மொனராகலையில் இருவர் கூரிய ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவனகல – நுகேகலயாய பகுதியில் இன்று அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் 39 மற்றும் 54 வயதான நபர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். சிங்கள புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையின் 9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
35 வயதான கருண்யா சிங்காரவேல் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். குறித்த வைத்தியசாலையில் மனித வள முகாமைத்துவ பிரிவின் உதவி முகாமையாளராக செயற்பட்ட பெண்யே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தனது அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளர். சற்று நேரத்தில் 9 வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த பெண் பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மதவாச்சி மற்றும் ஆரச்சிகட்டுவை பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்தனர். மதவாச்சி – கெபிதிகொல்லேவை வீதியின் தம்மென்னாவ பகுதியில் மகிழூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.
புதுவருடத்தை முன்னிட்டு, பொருட்களை கொள்வனவு செய்து விட்டு வீடு திரும்பியவர்களே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் இருவர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது உயிரிழந்தவர்கள் 36 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சிகட்டுவை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், குழந்தை ஒன்று உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
சிற்றூர்ந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண் வெள்ளவத்தை பகுதியை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிற்றூர்தியில் பயணித்த அனைவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாதில் பெண்ணொருவர் பலியாகி உள்ளார். இந்த அனர்த்தம் காரணமாக மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.வேனும் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சபை தவிசாளர் சுரேன், வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்.
நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சினால் வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தமிழ், முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதாக 116 வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி மற்றும் லரீப் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனால் குறித்த வீட்டுத் திட்டம் பிரதேச செயலகத்தின் சிபாரிசிற்கு இணங்க வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்து மீளகுடியேறிய நிலையில் நிரந்தர வீடு இன்றி தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளில் இருந்த தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கே குறித்த வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் உள்ள பட்டக்காடு, வேப்பங்குளம், பட்டானிச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 தமிழ் குடும்பங்களுக்கும், 66 முஸ்லிம் குடும்பங்களுக்குமாக முதல்கட்டமாக 116 வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் ரூபாய் பெறுமதியான குறித்த வீட்டுத்திட்டத்திற்கான கட்டுமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வவுனியா நகர இணைப்பாளரும், நகர சபை உறுப்பினருமான அப்துல்பாரி, வவுனியா நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.லரீப் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
அத்துடன், குகன் நகர், வின்சன் கோட்டம் போன்ற தமிழ் கிராமங்களில் காணிப்பிணக்குகள் காணப்படுவதானால் அவை தீர்த்து வைக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கும் உடனடியாக வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குடிசைகளற்ற கிராமங்களை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் தமது உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக குறித்த வீட்டுத்திட்டங்களை அமைச்சர் ஊடாக பெற்றுக் கொடுத்துள்ளதாக நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி மற்றும் லரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டினை முன்னிட்டு வீட்டை சுத்தப்படுத்திய இளம் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நிக்கவரெட்டிய பகுதியில் வசிக்கும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
வைத்திய நிலையம் ஒன்றில் சேவை செய்த 23 வயதான திருமணமாக இளம் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டை சுத்தப்படுத்திய பெண்ணின் உடம்பில் திடீர் எரிச்சல் ஒன்று ஏற்பட்டுள்ள கூறிய நிலையில் உறங்க சென்றதாக பெண்ணின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அடுத்த நாள் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த மகள் தலை வலிப்பதாக கூறி இரண்டு வலி மாத்திரைகளை குடித்து விட்டு தலைக்கு எண்ணெய் பூசியுள்ளார். சற்று நேரத்தில் வாந்தி எடுத்த மகளின் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும் வைதை்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பிற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவரது உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு நிலையத்திற்கு கொண்டு செல்ல வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வெளிநடப்பு
பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டம் தொடர்பான நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வரெட்ணம் மதியழகன் வெளிநடப்பு செய்துள்ளார்.
மாகாணசபை, உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச அபிவிருத்தி ஒதுக்கீடுகளில் விகிதாசாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்குகொள்ள முடியாது என்றும்,
வெற்றிபெற்ற உறுப்பினர்களே ஒதுக்கீடுகளில் பங்குகொள்ள முடியும் என சட்டம் உள்ளதாக நகரசபை செயலாளர் தெரிவித்ததையடுத்து குறித்த கூட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வட்டாரம் ஒன்றைச் சேர்ந்த உறுப்பினர் வெளிநடப்பு செய்திருந்த நிலையில் சபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இதனையடுத்து எமது செய்திச்சேவைக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வரெட்ணம் மதியழகன், எனது வட்டாரத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக எனக்கு தெரியாமல் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அரசியல் ரீதியாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தங்களை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வரெட்ணம் மதியழகனின் குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த நகரசபை முதலாம் வட்டாரத்தை சேர்ந்த உறுப்பினர் எஸ்.காண்டீபன், நகரசபையிலிருந்து குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக இணைப்பாளர்கள் கோரப்பட்ட நிலையில் நான் இணைப்பாளர்களை தெரிவு செய்து வழங்கியிருந்தேன் என தெரிவித்தார்.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக விகிதாசாரத்தின் மூலம் நகரசபைக்கு தெரிவாகியிருந்த உறுப்பினர்களான சமந்தா ஜெபராணி மற்றும் எஸ்.பாலபிரசன்னா ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
வவுனியா கற்குழி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்தவிடயம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலிற்கமைய கற்குழி பகுதிக்கு சென்ற பொலிசார் 23 வயதான இளைஞர் ஒருவரிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அவரிடமிருந்து 512 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியிருந்தனர்.
கைதுசெய்யபட்டவர் இன்றயதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. குறிப்பாக பாலாவின் பிதாமகன் படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது.
பிறகு பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்ட இவர் மீது இவரது தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்புகாரில், வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்துவரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார் என் மகள் சங்கீதா என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்ப, இரு தினங்களுக்கு முன் கணவர் க்ரிஷுடன் ஆணையத்தில் ஆஜரானார் சங்கீதா.
இந்த புகார்க்கான காரணம் என்னவென்றால், சங்கீதா பேரில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை தன் அண்ணன் தம்பிங்க அபகரிச்சுடுவாங்களோனு சங்கீதாவுக்கு சந்தேகம். அதுக்கு தன் அம்மாவும் துணைபோயிடுவாங்களோனு பயப்படுறாங்க. இந்தச் சூழல்ல வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னா அவங்க எங்கப்போவாங்க? அதனாலதான் மகளிர் ஆணையத்துல புகார் தந்திருக்காங்க.
கடந்த 140 வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் இல்லாத அதிகூடிய வெப்பநிலைக்கு இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவில் திணைக்களத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பூகோள வெப்ப மயமாதல் மற்றும் எல்னினோ காலநிலையின் தாக்கம் ஆகியவையே இந்த வழமைக்கு மாறான வெப்பநிலைக்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த நிலை தொடரும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, மொனராகல, முல்லைத்தீவு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுடன் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு மற்றுமொரு வெப்பநிலை எச்சரிக்கையை வானிலை அவதான நிலையம் நேற்று விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் புகழ்பெற்ற தொழிலதிபர் Irwin Jacobs தனது மனைவியுடன் மர்மான முறையில் இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது கொலையா? தற்கொலையா? என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழிலதிபர் Irwin Jacobs மற்றும் அவரது மனைவி Alexandra ஆகிய இருவரும் Minnesota நகரில் 22 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசு மாளிகையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் தங்களது வீட்டின் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர். இவர்களது அருகில் ஒரு கைத்துப்பாக்கியம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இருவருக்கும் வயதாகிவிட்டதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் தனது மனைவியின் நிலை குறித்து மூன்று நாட்களுக்கு முன்னர் தனது நண்பரிடம் பகிர்ந்துள்ளார் Irwin.
தொழிலதிபரின் இறப்பு எங்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ள என அறிக்கை வெளியிட்டுள்ளது Irwin இன் தொழில் நிறுவனம். சிறப்பு ஒலிம்பிக் இயக்கத்தில் Irwin ஒரு வரலாற்று உருவமாக இருந்தார், 1991 ஆம் ஆண்டில் மினசோட்டாவில் அவர் சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைகால விளையாட்டுத் தலைவராக பணியாற்றினார்.
Irwin 1970 கள் மற்றும் 80 களில் தோல்வி அடைந்த நிறுவனங்களை லாபத்திற்காக வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் புகழ்பெற்ற காரணத்தால் Irv the Liquidator என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை குஷ்பு, இளைஞர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரம் முடிந்தவுடன் தனது காரை நோக்கி குஷ்பு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதால் இளைஞரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதன்பின்னர் குஷ்பு காரில் ஏறி சென்றுவிட்டார். இந்தியாவின் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள நிலையில், இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தன் முன்னாள் காதலனின் திருமணத்துக்கு சென்ற பெண் காதலனை திரும்ப ஏற்றுக்கொள்ளுமாறு காலில் விழுந்து கெஞ்சிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது… சீனாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
திருமண உடையில் வந்த ஒரு பெண் மணமேடையில் தன முன்னாள் காதலனின் காலில் விழுந்து கெஞ்சுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அந்த பெண் மிகவும் மனவேதனையோடு மணமேடையில் தன் முன்னாள் காதலனிடம் தன்னை திரும்ப ஏற்குமாறு சொல்லி கெஞ்சுகிறார். இது முழுவதும் தன் தவறு என்றும் கூறி அழுகிறார்.
மேலும், தனது முன்னாள் காதலரின் கோட்டை பிடித்து இழுக்க அவர் உதறிவிடுகிறார். இதனை கண்ட மணப்பெண் கோபத்தில் வெளியேறுகிறார். அவரை பின் தொடர்ந்த மணமகனும் சொல்கிறார்.
இந்த வீடியோ வலைத்தளங்களில் குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று தர்ம சங்கடத்திலும் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் தாயும், மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த பால் விற்பனை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணியை சேர்ந்த வனப் பெருமாள் என்பவர் இரவு நேர பாதுகாவலர் வேலைக்கு சென்றுவிட்டு நேற்றைக்கு முன்தினம் அதிகாலை வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது அவருடைய மனைவி வீரலட்சுமி மற்றும் 10 வயது மகன் போத்திராஜ் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு சடலமாக கிடந்தனர். மேலும் அவர்களுடைய வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பால் வியாபாரி வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன. பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளையடிக்க வெங்கடேசன் திட்டமிட்டுள்ளார். அதன்படி பக்கத்து வீட்டை சேர்ந்த வனப்பெருமாளின் வீட்டிற்குள் முகமூடி அணிந்தபடி நுழைந்த வெங்கடேசன், நகைகளை எடுத்துவருமாறு மிரட்டியுள்ளார்.
ஆனால் வெங்கடேசனின் குரலை கண்டுபிடித்த வீரலட்சுமி உதவி கேட்டு கூச்சலிடம் ஆரம்பித்துள்ளார். உடனே அங்கிருந்த இரும்புகம்பியை கொண்டு வீரலட்சுமியின் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார். அதேசமயம் தந்தைக்கு போன் செய்ய முயன்ற போத்திராஜை, அயர்ன்பாக்ஸ் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளான்.
ஹட்டன் நகரில் தற்போது இரவு வேளைகளில் பொலிஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எதிர்வரும் சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு இந்த ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன்போது வெளிமாவட்டங்களிலிருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், வாகன சாரதிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், இதன்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் நடமாடுபவர்களை மறித்து பலத்த சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.