள பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றாள். நான் அப்போது வேண்டாம் என்று கூறினேன்.ஆனால் தாயாருக்கு போன் செய்து விட்டாள் என்று கூறினாள்.

அதன் பின்பு என்னையும் எனது மனைவியையும் அவரது தாயார் ஜோதி பேச அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதற்குள் அவளை அவரது சொந்த ஊரான சின்னமட்டாரபள்ளிக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

அங்கு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து வைத்தேன். ஆனால் அங்கு எனக்கு உரிய மரியாதை தரவில்லை. பின்பு தான் அவர் வீட்டிற்கு சென்று பேசலாம் என்று கருதி நான் அங்கு சென்றேன். அங்கு எனது மனைவியின் தாயார் என்னை செருப்பால் அடித்து விரட்டினார்.

எனது மனைவியை பார்த்து 3 மாதம் ஆகிறது. மீண்டும் எனது நண்பர்களை அழைத்து கொண்டு மனைவியின் தாயார் வீட்டிற்கு சென்றேன். அப்போது எனது மாமியார், மாமனார் ஆகியோர் என்னை செருப்பால் அடித்து விரட்டி அனுப்பினர். மேலும் என் மீது 3½ பவுன் நகை திருடியதாக பொய் புகார் பொலிஸில் கூறினர்.

அப்போது நான் நடத்த உண்மையை பொலிஸாரிடம் வாக்குமூலமாக கூறியதால் அவர்கள் என்னை திருப்பி அனுப்பி வைத்து விட்டனர்.

ஆகையால் நான் எனது மனைவிக்காக எல்லாத்தையும் இழந்து விட்டேன். இனி என்னால் எனது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அதிக கஷ்டம் கொடுத்துவிட்டேன். மேலும் நான் அவமானப்பட்டேன்.

இது எனது வாழ்க்கையின் இறுதி கடிதம். எனது மரணத்திற்கு முக்கிய காரணம் ஜோதி, ஓம் சக்தி மற்றும் மனைவியின் சித்தி ஆகியோர் ஆவர். எனது மனைவியிடம் என்னைபற்றி தவறாக கூறி என்னை பிரித்து விட்டனர்.

நான் எனது மனைவி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தேன். அதனால் என்னால் அவளை மறக்க முடியாது. அவள் இல்லாமல் என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது. இனி என் மனைவியின் குடும்பம் சந்தோசமாக இருக்கும். எனது குடும்பத்துக்கு என்னை பெற்றதற்காக அவமானத்தை பெற்று கொடுத்துவிட்டேன்.

எல்லாருக்கும் சாரி என்னை மன்னித்து கொள்ளுங்கள். ஜெய் மட்டும் தான் எப்பவும் நான் நினைப்பேன். நாம் சுத்தின காலங்கள் நினைவுக்கு வரும் அப்போது நான் இருக்க மாட்டேன் என எழுதியுள்ளார்.

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் : இலங்கைக்கு குழந்தையை விற்றது அம்பலம்!!

தமிழகத்தில் பிறந்த குழந்தையை அமுதா என்பவர் இலங்கைக்கு விற்றுள்ள சம்பவம் விசாரணயில் தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. ஓய்வு பெற்ற மருத்துவ தாதியான இவர் குழந்தைகள் விற்பனை தொடா்பாக பேரம் பேசிய ஓடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஓடியோவில், ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய் என்றும், பெண் குழந்தை என்றால் ரூ. 3 லட்சம் என்றும், கருப்பு நிறத்தில் குழந்தை என்றால் ஒரு விலை, நிறமான குழந்தை என்றால் தனி விலை எனவும் அவா் பேசுகிறார்.

அதுமட்டுமின்றி, 30 ஆண்டுகளாக கடவுளின் ஆசியுடன் எந்த குறையும் இல்லாமல் இந்த தொழில் நடக்கிறது. அரசு அதிகாரிகளிடம் உங்களுக்கு அந்த குழந்தை பிறந்ததாகவே சான்றிதழ் வாக்கித் தருகிறேன்.

அதற்கு தனியாக 70 ஆயிரம் ரூபாய் தாருங்கள். 70 ஆயிரம் கொடுத்தால் போதும் அரசு அலுவலகத்தில் அந்த குழந்தை உங்களுக்கு பிறந்தது போன்ற அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்குள் நான் பெற்றுத் தருகிறேன் என்று கூறியிருந்தார்.

அதை தொடர்ந்து அவர்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதில், அவர் 3 குழந்தைகளை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்தது தொடா்பாகவும் அமுதாவிடம் விசாரணை நடைபெற்றது.

சுமார் 11 மணிநேர விசாரணைக்கு பிறகு அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனை பொலிசார் கைது செய்தனர்.

அமுதாவிடம் நடத்தப்பட்ட விசாரனையில் தமிழகம் முழுவதும் பலரும் குழந்தைகளை கடத்தி விற்பனையில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் என பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை அவர் இலங்கைக்கு விற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதை அவர் ஈரோடு குழந்தைகள் விற்பனை கும்பல் மூலம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் என்னை ஆபாசமாக நடனம் ஆட வைத்தனர்…. என்னை காப்பாற்றுங்கள் : கதறிய இளம் பெண்!!

தன்னை துபாய் பாரில் ஆபாசமாக ஆட வைத்து தனது பெற்றோர் பணம் சம்பாதித்ததோடு தன்னை கொடுமைப்படுத்துவதாக சென்னையை சேர்ந்த பெண் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. சமீபத்தில் தேர்தல் நடந்ததால், இதற்காக இவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விஜயலட்சுமி மீது ஒரு புகார் எழுந்துள்ளது. பெற்ற மகளே விஜயலட்சுமி மீது அந்த புகாரை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜயலட்சுமி மகள் கேண்டி கூறுகையில், என்னுடைய அம்மா இன்ஸ்பெக்டரா இருக்காங்க. என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை வற்புறுத்தி ஒரு வருஷமாக துபாய் பார்-ல் டான்ஸ் ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள்.

ஆனால் எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. அதனால அங்கிருந்து வெளியேறி என் அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன். கடந்த 23ம் தேதி அன்று என் அம்மாவும், அப்பாவும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து சென்றார்கள்.

இதை அப்பகுதி மக்கள் எல்லாருமே பார்த்தாங்க. அவங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

என் அம்மா பொலிஸ் என்பதால் அவரை பற்றி யாரும் புகார் எடுக்க மறுக்கிறார்கள். இதனால என் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையில் என்னையும் என் அண்ணன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

வவுனியாவில் புயல் தாக்கி 15 வீடுகள் சேதம்!!

வவுனியா ஓமந்தை பர்நாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர் புளியங்குளம் கிராமத்தில் இன்று (28.04) மாலை 4 மணிக்கு புயல் தாக்கியதில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளது.

வவுனியாவில் இன்று மாலை கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இக் காற்றின் காரணமாக வாழை, பப்பாசி போன்ற பயன்தரும் மரங்கள் முறிந்து மற்றாக அழிந்து போயுள்ளன.

மழையுடன் கூடிய காற்றின் காரணமாக வீட்டின் கூரைகள் பிடிங்கி வீசப்பட்ட நிலையில் தொடர்ந்து வீடுகளில் வசிக்க முடியாத மக்கள் பனிக்கர் புளியங்குளம் அந்தோனியார் ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா தெற்கு பிரதேச சபையின் தலைவர் து.நடராஜசிங்கம் மற்றும் ஸ்ரீ ரெலோ வவுனியா மாவட்ட அமைப்பாளர் ப.கார்த்தீபன் ஆகியோர் நிலைமைகளை பார்வையிட்டதுடன் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேதமடைந்த வீடுகளுக்கு தற்காலிகமாக தரப்பாள்கள் வழங்க வவுனியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.